இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்:

செப்டம்பர் 30-ல் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் தமிழக அரசு தீர்வுகாண சிபிஐ (எம்) வலியுறுத்தல்   தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இரட்டைக்குவளை முறை, ஆலயநுழைவு மறுப்பு, பொதுப்பாதை மறுப்பு, மயான உரிமை மறுப்பு, பொதுக்குழாய்களை பயன்படுத்த தடை போன்ற பலவிதமான வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கின்றன.  தலித் மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும் போது அவர்கள் மீது ஆதிக்க சக்திகள் வன்கொடுமைத் தாக்குதல்களை ஏவுவதும் அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் சமூக பகிஷ்காரம் செய்வதும் தொடர்கதையாக உள்ளன. சமீப காலங்களில் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் படுகொலை செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் தலித்துகளே. மேலும் பல லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதுபோக பல பத்தாண்டுகளாக குடியிருந்து வரும் குடிசை வீடுகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளவர்களில் கணிசமானவர்கள் தலித் மக்கள் உள்ளனர்.   இத்தகைய சூழலில் அமரர் சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தில் பல மையங்களில் தீண்டாமை, வன்கொடுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்க திட்டமிட்டுள்ளது. கோவில் நுழைவு மற்றும் நிர்வாக உரிமை, நில உரிமை, பாதை உரிமை, தீண்டாமைச் சுவர்களை அகற்றுதல் என பல அம்சங்கள் இந்த இயக்கத்தின் கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்த இயக்கத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதோடு இப்பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது.  

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply