இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020

இந்திய பருத்திக்கழகத்துக்கு
சுமார் 1000 கோடி இழப்பு.

இடைத்தரகர்களுக்கு பெரு லாபம்.

விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி.

பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சு. வெங்கடேசன் எம்.பி கோரிக்கை.

மாண்புமிகு பிரதமர் அவர்களே!
வணக்கம்.

நான் பருத்தி விலைகளை ஒழுங்கு செய்யவும், விலை ஆதரவுக் கொள்கைகளை அரசு மேற்கொள்வதற்குமான தலையாய நோக்கோடு அமைக்கப்பட்ட இந்தியப் பருத்திக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்த சில பிரச்சினைகளை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன். இக் கழகம் விவசாயிகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் இயற்கையாகவே பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியப் பருத்திக் கழகத்தின் சில நடவடிக்கைகள் அதன் உருவாக்க இலட்சியங்களுக்கும், உள்ளார்ந்த விருப்பங்களுக்கும் முரணாக உள்ளன. ஊடகங்கள் மற்றும் தொழில் சார்ந்த வழிகள் மூலமாக கிடைக்கப் பெற்ற தகவல்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கடந்த ஆண்டில் இந்தியப் பருத்திக் கழகம் இதுவரை இல்லாத அளவிற்கு 120 லட்சம் பேல்கள் விற்பனை ஆகாத இருப்பாக வைத்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பருத்தி கழகம் பெருமளவு இருப்பை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை செய்துள்ளது.

லூயிஸ் ட்ரேஃபஸ் நிறுவனம் – 10 லட்சம் பேல்

மஞ்சித் காட்டன் குரூப் – 15 லட்சம் பேல்

ரித்தி சித்தி – 15 லட்சம் பேல்

ஓலம்/க்ளென்கோர்/ மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் – 10 லட்சம் பேல்

மொத்தம் – 50 லட்சம் பேல்

இந்தியப் பருத்திக் கழக விலை – ( விலைப் பட்டியல்படி) ரூ 36,500 (ஒரு கேண்டிக்கு)

கழி: மொத்த விற்பனைக் கழிவு > 2 லட்சம் பேல் க்கு மேல் எனில் ரூ 1500/ ஒரு கேண்டிக்கு

நிறுவன கொள்முதல் விலை ரூ 35000/ ஒரு கேண்டி

பட்டியல் விற்பனை விலை – ரூ 38000/ ஒரு கேண்டி

விலை வித்தியாசம் (இடைத் தரகர் லாபம்) – ரூ 3000 / ஒரு கேண்டி

50 லட்சம் பேல் = 23.20 லட்சம் கேண்டிகள் × ரூ 3000 (ஒரு கேண்டி) = ரூ 696 கோடிகள்.

அதாவது இடைத் தரகர்கள் அடைந்துள்ள லாபம் ரூ 696 கோடிகள்.

அவர்கள் 50 லட்சம் பேல்களை சில சிறப்பு சலுகைகளோடு (தவணையில் செலுத்துதல் உள்ளிட்டு) வாங்கியுள்ளனர். இப்படி மேற்கண்ட நிறுவனங்களுக்கு தவணை முறையில்
விற்ற பிறகு இந்தியப் பருத்தி கழகம் விலைகளை உயர்த்த ஆரம்பித்து விட்டது. இந்த நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ஏற்றபட்ட விலை விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இது தெரிவு செய்யப்படட இந்த நிறுவனங்களுக்கு ரூ 700 கோடிக்கும் மேல் லாபத்தை தந்துள்ளது. இந்த தொகை எந்த வகையிலும் விவசாயிகளுக்கோ, ஜவுளித் தொழிலுக்கோ போய்ச் சேரவில்லை. இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விசாரணை தேவைப்படுபவையாகவும் உள்ளன.

இதே நிறுவனங்கள் அடுத்தடுத்தும் இப்படி கொள்முதல் செய்துள்ளதாக அறிய வருகிறேன். அரசு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி இதே தந்திரத்தைக் கையாண்டு லாபம் பார்த்துள்ளார்கள். இதன் வாயிலாக மிக அதிகமான நிதியாதாரக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியப் பருத்திக் கழகம் உண்மையான பயனீட்டாளர்கள்களுக்கே விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் விரும்புகிற தரத்திலான பருத்தியை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் அதில் சம்பந்தப்படுபவர்கள் திருப்தி அடைகிற வகையிலான முறைமை வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆகவே இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு பொது மக்கள் கவனத்திற்கு உண்மையைக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்.

இதற்கான விதிகள், ஒழுங்காற்று நடைமுறைகளை முறைப்படுத்தி ஓர் வெளிப்படையான செயல்பாட்டை எதிர் காலத்திற்கு உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...