இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (30.5.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (30.5.2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். பி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமலாக்கிடுக:

அனைவருக்கும் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் சமூகரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு, அனைத்து தனியார் சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் நர்சரி பள்ளிகளில் வழங்க வேண்டும். ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பலன்பெறும் வாய்ப்புள்ள பல தனியார் பள்ளிகள் இந்த இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டு முறையாக அமல்படுத்தவில்லை. இந்த ஆண்டு அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழு மூலம் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டை நிரப்பிட முழு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டரீதியான இடஒதுக்கீடு குறித்த விபரங்களை அரசு விளம்பரப்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பினை தனியார்பள்ளி அறிவிப்பு பலகைகளில் ஒட்ட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்திட உதவிடும் வகையில் அவர்களுக்கு விண்ணப்பங்களை கிடைக்கச் செய்து வழிகாட்டிட கல்வி அலுவலர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க பெற்றோர்களுக்கு உரிய கால அவகாசத்தை மாவட்ட கல்வி நிர்வாகங்கள் வழங்கிட வேண்டும்.

இந்த ஆண்டு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடஒதுக்கீட்டை நிரப்பிட முழுமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

144 தடை உத்தரவை வாபஸ் பெறுக:

கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி அன்று மரக்காணத்தில் தலித் மக்கள் மீது பாமகவினர் வன்முறை தாக்குதல்களை நடத்தியதையொட்டி விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. ஏப்ரல் 30-ந் தேதியன்று விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பிய பிறகும் கூட இந்த தடை உத்தரவு காலவரம்பின்றி அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு, ஜனநாயக இயக்கங்களின் செய்லபாட்டை முடமாக்கியுள்ளது. 144 தடை உத்தரவை நீண்ட காலம் நீடிக்கச் செய்வது, ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணானதாகும். பொதுமக்களின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகவும், மக்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் ஜனநாயக ரீதியில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இது நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிற கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்திலும், இதர இடங்களிலும் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

காவிரிப்படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் பணியை நிறுத்திடக் கோரி:

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிக்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. விளைச்சல் நிலப்பரப்பாக உள்ள சுமார் 1,66,210 ஏக்கர் நிலங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தரைமட்டத்திலிருந்து 500 அடி முதல் 1650 அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கப்பட உள்ளது. இதற்காக பெருமளவு நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டும். மிக அதிக அளவில் நிலத்தடி நீர் வெளியேற்றப்பட உள்ளதால், இந்தப் பகுதிகளும் சுற்றுவட்டாரத்திலும் நிலத்தடிநீர் படுபாதாளத்திற்கு சென்றிடும் நிலை உருவாகும் என பல அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்படும் நீர் அதிக உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருக்கும். இது வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளில் கலந்தால், குடிநீரும், பாசனத்திற்கான நீரும் நச்சு நீராக மாறிடும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் அளவில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் மத்தியில் விவசாயம் அழிந்து போகும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டம் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசின் துறைகள் அறிவியல் ரீதியாக முழுமையான ஒரு ஆய்வறிக்கை வெளியிட வேண்டும். எந்த வகையிலும் மீத்தேன் வாயு எடுக்கும் பணியால் விவசாயிகள் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. விவசாயிகளுக்கு இத்தகைய உறுதிப்பாட்டை ஏற்படுத்தாத வரை இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply