இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டுகோள்!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம், தலைநகர் புதுதில்லியில் அக்டோபர் 2-4 தேதிகளில் நடைபெற்றது.

பின்னர், கட்சியின் ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி

கேரளாவில், பாலா சட்டமன்றத் தொகுதியில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தமைக்காக கேரள மக்களுக்கு மத்தியக்குழு தன் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத வெற்றியாகும். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கோட்டை என்று கருதப்பட்ட இடத்தில், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் அதன் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான முறையில் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த போதிலும், ஐஜமு இடத்தை இடது ஜனநாயக முன்னணித் தட்டிப் பறித்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் நிலைமை: “இயல்பு நிலை” வெகுதூரத்தில் இருக்கிறது

ஜம்மு-காஷ்மீரில் நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக பாஜகவும் மத்திய அரசாங்கமும் என்னதான் கூரை உச்சியிலிருந்து உரத்துக் குரல் எழுப்பிய போதிலும், நிலைமைகள் அதற்கு நேரெதிராகவே இருக்கின்றன. அப்பகுதியைச் சேர்ந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப்தாரிகாமி நடந்த மத்தியக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்று கூறியுள்ள போதிலும், கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளித்திட மறுத்துள்ளது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று இவ்வாறுதான் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலைமைகள் முற்றிலும் இதற்கு நேரெதிராக இருந்து வருகிறது.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தொடர்கிறது. சாலைகளில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் ஓடவில்லை. கல்வி நிலையங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருப்பது தொடர்கிறது. கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருப்பதும் தொடர்கிறது. கடந்த இரு மாதங்களாக இவ்வாறு தொடர்ந்து இருந்து வரும் நிலைமையால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலைமையில்தான், ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் உலகத்தின் முன்னே, அங்கே “இயல்பு நிலை” திரும்பிவிட்டதாகக் காட்ட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். மேலும், இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நபர்களான ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பேரூராட்சி மன்றத்தலைவர்களின் இடங்கள் 61 சதவீதம் காலியாக இருக்கின்றன. இந்த நிலைமையில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது ஆகும்.

ஜம்மு-காஷ்மீரில் தகவல்-தொடர்புகள், மக்களின் இயல்பு வாழ்க்கை, சிவில் உரிமைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது. அரசியல் நடவடிக்கைக்கான உரிமை மீண்டும் அளிக்கப்பட்ட பின்னர்தான் தேர்தல்கள் நடத்தப்பட முடியும்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறைகளும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளும்;

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசியக் குடிமக்கள் பதிவேடு முறை என்பது அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இது அசாம் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். உச்சநீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து சுமார் 20 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான இந்தியப் பிரஜை எவரும் விடுவிக்கப்படக் கூடாது.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களின் மேல்முறையீடுகள் அனைத்தும், பாகுபாடு ஏதுமின்றி முறையான நீதித்துறையின் நீதிபதிகளின் மூலமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அந்நியர்கள் நடுவர்மன்றத்தால், அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அடைப்புக்காவல் முகாம்கள் அனைத்தும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கின்றன. அங்கே உள்ள நிலைமைகள் மிகவும் மோசமாகும். அடிப்படை மனித உரிமைகள் அனைத்தையும் மீறியுள்ளன. இவை அனைத்தும் மூடப்பட வேண்டும். அங்கிருந்த மக்கள் அனைவரும், அவர்களின் மேல்முறையீடுகளில் தீர்ப்பு வரும் வரையிலும் அவர்கள் விரும்பும் வண்ணம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறையை அசாமிற்கு அப்பாலும் விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு எதிர்க்கிறது. இந்த அரசாங்கம், தேசியமக்கள் பதிவேட்டுத் தயாரிப்புப் பணிகளையும் புதுப்பித்திருக்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் அகில இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பதற்காகவே இதனை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.

மத்திய பாஜக அரசாங்கம், சில மாநில அரசாங்கங்களிடம், அடைப்புக் காவல் மையங்கள் ஏற்படுத்துவதற்கான கட்டிடங்களைக் கட்டும் பணியைத் துவக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடு முழுதும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் இவையனைத்தும் தேவையற்ற வேலைகள். தேர்தல் ஆணையத்தின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பட்டியலையும் பெற்றிருக்கிறது.

மேலும் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரக்கூடிய நிலையில், இதேபோன்ற பணிகளை மீண்டும் செய்ய வேண்டும் என்று பேசுவதும், அசாமிற்கும் அப்பால் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று கூறுவதும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்காகக் கணக்கெடுப்பதும், குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி கொடுப்பதும் – இவை அனைத்தும் நாட்டில் மதவெறியை கூர்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் ஆர்எஸ்எஸ்/பாஜக தங்கள் வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவுமான முயற்சிகள் என்பதையே காட்டுகின்றன.

பொருளாதார நெருக்கடி

நாட்டின் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான வேலையின்மை, லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, தொடரும் விவசாயத்துறை நெருக்கடி – இவை அனைத்தும் பொருளாதார மந்தத்தை நோக்கி நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிற பிரச்சனைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவின் அடிப்படையிலும் கூட, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து காலாண்டுகளில், அதாவது 2017-18இன் நான்காவது காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்தது, இப்போது 2019-20 முதல் காலாண்டில் 5 சதவீதமாக வீழ்ச்சிஅடைந்திருக்கிறது. தொழில் உற்பத்தி அட்டவணையும் பொருளாதார மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. 2019-20இல் ஏப்ரல்-ஜூலைக்கான தொழில் உற்பத்தி அட்டவணை (Manufacturing index of industrial production) வளர்ச்சி விகிதம் வெறும் 2.8 சதவீதமாகும். இது இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த தொழில்உற்பத்தி அட்டவணை வளர்ச்சி விகிதமும், சென்ற ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு 3.3 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. மூலதனப் பொருள்கள் உற்பத்தி (Capital goods production)யும் 4.3 சதவீத அளவிற்கு எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. இது சென்ற ஆண்டு 7.3 சதவீதமாக இருந்தது. நுகர்வுப் பொருள்கள் உற்பத்தியும் 2.7 சதவீதம் குறைந்துள்ளது.

இத்தகைய பொருளாதார மந்தத்தின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. மிகவும் குறைந்து மதிப்பிடும் அரசாங்கத்தின் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படியே, 2019 செப்டம்பர் 27 அன்று வேலையின்மை 9.94 சதவீதத்தை எட்டியிருக்கிறது. இது கடந்த ஐம்பதாண்டுகளில் மிகவும் உச்ச நிலையாகும். ஆகஸ்ட் இறுதிவாக்கில் 4.5 கோடி பேர் வேலையில்லாதவர்கள் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆகஸ்ட் எண்ணிக்கையை விட 1.1 கோடி அதிகமாகும். இளைஞர்களின் வேலையின்மை 28 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

வரும் அக்டோபர் 10 மற்றும் 16 தேதிகளுக்கு இடையே, அகில இந்தியக் கிளர்ச்சி இயக்கங்கள் நடத்திட இடதுசாரிகள் விடுத்துள்ள அறைகூவலுக்கு மக்களைப் பெருமளவில் திரட்டிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.

  • வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் பொது முதலீடுகளை அதிகரித்திடு. அதுவரையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரண ஊதியம் கொடு.
  • மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் என்பதை உத்தரவாதப்படுத்து.
  • வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் அளிப்பதை உத்தரவாதப்படுத்து.
  • பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்து. ராணுவம், நிலக்கரிச் – சுரங்கத்துறைகளில் அந்நிய நேரடிமுதலீடு 100 சதவீதம் அனுமதிப்பதை விலக்கிக்கொள்.
  • பிஎஸ்என்எல், துப்பாக்கித் தளவாடத் தொழிற்சாலைகள், இந்தியன் ரயில்வே, ஏர் இந்தியா போன்றவற்றில் பெரும்பகுதியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளைக் கைவிடு.
  • மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழான ஒதுக்கீட்டுத் தொகையை அதிகப்படுத்து.
  • கடந்த கால நிலுவைத் தொகைகளை அளிப்பதை உத்தரவாதப்படுத்து. ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளித்திடு. குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடு.
  • விவசாய நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய விதத்திலும், விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்கக்கூடிய விதத்திலும், விவசாயிகள் அனைவருக்கும் ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்திடு.
  • வேளாண் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயித்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்.
  • வயதானவர்கள்/விதவைகள் ஓய்வூதியத் தொகையை குறைந்தபட்சம் 3,000 ஆக உயர்த்திடு.

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

மகாராஷ்ட்ரா மற்றும் அரியானா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து விவாதித்தது. தொகுதி உடன்பாடு காண்பதற்காக இடது, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. போட்டியிடும் வேட்பாளர்களின் முழுப்பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். இத்தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைமையிலான மதவெறி-பாசிஸ்ட் சக்திகளை முறியடித்திடக் கூடிய விதத்திலும், சட்டமன்றங்களில் இடதுசாரிகளின் இருப்பை வலுப்படுத்தக்கூடிய விதத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சிகள் அமைந்திடும்.

கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதன் நூற்றாண்டு கடைப்பிடித்தல்

வரும் 2019 அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100வது ஆண்டாகும். இதனை ஓராண்டு காலத்திற்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...