ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி – தோழர் பினராயி விஜயன் எச்சரிக்கை

தோழர்களே, சகோதர – சகோதரிகளே!

மங்களூருவில் இதுபோன்ற நிகழ்ச்சியில் அதிலும் குறிப்பாக மதநல்லிணக்கப் பேரணியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் மதநல்லிணக்கத்தை பாதுகாத்து போற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஏராளமான நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் நாட்டின் அரசுக்கு தலைமை தாங்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் என்பதுதான் மிக முக்கியமான விஷயமாக தென்படுகிறது. ஆர்எஸ்எஸ் இதை ஒரு காலத்திலும் மறைத்து வைத்ததில்லை. அது உருவான நாளிலிருந்து எல்லா காலங்களிலும் அவர்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவே பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். மதவெறியையும் அதன் பாகமான மதத் துவேசங்களையும் வளர்க்கவே ஆர்எஸ்எஸ் முயற்சித்து வந்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தை வஞ்சித்த ஆர்எஸ்எஸ் பாரம்பரியம்

ஆர்எஸ்எஸ் என்பது நமது நாட்டில் பொதுவானவைக்காக குரல் கொடுக்கும் அமைப்பல்ல. துரதிருஷ்டவசமாக அந்த அமைப்புக்கு நாட்டின் கொள்கை வகுக்கும் அதிகாரம் கையில் கிடைத்திருக்கிறது. இந்திய பிரதமர் உள்பட அரசின் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்சின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றனர். 1925 இல்தான் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் அதன் உச்சகட்ட நிலையில் போராட்ட நெருப்பு கொழுந்து விட்டெரிந்த காலகட்டம் அது. அது தோன்றிய பிறகு 22 வருடங்கள் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்த காலகட்டத்திலும் ஆர்எஸ்எஸ் இந்நாட்டில் செயல்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பங்கும் வகிக்கவில்லை என்று சொல்வதை விட அவர்கள் அவர்களுக்கேயுரிய பங்கு வகித்தார்கள்.அக்காலத்தில் உருவான எல்லா அமைப்புகளும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற நிலைபாட்டையும் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் பிரிட்டிஷார் நாட்டை விட்டு எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து சில கருத்து வேறுபாடுகளும் இருந்தன. எனினும் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்தனர். இங்கேதான் ஆர்எஸ்எஸ் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபட்டு நின்றது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்த அது முன்வரவில்லை. நேர்மாறாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிலேயே நிலை கொள்ளும் படியான நிலைபாட்டையே ஏற்று செயல்பட்டனர். சாவர்க்கர் ஆங்கிலேய வைஸ்ராயை நேரில் சந்தித்து, இந்த சுதந்திரப் போராட்டத்தில் தாங்கள் பங்கு கொள்ளவில்லை என்றும், ஆங்கிலேய அரசு சம்பந்தமாக எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே கருத்தே உள்ளது என்றும் தெரிவித்தார்.அந்த வகையில் சுதந்திரப் போராட்டத்தை வஞ்சித்த பாரம்பரியமே ஆர்எஸ்எஸ்சுக்கு உள்ளது. நமது நாட்டை ஒரே நாடாக்கவும், மக்களை ஒற்றுமையுடன் ஓரணியில் நிறுத்தவும் ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. மக்களை பல பிரிவுகளாக பிரித்து பிரிவினை உணர்வையூட்டி எதிரெதிராக மோத விடுவது என்பதற்குத்தான் ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் முயன்று வந்தது. அதன் ஒரு பகுதியாகவே நாட்டில் நடக்கின்ற எல்லா பிரிவினைவாத மோதல்களுக்கும் ஆர்எஸ்எஸ் தலைமை தாங்கும் நிலைக்கு ஆளானது.

காந்தி படுகொலையைக் கொண்டாடியவர்கள்

ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு நமது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைத் தான் எதிர்க்கிறார்கள். எப்போதும் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கவே முயன்றிருக்கிறார்கள். இங்கே இயல்பாகவே ஒரு கேள்வி மேலெழுந்து வருகிறது. எதற்காக மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி ஏதாவது ஒரு ஆர்எஸ்எஸ்காரரை தாக்கினார் என்று யாரும் கூற முடியாது. ஆனால் மகாத்மா காந்தியை கொலை செய்ய நீண்ட நாட்களாக சங்பரிவார் தலைமையில் சதி திட்டம் நடந்து வந்தது. கோட்சேவின் கையிலிருந்த ஆயுதம் எவ்வாறு காந்திஜியை கொல்லப்பயன்பட்டதோ, அதுபோலவே ஆர்எஸ்எஸ் கோட்சேவையும் காந்தியைக் கொல்ல தங்கள் கையிலுள்ள கேவலமான ஆயுதமாகவே பயன்படுத்திக் கொண்டது. காந்திஜி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆர்எஸ்எஸ் அவர்கள் இருந்த சில இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்பதையும் நாம் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.காந்திஜியை கொன்ற ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக மக்கள் கோபாவேசம் கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் மத்திய ஆட்சியாளர்கள் சிலரை அணுகி தங்கள் மீதுள்ள தடையை நீக்கும் நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் எடுத்து வந்தது. ஆர்எஸ்எஸ் மீதான தடை நீங்கிய பின்னரும் அது தனது பழைய நிலைபாட்டையே தொடர்ந்து வந்தது.

முசோலினியைச் சந்தித்த முஞ்சே

ஆர்எஸ்எஸ்சின் கொள்கை எத்தகையது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். 1925 இல் உருவான ஆர்எஸ்எஸ் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்-ன் ஸ்தாபகத்தலைவர்களில் ஒருவரான முஞ்சே, அன்றைய உலகின் பெரும் பணக்காரர்களை சந்திக்க சென்றார். அதோடு தங்கள் முன்னோடிகளாக கருதும் சிலரையும், அவர்களின் நாடுகளையும் காண சென்றார். அதிலொருவர் முசோலினி ஆவார். முசோலினியின் பாசிச அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஏற்றுக் கொண்டது. முசோலினியின் பாசிச அமைப்புக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி மையங்களைக் கண்ட முஞ்சே, ஆவேசத்தில் உணர்ச்சி வசப்பட்டார். பின்னர் முசோலினியுடன் நடந்த சந்திப்பில் இந்த பயிற்சியின் விஷேசத்தைப் பற்றியும், அதை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியும் விவாதித்தார். அதன்படி முசோலினியின் பாசிச அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதோடு அதையே பின்பற்றி இன்றும் செயல்பட்டு வருகிறது.

ஹிட்லரைக் கொண்டாடிய ஒரே அமைப்பு

ஆர்எஸ்எஸ், ஜெர்மானிய நாஜிக் கொள்கையை தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டது. ஹிட்லர் ஜெர்மனில் செயல்படுத்திய நடவடிக்கைகள், குறிப்பாக சிறுபான்மையினரை கொன்றொழித்த நடவடிக்கையில் மதிமயங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஒரே ஒரு அமைப்பே இந்த உலகில் உள்ளது. அது ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரின் அந்த நாசகர கொள்கைகளை உலகின் அனைத்து நாடுகளின் அமைப்புகளும் புறந்தள்ளிய போதும் ஆர்எஸ்எஸ் மட்டுமே அதனை புகழ்ந்து ஏற்றுக் கொண்டது. உள்நாட்டுப் பாதுகாப்பில் பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டுமென்பதற்கு ஹிட்லரின் ஜெர்மனி நமக்கு முன்னுதாரணம் என்று அந்த காலகட்டத்தில் பகிரங்கமாக ஆர்எஸ்எஸ் பிரகடனம் செய்தது. ஹிட்லர் சிறுபான்மையினரை கொன்றொழிக்க எடுத்த நடவடிக்கைகளை, குறிப்பாக யூதர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளை இங்கும் செயல்படுத்துவது பற்றி பரிசீலித்தது. ஹிட்லரின் அத்தகைய நடவடிக்கையினால் ஆர்எஸ்எஸ் உற்சாக உணர்வு பெற்றது.ஆர்எஸ்எஸ்சின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் ஹிட்லரின் நடவடிக்கைகளை புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். இத்தகைய கொள்கையையே தங்களது கொள்கையாக தத்துவங்களை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டது. ஹிட்லரின் நோக்கங்களை அப்படியே அது உள்வாங்கிக் கொண்டது. சிறுபான்மையினரை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஹிட்லர் எழுதி வைத்திருக்கும் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் எழுத்துப் பிசகாமல் அது போலவே கொள்கைகளாக எழுதி வைத்துள்ளது. ஹிட்லர் யூதர்களை மட்டுமே சிறுபான்மையினராக கருதினார். யூதர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஹிட்லர் கூறி வந்தார். சோசலிஸ்டுகளை உள்நாட்டு எதிரிகளாக ஹிட்லர் கருதினார். அதே கொள்கையை ஆர்எஸ்எஸ்சும் பின்பற்றி தங்கள் கொள்கைகளாக எழுதி வைத்துள்ளனர். இதை அவர்கள் நடைமுறைப்படுத்தவும் செய்கின்றனர். இங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்று சிறுபான்மையினரையும் உள்நாட்டு விரோதிகளாக சித்தரிக்கின்றனர். அதோடு ஹிட்லரைப் பின்பற்றி ஆர்எஸ்எஸ்சும் கம்யூனிஸ்ட்டுகளை நாட்டின் விரோதிகளாக சித்தரித்தனர். அதாவது ஹிட்லரைப் பின்பற்றி சிறுபான்மையினரையும், கம்யூனிஸ்ட்டுகளையும் தங்கள் விரோதிகளாக பிரகடனப்படுத்தி செயல்படுகிறார்கள்.

கொலைகள் புரிய விசேசப் பயிற்சி

இந்த கொள்கையைத் தான் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நாட்டில் நடந்துள்ள எல்லா மதக் கலவரங்களுக்கும் தலைமை தாங்கியது ஆர்எஸ்எஸ் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானவர்களை கொன்று தள்ளிய கலவரங்கள் நமது நாட்டில் நடந்திருக்கிறது. அந்த கலவரங்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் தான் தலைமை தாங்கியுள்ளது. எப்படி கலவரங்களையும், பிரிவினை மோதல்களையும் உருவாக்கி நடத்த வேண்டும் என்பதற்கு விஷேசமான பயிற்சி கொடுக்கப்படுகிறது. அத்தகைய பிரிவினை மோதல்கள் கலவரமாக மாறும்போது சாதாரண மக்களை உணர்வுகளுக்கு ஆட்படுத்த எவ்விதமான பொய் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் தலைமையில் நடந்துள்ள எல்லா கலவரங்களிலும் இத்தகைய ஒற்றுமை வடிவத்தை காண இயலும். துல்லியமான பயிற்சிகள் மூலம் தங்களுடைய செயல்முறைகளை நடத்தியது புலப்படும்.ஆர்எஸ்எஸ் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறக் கூடாது என்பதே துவக்கம் முதலே அது ஏற்றுக் கொண்ட நிலைபாடு ஆகும். 1947 ஜூலை 17 இல் ஆர்எஸ்எஸ்சின் ஆர்கனைசர் இதழ் நமது தேசியக் கொடி குறித்து ஒரு தலையங்கம் எழுதியது. நமது தேசியக் கொடியின் அம்சங்களை நிர்ணயித்தது, விரிவான விவாதத்தின் மூலமேயாகும். ஆனால் தேசியக் கொடியின் அம்சங்கள் நமது பண்பாட்டுக்கு உகந்ததல்ல என்றும், நமது நாட்டுக்கு சொந்தமானதல்ல என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்தியா என்ற பெயரை நாட்டுக்கு சூட்டியது தவறு என்று கூறி வந்தது. 1947 ஜூலை 31 இல் அதே ஆர்கனைசர் பத்திரிகையில் இந்தியா என்ற பெயர் நமது நாட்டுக்கும் பொருத்தமானதல்ல. ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரே நமது நாட்டுக்குப் பொருத்தமான பெயர் என்று கூறினார்கள். இவையனைத்தும் அவர்கள் தொடர்ந்து கூறிவந்த கொள்கையின் வெளிப்பாடே ஆகும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல என்ற கொள்கையை நிலை நிறுத்தவே ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அதனால்தான் இன்றைக்கு உள்ள உள்துறை அமைச்சரே, நாடாளுமன்றத்தில் “இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு” என்று குறிப்பிடப்பட்டதே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று பகிரங்கமாகக் கூறினார். இதுவே ஆர்எஸ்எஸ்சின் நிலைப்பாடு என்று நாம் உணர வேண்டும்.

மனசாட்சியை உலுக்கிய படுகொலைகள்

இந்த ஆர்எஸ்எஸ்சின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கிடைத்திருக்கிறது. சகிப்பின்மையின் உச்சகட்டத்திற்கு சென்று தங்களது திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அவற்றை குறித்து கூற நீண்ட நேரம் தேவைப்படும். நமது நாட்டில் அவ்வளவு தூரம் கொடூரங்கள் ஆர்எஸ்எஸ்சின் தலைமையில் சமீபகாலங்களில் நடந்து வருகிறது. சகிப்புத் தன்மை இல்லாமை என்பதன் மொத்த உருவமாக ஆர்எஸ்எஸ் மாறியிருக்கிறது. சகிப்புத் தன்மையின்மை நமது ஆட்சியாளர்களிடம் பரவி வருகிறது. அதன் பகுதியாக மகாத்மா காந்தியை கொன்றதைப் போலவே நாட்டிற்கும் மக்களுக்கும் பிரியமானவர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் தயாராகி வருகிறது. இங்கே எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டது நமது மனதிலுள்ளது. அந்தப் படுகொலை, இந்நாட்டின் மதச்சார்பின்மை என்ற மனசாட்சி மிகவும் வேதனைப்பட்ட ஒரு விஷயமாகும். கல்புர்கி திறமையான ஒரு எழுத்தாளர் ஆவார். எதற்காக அவரைக் கொன்றார்கள். கல்புர்கி மட்டுமல்ல, கோவிந்த் பன்சாரேவும் கொலை செய்யப்பட்டார். அவர் ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை பகிரங்கப்படுத்தி விமர்சித்தார்; ஆர்எஸ்எஸ்சின் தவறுகளை, தவறான சித்தரிப்புகளை வரலாற்றின் துணையோடு தோலுரித்துக் காண்பித்தார் என்பதுதானே காரணம். சகிப்புத் தன்மையின்மையின் ஒரு பகுதியாக கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார். நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர். அவரும் கொலை செய்யப்பட்டார். இவை அனைத்தும் சங்பரிவாரின் தலைமையில் நடந்தவையாகும். இவர்கள் யாரும் நமது சமூகத்தில் எந்த குற்றமும் செய்தவர்கள் அல்ல. மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், நாட்டுக்கும் மக்களுக்காகப் போராடியவர்கள். இவை யெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாத சகிப்புத் தன்மையின்மையே இத்தகைய சிந்தனையாளர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ்-ஐ தூண்டுகிறது.

பெருமாள் முருகனையும் படைப்பாளிகளையும் துரத்தியவர்கள்

கொலையுண்டவர்கள் மட்டுமல்ல, நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் செயல்படுபவர்கள், போராடுபவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கே.எஸ்.பகவானுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் விடுத்த மிரட்டல்கள், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ் கர்னாட்டையும் ஆர்எஸ்எஸ் விட்டுவைக்க வில்லை; ஆர்எஸ்எஸ்சின் எண்ணங்களோடு இசையாமல் எதிர் கருத்துக்கள் பேசுபவர்களையும் செயல்படுபவர்களையும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. தலித் இளைஞரான கவிஞர் உச்சாங்கி பிரசாத்தின் உள்ளங்கையில் கத்தியால் குத்தி இனிமேல் எழுதினால் விரல்கள் வெட்டப்படும் என்று மிரட்டப்பட்டார். சேதனா தீர்த்தஹள்ளி, பெண் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். ஆர்எஸ்எஸ்சுக்கு அடிபணியவில்லை என்ற காரணத்தால் மிரட்டப்பட்டார். மிரட்டலுக்கு அஞ்சாமல் வாலிபர் சங்கத்தின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முகத்தில் அமிலம் ஊற்றுவோம்; பாலியல் வன்புணர்வு செய்து விடுவோம் என்று கொடூரமான முறையில் அப்பெண்மணி மீண்டும் மிரட்டப்பட்டார்.நமது பெருமாள் முருகன் என்ற தலித் எழுத்தாளர், அவருக்கு எதிரான அத்துமீறலால் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்த கொடூரம். இவையனைத்தும் நமது நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வரும் கொடூரங்கள் ஆகும்.எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மரணப் படுக்கையில் கிடக்கும்போது, ஆர்எஸ்எஸ் அவருக்கு பாகிஸ்தான் செல்லுமாறு விமானப் பயணச்சீட்டு அனுப்பி இழிவுபடுத்தியது. பாகிஸ்தானுக்கு பல முக்கியஸ்தர்களையும் அனுப்ப மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. கேரளத்தில் ஞானபீட விருது, பத்மபூஷன் விருது பெற்ற சிறந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ரூபாய் நோட்டு தடைக்கு எதிராக பேசினார் என்ற காரணத்திற்காக அவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் கமல், நடிகை நந்திதாதாஸ் போன்றவர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டுமாம். என்ன நடக்கிறது இங்கே? நமது நாட்டின் ஆளுமைகள் ஆர்எஸ்எஸ்சுக்கு அடிபணிந்து கிடக்க வேண்டுமாம். அதன் விருப்பங்களுக்கு இசைந்து நடக்க வேண்டுமாம். சுதந்திரமாய் சிந்தித்து, சொந்தமாக கருத்துச் சொல்லக் கூடாதாம். அப்படி ஆர்எஸ்எஸ்சின் கருத்துக்களோடு மாறுபாடு ஏற்பட்டால் அவர்களை இந்தியாவில் வாழ அனுமதிக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் மிரட்டி வருகிறது.

ஆர்எஸ்எஸ்சுக்கு என்று பிரத்யேக உரிமை இல்லை

ஆர்எஸ்எஸ்சிடம் மதச்சார்பற்ற சக்திகளுக்கு சொல்ல ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது. இந்த நாடு எல்லோருக்குமானது. ஆர்எஸ்எஸ்சுக்கு என்று பிரத்யேகமாக எந்த உரிமையுமில்லை. இங்கே வாழவும், சுதந்திரமாக கருத்துச் சொல்லவும் தாங்கள் விரும்பியவற்றை எழுதவும் இங்கே வாழும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. ஆர்எஸ்எஸ்சின் சகிப்புத் தன்மையின்மைக்கு எதிராக மதச்சார்பற்ற சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை ஒழித்துக் கட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே என்ன உணவு உண்ண வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. உத்தரப்பிரதேசத்தில் தாத்ரியில் அக்லாக் என்ற நிரபராதியான மனிதரை அடித்துக் கொன்றதற்கு மாட்டிறைச்சியை காரணமாக சொன்னார்கள்.குஜராத்தின் உனாவில் 4 தலித் இளைஞர்களை காரில் கட்டி வைத்து அடித்ததை இந்த உலகமே கண்டது. அவர்கள் மாட்டின் தோல் வைத்திருந்தார்கள் என்பதோடு, தங்களது கழிப்பறைகளை கழுவ வேண்டுமென்று வற்புறுத்தியும் தாக்கப்பட்டார்கள். நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டுமென்று நாங்கள் தீர்மானிப்போம் என்று புராதன வருணாசிரம தர்மத்தின் புதிய பதிப்பாகவே ஆர்எஸ்எஸ் தலைமையால் இந்த கொடுமை நடந்தேறியது.இதன் மற்றொரு வடிவத்தில் உள்ள கொடுமை ஹரியானாவில் நடந்தது. வயதான ஒரு ஏழை விவசாயியின் மகனும், மனைவியும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கொலை செய்யப்பட்டனர். ஓடி ஒளிந்த இரண்டு இளம் மகள்களை கத்தியைக் காட்டி தந்தையை மிரட்டி வெளியில் வர வைத்து கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள். அக்குடும்பத்திலுள்ள அனைவரையும் துன்புறுத்தினார்கள். இதையே நாடெங்கிலும் ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் மாட்டிறைச்சியின் பேரில் வன்முறை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

தங்கள் இயக்கத்தவரையே சகித்துக் கொள்ளாத ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்களது இயக்கத்திலுள்ளவர்களையே கொல்லும் நிகழ்வுகள் தற்போது எங்கும் நடந்து வருகிறது. கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் நடந்த கொலைகளை நான் தனியாக உங்களிடம் கூறத் தேவையில்லை. கடந்த பிப்ரவரி 19 ஞாயிறு காலை பிரதாப் பூஜாரி கொலை செய்யப்பட்டார். கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்யப்பட்டார். கோவில் பணத்தை கையாடியது சம்பந்தமான பிரச்சனையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பணத்தைக் கையாடியவர்கள் தான் கொன்றதாக விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அதுபோன்று பாஜகவைச் சேர்ந்த விநாயக வாரி என்பவரை நரேஷ் ஷேனாய் என்பவர் தலைமையில் ஒரு கும்பல் கொலை செய்துள்ளது. நரேஷ் ஷேனாய் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர். உடுப்பியில் கால்நடைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ஆர்எஸ்எஸ்சால் கொலை செய்யப்பட்ட பிரவீண் பூஜாரி என்பவரும் பாஜகவை சார்ந்தவர் ஆவார். இவ்வாறு ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்கள் ஊழியர்களையே கொல்லும் நிகழ்வுகள் நடந்து வருகிறது.

கேரளத்தில் ரத்தத்தில் குளிக்கும் ஆர்எஸ்எஸ்

கேரளம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். ஸ்ரீநாராயணகுருவின் தலைமையில் நடந்த சமூக நீதிக்கான இயக்கங்கள் ஸ்ரீநாராயணகுரு இங்கு வந்து பேசிய விபரத்தை தோழர்கள் கூறினார்கள். அவரது சமூக நீதிக்கான இயக்கங்கள் மூலம் உறுதியான மதச்சார்பற்ற சமூகத்தை கேரளம் பெற்றிருக்கிறது. அத்தகைய கேரள சமூகத்தில்தான் ஆர்எஸ்எஸ் தனது அடித்தளத்தை நிறுவ முயன்று வருகிறது. கேரளத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முக்கிய எதிரியாக கருதி, அழித்து இல்லாமல் செய்துவிட்டால் தங்களது பிரிவினை திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என்ற எண்ணத்தில் தான் தாக்குதல்கள் நமது தோழர்களுக்கு எதிராக நடந்து வருகிறது. கேரளத்தின் வரலாற்றை அலசினால் அறுநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்காரர்களின் கையால் கொலை செய்யப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை 205. இவர்கள் யாவரும் எந்த தவறும் செய்தவர்கள் அல்ல. மதச்சார்பின்மையை பாதுகாக்க பிரிவினைவாத மதவெறிக்கு எதிராக உறுதியான நிலைபாட்டுடன் போராடியவர்கள் ஆவர். அதனை சகிக்க முடியாத ஆர்எஸ்எஸ் அந்த தோழர்களைக் கொல்வதன் மூலம் இந்த போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற வீண் முயற்சியை செய்து வருகிறது.நீங்கள் நடத்திய இந்தப் பேரணிக்கு வருமாறு சில மாதங்களுக்கு முன்பே தோழர் ஸ்ரீராமரெட்டி (சிபிஎம் கர்நாடக மாநிலச் செயலாளர்) என்னை அழைத்திருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, ஆர்எஸ்எஸ்சின் சகிப்புத் தன்மையின்மை பகிரங்கமாக வெளிப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் என்னை மங்கலாபுரம் மண்ணில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறித் திரிந்தார்கள். சிலர் கேரளத்திற்கு வெளியே என்னை எங்கும் கால்வைக்க விடமாட்டோம் என்றும் வீரவசனம் பேசித் திரிந்தார்கள். இவ்விஷயத்தில் முதலிலேயே நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கேரளத்தின் முதல்வர் என்ற முறையில், ஆர்எஸ்எஸ் விடுத்த இந்த மிரட்டலை எதிர்கொள்ள கர்நாடக அரசு எடுத்த எச்சரிக்கையுடனான அணுகுமுறை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அதற்காக கர்நாடக முதல்வருக்கும், அரசுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை இதுபோன்ற வழியிலுள்ள உறுதியான நிலைபாட்டின் மூலமே எதிர்கொள்ள முடியும். இது ஒரு பாடமாக நாம் உட்கொள்ள வேண்டிய ஒன்றாகும்

ஆர்எஸ்எஸ்சின் கொலைவாளுக்கு இடையில்தான் பயணித்தேன்

ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், முதல்வரான பிறகு இயல்பாகவே முதல்வருக்கு பாதுகாப்பளிக்கும் போலீசாரும் போலீசாரின் ஆயுதங்களின் நடுவே சஞ்சரிக்க வேண்டியதும் நமது ஆட்சி முறையின் ஒரு வழக்கமாகும். ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, நான் திடீரென்று ஒரு நாள் வானத்தில் இருந்து குதித்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவனல்ல. ஆர்எஸ்எஸ்-ஐ நேரில் அறியாத நபரல்ல நான். உங்களை நன்கு அறிந்துதான் நான் செயல்பட்டு வந்திருக்கிறேன். இப்போது போலீசின் ஆயுதங்களின் நடுவே நான் செல்வதாகக் கூறும் நீங்கள், உங்கள் பழைய ஆர்எஸ்எஸ்காரர்களைக் கேளுங்கள். பிரண்ணன் கல்லூரியில் படிப்பு முடித்து வெளியில் வந்தபோது ஆர்எஸ்எஸ்காரர்கள் உறையிலிருந்து உருவிய கத்தியின் நடுவேதான் பிரயாணித்தேன். அன்று உங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றால் இன்று என்ன செய்யப் போகிறீர்கள்? மத்தியப்பிரதேசத்திற்கு நான் சென்ற போது அந்த அரசு என்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென்று கூறியபோது, ஒரு முதல்வர் என்ற முறையில் பொறுப்புடன் அனுசரித்தேன். முதல்வர் பினராயி விஜயன் என்று இல்லாமல் கம்யூனிஸ்ட் ஊழியர் பினராயி விஜயன் என்று நான் போயிருந்தால் நிச்சயம் நான் நிகழ்ச்சிக்கு போயிருப்பேன். எனவே இந்த மிரட்டல்கள் எங்களிடம் வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்து கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Download PDF

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...