இராமேஸ்வரம் காவல் ஆணையர் அடாவடி! நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (மே 26, 2015) சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

மதுரை, அலங்காநல்லூரைச் சேர்ந்த அஞ்சுகம் என்னும் தலித் பெண்ணை இராமேஸ்வரம், அக்காள்மடம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பஞ்சாட்சரம் என்பவரது மகன் சேதுபாஸ்கர் ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமடையச் செய்துள்ளார். அஞ்சுகம் கர்ப்பமானதும் கைவிட முயற்சித்திருக்கிறார். காவல்துறையில் புகார் செய்யப்பட்டு அதன் பிறகு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் அஞ்சுகத்தை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு பாஸ்கர் வெளியூர் சென்றுவிட்டார். உறவினர்கள் அஞ்சுகத்தை கடுமையாக சித்தரவதை செய்து சேதுபாஸ்கரை விட்டு பிரிந்து விட நிர்ப்பந்தித்துள்ளனர். இது குறித்து அஞ்சுகம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்ததோடு ஆய்வாளர் மீனாம்பாளும் அஞ்சுகத்தை கடுமையாக மிரட்டியதோடு சேதுபாஸ்கரை விட்டு விலகி விட வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடகொரியா காவல் ஆய்வாளரிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் வடகொரியா மீதும் சம்பவ இடத்திலேயே இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சி.ஆர். செந்தில்வேல் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில்வேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் பேசிய போது செந்தில்வேல் இப்பிரச்சனையில் தலையிடவில்லை என்றும் வழக்கிலிருந்து விடுவித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடைபெறும் கந்துவட்டி, மது மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றிற்கு காவல்துறை ஆதரவாக இருப்பதை கண்டித்தும், காவல்நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்து நடப்பதை கண்டித்தும் தொடர்ச்சியாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதாலேயே இந்த பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் காவல்துறை துணை ஆய்வாளர் குடிபோதையில் தகராறு செய்து சமீபத்தில் ஊர்மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் சட்டமீறலில் ஈடுபடுவதையும், சமூக விரோதிகளுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவதையும், தவறை சுட்டிக்காட்டுபவர்களை வஞ்சம் தீர்க்கும் வகையில் பொய்வழக்கு பதிவு செய்வதையும் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ராமநாதபுரம் காவல்துறையின் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட அஞ்சுகம் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய காவல் ஆய்வாளர் மீனாம்பாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தோழர் செந்தில்வேலை எவ்வித காரணமுமின்றி கைது செய்த காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், வடகொரியா மற்றும் செந்தில்வேல் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. ...