இடஒதுக்கீடு கொள்கையில் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை; சிபிஐ(எம்) கண்டனம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதிக்கட்ட தேர்வு எழுதுவதற்கு வங்கி நிர்வாகம் கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்து தேர்வு எழுதியவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நடைபெறவுள்ள அகில இந்திய போட்டித் தேர்வில் தமிழகத்தில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 61.75, பட்டியலினத்தவருக்கு 61.25, பழங்குடியினத்தவருக்கு 53.75 கட் ஆப் மதிப்பெண்கள் தீர்மானித்துள்ள எஸ்பிஐ வங்கி நிர்வாகம் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 28.5 கட் ஆப் மதிபெண் தீர்மானித்துள்ளது கடைந்தெடுத்த அநீதியாகும்.

அதாவது இதர பிற்படுத்தப்பட்டவர் (ஓபிசி), பட்டியலினத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினவர்களை (எஸ்டி) விட அதிகமான கட் ஆப் மதிப்பெண்களையே இவர்களுக்கு தீர்மானித்திருக்க வேண்டும். அதை விடுத்து இப்பிரிவினருக்கு குறைவான மதிப்பெண்கள் தீர்மானித்திருப்பது இவர்களுக்கு அதிக வாய்ப்பளிப்பதற்கான உள்நோக்கம் கொண்டதாகும்.

பொதுவாக மத்திய அரசு நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு கோட்பாட்டினை அமலாக்குவதில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தகுதி அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களை பொதுப்பிரிவில் இடமளிக்க வேண்டும். ஆனால், இவர்களை எஸ்சி/எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு பட்டியலில் இடமளிப்பதால் இவ்வகுப்பைச் சார்ந்த பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இது எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பை சார்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியில் சேருகிற வாய்ப்பை தட்டிப்பறிப்பதாகும்.

மேலும், எஸ்சி/எஸ்டி, ஓபிசி வகுப்பினர்களுக்கு கட் ஆப் மார்க் தீர்மானித்து போதுமான எண்ணிக்கையில் பயனாளிகள் கிடைக்காத நிலையில், அந்த இடங்களில் இவ்வகுப்பினரையே சேர்க்கும் வகையில் கட் ஆப் மார்க்கை குறைக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தியும் மத்திய அரசு அதை நிறைவேற்றுவதில்லை. மாறாக, அந்த காலியிடங்களை பொதுப்பிரிவினரைக் கொண்டு நிரப்பும் மோசமான அணுகுமுறையையே கடைபிடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான கட் ஆப் மார்க்கை குறைத்து தீர்மானித்துள்ளது. வங்கி நிர்வாகத்தின் இந்த போக்கை வன்மையாக கண்டிப்பதோடு, இத்தகைய பாரபட்ச போக்கினை களைந்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாநில செயற்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

மத்திய அரசு நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் தேர்வாகும் பயனாளிகளை பொதுப்பிரிவில் பணியமர்த்தவும், எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு முழுமையாக இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மேலும், ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணிகளை (backlog) எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு காலியாக உள்ள பணிகளை இப்பிரிவு பயனாளிகளைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

மேலும் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தீர்மானிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் என்ற வருமான வரம்பை குறைக்காமல் இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுவனங்களில் அமலாக்குவதால் உண்மையான ஏழைகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு, ஆண்டு வருமான வரம்பை குறைக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...