இடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு!

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு முடிவு செய்கிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அரசியல் சட்ட நெறிகளின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், மனித உரிமைகள் என அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. கார் கம்பெனி முதல் பிஸ்கட் கம்பெனி வரை மூடப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.  பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும்  தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கருணை மழை பொழிகிறது மோடி அரசு.

மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசில் பினாமி போலவே தமிழக அதிமுக அரசு மாறிவிட்டது. மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றி உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

நீட் தேர்வு முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே இந்த தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்கிறது.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.