இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக…

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாகத் தடுத்து, ஒழித்திட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இருக்கின்ற உயர்மட்ட அளவிலான அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மத்தியில் இப்போது நாட்டில் எழுந்துள்ள மோசமான நிலைமை குறித்து கவலைகள் அதிகரித்திருப்பது ஊடகங்களில் மூலமாக தெரிய வந்திருக்கிறது. இதற்குக் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவாதம் மற்றும் அத்தகைய விவாதத்தின் நிகழ்ச்சிக் குறிப்பேடுகளும் பொதுவெளியில் வெளியாகி இருக்கின்றன. இவற்றிலிருந்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கமானது தொற்று பரவுவதைத் தற்காலிகமாக நசுக்கிடுமேயொழிய, அதனை முற்றிலுமாக நிறுத்தாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், கொரானா வைரஸ் தொற்றை நம்மால் சமாளித்திட முடியாது. இதில் முன்னணியில் நின்று செயல்படும் சுகாதார ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பும் அவசியம் என்பதும் மற்றுமொரு அவசர அவசியமாகும்.

இப்போது, அறிவியலாளர்கள், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் மூலமாக கொரானா வைரஸ் தொத்து பரவும் அபாயம் குறித்து எச்சரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் போதுமான அளவிற்கு ரேஷன் பொருள்கள் அவர்கள் இல்லங்களுக்கேக் கொண்டு ஒப்படைத்தால்தான் கொரானா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுத்திட முடியும். காலக்கெடு நிர்ணயித்து அனைவருக்கும் சோதனை செய்து பார்த்தல், தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களையும், பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்தி, தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதும் இத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் அவசியமாகும்.

திட்டமிடல் எதுவுமின்றி கொண்டுவரப்பட்ட சமூக முடக்கம், வசதிபடைத்தவர்களுக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், ஏழைகளைப் பாதுகாத்திட அநேகமாக எதுவுமே செய்யவில்லை.

மக்களை, கொரானா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்திட, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திட வேண்டும். அதன்மூலம் ஏழை மக்கள் பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இன்மை ஆகியவற்றால் மரணமுறுவதிலிருந்து தடுத்திடக்கூடிய விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...