‘இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப் போருக்கு தயாராவோம்’

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். சென்னையில் வெள்ளியன்று (ஆக. 25) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது:

இந்தி, சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான இந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரியார் மூட்டிய தீயை அணையவிடக்கூடாது. முன்பு இந்தி திணிக்கப்பட்டதற்கும், தற்போது பாஜக ஆட்சியில் இந்தி திணிக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என கொண்டு வர பாஜக ஆட்சி முயல்கிறது. முதலில் இந்தி, படிப்படியாக சமஸ்கிருத திணிப்பு என்பதே பாஜகவின் திட்டம். இந்துத்துவா என்ற வகுப்புவாதக் கருத்தியலைக் கொண்டு செல்வதற்காகவே அவர்கள் அதனை மேற்கொள்கின்றனர்.

தோழர் பி.ராமமூர்த்தியின் பங்கு

சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் சூட்டிட நாடாளுமன்றத்தில் தோழர் பூபேஷ் குப்தா முன்மொழிந்த தீர்மானத்தை அண்ணா பாராட்டி ஆதரித்ததை பேரா. சுப வீரபாண்டியன் நினைவு கூர்ந்தார். அந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிய சபாநாயகரிடம் சமர்ப்பித்தது, அப்போது தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததோழர் பி.ராமமூர்த்தி. அவர் மத்தியஅரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதால் பூபேஷ்குப்தாஅந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.

எனக்கு முன்பாக தீபக் பவார் பேசுகையில், “இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர் களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோல் மகாராஷ்டிராவில் நடந்தால் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்றிருக்கமாட்டார்கள்” என்றார். கடந்த ஜூலை 24, 25, 26 ஆகிய தேதிகளில் எமது கட்சியின் மத்தியக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில் தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உ.பி., ஹரியானா உள்ளிட்ட இந்திபேசக் கூடிய மாநிலங்கள், மகாராஷ்டிரா உட்பட எல்லா மாநிலங்களில் இருந்தும் சுமார் 100 தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதில், “ஆர்.எஸ்.எஸ். முழக்கமான இந்து, இந்தி, இந்துஸ்தான் என்பதே பாஜகவின் திட்டம். எனவே அனைத்து வகையிலும் இந்தியைத் திணிக்க பாஜக முயற்சி செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு விரோதமானது. மேலும், மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் வேலையை முன் எடுக்கிறது பாஜக” என தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம். இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த தோழர்களும் சேர்ந்துதான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

பாஜக அரசின் திட்டம் என்ன?

அலுவல் மொழிச் சட்டம் 1963 ஐ பயன்படுத்தி 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிய 117 பரிந்துரைகளை ஜனாதிபதி ஒப்புதலுடன், நாடு முழுவதும் அமலாக்க முயற்சிக்கிறது பாஜக. அதில் 33வது பரிந்துரை நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கூட தமிழ் பாடமாக இருக்கிறது. தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத பாடம் மட்டுமே உள்ளது. தமிழ் மொழிப் பாடமாகவும் கிடையாது.

36 ஆவது அம்சத்தில், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் தேர்வு எழுதிடவும், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளவும் இந்தி மொழியில் வாய்ப்பு இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதேபோல் எல்லா கல்வி நிலையங்களிலும் இந்தி படிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆராய்ச்சி நிலையங்களில் வாங்கக் கூடிய நூல்களில் 50 விழுக்காடு இந்தி நூல்கள் வாங்க வேண்டும் எனக் கூறுகிறது. சென்னையில் எம்.ஐ.டி.எஸ்., கணித ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இங்கு இந்தியிலா படிக்கிறார்கள், இந்தியிலா ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொது ஏன் 50 விழுக்காடு இந்தி நூல்கள் வாங்க வேண்டும். இது யாருக்குப் பயன்படும். 54 ஆவது அம்சத்தில், இந்தி மொழியில் பாண்டித்யம் பெற்றுள்ள மத்திய அரசு ஊழியர்களை, ஐஏஎஸ் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும், அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டிய சூழலையும், நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி அனைத்து வகையிலும் இந்தியைத் திணிக்க பாஜக அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது. எனவே நாம் இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும்.

சங்கரய்யா கொடுத்த திருத்தம்

ஒரு கருத்தியலை எதிர்க்கும்போது, அதற்கு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். 1968 இல் அண்ணா, ஆட்சித் தமிழ் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் என்.சங்கரய்யா அடுத்த 5 ஆண்டுகளில் தமிழை நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக, கல்வி மொழியாக கொண்டுவர வேண்டும் என திருத்தம் முன்மொழிந்தார்.

திருத்தத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அண்ணா, அவருக்கே உரிய பாணியில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’என்று கூறியதுடன், சங்கரய்யா கொடுத்த திருத்தத்தை ஏற்றுக் கொண்டு தீர்மானத்தை நிறை வேற்றினார். ஆனால் கடந்த 50ஆண்டுகளில், ஆட்சி செய்தவர் கள் அந்த தீர்மானத்தை அமலாக்கத் தவறிவிட்டனர். தமிழகத்தில் நீதிமன்றம், உயர் கல்வி என அனைத்திலும் தமிழ் வரும்போது இந்தியை யார் நினைத்தாலும் திணிக்க முடியாது.

இந்தியைத் திணிப்பதற்கான எந்த வாய்ப்பை யும் நாம் விட்டுவைக்கக் கூடாது. 1938, 1950, 1965 ஆண்டுகளில் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றன. இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டது. தற்போது இந்துத்துவாவை உள்ளடக்கமாகக் கொண்ட இந்தித் திணிப்பிற்கான முயற்சி நடக்கிறது. அதற்கு எதிரான மொழிப் போருக்கு தயாராவோம். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் பங்கேற்கும். பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...