இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-க்கு வாக்களிப்பீர்! இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவீர்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-க்கு வாக்களிப்பீர்! இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவீர்!

சாதி அமைப்புக்கு எதிராக, தலித்துகளின் சமநிலையினையும் மாண்பினையும் உறுதிப்படுத்த

நம் நாட்டின் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தலித்துகளே ஆவர்; முறைசாரா தொழிலாளர்களில் பெரும்பகுதியினரும் அவர்களே. நமது பொருளாதாரத்தையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் இயக்குவதில் அவர்களின் உழைப்பு தவிர்க்கவியலாத ஒன்றாகும். நமது பொருளாதாரத்தில் அவ்வளவு முக்கியமானதொரு பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கும்போதும், அவர்கள் சமூகத்தின் கடைநிலை மனிதர்களாகவே உள்ளனர். ஐக்கிய முற்போக்கு அணி அரசு செயல்படுத்தும் புதிய தாராளமயக் கொள்கைகள் அவர்களின் வாழ்நிலைகளை மேலும் மோசமாக மாற்றியுள்ளது.

தாழ்த்தப்பட்டபகுதியினரின் வேலைவாய்ப்பில் தனியார் மயத்தின் தாக்கம்

பொதுத்துறை மூடலும், அதிகரித்து வரும் தனியார் மயமும், தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்கான (பட்டியலின) இடஒதுக்கீடு என்பதை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை இதுவரை ஐக்கிய முற்போக்கு அணி அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவில்லை. சென் ற தேர்தலின் போது காங்கிரஸ் அரசு அதைசெயல்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்தது; ஆனால் கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்து அந்த வாக்குறுதியினை செயல்படுத்தத் தவறியது.

அதேவேளையில், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியான இடங்களை நிறைவு செய்வதற்கான ஆர்வம் தங்களுக்கு இல்லை என்பதை அந்த அரசு வெளிக்காட்டுகிறது. பிரதமரின் நேரடி  பொறுப்பிலுள்ள பணியாளர், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் அறிக்கையின்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதியினருக்கான இடஒதுக்கீட்டில் நிறைவு செய்ய வேண்டிய எஞ்சி நிற்கும் காலி இடங்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைச்சரக துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அப்படி நிறைவேற்றப்படாமல் எஞ்சி நிற்கும் 76137 காலியிடங்களில், தனித்தேர்வின் மூலமாக 26472 இடங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன; அதாவது 3 காலி இடங்களில் ஒன்றில்தான் பணியமர்வு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் கிடைக்கப் பெறவில்லை என்று சொல்லி விட முடியாது; ஏனெனில் அனைத்துப்பிரிவிலான பணிகளுக்கும் தகுதியானவர்கள் வேலையில்லாதோர் பட்டியலில் உள்ளனர். மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே இதை தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் நிலமற்ற நிலை

தலித்துகளின் சமூகவாழ்நிலை  மிகவும் கவலலையளிப்பதாகவே உள்ளது. பெரும்பான்மையான தலித்துகளின் வேலைஎன்பது நிலத்தோடு தொடர்புயுடையதாக இருந்தபோதிலும், மிகமிகக்குறைவான தலித்துகளே நிலம் உடையவர்களாக உள்ளனர். அவர்களும் மிகவும் சிறு துண்டு நிலங்களுக்கு சொந்தக்காரர்களாகவே உள்ளனர், அதையும் அவர்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை இழக்கும் போக்கு அதிகமாகிக் கொண்டே வருவதையும், அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. அனைத்துப்பிரிவு விவசாயத்தொழிலாளர்களின் எண்ணிக்கையில் மிகவும் அதிக சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட (பட்டியலின) பகுதி மக்களே உள்ளனர்.

மக்கள் தொகை கணக்கீட்டில் நிலத்தின் சாகுபடியாளர் எனக் குறிப்பிடப்படும் தலித்துகளின் சதவிகிதம் 2001ல் 20 ஆக இருந்தது 2011ல் 14.8 ஆகக் குறைந்துவிட்டது என குறிப்பிடப்பட்டிருக்கிறது; இது அவர்களில் நில உடமையாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. இது அரசின் கொள்கைகளால் எப்படி தலித்துகளின் கைகளில் உள்ள மிகக்குறைவான அளவில் உள்ள நிலங்கள் கூட அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு விடுகிறது என்பதை காட்டுகிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்திருபபதும் அரசின் ஆதரவு எதுவும் இல்லாத நிலையும், அவர்களை அவர்களின் நிலத்திலிருந்தே வெளியேற்றுகிறது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பதிலாக, இந்த ஆண்டுக்கான நிதி-நிலை அறிக்கையில் தலித்துகளின் நலன்களுக்காக உள்ள 22 திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது. தலித்துகள் பற்றியும் அவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவது பற்றியும் அந்த கட்சி கொண்டிருக்கும் அக்கறை இதுதான்!

