ஆராய்ச்சி மாணவி சோஃபியாவின் கைதுக்குக் கண்டனம்

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தூத்துக்குடி வந்த ஆராய்ச்சி மாணவி சோஃபியா, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டதற்காகக் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரே ஒரு மாணவி தனியாக நின்று கொண்டு ஓரிரு முறை முழக்கம் இடுவது பொது அமைதிக்குப் பங்கமா? பொது மக்களை அச்சுறுத்தும் செயலா? உண்மையிலேயே பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற பல செயல்களை மத்திய மாநில ஆளும் கட்சியினர் செய்து கொண்டிருக்கின்றனர்,  பாஜக தலைவர்கள் பகிரங்கமாக ஆட்சேபணைக்குரிய விதத்திலும், வெறியையும் வெறுப்பையும் தூண்டுகிற விதத்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவை குறித்து அமைதி காக்கும் காவல்துறை, இதில் மட்டும் கொதித்தெழுந்து கைது செய்து ரிமாண்ட் செய்கிறது என்றால், இதன் பின்னால் நிச்சயம் அமைதியைக் காக்கும் நோக்கம் தெரியவில்லை, மாறாக, பாஜக அரசை யாரும் எதிர்க்கக் கூடாது  என்று ஒடுக்குகிற நோக்கம்தான் தெரிகிறது. சோஃபியாவின் தந்தை கொடுத்துள்ள புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதற்கு சாட்சியம்தான்.

பாஜகவின் பாசிச தன்மை  கொண்ட முகம் பகிரங்கமாக வெளிப்படும் காலச்சூழல் இது. அதிமுக அரசு மத்திய ஆட்சியாளர்களின் பினாமியாக செயல்படுவதும், அவர்களின் நற்பார்வையில் இருக்க தீவிரமாகப் பல முயற்சிகளை மேற்கொள்வதும், அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் தங்களின் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை மறைப்பதற்குப் போராட்டங்களை ஒடுக்குவதும் ஜனநாயக சூழலுக்குப் பெரும் ஆபத்தாக மாறியிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து  இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளை முறியடிக்க முன்வர வேண்டும்.

பாசிச பாதையில் சென்று கொண்டிருக்கும் பாஜக அரசு ஒழிக என்ற முழக்கம் குற்றமென்றால், அதனை ஒவ்வொரு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினரும் உரத்து சொல்வோம்.

உடனடியாக வழக்கை ரத்து செய்து சோஃபியாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் தந்தை கொடுத்துள்ள புகாரின் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...