இரு நூறாண்டாக வாழும் மாமேதை

என்.குணசேகரன்

மார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், மறக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளையும் உலக வரலாறு கண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்கள் முதல், இணைய தளம் எனும் அறிவியல் புரட்சி வரை பன்முகப்பட்ட பாதையில் உலகம் பயணித்துக்கொண்டிருகிறது. இந்நிலையில், இரண்டு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்த மனிதரை இன்றளவும் உலகம் நினைவுகூர வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விக்கு பல விடைகள் நம் முன் உள்ளன.

மேதைகள் வரிசையில் தனி இடம்

மானுட வரலாற்றில் புதிய கோணத்தில் உலகத்தினை ஆராய்ந்த சிந்தனையாளர்கள் மார்க்சுக்கு முன்பும் இருந்துள்ளனர். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், கோபர்னிகஸ் கலிலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டின் என்ற நீண்ட வரிசை உள்ளது. இந்த வரிசையில் தனித்தன்மை கொண்ட, புத்தம் புதிய பார்வையுடன் உலகை ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கிய தால், மேதைகள் உலகில் மார்க்ஸ் தனிச்சிறப்புமிக்கவராகத் திகழ்கின்றார். வரலாற்றை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் ஆராயும் ஒரு முறையை மார்க்ஸ் மனித குலத்திற்கு அளித்துள்ளார். மார்க்சின் கல்லறையில் அவரோடு தத்துவக் கூட்டணி கொண்டு பணியாற்றிய எங்கெல்ஸ் உரையாற்றும்போது மார்க்சின் அந்த கண்டுபிடிப்பினை எளிமையாக விளக்கினார்; “இயற்கை உயிரினங்களின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போன்று, மனித வரலாற்றின் வளர்ச்சி பற்றிய விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். “மண்டிக்கிடக்கும் பழைய கருத்துநிலைகளால் மூடிமறைக்கப்பட்டுள்ள எளிய உண்மையே அது : அதாவது அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் முதலானவற்றில் ஈடுபடுவதற்கு முன்பு மனித இனத்திற்கு முதலில் உணவு வேண்டும், குடிக்க நீர் வேண்டும், உடுக்க உடையும் தங்க இடமும் வேண்டும். “எனவே அது உயிர் வாழ்வதற்கு வேண்டி உடனடியான இன்றியமையாத பொருள்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; இவ்வுற்பத்தியின் விளைவாக, குறிப்பிட்ட மனித சமூகம் அல்லது குறிப்பிட்ட சகாப்தம் குறிப்பிட்ட அளவு பொருளாதார வளர்ச்சியை அடைகிறது. இந்த உற்பத்தியும் பொருளாதார வளர்ச்சி நிலையுமே அந்த மனித சமூகத்தின் அடித்தளம் போன்றவை; அம்மக்களின் அரசு நிறுவனங்கள், சட்டக் கொள்கைகள், கலை ஆகியவை – ஏன் சமயக் கோட்பாடுகள்கூட – இந்த அடித்தளத்தின் மீதே உருவாக்கப்படுகின்றன; எனவே இதனை ஆதாரமாகக் கொண்டுதான் அவற்றை விளக்க முடியுமே அன்றி, இதுகாறும் செய்துவந்ததுபோல் நேர்மாறாக அல்ல.” இது புதியதோர் கண்டுபிடிப்பு மட்டுமல்ல; உலகை மாற்றும் வல்லமை கொண்ட கருவியாக உழைக்கும் மக்களுக்கு, இன்றளவும் அந்த தத்துவம் பயன்பட்டு வருகிறது. இதனால்தான் மார்க்சின் எதிரிகளும் விமர்சகர்களும் மார்க்சின் வரலாற்றுப் பார்வையை புறக்கணிக்க முடியாமல் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திணறி வருகின்றனர்.

புரட்சியாளர் மார்க்ஸ்

இன்றும் மார்க்ஸ் நிலைத்து நிற்பதற்கு மார்க்சைப் பற்றி எங்கெல்ஸ் குறிப்பிட்ட ஒரு உண்மையும் முக்கியமானது.”எல்லாவற்றுக்கும் மேலாக, மார்க்ஸ் ஒரு புரட்சிக்காரர்” என்றார் எங்கெல்ஸ். அறிவு ஆராய்ச்சி, தத்துவம் அனைத்தும் எதற்காக என்றால், உலகை புரிந்து கொள்வதற்காகத்தான் என்பது மார்க்சின் பார்வை. அதுவும், துவக்கம்தான்.தத்துவத்தின் வழியாக உலகைப் புரிந்து கொண்ட பின்னர், அந்த தத்துவப் புரிதலைக் கருவியாகக் கொண்டு உலகை அடியோடு மாற்றுவதுதான் மார்க்சின் மேலான நோக்கம். அவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம், அவரது ஏராளமான பொருளாதார கண்டுபிடிப்புகள், அவரது, மகோன்னத படைப்பான “மூலதனம்” ஆகிய அனைத்தும் ஒரு குறிக்கோளை நோக்கியது; “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை” என்பதே அந்த இலக்கு.அனைத்து சமுக பொருளாதார சுரண்டலிலிருந்தும் முழு விடுதலையை சுயமாக பாட்டாளி வர்க்கம் சாதித்துக்கொள்ள வேண்டும். இதுவே,அவரது சிந்தனைகளின் கருப்பொருள்; இந்த விடுதலையை சாதிக்க, பாட்டாளி வர்க்கம் தனக்கென ஒரு கட்சியை- புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை–வளர்த்தெடுக்க வேண்டுமென்றார் மார்க்ஸ். மார்க்சிற்கு பிறகு மார்க்சியத்தை மேலும் வளர்த்த லெனின் சோசலிசப் புரட்சி, புரட்சிக் கட்சிக்கான இலக்கணங்களை வகுத்தளித்தார்.

விஞ்ஞான சோசலிசம்

மார்க்சின் அறிவுத்திறன் எல்லையற்றது. வரலாற்றில் தோன்றிய மாமனிதர்கள் பலரையும் தாண்டி முதல் வரிசையில் நிற்கிறார் மார்க்ஸ்;அவரது சமகால அறிஞர் ஒருவர் எழுதினார்:“ரூசோ, வால்டர், ஹெகெல்… இந்த மேதைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து கலவை ஆக்குங்கள்; அதில் நீங்கள் டாக்டர் மார்க்ஸினை பார்க்க முடியும்” என்றார். தனது ஒப்பிட முடியாத திறமையைக் கொண்டு வளமான செல்வச் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை அவர் அமைத்திருக்க இயலும். ஆனால் அவர் கடுமையான துன்ப துயரங்கள் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஐரோப்பாவின் பாதி நாடுகளின் அரசாங்கங்களும்,காவல்துறையும் மார்க்சின் குடும்பத்தை வேட்டையாடின, மற்றொரு புறம், வறுமை அவரது குடும்பத்தை வாட்டியது. இந்த வேதனை நிறைந்த வாழ்க்கையை அவர் ஏற்றுக் கொண்டதற்கான காரணம், சுரண்டப்படும் வர்க்கங்களை சோசலிசப் புரட்சிக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற இலட்சியம்தான். கோடானுகோடி மக்களுக்கு துயரத்தையும், வன்முறை, சுரண்டலையும் அளித்து வரும் முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டுமென்ற இலட்சியத்திற்காக, தனது சொந்த வாழ்க்கை துயரங்களை மார்க்சும், அவரது மனைவி ஜென்னி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் உறுதியோடு தாங்கிக் கொண்டனர். முதலாளித்துவத்தினை வீழ்த்த, அதன் இயங்கு விதிகளை கண்டறிந்ததுதான் மார்க்சின் மகத்துவம். சோசலிசம் எனும் ஒரு பொன்னுலகினை படைக்க வேண்டும் என்று போராடும் அனைவருக்கும் வற்றாத அறிவுச்செல்வத்தை மார்க்ஸ் வழங்கினார். சமூகம் எதிர்கொண்டு வரும் பொருளியல் நெருக்கடி, பெரும் நாசத்தையும், இளமையையும் அழித்து வரும் வேலையின்மை எனும் அரக்கன் போன்ற அனைத்திற்குமான மூல காரணங்களை மார்க்ஸ் கண்டறிந்தார். இவற்றையெல்லாம் தீர்க்க அன்றைய சில சோசலிஸ்ட்கள் சமூகத்தை படிப்படியாக மாற்றலாம் என்ற சீர்திருத்தப் பாதையையும், நடைமுறைக்கு ஒவ்வாத கனவுகளையும் முன்வைத்த போது, விஞ்ஞான சோசலிசத்தை வழிகாட்டியவர் காரல்மார்க்ஸ். சோசலிச இலட்சியத்தின் மீதான மார்க்சின் உறுதியான பிடிப்பு, அவரது அயராத உழைப்புக்கு அடிப்படையாக அமைந்தது. அவரது உழைப்பு அசாதாராணமானது. ஒரு எடுத்துக்காட்டு; மூலதனம் நூலுக்கு முன்பாக அவர் எழுதி வெளிவந்த நூல்,”அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு: “அந்த காலக்கட்டத்தில் உபரி மதிப்பு தத்துவம், இலாபம் பற்றிய கருத்தாக்கங்களை அவர் ஏற்கனவே உருவாக்கியிருந்தார். அந்த நூல் மூலதன நூலின் முன்னோடியாக அமைந்தது.அந்த நூலை எழுத அவர் 1,472 பக்கங்கள் கொண்ட 23-நோட்டுப்புத்தகங்களில், குறிப்புக்களை எழுதியிருந்தார்.மார்க்ஸ் மறைந்த பிறகு முதலாளித்துவ வளர்ச்சியில் பல மாற்றங்கள் இருந்தாலும்,அதன் கொடூரமான சுரண்டல் தன்மைகள் மாறிடவில்லை.மனித இனத்தை வேட்டையாடிய முதலாளித்துவம் இயற்கையையும் தனது இலாப வெறிக்கு இரையாக்கி பூமிப் பந்தினை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் சூழலில், மார்க்ஸ் வந்தடைந்த முடிவுகள் இன்றும் பொருத்தமானவை. மார்க்ஸ் முடிவாக பிரகடனப்படுத்தியவாறு, உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ முறையை தூக்கி எறிய வேண்டிய தேவை இன்றும் நீடிக்கிறது. அந்த இடத்தில் சுரண்டலற்ற சோசலிச முறையை கொண்டு வர வேண்டும்.

என்.குணசேகரன்

மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...