இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டத் தீர்மானம்

  09.03.2013

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் எஸ். நூர்முகமது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:  

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு – மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சையான விசாரணை கோரி:-  

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு இலங்கை அரசு தீர்வு காணவில்லை. யுத்தம் முடிவின் போது அதிகாரப் பரவல் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமென்றும், 13வது அரசியல் சாசன திருத்தம் மட்டுமல்ல அதற்கும் மேலாக உரிமைகள் தருவோம் என்றும் இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதியை மீறி,  இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் தர முடியாது எனவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இலங்கை அதிபர்  சமீபத்தில் திரிகோணமலையில் பேசியிருக்கிறார். மேலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் பணிகளும் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் மக்களின் குடியிருப்புகள் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு கூட ராணுவத்தின் அனுமதி பெற்று தான் நடத்த வேண்டுமென்ற நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. துயரம் தொடர்கிறது.   

மேலும் யுத்தத்தின் கடைசி கட்டத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரனின் இளைய மகன் 12 வயது நிரம்பிய சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி  வெளிவந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  

இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, கலாச்சார மொழி பாதுகாப்பு உள்ளிட்ட அதிகாரப் பரவல் அளிக்கப்பட வேண்டும்.   

விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கடைசி கட்ட யுத்தத்தில் நிகழ்ந்த இலங்கை ராணுவத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சுயேட்சையான, உயர்மட்ட, நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா கோர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply