இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…

உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓ.பி.சி, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ஏற்றுக் கொண்டது என்பதும், இந்திய நாட்டின் முதல் அரசியல் சாசனத் திருத்தமும் இட ஒதுக்கீடு குறித்ததாக அமைந்தது என்பதும் வரலாறு. காலங்காலமாக சாதியின் பெயரால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஓர் நிவாரணியாக அமைந்தது என்பது உண்மை. இது நாடு முழுமைக்கும் அமலாக வேண்டிய சட்ட நியதியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் சட்டப் பிரிவு 16(4) மற்றும் 16 (4-அ)ல் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, ஓ.பி.சி, பட்டியல் சாதி, பழங்குடி பிரிவினருக்கான அடிப்படை உரிமையாக கருதப்பட முடியாது என விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்த விளக்கம் சமூகநீதி கோட்பாட்டை கேள்விக் குறியாக்கியுள்ளது.

இத்தீர்ப்பு நாட்டில் இன்றும் நிலவும் சாதிய பாரபட்சங்களை, கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ. பி.சி, பட்டியல் சாதி, பழங்குடி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இன்மையை கணக்கிற் கொள்ளத் தவறியிருக்கிறது. இந் நிலையில் மத்திய அரசு விரைந்து உரிய சட்ட வழிமுறைகளை மேற்கொண்டு இத்தீர்ப்பில் நிகழ்ந்துள்ள அநீதியை சரி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கோருகிறது.

இட ஒதுக்கீட்டு வரலாற்றில் தமிழகத்திற்கு முக்கிய இடம் உண்டு. அத்தகைய பெருமையை பாதுகாக்கிற வகையில் தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய சட்ட வழிமுறைகளை உடனே மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்கான வலுமிக்க குரலை எழுப்புவதோடு, ஒத்த கருத்து கொண்டோரை இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை உறுதி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.

– கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...