ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதை உடனடியாக தடுத்திடுக …

07-04-2017

பெறுநர்

மாநில தலைமைத்தேர்தல் அதிகாரி அவர்கள்,

புனித ஜார்ஜ் கோட்டை,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

அன்புடையீர், வணக்கம்.

             பொருள் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதை உடனடியாக தடுக்கவும், மேலும் மாற்று நடவடிக்கைகள் எடுக்கக் கோரி…

—-

கடந்த 5-ஆம் தேதியன்று ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்த மனு ஒன்றை உங்களிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினோம். அன்று அஇஅதிமுக(அம்மா) குழுவினரை குறித்து கொடுத்த அந்த மனுவைத் தொடர்ந்து இன்னும் சில அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

திமுக வேட்பாளருக்காக அவரது கட்சியைச் சார்ந்தவர்கள் நேற்று இரவு முதல் வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 2,000/- பட்டுவாடா செய்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.

திரு.ஓ.பன்னீர் செல்வம் (முன்னாள் முதல்வர்) தலைமையிலான அஇஅதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியினர் வாக்காளரிடம் அடையாள அட்டைகளின் நகல்களை பெற்றுக்கொண்டு வாக்குக்கு பணம் கொடுப்பதற்காக டோக்கன்களை விநியோகம் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 5-ஆம் தேதியன்று திமுகவும், திரு.பன்னீர்செல்வம் குழுவினரும், டி.டி.வி. தினகரன் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக உங்களிடமே மனு கொடுத்ததை நாடறியும். இன்று அந்த இரண்டு குழுவினரும் கூட பணம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கக்கூடிய நடவடிக்கையாகும்.

எனவே, உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு பணப்பட்டுவாடா செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

டி.டி.வி.தினகரனுக்காகவும், பன்னீர் செல்வம் கோஷ்டி வேட்பாளருக்காகவும், திமுக வேட்பாளருக்காகவும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் சூழலில் தேர்தலை ரத்து செய்திட வேண்டும். மேலும், இத்தொகுதிக்கு மீண்டும் நடக்கும் இடைத்தேர்தலில் இந்த வேட்பாளர்கள் போட்டியிட முடியாத அளவிற்கு தகுதி நீக்கம் செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

நேர்மையான, பாரபட்சமற்ற, ஜனநாயகபூர்வமான தேர்தலை நடத்தும் பொருட்டு தேர்தல் கமிஷன் உடனடியாகத் தலையிட்டு மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்துகிறது.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்….

(ஜி. ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...