பணியில் தற்காலிகத்தன்மை அதிகரிப்பு

மற்றொரு கவலையளிக்கும் போக்கும் வெளிப்படுகிறது. மக்கள் தொகை கணக்கின்படி தொடர்ந்து 6 மாத காலத்திற்கு பணியில் இருப்போர் பிரதான தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். 2001ல் அந்த பிரிவில் 73 சதவிகிதமாக இருநத தாழ்த்தப்பட்ட பகுதியினர் 2011ல் 70.7 சதவிகிதமாக குறைந்துள்ளனர் என்று அந்த கணக்கு குறிப்பிடுகிறது. அதன் தொடர்பாக மற்றொரு தகவலும் உண்டு. உழைப்பு சக்தியினை தற்காலிகமாக பயன்படுத்தும் போக்கு ஆழமாகிக் கொண்டிருக்கிறது; தற்காலிகமாக அல்லது அத்துக் கூலிகளாக உழைப்போர் எண்ணிக்கை 2011ல் 27 சதவிகிதத்திலிருந்து 2011ல் 29.3 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2011ல் மக்கள் தொகை கணிப்பின் முதல் சுருக்க அறிக்கையின்படி அந்த உழைப்பில் பெண்களின் பங்கு 2011ல் 28.3 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

குடும்ப அளவில் நடத்தப்படும் சிறு,குறு நிறுவனங்களும் மூடப்படுகின்றன என்றும் அதில் ஈடுபட்டுள்ளோர் உழைக்கும் மக்கள் எனும் நீரோட்டததில் ச்ர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் மக்கள்தொகை கணிப்பின்படி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட குடும்பம் சார் தொழிலில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை தாழ்த்தப்பட்ட பகுதியினரைப் பொறுத்தவரை 2001ல் 3.9 சதவிகிதமாக இருந்தது 2011ல் 3.2 சதவிகிதமாக குறைந்து விட்டது. தலித் குடும்பங்கள் நடத்தும் அத்தகைய சிறு தொழில்களுக்கு கடன் மற்றும் சந்தையில் விற்பனைக்கான வசதிகள் செய்து கொடுப்பதில் அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது தெளிவாகிறது. தொழில் கடன்களை விழையும் தலித்துகளுக்கு எந்த உதவியும் அளிக்கலாகாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. நிறுவனங்கள் நடத்தும் தலித்துகளுக்கு கடன் வழங்கியது. 2012 ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி 33.8 சதவிகிதம் குறைந்திருக்கிருது. இந்த போக்கினை மாற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்விக்கான உரிமை இல்லையா?

தலித்துக்கள்தான் பொருளாதார சுரண்டலாலும் சமூக ஒடுக்குமுறையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். அரசியல் சட்டத்தின்படி கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு உரிமை கூட, நாம் நினைப்பதை போலல்லாமல் அவர்களுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை. மற்றபகுதி மக்களுக்களோடு ஒப்பிடும் பொழுது, தலித் மக்களிடையே ஆரம்பக் கல்வியிலிருந்தே படிப்பை தொடர முடியாமல் விடுபடுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உயர் கல்வியில் சட்டத்தின்படி 15 சதவிகிதம் தலித் மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றிருந்தாலும், 10 சதவிகிதம் மாணவர்கள்தான் அதில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.  மேலே போகப்போக பாகுபடுத்தி ஒதுக்குதலும் அதிகமாகிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனங்களான இந்திய தொழில் நுணுக்க நிறுவனம் (IIT) மற்றும் அகில இந்திய மருததுவ கல்வி நிறுவனம் (AIMS) போன்றவற்றில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான தலித் மாணவர்களே உள்ளனர்; இடஒதுக்கீட்டுக்குரிய மூன்று இடங்களில்ஒரு இடம்தான நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் மோசமான அம்சம் என்னவென்றால் தலித் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையினை காங்கிரஸ் அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது என்பதுதான். இந்த ஆண்டு நிதி-நிலை அறிக்கையில் கூட அதற்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.400 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு ஆக்ககூறு திட்டமா? அல்லது சிறப்பு திசை திருப்பும் திட்டமா?

