இயற்கை வளங்களை நிரந்திரமாக சுரண்டவே கார்ப்ரேட், அரசியல்வாதிகள், சாமியார்களின் கூட்டு – சுபாஷினி அலி

கோயமுத்தூர், ஜன. 7 –

மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பி இயற்கை வளங்களை சுரண்டவே அரசியல்வாதிகளும், கார்ப்ரேட் பெருமுதலாளிகளும் சாமியார்களின் காலடியில் கிடப்பதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி குற்றம் சாட்டினார்.

மலைவாழ் மக்கள் உரிமை பாதுகாப்பு, சுற்று சூழல், நதிநீர், வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிறன்று சிறப்பு கருத்தரங்கம் மலைமக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா வரவேற்புரையாற்றினார்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பியூஸ்மனுஸ், கோவை சதாசிவம், ஓசைகாளிதாஸ், ஆதித்தமிழர் கட்சியின் வெண்மணி, சூழர் ஆர்வலர் சிவா, முனைவர் காமராஜ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

முன்னதாக இக்கருத்தரங்கில் பங்கேற்று சுபாஷினி அலி பேசுகையில்,  இன்று நடைபெறும் இக்கருத்தரங்கில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென எண்னுவோர், ஐக்கியின் ஆசிரமத்தில் பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், வனவிலங்கு நலனிலே அக்கறை கொண்டோர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்போர் என அனைவரும் ஒருங்கினைந்து ஒருங்கினைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கிற போராட்டம் கோவையிலும் தமிழகத்திலும் மிகப்பெரிய போராட்ட களத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய நாடு முழுவதும் ஜக்கி வாசுதேவ் செய்கிற மோசடிகள் அம்பலமாகியுள்ளது என்று சொன்னால் அது பழங்குடியினத்தை சேர்ந்த முத்தம்மாளும் அந்த பகுதியில் உள்ள மக்களும் இனைந்து நடத்திய மாபெரும் போராட்டம் முக்கியமானதாகும். முத்தம்மாளை சந்தித்த பிறகு இதுகுறித்து திஒயர் இனைய இதழில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.

இந்த காலத்தில்தான் நாடு முழுவதும் நதிகளை இனைப்போம் ஒரு மிஸ்டுகால் கொடுங்கள் என ஜக்கி பயணத்தை துவங்கியிருந்தார். அந்த கட்டுரையில் ஜக்கி வாசுதேவ் எப்படி நில ஆக்கிரமிப்பை எப்படி செய்கிறார். மக்களை தவறாக வழிநடத்துகிறார். ஏழை மக்களின் ஆதாரங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார் என்றெல்லாம் எழுதியிருந்தேன். இந்த கட்டுரை வெளிவந்த பிறகே ஜக்கிவாசுதேவ் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய நிலை உருவானது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த கட்டுரை எழுதும் சமயத்தில்தான் இந்த போராட்டத்தில் பழங்குடியின மக்கள் மட்டுமல்ல தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் நிதிபதிகள் உள்ளிட்டோர் ஒன்றுபட்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதை அறிய முடிந்தது.

மேலும், நீங்கள் நடத்தும் போராட்டத்தில் தனித்துவிடப்படவில்லை மாறாக இக்கருத்தரங்களில் பங்கேற்க வந்தபோது என்கையில் பிரசுரம் கிடைத்தது. அதன் அட்டைப்படத்தில் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங்கின் படம் அச்சாகியிருந்தது. அவர் என்னுடைய நண்பர் என்பதால் அவரை தொடர்பு கொண்டு உங்கள் படம் போட்ட பிரசுரம் என்கையில் உள்ளது என்றேன். மகிழ்ச்சி தெரிவித்த அவர் நான் தற்போது சென்னையில் ஐஐடி மாணவர்கள் பங்கேற்கிற நிகழ்ச்சியில் ஆறுகளை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் ஜக்கிவாசுதேவ் செய்கிற மோசடிகளை அம்பலப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார். நான் கோவையிலே ஜக்கியை அம்பலப்படுத்தி பேசுகிறேன். ராஜேந்திரசிங் சென்னையில் பேசிக்கொண்டிருக்கிறார். ஆகவே கடவுளின் பெயரை சொல்லி இயற்கை வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கிறவர்களின் குரலை எழுப்பிக்கொண்டிருக்கிறோம். தந்தைபெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் நிச்யம் இந்த மேடையிலே அவர் அமர்ந்திருப்பார். மோசடி சாமியார்களை அம்பலப்படுத்தி, மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க அணிதிரள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருப்பார்.

இந்த கருத்தரங்கில்பேசிய சமூக ஆர்வலர்கள் பேசும்போது

நாங்கள் எப்படி இந்த போராட்டத்தை துவக்கினோம். எங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எதார்த்தத்தில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இருந்து அடித்து உதைத்து சிறைக்கு அனுப்பியவற்றை வெளிப்படுத்தினார்கள். இன்று இந்த மேடையில் இருந்து சொல்கிறேன். இதுபோன்ற இயற்கையை பாதுகாக்க போராடும் சமூக ஆர்வலர்களை சிறைக்கு அனுப்பும் நிலை வந்தால் இவர்கள் தனியாக செல்லமாட்டார்கள். ஒரு பெருங்கூட்டம் உங்களோடு சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறேன்.  அத்தகைய ஒன்றுபட்ட ஒருங்கினைந்த போராட்டத்தை வலுவாக முன்னெடுப்போம்.

பியூஸ் மனுஸ், சிவா போன்ற சமூக ஆர்வலர்களின் போராட்ட அனுபவத்தில் நமக்கு தெரிவது என்னவென்றால் கார்ப்ரேட்டு நிறுவனங்களுக்கும் அரசியல் அதிகாரம் பெற்றவர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஒரு சக்தி உள்ளது. அது நிறுவனமயமக்காப்பட்ட மதநிறுவனங்கள், பாபாக்கள், ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடங்களை நடத்துபவர்கள் தங்களை தேவிகள், அம்மாக்கள் என சொல்லிவருகிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் மதத்தை பயன்படுத்தி தங்களின் லாபத்தை பெருமளவில் ஈட்டிவருகிறார்கள். ஏழைஎளிய மக்களை சுரண்டி இயற்கை வளத்தை கொள்ளையடிப்பவர்களாக உள்ளனர்.

பழங்காலத்தில்கூட மன்னர்கள் மடாதிபதிகளுக்கு பசுக்களை தானமாக வழங்குவார்கள். அதைப்பெற்ற மடாதிபதிகள் மன்னர்தான் கடவுள் எனவே அவரின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டுமென்பார். அதுபோன்ற கட்டமைப்புதான் தற்போது வலுப்படுத்தப்பட்டுவருகிறது. இதனை செயல்படுத்துபவர்களாக கார்ப்ரேட் நிறுவனங்களும் மதநிறுவனங்களும் உள்ளனர். இன்றைக்கு பல்வேறு வழிமுறைகளிலே ஏழை மக்களை வஞ்சித்து  இயற்கை வளங்களை சுரண்டுகிறார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரளக்கூடாது, போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக மதநிறுவனங்களை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை பயன்படுத்தி மக்களை அடிமைகாளாக்கும் முயற்சிகளை செய்துவருகிறார்கள்.

ஆகவே மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய நாட்டில் பெருவாரியான மக்கள் மூடநம்பிக்கைகளில் ஆட்பட்டிருக்கிறார்கள். மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

இத்தகைய நடைமுறைகளின் மூலமாக திட்டமிட்டு இயற்கையை சுரண்டி வருகிறார்கள். இதற்கு ஆதரவாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும், பெரும் கார்ப்ரேட்டு நிறுவனங்களும் இனைந்துள்ளன. இதற்கெதிராக போராடுவதற்கு பதிலாக சாதுக்கள், சாமியார்கள், தங்களையே கடவுள் என்கிறவர்கள் பின்னால் செல்லும் மக்களை பலியாகிவிடாமல் அவர்களுக்கு எதிராக போராட திரட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

பிரதமர் மோடி அவர்களுக்கு ஏழை மக்களை பற்றி சிந்திப்பதற்கு சிறிதும் நேரமில்லை. நமது நாட்டில் ஆதார் கார்டு இல்லாமல் ரேசன் கடையில் பொருள் வாங்கமுடியாமல் பிள்ளைகள் இறந்துபோயிள்ளது. கைவிரல் ரேகை ஒத்துப்போகதால் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் வறுமையில் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களைப்பற்றி கவலைப்படாத மோடி கோவையில் உள்ள ஜக்கிவாசுதேவின் ஆசிரமத்திற்கு வந்து வந்து பாதம் பணிந்து போக நேரமிருக்கிறது. மேலும், திராவிட இயக்கத்தின் பாரம்பரியம் என்று சொல்கிற தமிழக முதல்வரும் ஜக்கியின் பாதம் பணிகிறார். அரசியல்வாதிகளும், அம்பானி, அதாணி போன்ற பெருமுதலாளிகளும் தொட்டு வணங்குகிறார்கள். ஏன் என்றால் இந்த தேசத்தின் இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டுவதற்காகவும், தங்களுடைய லபாத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். சுரண்டல் நடைமுறை சமூகத்தில் நிரந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சாமியாரின் காலடியில் கிடக்கிறார்கள். இத்தகைய சூழலில் இருந்து நமது போராட்டத்தை வீரியத்தோடு முன்னொடுப்போம் இந்த போராட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக அமையும் என்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி துணை தலைவர் என்.அமிர்தம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, தீண்டமை ஒழிப்பு முன்னணி செயலாளர் யு.கே.சிவஞானம், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாரகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...