இந்திய வெடிபொருள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தல்

நேற்று (2.3.2016) மாநிலங்களவையில் திரு. டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்கள் சில நாட்களுக்கு முன் சிவகாசியில் ஏற்பட்ட வெடிவிபத்து பற்றி சிறப்பு குறிப்பீடலில் பேசினார்.

கடந்த பிப்ரவரி 25 அன்று விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் என்ற இடத்தில் நடந்த வெடி விபத்து பற்றி இச்சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பணி செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்களும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடி விட்டனர்.

வெடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் அபாயகரமான பணிச்சூழ்நிலைகளைப் பற்றி மத்திய அரசோ, மாநில அரசோ அக்கறை எடுத்துக் கொள்வதிவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் 40க்கும் மேலான வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 150 பேருக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர். 180பேருக்கும் மேல் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்த 40 வெடி விபத்துக்களில் மிகக்குறைந்த எண்ணிக்கை தவிர்த்து அனைத்தும் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நடந்துள்ளது.

இந்திய வெடிபொருள் சட்டங்கள் மற்றும் விதிகள் இங்கு அமலாக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளிக்கான வெடி தயாரிப்பு காலங்களில் சந்தையைப் பிடிப்பதற்கான பதட்டத்தில், உற்பத்தியாளர்கள் வெடிபொருள் சட்டத்தையும், விதிகளையும் மீறுகின்றனர். இவை தவிர அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளோடு, பல அனுமதிக்கப்படாத தொழிற்சாலைகளும் வெடிகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

ஆக, சிவகாசியில் தற்போது நடந்து வரும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திடவும், இந்திய வெடிபொருள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தி, இவ்வாறு நடந்து வரும் விபத்துக்களை தடுத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.

Check Also

கடைசி தீர்வுக்கு அறிவுரை கூறும் பிரதமரே! முதல் தீர்வை முறையாக அமலாக்குங்கள்!

மொத்த தேசமும் அதிர்ந்து போயுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ள தடுப்பூசி விலைகளைப் பார்த்துதான்… இரண்டாவது கோவிட் அலை ...