மனித வளர்ச்சிக்குத் தேவையான அம்சங்களில் மிகக்குறைந்த அளவை பெறுவதில் கூட தலித்துகள் மிகவும் பின்தங்கியுள்ளனர். பல வகையான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன, திட்டங்கள் அறிவிக்கப்பட்டன; ஆனால் முன்னேற்றம் ஏதுமில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. தலித்துகள் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட திட்டம் ஒன்றை நாம் பரிசீலிக்கலாம்- பட்டியலின சாதிகளுக்கான துணை திட்டம் (சிறப்பு ஆக்கக்கூறுத் திட்டம்)

அந்தத் திட்டத்தின் படி தலித்துகளுக்காக மத்திய அரசின் நிதி-நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் செலவினம் தலித் மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்க வேண்டும்; ஆனால் ஐக்கிய முற்போக்கு அணி அரசால் இது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. விதிகளின்படி 2014-15 நிதி-நிலை அறிக்கையில் மொத்த நிதியில் 16.6 சதவிகிதம் இதற்காக ஒதுக்கியிருக்க வேண்டும்; ஆனால் 8.76 சதவிகிதம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது; அது ஒதுக்கப்பட வேண்டிய தொகையில் பாதிதான்.  2014-15ல் ஆண்டுக்கான மொத்த நிதி ரூ.17,63,214 கோடி. மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கான ரூ.92,183,45 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பாதித் தொகையாக ரூ,48,638.13 கோடிதான் ஒதுக்கப்பட்டது. தலித் மக்களின் நலன்களுக்கு அதைக்கூட முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்பதை நமதுஅனுபவம் நமக்கு உணர்த்துகிறது. சென்ற ஆண்டு (2013-14) நிதி நிலை அறிக்கையில் ரூ.41561.13 கோடி அந்த சிறப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.35,800.60 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது. தலித் மக்களின் நலன்கள் பற்றியும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் காங்கிரஸ் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

திட்டம் மற்றும் திட்டத்தில் சேராத பட்ஜெட் செலவினங்கள்

விவரங்கள்

2012-2013
உண்மையான

பட்ஜெட்

ரூ 

2013-14

திருத்தப்பட்ட 

மதிப்பீடு

ரூ 

2013-14

செலவு

மதிப்பீடு

ரூ 

2014-15

பட்ஜெட்

மதிப்பீடு

ரூ  

மொத்த பட்ஜெட் 1410367 1665297 1590434 1763214
திட்ட பட்ஜெட் 413625 555322 475532 

555322

திட்டத்தில் சேராத

பட்ஜெட்

996742 1109975 1114902 1207892

 

தலித்துக்கள் நலன்களுக்காக சட்ட ரீதியாக நிதி ஒதுக்கப்பட்டு, முறையாக செலவளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கூறப்பட்ட சிறப்பு ஆக்கக்கூறு திட்டத்திற்கு நாடாளுமன்ற/ சட்டமன்ற முடிவுகளாக சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. அத்தகையதொரு சட்ட அந்தஸ்து வழங்க ஐக்கிய முற்போக்கு அணி அரசு தவறிவிட்டது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே நோக்கம் கொண்ட அமைப்புகளும் தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக, ஆந்திர மாநில அரசு அத்தகையதொரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

பல்வேறு பாரபட்ச நடைமுறைகள்

தலித் மக்களுக்கு சில அடிப்படை வசதிகளை அளிப்பதிலும், அவர்களுக்கு நல்ல வாழ்நிலைகளை உருவாக்குவதிலும் பெரிய அளவில் பாரபட்சம் காட்டப்படுகின்றன. தலைமை பதிவாளர் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கு அதிகாரியின் 2013 செப்டம்பர் 30ம் தேதியிட்ட அலுவலகக்குறிப்பில் சேரிகளில் வாழும் குடும்பங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் தலித் குடும்பங்கள் சேரிகளில் வாழ்கின்றன; 5ல் 1 தலித் குடும்பம் அங்கே வாழ்கிறது, மற்றவர்களில் 10-ல் 1 குடும்பம்தான் அங்கே வாழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சேரிகளில் வாழும் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சீரழிந்த தன்மை, அதிக மக்கள் நெருக்கடி, கட்டிடங்களின் தவறான கட்டமைப்பு வடிவங்கள், குறுகலான கோளாறான பாதை அமைப்புகள், காற்று, மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகளின்மை, அல்லது இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து இருக்கும் காரணங்களால் அப்படிப்பட்ட இடங்களில் மக்கள் வாழும் பகுதிகளை 1956ம் ஆண்டு சேரிகள் என சேரிகள் வளர்ச்சி மற்றும் தூய்மைப்படுததும் சட்டம் விளக்குகிறது; அவைகள் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்புக்கும் உடல் நலனுக்கும் கேடு விளைவிக்கும் என்றும் குறிப்பிடுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் எந்த அளவுக்கு தலித் மக்கள் அடிப்படை வதிகள் கொடுக்கப்படுவதில் பாரபட்ச நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெளிவுபடுத்தும்.

தலித்துகளுக்கும் மற்ற பகுதியினருக்கும் வளர்ச்சி குறியீடுகளில் காணப்படும் மாறுபாடுகள்

குறியீடுகள்         தலித் (%) மற்றவர் (%)
கல்வியறிவு        63.5 72
பெண்கள்-சத்துணவு இன்மை (BMI18.5ரூ) 41.2 33
குழந்தைகள் எடை குறைவு      47.9 39.1
வீடு (முழுமையான)       38.3 66.1
கழிப்பறை வசதிஇல்லாமை        65 49.2
வீடுகளுக்கு மின்சாரம்             61.2 75
சிறார் மரணம் (1000-க்கு) 66.4 50
5 வயதுக்குட்பட்ட சிறார் மரணம் (1000-க்கு)   88.1 74.3
தடுப்பூசி செலுத்தப்பட்டது 39.7 45.5
வறுமை அளவு கிராமப்புறம் 20.6 14.9
வறுமை அளவு நகர்ப்புறம் 25.3 14.5

(ஆதாரம்: இந்திய மனிதவள மேம்பாட்டு அறிக்கை – 2011 – சமூக உள்ளடக்கு நிலைநோக்கி – மனிதசக்தி பயன்பாடு ஆராய்ச்சி நிறுவனம், திட்டக்கமிஷன்)

தலித்துகளுக்கு எதிரான வன்முறை

இவ்வகையான பொருளாதார ரீதியான பாரபட்சம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுதல் நிலவும் சூழலையும் தாண்டி சமூக ரீதியான பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் தலித்துகள் உள்ளாக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் தலித்துகள் மீதான கொடூரமான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மிர்ச்பூர், தர்மபுரி, கைர்லான்ஜி, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் பல மாநிலங்களில் உள்ள கிராமப்பகுதிகள் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடுமையான தாக்குதல் நடவடிக்கைகள் எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் இன்றும் தலித்துக்ள் தாக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகின்றன; நாட்டின் தலைநகரமான டில்லி கூட அதிலிருந்து விடுபடவில்லை; அண்மையில் ஒரு திருமணத்தில் மணமகன் அழைப்பு நிகழ்வில் தலித் மணமகன் குதிரையில் வலம் வருவது தடுக்கப்பட்டதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது.

மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவக்கல்வி நிறுவனமான அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தில்  (ஹஐஆளு) கூட தலித் மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படத்தப்படுவதும், தேர்வுகளில் தோல்வியடையச் செய்வதிலும் அவர்களை தனி விடுதிகளில் இருக்கச் செய்வதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதைக் காட்டிலும் மோசமானதென்னவென்றால், அந்த நிறுவனத்திலும் அதைப் போன்ற சிறப்பு நிறுவனங்களான இந்திய தொழில்நுணுக்க கல்வி (ஐஐகூ) நிறுவனங்கள்  போன்றவற்றில் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆசிரியர்/பேராசிரியர் இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. அகில இந்திய மருத்துவக்கல்வி நிறுவனத்தில் நிலவும் சாதி பாகுபாட்டினை கண்டறிய அரசு அமைத்த குழுவின் அறிக்கையிலிருந்து இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறையினை தடுக்கும் சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தேசிய குற்றங்கள் பதிவு அமைப்பின் அறிக்கையின்படி 2010ம் ஆண்டு அந்த சட்டத்தின்படி 10513 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, 2011ல் 11342 மற்றும் 2012ல் 12576 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அதற்கான தண்டனை கொடுக்கப்படும் விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இது, அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு மாறிவரும் குற்றங்களின் பல்வேறு வடிவங்கள் இணைக்கப்பட்டு, அவைகளுக்கான சட்டத்திருத்தஙகளை கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதை உணர்த்துகிறது.  ஐக்கிய முற்போக்கு அணி அரசு அந்த திருத்தங்களை நிறைவேற்றத் தவறி விட்டது. முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்கே தலித்துகள் பலவகையான இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்; அப்படியே பதிவு செய்தாலும், அரசின் அறிவிப்பின்படியே, குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது; 3 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரையிலான வழக்குகளில் தான் நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றன; 80லிருந்து 90 சதவிகிதம் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.21 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட பதானி தோலா வழக்கில் 2012ல் சாட்சியங்கள் இல்லை என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்; இதைப்பற்றி அறிக்கையினை இது தொடர்பான அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிக்கை விடுத்த பொழுது, முடிவு எடுக்கப்படாமல் இருக்கும் நீதிமன்ற வழக்குகளைப்பற்றியும் சொன்னார்.

