இடதுசாரிக் கட்சிகள் பிப்.12 கோட்டை நோக்கி பேரணி – மாவட்டத் தலைநகரங்களில் மறியல்

தமிழக அரசின் கண்மூடித்தனமான பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெருக
இடதுசாரிக் கட்சிகள் பிப்.12 கோட்டை நோக்கி பேரணி
மாவட்டத் தலைநகரங்களில் மறியல்

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 7.02.2018 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஐ (எம்எல்) மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஆ.ரங்கசாமி மற்றும் கே.பாலகிருஷ்ணன் சிபிஐ(எம்), எஸ்.சேகர் சிபிஐ (எம்எல்), அ.அனவர்தன் எஸ்.யு.சி.ஐ (சி) எஸ்.சுருளியாண்டவர் எஸ்.யு.சி.ஐ (சி)  கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்:

விலையேற்றம், வறட்சி, வேலையின்மைப் பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்விழந்து தவித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலைமையை மாற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாத அதிமுக அரசு,ஆட்சியைப் பாதுகாப்பதிலும், ஊழல் முறைகேடுகளை முன்னெடுப்பதிலுமே குறியாக இருந்துவருகிறது. இப்போது,பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு இடியாக பேருந்துக் கட்டண உயர்வை தமிழக அரசு சுமத்தியுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3600 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதிலிருந்தே,இச்சுமை சாதாரண ஏழை நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் தினக்கூலி உழைப்பாளர்கள், நடுத்தர மக்கள், மாணவ – மாணவியர்களின் போக்குவரத்துச் செலவு இரட்டிப்பாக உயர்ந்து மூச்சு முட்டச் செய்துள்ளது. இக்கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும், அனைத்து எதிர்க் கட்சிகளும், மாணவர்களும் களத்தில் இறங்கிப் போராடிய பிறகும் தமிழக அரசு கட்டண உயர்வை முற்றாகத் திரும்பப் பெறமறுத்து வருகிறது.

ஒரு கிலோ மீட்டருக்கு, புறநகர் பேருந்துகளில் 42 பைசாவாக இருந்த கட்டணத்தை, 60 பைசாவாக உயர்த்தி, 58 பைசாவாக குறைத்துள்ளனர். அதே போல, உயர்வுக்கு முன் 56 பைசா இருந்த எக்ஸ்பிரஸ் கட்டணம் தற்போது 75 பைசாவாகவும், அதிநவீன சொகுசுப் பேருந்து 70 பைசாவாக இருந்தது 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துக் கட்டணம் 90 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் உள்ளது.  கட்டணத்தைக் குறைப்பதாக தமிழக அரசு நடத்தியிருப்பது கண்துடைப்பு நாடகமே ஆகும். தற்போது சீசன் டிக்கெட், பாஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடியபோது காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன் பொய் வழக்குப் போட்டு கைது செய்து, சிறையிலும் அடைத்துள்ளது தமிழக அரசு.

போக்குவரத்துச் சேவையின் அத்தியாவசயத் தன்மையைப் புரிந்துகொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை, மாநில அரசு தனது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதன் மூலம் சரிப்படுத்த வேண்டும். மாறாக மக்கள் தலையில் சுமையேற்றுவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

  • பேருந்துக் கட்டண உயர்வை முற்றாக திரும்பப் பெறுக
  • போராடிய மாணவர்கள், பொதுமக்கள் மீது பதிந்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுக
  • போக்குவரத்துக் கழகங்களின் இழப்பை ஈடு செய்ய மாநில அரசே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.12 ஆம் தேதி, சென்னையில் கோட்டை நோக்கி பேரணி மேற்கொள்வதெனவும், மதுரை, சேலம், நாகை, தஞ்சை ஆகிய மையங்களிலும், வாய்ப்புள்ள இதர மாவட்டங்களிலும் மறியல் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டங்களுக்கு பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவ மாணவியர், தினக்கூலி மற்றும் நடுத்தர உழைப்பாளர்கள் பேராதராவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜி.ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

எஸ்.குமாரசாமி
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்எல்)

ஆ.ரங்கசாமி
மாநிலச் செயலாளர், எஸ்.யு.சி.ஐ (கம்யூனிஸ்ட்)

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...