இன்று தோழர் கே.ரமணி நினைவு நாள்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் கண்ட போராளிகளின் வரிசையில் தோழர்.கே.ரமணி குறிப்பிடத்தக்கவர். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பாளியாக உழன்று செங்கொடி இயக்கத்தின் தலைவராக உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவர்கள் மிகச் சிலரே. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் முன்னின்றவர் தோழர்.கே.ரமணி.

ஒரு பச்சிளம் பாலகன் ராமுண்ணி அரியா பையனாக பஞ்சாலையில் வேலையை துவங்கி படிப்படியாக இளம் தொழிற்சங்க ஊழியராக, போராட்டத் தளபதியாக, தலைவராக உயர்ந்தவர் கே.ரமணி. தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேய அரசாங்கத்தின் கடும் அடுக்குமுறைகளுக்கும்.

தாக்குதல்களுக்கும் உள்ளானவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத காவிக் கூட்டம் தோழர்.கே.ரமணியின் வரலாற்றை பார்த்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமை மிகு பாரம்பரியத்தை உணர வேண்டும். தேச விடுதலைக்கு முன்பும் பின்பும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதும். மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு தோழர்.கே.ரமணியும் இலக்கானார்.

ஏழு ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை, கட்சி இயக்கத்தை பாதுகாக்க மூன்றாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.நீலகிரி மலையின் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மத்தியில் துவங்கி தமிழ கத்தின் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கும் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக கே.ரமணி இருந்தார். 1967 முதல் 1971 வரை 4 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் தமிழக உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தவர். தமிழ் மொழியில்தான் உரையாற்றுவோம் அதை இந்திய மொழிகளில் பெயர்த்து அவைக்கு தெரிவியுங்கள் என 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்காக குரல் கொடுத்தவர் கே.ரமணி. இன்று வரையிலும் மாநில அரசின் வாய்வழி அறிவிப்பாக மட்டும் தொடர்கிற அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு அடிகோலியவரே ரமணிதான்.

4 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக திறம்படச் செயலாற்றியவர்.நாடாளுமன்ற உறுப்பினராகவும். சட்டமன்ற உறுப்பினராகவும் சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றியவர். பொதுவாழ்வில் தூய்மை எனும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ரமணி. எளிய வாழ்க்கை. கொள்கையின் மீது அளவற்ற பற்று, எடுத்துக்கொண்ட இயக்கப் பணிகள் நிறைவேறும் வரை விடாப்பிடியான முயற்சி, ஓய்வறியா உழைப்பு, ஊழியர்களிடம் கண்டிப்பும் அரவணைப்பும் கொண்ட அணுகுமுறை. இதுவே ரமணியின் அடையாளம். தமிழக இளம் தலைமுறை ஆவல் கொள்கிற அரசியல் அடையாளங்கள் அனைத்தும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிம்பங்களே. நூற்றாண்டு கண்ட ரமணியின் அரசியல் வாழ்க்கையே இதன் உதாரணம்.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...