மேலும், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தலித்துகள் மீதான கொடுமைகளை தடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய முற்போக்கு அணி அரசு குறைத்திருக்கிறது.

மனிதக் கழிவினை மனிதனே அகற்றும் தொழில் புனிதமானது- மோடி

இந்துத்துவா கோட்பாட்டின் சோதனை மையமாக விளங்கும் குஜராத்தில் தலித்துகளின் நிலைமை மிகவும் கவலையளிக்கும் தன்மையில் உள்ளது. பிஜேபியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி, மனிதக் கழிவினை மனிதனே அகற்றும் பணி மிகவும் புனிதமான அனுபவத்தை கொடுக்கும் பணி என்ற நம்பிக்கை உடையவராக உள்ளார். தங்கள் வாழ்வினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டும் அவர் இந்தப் பணியினை அவர்கள் செய்கிறார்கள் என்று நாம் நம்பவில்லை; அப்படித்தான் என்றால் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். … ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சமூகம் முழுமைக்கும் கடவுளுக்கும் செய்ய வேண்டிய கடமைதான் இது என்ற ஞானோதயம் சிலருக்கு தோன்றியிருக்கக்கூடும்.  கடவுளால் பணிக்கப்பட்ட இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்; பல நூற்றாண்டுகளாக இந்த சுத்தப்படுத்தும் பணி ஒரு உள்ளார்ந்த ஆன்மீக செயல்பாடாக  தொடர வேண்டும்.  ஆகவே அது ஒளியூட்டும் ஆன்மீக செயல்பாடு, இவ்வளவு அற்புதமான கருத்துக்களை வெளியிடும் மோடியின் சொற்களுக்கும், செயலுக்கும் ஏன் வேறுபாடில்லை என்பதில் ஆச்சரியம் ஏதேனும் உண்டா?

2011 மக்கள் தொகை கணக்கின்படி குஜராத்தில 2000 குடும்பங்கள் உடலுழைப்பாக மனித கழிவினை அகற்றும் பணியில் உள்ளன. சமூக அறிவியலுக்கான டாடா நிறுவனம் குஜராத்தில் அப்பணியில் 12000 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று ஒரு அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. குஜராத்தில் மிகவும் அதிகமான தலித் மக்கள் தொகையினைக் கொண்ட சௌராஷ்டிரா பகுதிதான் மனிதக் கழிவு அகற்றும் பணியில் உள்ளோரின் எண்ணிக்கையில் முன் நிற்கிறது.  இப்படிப்பட்ட மனிதரும், அவருக்குப் பின் நிற்கும் பிஜேபியும் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் தலித்துகள் மற்றும் உரிமைகள் இழந்த மக்களின் நலன்கள் மேம்படுத்தப்படுமா? நிச்சயம் இல்லை, உண்மையில் நிலைமைகள் மேலும் மோசமாகும். யாவரும் போற்றும் வகையிலாக அரசாட்சி செய்வதாக சொல்லப்படும் பிஜேபி ஆட்சியில் அப்பட்டமான சாதி பாரபட்சம் நிலவுகிறது. சில நிகழ்வுகளை பார்ப்போம்.

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், குஜராத்தில் உள்ள 12 கிராமங்களில் தலித் மற்றும் தலித் அல்லாத குழந்தைகளை நேர் காணலுக்கு கொண்டு வந்த பொழுது அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவ சிகிச்சை நிலையங்களிலும் மருத்துவ உதவி பெறுவதில் 90 சதவிகிதம் தலித் குழந்தைகள் பாரபட்ச நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது கவனத்தில் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளை கண்டறியும் சோதனைகளில் 80 சதவிகிதம் தலித் குழந்தைகள் அவற்றைப் பெறுவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றனர்.

தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி குஜராத்தில் உள்ள 77 கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் சமூக பகிஷ்கரிப்பால் கிராமங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர், காவல்துறையின் தாக்குதல் செயலகள் பற்றியும், குறிப்பாக தலித்துகள் கொடுக்கும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மறுப்பது பற்றியும், அல்லது பதிவு செய்யப்பட்டவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பற்றியும் சுமார் 100 குற்றச்சாட்டுகளை அந்த கமிஷன் பெற்றுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள் மீதான வன்முறைகளை தடுக்கும் சட்டத்தின் படி குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 3.5 சதவிகிதம் வழக்குகளில்தான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அகமதாபாத் நகருக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்சானா என்ற கிராமத்தில் அங்குள்ள 5 கோவில்களில் எதிலும் தலித்துகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தைரியத்துடன் இந்த தடையை எதிர்க்க முன்வந்த இளைஞர்கள் சமூக பகிஷ்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கே தலித்துகளுக்கு ஆதரவாக குஜராத் அரசு தலையிடவில்லை.

தான்கர் என்னுமிடத்தில் தலித்துகளின் மீது தாக்குதல் நிகழ்த்தப்படும் என்றகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகும் கூட அங்கு தலித்துகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தடுத்து அவர்களை காப்பாற்ற குஜராத் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. (செப்டம்பர் 2012)

தர்மபுரியில் சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித்தாக்குதலையும், சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்ட பொழுது, அதனால் பாதிக்கப்ப்டட தலித்துகளின் குடும்பங்களை மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முனனணியும் தான் பாதுகாத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டங்களை நடத்தின. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய போராட்டங்களால்தான் அங்கு இருந்த தீண்டாமைச்சுவர் உடைக்கப்பட்டது.

அதைப்போலவே, ஆந்திர மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், தலித் மக்களுக்கான அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் சிறப்பு ஆக்கக்கூறு சட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. கிராமங்களில் பொதுக்கிணறு மற்ற நீர்நிலைகளை தலித்துகள் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவது, சில தெருக்களில் அவர்கள் நடந்து செல்வதையே தடுப்பது, இடுகாடுகளை பயன்படுத்துவதை தடுப்பது, உணவு விடுதிகளிலும் தேநீர் கடைகளிலும் கடைபிடிக்கப்படும் இரட்டைக்குவளை முறை மற்றும் தலித்துகள் கோவில்களில் நுழைவதை தடை செய்வது போன்ற தலித்துகளை விலக்கும் பாரபட்ச நடவடிக்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டது. தலித்துகள் பக்கம் உறுதியாக நின்று, எங்கெல்லாம் சமூக பகிஷ்காரம் என்பது செயல்படுத்தப்பட்டதோ, அங்கே தலித்துகளுக்கு நியாயம் வழங்க அரசை தலையிட நிர்ப்பந்தித்து வெற்றி கண்டது.

மேற்குவங்கம், கேரளா, திரபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி மேற்கொண்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளால் தலித்துகளே அதிகம் பயன்பெற்ற பகுதியினர். இடது முன்னணி அரசின் கீழ் இடதுசாரி இயக்கங்களால், இந்த மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் உள்ளவற்றைப் போல் சாதி பாகுபாடும் மற்றும் வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை. தற்பொழுது திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த காலத்தில் நிலங்களை இழந்த நிலப்பிரபுக்கள், இழந்த நிலத்தை, ஏழைகளுக்கு குறிப்பாக தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சிகளை எதிர்த்து மார்க்சிஸ்ட்கட்சி முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

தலித்துகளின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வர, அவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க, கொடுமையான சாதி அமைப்புக்கு எதிரான வலுவான போராட்டங்களை நடத்த அனைத்து வகையிலான சாதி பாகுபாட்டினையும் ஒடுக்குமுறையினையும் எதிர்த்து போரிட, சாதி அமைப்புக்கு எதிராக தலித்துகளின் சமநிலையினையும், மாண்பினையும் உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-க்கு வாக்களியுங்கள்! இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துங்கள்!!

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply