இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் (மூன்று நாள் கூட்டம் 1-3,10.2012) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

அக்டோபர் 15 வரை வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிடுக :

செப்டம்பர் மாதம் 19-ம் தேதி பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை கர்நாடக மாநில அரசு நாளொன்றுக்கு இரண்டு டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்ற தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை கர்நாடக மாநில அரசு ஏற்க மறுத்தது துரதிருஷ்டவசமானது. இறுதியாக, பிரதமர் தலையிட்டு  வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டுமென்ற குறைந்தபட்ச அளவைக்கூட கர்நாடக அரசு ஏற்காமல் பிடிவாதமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது. இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. தமிழக அரசின் மனுவின் மீது உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தின் முடிவின் அடிப்படையில்  9000 கனஅடி தண்ணீரை அக்டோபர் 15-ம் தேதி வரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக மாநில அரசு இதை ஏற்க மறுத்து மூன்று நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிட முடியும் என்று அறிவித்திருப்பது காவிரியின் மீது தமிழ்நாட்டிற்குரிய பாசன உரிமையை முற்றிலும் மறுப்பதாகும். கர்நாடக மாநில அரசின் இத்தகைய அணுகுமுறை பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழ்நாட்டிற்கு அக்டோபர் 15-ம் தேதி வரை  வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசு முன்வர வேண்டுமென்று மாநிலக்குழு கோருகிறது.  

அரசு மருத்துவக் கொள்முதலில் அதிர்ச்சி தரும் ஊழல்கள்: தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்:

தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருந்து மாத்திரைகளையும், மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து விநியோகிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே சில மருந்து மாத்திரைக்காக அரசு மருத்துவமனை நிர்வாகங்களே தீர்மானித்து கொள்முதல் செய்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகைப்பட்ட கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். அண்ணாதுரை அவர்கள் வெளிக்கொணர்ந்துள்ளார். இதன் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் – 28 ரூபாய் விலையுள்ள ஐசோ லைட் மருந்து 98 ரூபாய்க்கு கொள் முதல் செய்யப்படுகிறது. 30 ரூபாய் விலையுள்ள ரிங்கர் லைட்டேட் என்ற மருந்து 68 ரூபாய்க்கும், நார்மல் சைலன் திரவம் 22 ரூபாய்க்கு பதில் 60 ரூபாய்க்கும் அநியாயமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கேன்சர் வியாதி யால் அவதியுறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை மிக அநி யாய விலைக்கு வெளியில் கொள்முதல் செய்து அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. உதாரணமாக, சைக்லோ போஸ் போபைடு என்ற மருந்தின் சந்தை விலை 210 ரூபாயாகும், இது 670 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 320 ரூபாய் விலையுள்ள அவாஸ்டின் என்ற மருந்து 1800 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஹெர்ஜெப்டின் என்ற மருந்தின் விலை ரூ.2100 ஆகும். இது 12,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மிக உயர்ந்த மருந்தான கெபாசிட் டாக்சல் ரூ.1,10,000 விலையாகும். இது 6,20,000 ரூபாய்க்கு கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. டொசிடக்சல் என்ற மருந்தின் விலை 8,000 ரூபாயாகும். இது 23,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி கொள் முதல் செய்யப்பட்ட உயிர்காக்கும் மருந்துகள் தரமற்றவையென்றும் கூறப்படுகிறது – என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் விசாரணை  கோரி செப்டம்பர் 28-ம் தேதி தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மருத்துவத்துறை துணை இயக்குநர் திரு.முத்துராஜ் அவர்களை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை செய்தது. இந்த ஆரம்ப நிலை விசாரணையிலேயே வெளிச் சந்தையில் ரூ,19 மதிப்புள்ள மருந்து ரூ.90/-க்கு  மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட ஊழல்கள் மதுரை மருத்துவமனையில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே, அரசு மருத்துவமனைகளின் மருந்து கொள்முதல்களை ஒட்டுமொத்த விசாரணைக்கு உட்படுத்தி ஊழல்கள் செய்தோர் மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் உயிர்காக்கும் சுகாதாரத்துறையில் நடைபெறும் ஊழல்களை முற்றிலுமாக தடுக்க வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.  

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மீட்பு நடவடிக்கை கோரி:

இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை தமிழகத்தில் உதகமண்டலத்தில் அமைந்துள்ள பழமையான மத்திய பொதுத் துறை நிறுவனம். இது 1967 ம் ஆண்டு தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.

தாராளமயக் கொள்கைகள் அமலாகத் துவங்கிய பின்னர் 1996 -லிருந்து இந்த தொழிற்சாலை பெரிய அளவிலான இழப்பைச் சந்திக்கத் துவங்கியது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலையைப் புனரமைக்கவும், மீட்கவும் பொருளாதார உதவி கேட்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் மத்திய அரசு அதற்கான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளாததால் அந்த தொழிற்சாலை தொடர்ந்து நலிந்த நிலையிலேயே இருந்து வருகிறது. இருந்தும் இந்த தொழிற்சாலையில் தொடர்ந்து உற்பத்தி நடந்து வருவதோடு, இந்த தொழிற்சாலை தொழிலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு 1987 ம் ஆண்டு பெற்ற சம்பளத்திலேயே கடந்த  25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த தொழிற்சாலையைப் புனரமைத்து லாபம் பெறும் தொழிற்சாலையாக மாற்றும் வகையில் ஒரு ஆலோசனை உருவாக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பல துறைகள் மற்றும் நிபுணர் குழுக்களின் பரிந்துரைக்குப் பின்னரும் மத்திய அரசால் அந்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே, மத்திய அரசு உடனே இந்துஸ்தான் போட்டோ – பிலிம் தொழிற்சாலையைப் புனரமைத்து, தொடர்ந்து லாபகரமாக நடத்தும் வகையில் அமைந்துள்ள ஆலோசனைகளை உரிய முறையில் பரிசீலிக்கவும், அவற்றை ஏற்றுக் கொண்டு அதற்கான திட்டத்தின் படி உரிய நிதியை வழங்கி அந்த தொழிற்சாலையைப் பாதுகாக்கும் படியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply