மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவை ஒற்றைத் தேசியம் என்கிற சட்டகத்தில் அடைக்க முயலும் மத்திய இந்துத்துவ அரசின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள காலம் இது.
மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவை முன் வைத்து இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியை மைய அரசு வேகப்படுத்தியுள்ளது. அலுவல் மொழி என்பதை தேசிய மொழி என்பதாகத் திரித்து முன்வைக்கிறது.ஆங்கிலத்தின் இடத்தை படிப்படியாக அகற்றி இந்தியை மட்டும் நிலைநிறுத்தும் வேலையை மோடி அரசு தீவிரப்படுத்துகிறது.
இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசாத மக்களே பெரும்பான்மையினர். இந்தியைக் காட்டிலும் காலத்தால் பழமையான, செறிவு மிக்க இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழிகள் பல உண்டு. இவற்றை மத்திய ஆட்சியாளர்கள் ஒரு போதும் கணக்கில் கொண்டதே இல்லை.
பாஜக அரசு, ஒரு இனம், ஒரு தேசம், ஒரு மொழி என்கிற முழக்கத்துடன் இந்தியையும், அதன் திரைமறைவில் சமஸ்கிருதத்தையும், கல்வி, நீதி, நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் திணிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள இந்தி மொழி தொடர்பான ஆணை, அப்பட்டமான மொழித் திணிப்பே ஆகும்.
இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிக் களம் கண்ட பாரம்பரியமிக்க தமிழக மக்கள் இன்று தீவிரமடைந்துள்ள இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழ வேண்டுமென இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மைய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் தமிழை தீர்ப்பு மொழியாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1958ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதும் தமிழகத்தில் இன்று வரை தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக ஆக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
முன்மொழிந்தவர்: தோழர்.சு.வெங்கடேசன்
வழிமொழிந்தவர்: தோழர்.எம்.ஜெயசீலன் (திருச்சி புறநகர்)