இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (அக்டோபர் 3-4, 2013))

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (செப்டம்பர் 03-04, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீதான தாக்குதலுக்கு கண்டனம்:

திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் விருத்தாச்சலத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது பாலக்கரை அருகே அவருடைய வாகனத்தையும் உடன் வந்த வாகனங்களையும் தாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கிறார்கள். அதேபோன்று அடையாரில் அவருடைய வீட்டிலிருந்த காரும் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டுள்ளது. கருத்துக்களை வன்முறையின் மூலம் எதிர்கொள்ளும் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை அனுமதிக்க கூடாது. கி.வீரமணி தாக்கப்பட்ட இந்த ஜனநாயக விரோதச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ மாநில காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டம் – கால நீட்டிப்புக்கு வலியுறுத்தல்:

இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்திற்கான அரசு ஆணை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. பல லட்சக் கணக்கான குடும்பங்கள் பல ஆண்டு காலமாக பல்வேறு வகையான புறம்போக்கு இடங்களில் வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். வீட்டுமனைப் பட்டா கோரி தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பல முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகும் பட்டா வழங்கும் பணி முழுமையடையவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் உரியவர்களுக்கு பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.

எனவே, பல்வேறு வகையான புறம்போக்குகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் வகையில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான அரசு ஆணையின் காலத்தை நீட்டித்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மனைப்பட்டா கோரும் லட்சக்கணக்கான நகர்ப்புற, கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு மனைப்பட்டா  வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply