இடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது!

கொடியேரி பாலகிருஷ்ணன்

கேரள மாநிலச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம் கடத்தல் வழக்கு மிகத் தீவிரமானதும், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகப் பெயரின் மறைவில் வந்த இந்தக் கள்ளக் கடத்தல் பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து கேரளத்தில் “அரசியல் பூகம்பம்” உருவாக்குவதற்கான நாசவேலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டின் (யுஏஇ) தூதரக ஊழியர் பெயருக்கு வந்த பேக்கிலிருந்துதான் 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அதனால்தான், இந்த வழக்கில் தேசப்பாதுகாப்பு, பொருளாதார மோசடியைத் தடுப்பது முதலான பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இடது ஜனநாயக முன்னணியைத் தாக்குவதற்கான தடியாக இதைப் பயன்படுத்த, இடதுசாரி அரசியலை எதிர்க்கிற எல்லோரும் மற்றும் சில அதிகார மையங்களும் தண்ணீரில் கொள்ளிக்கட்டையைப் பற்றவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்!

நான்கு ஆண்டுகளாக ஆட்சியை மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கிற பினராயி விஜயன் அரசு கொரோனா காலத்தில் மக்களின் இதயங்களில் கூடுதல் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தங்கம் கடத்தல் வழக்கை இடது ஜனநாயக முன்னணி அரசைக் களங்கப்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பாகக் கண்டு பொய்க் கதைகளைக் கட்டமைத்து காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பும் பாஜகவும் உடன்பிறந்த சகோதரர்களைப் போல களம் இறங்கியிருக்கின்றன. இந்த முயற்சி சாமான்ய நீதிக்கு ஏற்றதல்ல. 

பார்சலில் தங்கம் கடத்திய கொடும் குற்றச்செயலில் பங்குள்ள எல்லோரையும் சட்டத்தின்முன் கொண்டுவந்து கடும் தண்டனை வழங்க வேண்டுமென்பது இடது ஜனநாயக முன்னணி அரசின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான கருத்தாகும். அனைத்து மைய ஏஜென்ஸிகளையும் ஒருங்கிணைத்து பயனுள்ள விசாரணை நடத்துவதற்கும், குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள எல்லா கண்ணிகளையும் வெளிக்கொண்டு வரவும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். கள்ளக் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதே இடது ஜனநாயக முன்னணி அரசின் மற்றும் முன்னணியின் நோக்கமாகும். மாறாக, அவர்களைப் பாதுகாப்பதல்ல. அதனால், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைக் கைதுசெய்ய சுங்கத்துறைக்குக் கேரள போலீஸ் அனைத்து உதவிகளும் வழங்கும். 

யுடிஎப் பாணி வேறு; இடது ஜனநாயக முன்னணி பாணி வேறு

ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிஆர்ஓ சரித்குமாரை சுங்கத்துறை கைதுசெய்து வாக்குமூலம் பெற்றபோது தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷும், பாஜகவுடன் தொடர்புள்ள சந்தீப் நாயரும் குற்றச் செயலில் ஈடுபட்டதாக சுங்கத்துறை கண்டறிந்தது. ஸ்வப்னாவைக் குற்றவாளியாகச் சேர்ப்பதற்கு முன்பே இவருடன் நட்புறவு உண்டு என ஆட்சேபம் வந்ததனால் ஐஏஎஸ் அதிகாரியாகிய சிவசங்கரை முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்தும், ஐ.டி. செயலாளர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கையெடுத்தார்.

இந்த அதிகாரியின் மீது தங்கக் கடத்தலின் கூட்டாளி என்றோ, பங்காளி என்றோ ஒரு குற்றச்சாட்டும் வரவில்லை. என்றாலும்கூட, கடுமையான இந்த நடவடிக்கையை முதலமைச்சர் நேர்மையுடன் உடனடியாக மேற்கொண்டார். இடது ஜனநாயக முன்னணி ஆட்சியின் பாணி முந்தைய காங்கிரஸ் யுடிஎப் ஆட்சியின் பாணியிலிருந்து வித்தியாசமானது என்பது இதிலிருந்தே தெளிவாகும்.

ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை.

தங்கம் கடத்தல் வழக்கில் மிகக் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே முதலமைச்சர் கோரினார். இதன் மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், உப்பு தின்றவர் எவராக இருந்தாலும் அவர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்றுமான நிலைபாட்டையே இடதுசாரி ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கேரளத்தில் சோலார் மின்சக்தி வழக்கில் நிகழ்ந்தது போல குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு அரசு நிர்வாகங்களைப் பயன்படுத்திய காங்கிரஸ் யு.டி.எப். ஆட்சியின் பாணி அல்ல இன்று இருப்பது. இந்த விஷயத்தில் குற்றங்களையும் தோல்விகளையும் முன்வைத்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது முக்கியமாக மத்திய அரசும் மத்திய ஏஜென்ஸிகளும்தான். அது எப்படி என்பதை இங்கே குறிப்பிடுவோம்:

ஒன்று: நாட்டில் உள்ள விமான நிலையங்களெல்லாம் மத்திய அரசின் கீழ்தான் உள்ளன. அங்கு நடைபெறுகிற எல்லா சட்டவிரோதக் காரியங்களையும் தடுக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. அதாவது, கள்ளக் கடத்தலைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் சுங்கத்துறைக்குத்தான் உள்ளது. கள்ளக் கடத்தல் பொருள் யுஏஇ (ஐக்கிய அரபு எமிரேட்) தூதரகத்திற்கான பார்சலாகத்தான் வந்தது. அதுவல்லாமல், கேரள அரசின் ஏதேனும் ஏஜென்ஸிக்கு அல்ல. இந்தப் பொருளைக் கொண்டுபோக முயற்சித்தது யுஏஇ தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தைப் பயன்படுத்தித்தான். கள்ளக் கடத்தல் பொருளை விடுவிக்க வைப்பதற்கு பாஜகவின் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்பட சுங்கத்துறையை நிர்பந்தித்திருக்கிறார்கள் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டியது பாஜகதான்.

இரண்டு: ஸ்வப்னா சுரேஷ் என்ற சர்ச்சைக்குரிய பெண் அதிகாரப்பூர்வப் பதவிகளில் வந்துசேர்ந்தது எவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. முதலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியாவின் ஏர் இந்தியா ஸாட்டஸில் அவர் பணியில் சேர்ந்தது எவ்வாறு? இந்த விஷயத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு.

ஐ.டி.துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த நியமனத்தில் இந்தப் பிரச்சனைக்குரிய பெண் பணியில் சேர்ந்தது சம்பந்தமாக ஆட்சேபணைகள் வந்ததால் இந்த விஷயத்தில் உண்மைநிலை குறித்து விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பை அரசு ஏற்றுள்ளது. யுஏஇ தூதரகத்திலிருந்து வெளியேறிய இந்தப் பெண் ஐ.டி.துறையின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தின் திட்டப் பணியில் ஸ்பேஷ் ஸெல்லிங்-அதாவது, மார்க்கெட்டிங் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த வேலையில் அவரைச் சேர்த்தது ப்ளேஸ்மென்ட் ஏஜென்ஸி மூலமாகும். இது ஒரு தற்காலிக ஒப்பந்த நியமனமாகும். இத்தகைய நியமனங்கள் பல்வேறு திட்டப் பணிகளில் மத்திய-மாநில அரசுகளின் நிறுவனங்களில் நடப்பது உண்டு. அதாவது, இவ்விதமான ஒரு நியமனம் புதுமையானது அல்ல. இத்தகைய நியமனங்களை மத்தியில் பிரதமரோ, மாநிலங்களில் முதலமைச்சரோ அறிகிற வழக்கம் இல்லை. 

சர்ச்சைக்குரிய பெண், ஸ்பேஸ் பார்க்கில் பணிக்குச் சேர்ந்தது யுஏஇ தூதரகத்தின் மற்றும் ஏர் இந்தியா ஸாட்டஸின் பணி அனுபவ அடிப்படையில்தான் என்று சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகள் தருகிற விளக்கம் ஸ்பேஸ் பார்க்குடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றாலும் ஒரு குற்றச்செயலில் பெயர் வந்ததைத் தொடர்ந்து ஒப்பந்த நியமனத்தை ரத்துசெய்வதற்கு ஐ.டி.துறையின் கீழ் உள்ள நிறுவனம் நடவடிக்கையெடுத்தது.

மூன்று: சர்ச்சைக்குரிய பெண் உள்ளிட்ட தங்கக் கடத்தல் வழக்கை காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆட்சிக் காலத்திய சரிதா வழக்குடன் ஒப்பிடுவதற்கு திட்டமிட்ட அரசியல் நடைபெறுகிறது. அன்று சரிதாவுடன் சம்பந்தப்பட்ட மோசடி வழக்கில் அவருக்கு உதவியாக இருந்தவர்களின் பெயர் விவரங்கள் வெளிவந்தும்கூட அவர்களை முதன்மை ஊழியர் என்ற பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு அன்று முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டி முதலில் முன்வரவில்லை.

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்தே அவர் மூன்று பேரை அப்பொறுப்பிலிருந்து நீக்கினார். ஆனால், இன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சிவசங்கரின் பெயர் சர்ச்சைக்குரிய பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி கண்டனம் எழுந்த சமயத்திலேயே அந்த அதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் முன்வந்தார். முதலமைச்சர் அலுவலகம் கேரள மாண்பின் மையமாகும். அதற்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்பட அனுமதிக்க முடியாது என்று சிவசங்கரை நீக்கியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

நனைந்த பட்டாசாகி விட்டது

சிவசங்கரை ஒவ்வொரு பதவியிலும் நியமித்தது சிவில் சர்வீஸின் சீனியர் அதிகாரி என்ற நிலையில்தான். இவருடனான பழக்கத் தொடர்பின் விவரங்கள் இப்போது வெளிவந்த போதிலும் இந்தப் பெண்ணுடன் முதலமைச்சர் அலுவலகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. சுங்கத்துறையிடம் செல்வாக்குச் செலுத்த முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன என்று எதிர்அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அப்படியொரு அழைப்பு எதுவும் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து சுங்கத்துறைக்கு வரவில்லையென்று வழக்கு விசாரணைக்குத் தலைமை வகித்த சுங்கத்துறை அதிகாரி தெளிவாக்கியவுடனே, பொய் வெடிகுண்டு நனைந்த பட்டாசு ஆகிவிட்டது! 

தங்கக் கடத்தல் வழக்கை இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிரான மற்றொரு சபரிமலை விஷயமாக்கலாம் என்ற நோக்கத்துடன் ஒரு சில ஊடகங்களின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் திட்டமிட்டு சதி செய்கின்றன. அதற்காக மோடி அரசு, மத்திய ஏஜென்ஸிகளைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கலாம்.

எந்த விசாரணையாகவும் இருக்கலாம்

ஆனால், இந்த வழக்கில் இடது ஜனநாயக முன்னணிக்கோ, அரசுக்கோ மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதனால், குற்றச்செயலுக்குப் பின்னால் உள்ள எல்லா சக்திகளையும், குற்றவாளிகளையும் விசாரணை வட்டத்தில் கொண்டு வருவதற்கு மாநில அரசு எல்லா உதவிகளும் செய்யும். மத்திய அரசுக்கு என்ஐஏ என்றால் என்ஐஏ, சிபிஐ என்றால் சிபிஐ. அல்லது இன்டர்போல்- இவ்வாறு பயனுள்ள எந்த விசாரணையையும் இடது ஜனநாயக முன்னணி அரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால், சிபிஐ விசாரணைக்கு மாநில அமைச்சரவைக் கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை சில பாஜக-காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது. 2019 மே 13 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கக் கடத்தலை சுங்கத்துறை கைப்பற்றிய வழக்கை சிபிஐதான் விசாரணை நடத்தியது. மாநில அமைச்சரவை கோரினால்தான் சிபிஐ வழக்கை ஏற்றெடுக்கும் என்கிற வாதம் நிற்காது. மத்திய அரசு அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனத்தின் குற்றச்செயல் குறித்தும் எந்த ஏஜென்ஸி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதை நிச்சயிப்பது மத்திய அரசுதான். இப்போது சுங்கத்துறையின் விசாரணையில் பாஜக தலைவர்கள் உள்பட பலரின் பெயர்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இதிலிருந்தெல்லாம் கவனத்தைத் திசை திருப்பிவிடத்தான் அவர்கள் புதிய வாதங்களைக் கிளப்புகிறார்கள். சிபிஐ உள்பட தகுந்த ஏஜென்ஸிகளின் விசாரணையைத்தான் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதில் சொல்ல வேண்டியது  மத்திய அரசு

இந்தத் தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கிற பணத்தில் ஒரு பகுதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அழிவு சக்திகளுக்கும் போகிறது என்று ஒரு பாஜக தலைவர் கூறினார். இதற்கு முன்பும் ராஜதந்திர முத்திரையுடன் தங்கக் கடத்தல் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. உண்மையில் தங்கக் கடத்தலில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் கைப்பற்றப்படுகிறது என்று சில ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 98 சதவீதக் கள்ளக் கடத்தலும் பாதுகாப்பாக வெளியே போய்விடுகிறது. மத்திய ஏஜென்ஸிகளும் மத்திய அரசும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். கள்ளக் கடத்தலுக்குப் பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருப்பவர்கள் மாநில அரசுக்கு எதிராகத் திரும்புவது நகைப்புக்குரியதாகும்.

ஒரு பெண்ணை மையப்படுத்தி பிரச்சாரக் கூக்குரலிட்டு உண்மையான பிரச்சனைகளை சாதாரணமாக ஆக்குகிற தந்திரத்தையே இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதிதான் மத்திய அமைச்சர் முரளீதரனிடமிருந்து வெளிப்பட்ட கருத்து. கள்ளக் கடத்தல் பேக், டிப்ளமாட்டிக் பார்சல் (ராஜீய அலுவல் ரீதியான பார்சல்) அல்ல என்ற முரளீதரனின் அறிக்கை வழக்கின் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கேயாகும்.

தங்கக் கடத்தல் வழக்கின் பின்னணியில் எதிர்க்கட்சி காங்கிரசும், பாஜகவும் வீசுகிற கண்டனங்களின், பொய்களின் கற்கள் பட்டு நொறுங்கிப்போகிற கண்ணாடி மாளிகையல்ல இடது ஜனநாயக முன்னணியும் அதன் அரசும். கடந்த நான்கு ஆண்டுகளில் கேரள மக்கள், மேலும் மேலும் பிற்போக்குச் சக்திகள் மீதான வெற்றிகளை இடது ஜனநாயக முன்னணிக்கு வழங்கியுள்ளனர். இந்த நல்ல போக்கைத் தடுப்பதற்கு இப்போதைய பொய்க் காற்றுகளால் முடியாது.

கொரோனா ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குக் கேரளம் ஒன்றுபட்டுப் போராடுகிறது. அதை மறந்துவிட்டுக் கட்டுக்கதைகள் கட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்குவது கேரள மக்களின் ஜீவனைப் பந்தாடுவதாகும். இந்த அரசியல் விளையாட்டிலிருந்து எதிர்க்கட்சி பின்வாங்க வேண்டும்.

நன்றி: தேசாபிமானி நாளிதழ் (10.7.2020) 

தமிழில்: தி.வரதராசன்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...