இரு இந்தியாக்கள் எனும் உண்மை, வறுத்தெடுக்கும் வறுமை, அசிங்கமான சொத்துக்குவிப்பு

இரு இந்தியாக்கள் எனும் உண்மை

வறுத்தெடுக்கும் வறுமை, அசிங்கமான சொத்துக்குவிப்பு

பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அவர்களது கொள்கைகள் “வளர்ச்சி”யை நோக்கியவை என்று கூறுகின்றனர். இவர்கள் சொல்லும் வளர்ச்சி யாருக்குப் பயனளித்துள்ளது? தங்கள் உழைப்பாலும் வியர்வை யாலும் வளர்ச்சியை சாத்தியமாக்கிய பெண்களையும் ஆண்களையும் வளர்ச்சி சென்றடைந்துள்ளதா? 

தொழிலாளிகளுக்கு, விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு, குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, தலித் மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு எத்தகைய வாழ்க்கைத் தரம் கிடைத்துள்ளது என்பது தான் அரசின் கொள்கைகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய மிகச்சரியான குறியீடாகும். இந்தக் குறியீட்டை வைத்துப் பார்த்தால், கடந்த இருபது ஆண்டுகளின் கொள்கைகளின் விளைவுகள் என்ன?

இந்தியாவின் பெரும் கம்பனிகள் –சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவை – அவர்களது லாபங்களை பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டனர். இந்தியாவிம் வருமான மேல்தட்டில் உள்ளவர்கள் வருமானம் மற்றும் சொத்து வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்திய நாட்டின் பெரும்பாலான மக்கள் வருமானம் தேக்க நிலையில் உள்ளது. அல்லது, அவர்கள் நிலத்தையும் வருமானத்தையும் இழந்து நிற்கின்றனர்.

உண்மை நிலையை புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

செல்வந்தர்கள் மேலும் கொழுக்கின்றனர்

பெரு முதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர்.

டாட்டா குழுமத்தின் சொத்து 1990 இல் 10,922 கோடி ரூபாயாக இருந்தது. 2012-13 இல் இது 5, 83, 554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.( ஆதாரம்: டாட்டா இணையதளம்). இதே காலஇடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167 கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் RIL மற்றும் அதன் உப நிறுவனங்களின் சொத்து 3,62, 357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின் ADAG கம்பனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன. (ஆதாரம்: இக்குழுமங்களின் இணையதளங்கள்).

1991 இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதன மதிப்பு 4 மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9 மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல் நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)

நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991 வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகர வருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்துவிடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக்கொண்ட தொகை தேச உற்பத்தி மதிப்பில் 2 % க்கும் கீழாகவே இருந்தது . இது 2007-08 இல் தேச உற்பத்தியில் 9.4 % ஆக உயர்ந்தது. தற்சமயம் 8 %ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.

ஹுருன் என்ற நிறுவனம் வெளியிடுகின்ற உலக பணக்காரர்கள் பட்டியலில் 2014ஆம் ஆண்டில் 70 இந்திய டாலர் பில்லியனேர்கள் உள்ளனர்.  (ஒரு அமெரிக்க டாலர் சுமார் 63 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், ஒரு பில்லியன் டாலர் மதிப்பு 6,300 கோடி ரூபாயாகும்.)  2013 இல் ஹுருன் பட்டியலில் இந்திய டாலர் பில்லியனேர்களின் எண்ணிக்கை 53 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 33 % உயர்ந்துள்ளது!

 முகேஷ் அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 டாலர் பில்லியனேர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 390 பில்லியன் டாலர், அதாவது சுமார் 24 லட்சம் கோடி ரூபாய். இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டீ.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு ஆகும்.

முதல் பத்து செல்வந்தர்களின் மொத்த சொத்து மட்டும் தேச உற்பத்தியில் கிட்டத்தட்ட 6 % ஆகும்.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் பில்லியனேர்களின் நிகர சொத்து 12 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் வறுமையை இருமுறை அழிக்கவல்ல தொகையாகும்.

இது மட்டும் அல்ல. அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்பெரும் மதிப்பு உடையவை. அவற்றில் கணிசமான பகுதி நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியே அனுப்பப்பட்டுள்ள பணத்தால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 20.92 லட்சம் கோடி ரூபாய் என்று பாராளுமன்றத்தில் அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதில் 1948 முதல் 2008 வரை ஏற்பட்ட இழப்பு 9.64 லட்சம் கோடி ரூபாய். 2008 முதல் 2010 ஆகிய காலத்தில் மட்டும் ஏற்பட்ட இழப்பு ரூபாய் 11.28 லட்சம் கோடி. வேறு வார்த்தைகளில் சொன்னால், நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பை விட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கருப்புப்பணம் இவ்வாறு நாட்டை விட்டு சென்றது கூடுதல் ஆகும். சொல்லப்போனால், அரசு கூறுவதிப் போல் மூன்று மடங்குக்கும் அதிகமாக பணம் வெளியே சென்றுள்ளதாக வேறு சில மதிப்பீடுகள் வறையறுக்கின்றன.

ஆனால். மக்கள் வாழ்க்கை?

2011-12 இல் 80 % கிராமப்புற குடும்பங்களின் தினசரி தலா நுகர்வுச்செலவு 50 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்தது. இது தான் நகர்ப்புற குடும்பங்களில் 45 % இனரின் நிலமையும்.

இந்திய உழைப்புப்படையில் 93 % முறைசாரா பணிகளில் உள்ளனர். அவர்களுக்கு எந்த சமூக பாதுகாப்பும் இல்லை.

கிராமப்புறங்களில் 89 %, நகரப்புறங்களில் 64 % குடும்பங்களின் தலா காலரீ சத்து நுகர்வு குறைந்த பட்சத்தேவை அளவிற்கும் குறைவாக உள்ளது. புரோதச்சத்து நுகர்வு நிர்ணயிக்கப்பட்ட தேவை அளவை விட இன்னும் மிகக் குறைவு.

உண்மையில், பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்துள்ள இவ்வாண்டுகளில், சராசரி தலா காலரீ நுகர்வு குறைந்துள்ளது. நமது மக்களில் ஒரு பெரும்பகுதியினர் பட்டினியில் வாடுகின்றனர்.

உலகப்பசி குறியீட்டு பட்டியலில் 2013இல் இந்தியா 199 நாடுகளில் 94 ஆவது இடத்தில் இருந்தது

ஐந்து வயதுக்கு உட்பட்ட இந்திய குழந்தைகளில் சரிபாதி எடைக் குறைவாகவோ, உயரம் குறைவாகவோ உள்ளனர். பெண்களில் 60 % ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தியாவின் பொது சுகாதார வசதிகள் மோசமாக உள்ள நிலையில்:

ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தில் 56,000 பெண்கள் இறக்கின்றனர்.

2012 இல் மட்டும் ஐந்து வயதுக்கு உபட்ட 17 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற எளிதில் தவிர்க்கப்படவேண்டிய நோய்களுக்குப் பலியாகினர்.

இந்திய மக்கள் தொகைப்படி நாட்டில் உள்ள 33 கோடி குடும்பங்களில்:

57 % க்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது

53 % க்கு கழிவறை வசதி கிடையாது

நாடு விடுதலை பெற்று 66 ஆண்டுகளுக்குப் பின்பும் 7 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களில் 26 சதவிகிதத்தினருக்கு அடிப்படை உரிமையான எழுத்தறிவு கூட மறுக்கப்படுகிறது. எழுத்தறிவு அற்றோரின் சதவிகிதம் மக்கள் சீனத்தில் 4.1, இலங்கையில் 9.1

2013 இல் 185 நாடுகளில் இந்தியாவின் மனிதவளக்குறியீடு 135 நாடுகளை விடக் குறைவாக இருந்தது.

 இல்லாமை பற்றிய இந்த அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை மேலும் ஆய்வு செய்தால் சாதி, சமூக, பாலினம் சார்ந்த தொடரும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடி மக்கள் மற்றும் பெண்களின் சராசரி குறியீடுகள் இன்னும் குறைவாக இருப்பதை உறுதிசெய்கின்றன எனபது புலப்படும். இது தலித் என்ற வகையிலும், பெண் என்ற வகையிலும், பழங்குடி என்ற வகையிலும் இரட்டிப்பு உரிமை மறுப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் – தலித் அல்லது ஆதிவாசி பெண்களைப்பொருத்தவரையில், தலித்/பழங்குடி, பெண், ஏழை குடும்பத்தை சார்ந்தவர் என்ற மூன்று நிலைகளில் –– ஆட்படுவததைப் பிரதிபலிக்கிறது. இப் புள்ளிவிவரங்கள் இரு இந்தியாக்களைப் படம் பிடித்துக்காட்டுகிறது: உலகநெருக்கடி காலத்தில் கூட தங்கள் சொத்து அதிசய நிகழ்வாக அதிகரிக்கும் செல்வந்தர்களின் இந்தியா ஒருபுறம்;  இந்தியாவின் வளர்ச்சி விகிதம் விண்ணில் உயர்ந்து பறப்பதாக அவர்களிடம் சொல்லப்படும்  நேரத்திலேயே வாழ்வு நிலையில் வீழ்ச்சி காணும் ஏழைகள் மறுபுறம்,

இந்தியா தான் நெருக்கடியில் இருப்பதாகச்சொல்லும் பொழுதும் செல்வந்தர்களைப்பாதுகாக்கும் இந்த மந்திரக்கோல் எது? இந்தியா ஒளிர்வதாகச்சொல்லும் பொழுதும் ஏழை மக்களை பின்னுக்குத்தள்ளும் இந்த மந்திரக்கோல் எது? ஒரு சிலரின் கைகளில் பெரும் செல்வங்கள் குவிவது ஏன்? சராசரி மனிதர்கள் செல்வம் ஈட்ட இயலாத பொழுது கார்ப்பரேட்டுகள் எப்படி தங்கள் செல்வங்களைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ள முடிந்தது? பிற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிவிகிதங்கள் போல், இந்த கார்ப்பரேட்டுகளும் மெகா செல்வந்தர்களும் வரியாவது கட்டினார்களா? அவ்வாறு கட்டி இருந்தால், மக்கள் நலனுக்கு அவற்றைப் பயன்படுத்தி இருக்கலாமே?

கூரையைப்பிய்த்துப் பொழியும் லாபமும் தொழிலாளிகள் மீதான சுரண்டலும்

கார்ப்பரேட்டுகளுக்கு போய்ச்சேரும் கொள்ளை லாபங்களுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று உழைப்பாளி மக்களின் மீதான அதிகரித்துவரும் சுரண்டல். ஆலைத்தொழில்துறையில் சேர்க்கப்பட்ட நிகர மதிப்பில் கூலியின் பங்கு 20 சதமானப் புள்ளிகள் குறைந்திருப்பது இதைப்பிரதிபலிக்கிறது. இப்பங்கு 1981-82 இல் 30.28 % ஆக இருந்தது. 1992-93 இல் 19.20 % ஆக குறைந்தது. 2010-11 இல் இது12.16 % ஆகச்சரிந்துள்ளது. உற்பத்தியில் கூலியின் பங்கு குறைவதுடன் வேலை வாய்ப்பபற்ற வளர்ச்சியும் தேக்கமான அல்லது சரியும் கூலிவிகிதங்களும் சேர்ந்தே வருகின்றன.இவ்வாறு, குறைவான கூலி என்பது லாபத்தை அதிகப்படுத்துதை உறுதிப்படுத்தும் முக்கியமான காரணம். உழைப்புப்படையின் பெரும் பகுதி இன்று ஒப்பந்தக்கூலி அல்லது கேசுவல் தினக் கூலி என்றாகியுள்ளது. அமைப்புசார் துறையில் கூட பொது மற்றும் தனியார் துறைகளில் நிரந்தரத்தன்மைகொண்ட பணியிடங்களில் பாதிக்கும் அதிகமான தொழிலாளிகள் எந்த பயன்களும் இன்றி ஒப்பந்த அடிப்படையிலேயே வேலை செய்கின்றனர். இந்த அதிக உற்பத்தி திறன், குறைந்த கூலி என்ற ஏற்பாட்டைப் பாதுகாக்கவே பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தொழிலாளர்களுக்கு  பாதுகாப்புதரும் சட்டங்களை நீக்க “சீர்திருத்தங்கள்” கொண்டுவர முயல்கின்றன. 2004 இல் அமைந்த யூ.பி.ஏ. அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத்தடை செய்ய முயற்சித்த பொழுது இடது சாரிகள் வலுவாகத்தலையிட்டு தடுத்து நிறுத்தினர். ஆனால் மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் தான் குஜராத்திற்கான விதிகள் என்ற பெயரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சங்கம் அமைக்கும் உரிமைக்கும் வேலை நிறுத்தத்திற்கும் தடை விதித்தது.

 அடித்தகாற்றில் கிடைத்த கொள்ளை லாபமும் இயற்கைவளங்கள் சூறையாடப்படுவதும்

செல்வங்கள் சிலரிடம் குவிவதற்கு புதிய தாராளமய கொள்கைகள் ஒரு முக்கியமான காரணம். இதன்படி வளர்ச்சி தனியார் முதலீடுகளை அடிப்படையாகக்கொள்ளும். தாராளமயத்தின் கீழ் செல்வந்தர்களுக்கு ஏராளமான சலுகைகளும் ஊக்குவிப்புகளும் கொடுப்பதன் தான் வளர்ச்சி ஏற்படும் என்பது அரசின் வாதம். கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், சுரங்கத்தொழில், நிலம் மற்றும் இயற்கைவளங்கள் போன்ற “பசையான” துறைகளில் அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டாக செயல்பட்டது. அவற்றிற்கு பொதுவளங்களை கிடைக்கச்செய்தது. பின்னர் இவ்வளங்கள் தனியார் சொத்தாக மாற்றப்பட்டன. இப்படித்தான் கிருஷ்ணா கோதாவரி எரிவாயு கொள்ளை, 2ஜீ, நிலக்கரி சுரங்கங்கள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிலம் சார் ஊழல்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறுதான் அம்பானி, மிட்டல், டாடா மற்றும் பிறர் பிரும்மாண்டமான அளவில் அடிக்கிற காற்றில் கொள்ளை லாபம் பெருகின்றனர்.அரசு கொள்கைகள் அவர்கள் கையில் தரும் இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமாக. இப்படித்தான், மோடி அரசு நிர்வாகத்தின் உதவியுடன் முந்த்ரா துறைமுகம், அங்கு சிறப்புப்பொருளாதார மண்டலம் அமைத்தல் என்ற பெயரில் ஏராளமான நிலப்பரப்பை அடிமாட்டுவிலயில் வாங்கிபெரும் லாபத்தில் ரியல் எஸ்டேட்டாக விற்றுஅடானி குழுமம் கொழுத்தது.

 லாபங்கள் பெருகின. தனிநபர்கள் சொத்து குவிந்தது. ஆனால் வரிவிகிதங்கள் கூடவே இல்லை.

வரிகளா, (செல்வந்தர்களுக்கு) பரிசுகளா?

உலகிலேயே மிகக்குறைவான வரிவிதிப்பு உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. கடந்த இருபது ஆண்டுகளில் வரிகள் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளன. பொதுநல செலவுகள் வெட்டப்பட்டுள்ளன. தேசீய உற்பத்தி மதிப்பில் வரியின் விகிதம் என்ற குறியீட்டில்,வளரும் நாடுகளில் மிகக்குறைவான விகிதம் கொண்டது இந்தியா. நமது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் இவ்விகிதம் 15% என்று உள்ளது. ஒப்பிட்டுப்பார்த்தால், பிரசீலில் விகிதம் 24.5%, தென் ஆப்பிரிக்கா விகிதம் 26.5% என்று உள்ளது. இந்தியா பலவகையான சொத்து வரி, வாரிசுவரி, அன்பளிப்பு வரி போன்ற நேர்முக வரி விகிதங்களை குறைத்துள்ளது அல்லது அறவே நீக்கி யுள்ளது.. வருமானவரி விகிதத்தை உலகில் மிககுறைவு என்ற அளவிற்குகொண்டுவந்துள்ளது. இதன் விளை வாக, உலகிலேயே மிக பிற்போக்கான வரி அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. மொத்த வரி வரு வாயில் செல்வந்தர்கள் மீதான வரிகளின் பங்கு 37.7 % தான். உலக முதலாளித்வத்தின் குருபீடமான அமெரிக்கா வுடன் இதை ஒப்பிட்டுப்பார்த்தால், அங்கு நேர்முக வரிகளின் பங்கு 75 % ஆகும்! வேறு வகையில் சொன் னால், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப்பண்டங்களை வாங்கும் பொழுது செலுத்தும் மறை முகவரிகள் மூலமாக ஏழைகளே நாட்டின் மொத்த வரி வருமானத்தில் பெரும் பங்கை செலுத்துகின்றனர்.

வரிவிலக்கு: முதலாளிகளுக்கு அரசு வழங்கும் பரிசு

இந்த குறைவான வரிகள் கூட வசூல் செய்யப்படுவதில்லை. செலுத்த வேண்டிய வரிகளை ஏதோ ஒரு காரணம் சொல்லி குறைத்தும் நீக்கியும் விடுவது அரசின் கொள்கையாக உள்ளன. ஆண்டு வரவு-செலவு ஆவணங்களில் “விட்டுக்கொடுக்கப்பட்ட வரிகள்” என்ற தலைப்பில் இவை இடம் பெறுகின்றன. 2008-09 முதல் 2012-13 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொடுக்கப்பட்ட பலவரிச்சலுகைகளின் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வரித்தொகை 23.84 லட்சம் கோடி ரூபாயாகும். இது 2008-09 இல் 4.14 லட்சம் கோடி, 2009-10 இல் 5.02 லட்சம் கோடி, 2010-11 இல் 4.6 லட்சம் கோடி, 2011-12 இல் 5.34 லட்சம் கோடி ஆகும், 2012-13 இல் 5.74 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

பல்வேறு வரி மற்றும் இதர சலுகைகளைபெற்றுக்கொண்டே, இந்தியப்பெரு முதலாளிகள் மூலதனத்தையும் வேலைகளையும் ஏற்றுமதி செய்கின்றனர். நாட்டிற்கு அன்னிய நேரடி முதலீடு தேவை என்று கூரை மேல் நின்று யூ. பி. ஏ.அரசு கூவுகின்ற பொழுதே கணிசமான மூலதனம் நமது நாட்டை விட்டு பிறநாடுகளுக்கு நேரடி முதலீடாக சென்று கொண்டு இருக்கிறது. 2008-09 முதல் 2013-14 வரை இவ்வாறு வெளியேறியுள்ள பணத்தின் அளவு கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2013 ஏப்ரல் முதல் ஜனவரி க2014 வரை வெளீயே அனுப்பப்பட்டுள்ள தொகை 29.4 பில்லியன் டாலர்கள். வேறு வார்த்தைகளில் கூறினால்,வாரி வழங்கப்பட்ட அனைத்து வரிச்சலுகைகளும் பிற மானியங்களும் இவற்றால் பயன்பெற்றோர் இந்தியாவிற்குள் கூடுதல் முதலீடுசெய்யவில்லை. இந்தியாவில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற அக்கரையை விட கார்ப்பரேட்டுகள் லாபத்தை தேடுவது என்பதே நடக்கிறது

ஏழைகளுக்கு (மானிய) வெட்டு

பணக்காரர்களுக்கு பெரும் சலுகைகள் என்பதற்கு நேர் எதிராக, அரசு  மக்களுக்கான மானியங்களை வெட்டி வருகிறது. மக்களின் வாழ்வின் மீது நேரடி நல்தாக்கம் தரும் பாசனப்பெருக்கம், ஊரக தொடர்பு வசதிகள், உணவு பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியம் போன்ற பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான செலவுகளை அரசு வெட்டிவருகிறது. இது சாதாரண மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது. நடப்பு 2014-15 பட்ஜட்டில் சமூக சேவைகளுக்கான செலவில் கடந்த நிதி ஆண்டில் 28, 650 கோடி ரூபாய் வெட்டப்பட்டது என்ற செய்தி உள்ளது. உர மானிய வெட்டுமதன் விளைவாக அதிகரித்துள்ள உர விலைகளும் டீசல் விலை உயர்வும் விவசாயிகளைக் கடுமையாக தாக்கியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் துயரமான விவசயிகளின் தற்கொலைகளுக்கு அரசின் கொள்கைகளே காரணம்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்குப் புசியும் என்ற மாபெரும் பொய்

புதிய தாராளமய கொள்கைகளின் அடிப்படையான தத்துவம் சொல்கிறது: “செல்வந்தர்கள் அதிவிரைவில் மேலும் செல்வந்தர்களாக உதவினால், இவ்வாறு அதிகரிக்கும் செல்வங்களின் ஒரு பகுதி ‘வாய்க்கால் வழி’ ஓடி ஏழைகளுக்கு உதவும்.” மனித வளங்களையும் இயற்கை வளங்களையும் சூறையாட பலதுறைகளில் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி கொடுப்பதும் ஊக்குவிப்பதும் இத்தத்துவத்தின் திறைமறைவில் நிகழ்ந்துள்ளன. இச்சிறு வெளியீட்டில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் படம்பிடித்துக்காட்டும் ஆபாசமான ஏற்றத்தாழ்வுகள் இதத்துவம் பெரும் பொய் என்பதை தெளிவாக்குகின்றன. புதிய தாராளமய ஆட்சியில், பணக்காரர்கள் மேலும் செல்வம் பெறுவார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள். இது தான் இந்த ஆட்சியின் தன்மை.

 காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுமே இந்தப்பொய்யான தத்துவத்தை ஏற்கின்றனர்.மத்தியிலும் மாநிலங்களிலும் இவ்விரு கட்சிகளின் ஆட்சிகளில் இந்த மோசடி தத்துவத்தை அமல்படுத்தி வருகின்றனர். ஏழைகளை செல்வந்தர்கள் துச்சமாக பார்ப்பது தான் கீழே வருகிறது வேறு எதுவும் கசிவதில்லை. ஏளனமும் அவமதிப்பும் சிறுமைபடுத்தப்படுவதும் தான் ஏழைகளை நோக்கி கசிந்து வருகிறது.

மேலிருந்து செல்வம் கசிந்து வந்து ஏழைகளை சென்றடையும் என்ற பொய்யான தத்துவம் தூக்கி எறியப்படவேண்டும். இது சாத்தியம். கார்ப்பரேட் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு அரசு இந்தியாவிற்குத்தேவை. சூப்பர் பணக்காரர்களை சரியாக வரிக்கு உட்படுத்தும் அரசு தேவை. ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து மக்களுக்கு நீதி வழங்கும் அரசு தேவை. மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள்,

உணவு பாதுகாப்பு, பொதுத்துறை மூலம் கல்வி, பொது சுகாதாரம், வேலைகளை அதிகம் உருவாக்கும் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் அழுத்தம் கொடுத்து இதனை சாதிக்கும் அரசு தேவை. இவ்வாறு செய்வதனால் வளர்ச்சியின் இலக்கும் சம்த்துவத்தின் இலக்கும் ஒன்றாகும்.

இந்தியாவிற்கு சமத்துவத்தையும் நீதியையும் கொண்டுவர உங்கள் வாக்கைப் பயன்படுத்துங்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சிக்கு வாக்களியுங்கள்இடதுசாரிகளை வலுப்படுத்துங்கள்!

ஜன நாயக, மத சார்பற்ற மாற்றுக்காக வாக்களியுங்கள்

English Version:-

 

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply