புதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக! கால நீட்டிப்பு வழங்குக!

மத்திய பாஜக அரசு பதவி ஏற்ற உடனேயே புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் மீது 30 நாட்களுக்குள் கருததுக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கல்வியை காவிமயமாக்குவது, வணிகமயமாக்குவது, கல்வியை மாநில உரிமைகளை மொத்தமாக கபளீகரம் செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டு பாஜக முந்தைய அரசுகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில், புதிய வரைவுக் கொள்கை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதுவரையிலும் இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தில் தற்போது மும்மொழித் திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இந்தியை திணிப்பதற்கான முயற்சி இது என்பது வரைவு திட்டத்தில் தெளிவாகிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கும் நவீன சவால்களை ஈடுகொடுக்கும் வகையில் ஏற்புடையதாக கல்விக் கொள்கை அமைய வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் இதன் மீது 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிப்பது சாத்தியமற்றது.

எனவே, குறைந்தபட்சம் கருத்து கேட்பதற்கான காலத்தை 6 மாதமாக நீட்டிக்க வேண்டுமென்றும் அதேபோன்று முழுமையான வரைவு அறிக்கை அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டுமென்றும், அதன் பிறகு கருத்துக்கேட்புக்கான அவகாசம் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த வரைவு அறிக்கையின் மீது முழுமையான கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பின்னர் தெரிவிக்கும்.

அதேசமயம் தமிழகம் உள்ளிட்டு எந்தவொரு மாநிலத்தின் மீதும் இந்தியை கட்டாயமாக திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.