இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை 10.7.2015

ஜூலை 20 – நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு இயக்கம்; தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இடதுசாரிக் கட்சிகளின்; பெருந்திரள் முழக்கப் போராட்டம்

மத்திய பாஜக மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்களிலும் நடந்துள்ள உயர்மட்ட ஊழலை எதிர்த்தும், ஊழல் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரியும், உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை செய்து ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் 2015, ஜூலை 20 அன்று நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் நடைபெறுகிறது.

மத்திய பாஜக ஊழல்

மத்திய பாஜக அரசாங்கம் கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தம்பட்டம் அடித்துள்ள சில தினங்களில் பாஜக ஆட்சியின் உயர்மட்ட ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் மற்றும் பல்வேறு பொருளாதாரக் குற்றங்களைச் செய்து வெளிநாடுகளில் தங்கியுள்ள, இந்திய அரசால் தேடப்படும் லலித் மோடிக்கு நமது நாட்டு சட்டங்களின் பிடிகளிலிருந்து தப்பிப்பதற்காக மத்திய அயல்துறை அமைச்சரும், பாஜக அரசின் ராஜஸ்தான் முதல்வரும் தங்கள் பதவிகளையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி உதவியுள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தன்னுடைய கல்வித்தகுதி குறித்து பொய்யான சான்றிதழ் அளித்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

மாநிலங்களில் பாஜக ஊழல்

மகாராஷ்டிராவில் பாஜக அரசாங்கத்தை சேர்ந்த இரண்டு மாநில அமைச்சர்கள் தங்கள் பதவியை சொந்த ஆதாயத்திற்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர்மட்ட அளவில் 36,000 கோடி ரூபாய் அளவிலான ரேசன் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மாணவர்கள் நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் தேர்வில் (வியாபம்) மிகவும் மட்டரகமான அளவில் பாஜக அரசு ஊழல் புரிந்துள்ளது. இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் உட்பட ஊழலில் தொடர்புள்ள 49 பேர் இதுவரை மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஊழல்

தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சியிலும் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் உள்ளிட்ட கொள்ளைகளும் – அரசுத்துறையின் வேலை நியமனங்களில், அரசு கட்டுமானப் பணிகளில் லஞ்ச லாவண்யங்களும் தொடர் நிகழ்வாக உள்ளன. முதலமைச்சர் மீது சொத்து குவிப்பு ஊழல் வழக்கு உள்ளது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன.

ஜூலை 20 எதிர்ப்பியக்கம்

மேற்கண்ட உயர்மட்ட ஊழலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் சம்பந்தப்பட்ட மத்திய பாஜக அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்றும், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், அனைத்து மட்டங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளை இடதுசாரி கட்சிகள் வலியுறுத்துகின்றன.

தமிழகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20, 2015 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்க அனைத்துப் பகுதி மக்களும் அணிதிரளுமாறு இடதுசாரி கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஆர். முத்தரசன் (சிபிஐ),

ஜி. ராமகிருஷ்ணன் (சிபிஐ(எம்)),

எஸ். பாலசுந்தரம் (சிபிஐ(எம்எல்) லிபரேசன்),

ஏ. ரங்கசாமி (எஸ்யுசிஐ (சி))

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...