இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழுக் கூட்ட தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத், அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 
இரண்டாம் நாள் கூட்டத்தில் (29.1.2013)  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
 
தீர்மானம் 1: 
டீசல் இரட்டை விலை கொள்கையை முறியடித்திட அனைத்து தரப்பு மக்களும் கிளர்ந்தெழுக! 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்! 
 
டீசலுக்கு இரட்டை விலை கொள்கையை  மத்திய அரசு தலைகீழாக அமல்படுத்தியுள்ளது. டீசல் விலையேற்றத்தில் ஆட்சியாளர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களைப் போல நடந்து கொண்டுள்ளனர். டீசல் சில்லரையாக வாங்குவோருக்கு லிட்டருக்கு 55 காசு உயர்வு, மொத்தமாக வாங்குவோருக்கு லிட்டருக்கு 11 ரூபாய் உயர்வு என்று அறிவித்திருப்பது இந்தக் கருத்தைத்தான் உருவாக்குகிறது. பேருந்து போக்குவரத்து கழகங்கள்,  ரயில்வே போன்ற பொது போக்குவரத்து அரசுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு மலிவுக்கட்டணத்தில் சேவை செய்து வருகின்றன. சமூக சேவைக்காக, மக்களின் வசதிக்காக நட்டம் வரும் வழித்தடங்களில் கூட, வண்டிகளை இந்த நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. மாணவர்களுக்கு இலவச பயண வசதி, சீசன் டிக்கெட் வசதி போன்றவை ஏழைகளுக்கு  பேருதவியாக உள்ளன. பொதுப் போக்குவரத்து நம்பத்தகுந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், குறிப்பாக மலிவானதாகவும் இருந்தால் சொந்த உபயோக வாகனங்களே குறைந்துவிடும். இதனால், டீசல் தேவையும் குறையும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
 
ஆனால், மத்திய அரசு எந்த நியாயமும் இல்லாமல், இந்த நிறுவனங்களுக்கு டீசல் விலையை கூட்டுவது என்பது பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்களை அழிக்கும் நோக்கம் கொண்டதாகும். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்  என்பதிலிருந்து இதை உணரலாம். மேலும், இரட்டை விலை என்றால், செல்வந்தர்களுக்கும், சொகுசுக்காரர்களுக்கும், தனி வசதி தேடுவோருக்கும் கூடுதல் விலை என்றும், ஏழைகளுக்கும் , இல்லாதோருக்கும் மலிவான விலை என்றுதான் அர்த்தம். ஆனால், இங்கே எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஏழைகள் தலையில் சுமையை ஏற்றி, சொகுசுக்கார் வைத்திருப்போருக்கு மலிவு விலையில் டீசல் தருகிறார்கள். இந்த இரட்டை விலைக் கொள்கையை சமூக விரோதக் குற்றமாகவும், சாதாரண மக்களுக்கு எதிரான தாக்குதலாகவும் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கும் சதியாகவுமே மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறையை எதிர்க்கிறது. வலுவான போராட்டத்தின் மூலம் இதை முறியடித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அனைத்துத் தரப்பு மக்களையும் அறைகூவி அழைக்கிறது.
 
தீர்மானம் 2:
பிப்ரவரி 2-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு:
 
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. கர்நாடகத்திலிருந்து காவேரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின் படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை அம்மாநில அரசு தரவில்லை. இதனால் காவேரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. நட்ட பயிர்கள் கருகிக் கொண்டிருக்கிறது. குடிநீரின்றி பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. வாடிய பயிரைக் கண்டு அதிர்ச்சியடைந்தும், கடனைக் கட்ட முடியாதே என்ற அச்சத்திலும் இதுவரை 19 விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். விவசாய தொழிலாளர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று கொண்டுள்ளனர். 
 
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் போராடி வருகின்றன. நிலைமை இவ்வுளவு மோசமான பிறகும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மாநில அரசு அறிவிக்காதது சரியான அணுகுமுறையல்ல. எனவே, தமிழக அரசு தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை உடனடியாகத் துவக்க வேண்டும். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு இயற்கை பேரிடர் நிதியிலிருந்து 2500 கோடி ரூபாயை இடைக்கால உதவியாக வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதுடன், ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க முன்வர வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.    
 
வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்குவதுடன் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்தி விவசாய தொழிலாளர்களை பட்டினி சாவிலிருந்து தடுக்க வேண்டும்.  இது தொடர்பாக விவசாய சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் 2013 பிப்ரவரி  2-ஆம் தேதி நடைபெற உள்ள மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மாநிலம் முழுவதும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி மாவட்ட அளவில் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுமாறு கட்சி அணிகளை மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
 

 

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply