இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழுக் கூட்ட தீர்மானங்கள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழுக் கூட்டம், ஏலகிரியில் மே 20,21,22 தேதிகளில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது.  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்திரராசன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிடுக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கவலை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்பு அடிப்படையில் மாதவாரியாக இதுவரை தண்ணீர் வழங்கவில்லை. தற்போது காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர், பதவியை ராஜினாமா செய்திருப்பது மேலும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்து கோடைகாலத்தில் நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை எடுத்து பயன்படுத்தி விடுகிறது. தென்மேற்கு பருவமழையில் நீர் தேக்கங்கள் நிறைந்து அதன்பின்னரே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது என்ற நடைமுறையைத் கடைபிடிப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பததில் காலதாமதம் ஏற்படுவதோடு – உரிய அரளவு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே, கர்நாடாக அரசின் இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும், காவிரி நதிநீர் ஆணையத்திற்கு தகுதியான புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைத் துவக்குவதற்கு உதவியாக காவிரி நடுவர்மன்ற இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு வழங்கிட, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு இணையாக சுமார் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம்,  உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து ஏற்கனவே தொழிலாளர்களுக்கும் – நிர்வாகத்திற்கும் இடையே 12(3) ஒப்பந்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை  அமல்படுத்துவதில் என்எல்சி நிர்வாகமும், மத்திய அரசும் காலம் தாழ்த்தி வருவதே போராட்டம் நீடிப்பதற்கு பிரதான காரணமாகும். இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும்போது- நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மட்டும் சமஊதியம் வழங்க மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என இக்கூட்டம் கருதுகிறது. எனவே மத்திய அரசு உடன் தலையிட்டு தொழிற்சங்கத்தலைவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றும்,  தமிழக அரசு பார்வையாளராக இல்லாமல் மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்திட வேண்டும் எனவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கையில் தமிழர் பகுதியில் இராணுவத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது. ஆயினும் இயல்பு நிலையை மீளமைக்கும் கடமையை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. சர்வதேச சமூகத்தின் கருத்துக்களை மதிக்காத போக்கையும் இலங்கை அரசு கடைபிடித்து வருகிறது. இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவும் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் நீக்கமற நிறைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் ராணுவம் இருப்பதோடு, தமிழ் மக்களின் சமூக நடவடிக்கைகள் இராணுவத்தால் கண்காணிப்பதும, கட்டுப்படுத்தப்படுவதும், நடைமுறையாக உள்ளது. ஆயுத மோதலுக்கான சூழல் ஏதுமில்லாத நிலையில் இராணுவத்தின் இருப்பு ஒடுக்குமுறை மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கையே.

இந்நிலையில் இயல்பு நிலையை உருவாக்குவதற்கு பதிலாக, இலங்கை அதிபர் இராணுவத்தை தமிழர் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருப்பது தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசின் இந்த நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசு தனது இராஜ்ஜிய நடவடிக்கை மூலம் இலங்கை அரசு இராணுவத்தை திரும்பப் பெற நிர்ப்பந்திக்க வேண்டுமென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுத்திடுக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் டெங்கு காய்ச்சலால்  29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம். தற்போது டெங்கு காய்ச்சல் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவி வருகிறது. சுகாதாரமற்ற சூழலும், கொசுத்தொல்லையுமே இதற்கு பிரதான காரணமென  மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்கும் பணிகளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் இதற்கென மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் ஒரே படுக்கையில் 3 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலைமை உள்ளதால் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் கூடுதல் படுக்கைகள் ஒதுக்க சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டுமென  கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

நாகை மாவட்டம் வண்டல் கிராமத்தில் நடந்த கௌரவக்கொலையை கண்டித்து :

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் , தலைஞாயிறுக்கு உட்பட்ட வண்டல் கிராமத்தில் சித்ரா என்கின்ற 29 வயது பெண் ஊர் மக்களில் ஒருபகுதியினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவருடன தொடர்பு வைத்திருந்த மாதவன் தூக்கில் தொங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் வெளிவந்த செய்திகள் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இந்த சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாதவன் தலித் என்பதால் முன்னுக்கு வந்த சாதிய ஆதிக்கப்பார்வையே அடிப்படை காரணமாகும்.

எனவே, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கொலை மற்றும் கொலை முயற்சி பிரிவு மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கொலை எனத்தெரிந்தும், சித்ராவின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், அவரது சாதியைச் சேர்ந்தவர்களையே சடலத்தை எரிக்க அனுமதித்த காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,  அதிகரித்து வரும் கௌரவக்கொலைக் குற்றங்களை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்றும்,  இதற்கென  மத்திய அரசு ஒரு தனிசட்டம் இயற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply