இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (10.09.12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கூட்டுறவு தேர்தல்  வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும்:

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இதற்காக 2001-க்குப் பிறகு கூட்டுறவு அமைப்பில் (பி-கிளாஸ்) உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களிடம் படிவம் பெற்று,  மகாசபை நடத்தி (ஜெனரல்பாடி) ஏ-கிளாஸ் உறுப்பினர்களாக தகுதி மாற்றம் செய்திடவும் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களை மட்டும் புதிய உறுப்பினர்களாக சேர்த்திடவும் திட்டமிடுதாகவும், 2012 செப்டம்பர் 21-க்குள் இப்பணியினை முடித்திட துரித கதியில் சங்க பேரவையினை நடத்திட முயற்சிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

புதிய உறுப்பினர் பதிவிற்கு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி படிவம் (படிவம் எண் 16) அச்சிடப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் படிவங்கள் ஆளும்கட்சியினர் மூலம் மட்டுமே விநியோகிக்கவும், அவர்கள் பூர்த்தி செய்த படிவங்களை பெறவும் வாய்மொழி உத்திரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளாக கூட்டுறவு அமைப்புகளுக்கு முறையான தேர்தல் நடத்திடக் கோரி பல்வேறு இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்தி உள்ளது. இன்று அரசியல் சட்ட நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின் தேர்தல் வரப்போகும் சூழலில்,  அதை பகிரங்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்தி விரும்புகிற அனைவரும் உறுப்பினராகப் பதிவு செய்து தேர்தலில் போட்டியிடவும், வெற்றி பெறவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த ஜனநாயக வழிமுறைகளை புறந்தள்ளி ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் கடந்த காலத்தில் நடந்ததை போலவே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அராஜகமான வழிகளில் கூட்டுறவு அமைப்புகளைக் கைப்பற்ற மேற்கொள்ளும் முயற்சிகளை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

முறைகேடாக கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றுவது கூட்டுறவு அமைப்புகளில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்து நாளடைவில் கூட்டுறவு அமைப்புகள் மரணப்படுக்கைக்கு தள்ளப்படும் ஆபத்து ஏற்படும்.

எனவே, தமிழக அரசு தவறான இத்தகைய போக்குகளை கைவிட்டு அனைவரயும் உறுப்பினராக சேர்த்து நேர்மையான ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்திட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்து ஆளும் கட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ளாத நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து குரலெழுப்ப வருமாறு கட்சிக் கிளைகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கோருகிறது.  

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply