இரு முக்கிய தத்துவார்த்த தீர்மானங்கள்

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இரு முக்கிய தத்துவார்த்த தீர்மானங்கள்

  • 1968, ஏப்ரல் 5 முதல் 12 வரை பர்துவானில் நடைபெற்ற விரிவடைந்த மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • சென்னையில் 1992, ஜனவரி 3 முதல் -9 வரை நடைபெற்ற 14 வது காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த திருத்தல்வாதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மாநாடு என கருதப்படும் நமது கட்சியின் ஏழாவது மாநாடு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டிக்கு ஒரு கட்டளை இட்டது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விவாதிக்கப்பட்டு வந்த தத்துவார்த்த பிரச்சினைகள் குறித்து நமது கட்சி தனது சுயேச்சையான முடிவுகளை எடுக்க உதவிடும் வகையில் உட்கட்சி விவாதத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அந்தக் கட்டளை.

மாநாடு முடிந்தவுடன் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் ஆட்சி நம்மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1966 மத்தியில் கம்யூனிஸ்ட் காவல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டவுடன் மக்கள் போராட்டங்களிலும் பின்னர் நாட்டின் நான்காவது பொதுத்தேர்தலிலும் நாம் ஈடுபட வேண்டியிருந்ததால் கட்சிக் காங்கிரசின் இந்தக் கட்டளையை உடன் நிறைவேற்ற இயலவில்லை. பொதுத்தேர்தலுக்கு பிறகு கூடிய முதல் மத்தியக் கமிட்டி, கட்சியின் ஏழாவது காங்கிரஸ் கட்டளைப்படி உட்கட்சி விவாதத்திற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே துவக்குமாறு அரசியல் தலைமைக்குழுவைப் பணித்தது.

கட்சியின் ஏழாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சித்திட்டம், நமது கடமைகள் பற்றிய தீர்மானம், அரசியல் ஸ்தாபன அறிக்கை ஆகியவை இந்தியச் சூழ்நிலை பற்றிய வலது சந்தர்ப்பவாத, திருத்தல்வாத தத்துவார்த்த – அரசியல் நிலைபாடுகளிலிருந்து முடிவாக கணக்குத் தீர்த்துக் கொண்ட நடைமுறைத் தந்திரம் மற்றும் யுத்த தந்திரமாக அமைந்தன. அதைப் போல நாட்டின் புரட்சிகர தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில் இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வெளியே திருத்தல்வாதிகளை வைப்போம் என்ற கட்சியின் பிரகடனமும், திருத்தப்பட்ட கட்சி அமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதும், கட்சிக்கான புதிய மத்திய அமைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஆகியவை மூலம் ஸ்தாபன விஷயத்திலும் திருத்தல்வாதிகளோடு கணக்கு தீர்க்கப்பட்டது. திருத்தல்வாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் இந்த வெற்றிகள் சிறிய வெற்றிகள் அல்ல என்பதையும், இந்த வெற்றிகள் தான் நமது மார்க்சிய – லெனினிய – தத்துவார்த்த – அரசியல் ஒற்றுமையின் அடித்தளம் என்பதையும் நமது கட்சியும் ஒரு அங்கமாக உள்ள, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்புள்ள சில முக்கிய தத்துவார்த்த பிரச்சினைகளில் இன்று நிலவி வரும் குழப்பத்திலிருந்து தெளிவு பெற கட்சி நடத்தவிருக்கும் எதிர்கால போராட்டங்களில் கட்சி முழுமைக்கும் இந்த வெற்றிகள் பெரும் உதவி புரியும் என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

கட்சித் திட்டம், நமது கடமைகள் பற்றிய தீர்மானம் அரசியல் – ஸ்தாபன அறிக்கை மற்றும் ஏழாவது காங்கிரசின் மற்ற தீர்மானங்களில் நாம் குறிப்பிட்டுள்ள முடிவுகள் நமது கட்சியின் தத்துவார்த்த ஒற்றுமைக்கான அடித்தளம் என்று நாம் கூறுவதன் அர்த்தம் என்ன? இந்தியப் புரட்சி தொடர்பான பல முக்கிய தத்துவார்த்த பிரச்சினைகளில் டாங்கேயிஸ்டுகள் முன் வைத்த முற்றிலும் திருத்தல்வாத, வர்க்க சமரச நிலையிலிருந்து வேறுபட்டு மார்க்சிய – லெனினிய – தத்துவார்த்த – அரசியல் நிலைபாடுகுளில் நாம் உறுதியாக நின்றோம். சுருங்கச் சொல்வதானால் இந்தியப் புரட்சி சம்பந்தமான அடிப்படை பிரச்சினைகளில் நாமும் திருத்தல்வாதிகளும் நேருக்கு நேர் எதிராக இல்லாத ஒரு பிரச்சினை கூட இல்லை. சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த இந்திய அரசின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கை பற்றிய மதிப்பீடு, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை பற்றிய அவர்கள் விமர்சனம் மற்றும் தேசிய ஜனநாயகம், முதலாளித்துவமற்ற வளர்ச்சிப்பாதை பற்றிய அவர்கள் பரிந்துரை, நாட்டில் நிலவிடும் வர்க்க முரண்பாடுகள் பற்றிய அவர்கள் ஆய்வு, புரட்சியின் கட்டம் மற்றும் தந்திரம் பற்றிய அவர்கள் மதிப்பீடு, முதலாளித்துவப் பாதைக்கு எதிராகவும் முதலாளித்துவ மற்ற பாதைக்கு ஆதரவாகவும் நடைபெறும் போராட்டத்தில் ஏகபோகம் அல்லாத தேசிய பூர்ஷ்வா வர்க்கத்தின் பாத்திரம் பற்றிய மதிப்பீடு, ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தன்மை என்ற மார்க்சிய – லெனினிய கோட்பாடு பற்றிய அவர்கள் நிலைபாடு, சமாதான பூர்வமாக மற்றும் சமாதான மரபுப்பாதை, அதற்கான வாய்ப்புகள் பற்றிய அவர்கள் வியாக்கியானம், இந்திய பொருளாதாரத்தில் அந்நிய ஏகபோக மூலதனத்தின் பங்கு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சோசலிச உதவியின் செல்வாக்கு ஆகியவை பற்றிய அவர்கள் மதிப்பீடு, அரசுத்துறையின் வர்க்கத்தன்மை பற்றிய மதிப்பீடு, எல்லாவற்றையும் விட மேலாக காங்கிரஸ் ஆட்சியின் நிலச்சீர்திருத்தம் பற்றிய மதிப்பீடு ஆகிய இவை அனைத்திலும் நமது கட்சியின் மதிப்பீட்டுடனும் நிலைபாடுகளுடனும் ஒத்துப்போவது எதுவுமே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்பான அனைத்து அடிப்படை பிரச்சினைகளிலும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிலைமை எடுத்துள்ள நிலைபாடு திருத்தல்வாத டாங்கேயிஸ்டுகளின் நிலைபாட்டுடன் முற்றிலும் பொருந்தி உள்ளது என்பதை குறிப்பிடுவது அவசியம். இந்தியாவில் அதிகம் விநியோகிக்கப்படும் சோவியத் பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள், இந்திய விஷயங்களில் சோவியத் அரசின் நடவடிக்கைகள், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அதிக அளவில் வெளிநாட்டு சகோதர பிரதிநிதிகள் திருத்தல்வாதிகளின் மாநாட்டில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, டாங்கேயிஸ்டுகளின் கட்சித் திட்டத்தையும், கொள்கைத் தீர்மானங்களையும் மார்க்சிய லெனினிய மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடிப்படையில் உள்ளதாக ஏற்றுக் கொண்டது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்திய திருத்தல்வாதிகளிடமிருந்து பிரிவதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்த, இந்தியப் புரட்சியின் யுத்த தந்திரப் பிரச்சினையில் முடிவெடுக்க உதவிய, புதிய கட்சித்திட்டத்தை உருவாக்கக் காரணமாக இருந்த தத்துவார்த்த கொள்கை ஒற்றுமை நிச்சயமாக இன்னும் விவாதத்தில் இருக்கும் மீதமுள்ள தத்துவார்த்த பிரச்சினைகளிலும் சரியான, சுயேச்சையான முடிவுகளுக்கு வர உதவியாக நிற்கும். இந்த நம்பிக்கைதான் தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றிய தற்போதைய இந்த உள்கட்சி விவாதத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விவாதத்திற்குரிய மையப் பொருளாகவும் நமது கட்சி நிலைபாடு எடுக்க வேண்டியதாகவும் உள்ள இன்றும் மீதமுள்ள அந்த தத்துவார்த்த கொள்கை பிரச்சினைகள் என்ன? நமது கட்சித் திட்டத்தில் ஏற்கெனவே இறுதியாக்கப்பட்ட பிரச்சினைகள் தவிர புதிய சகாப்தம் பற்றிய வர்க்க மதிப்பீடு சம்பந்தமான பிரச்சினைகள், இந்தக் கால கட்டத்தில் போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினை, வேறுபட்ட சமூக அமைப்புகள் கொண்ட அரசுகளின் சமாதான – சகவாழ்வுக் கொள்கை, சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி முறைகள், இந்த சகாப்தத்தின் பல்வேறு அடிப்படை முரண்பாடுகள் பற்றிய மதிப்பீடு, இன்றைய நிலையில் ஏகாதிபத்தியத்திற்கும், தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் பங்கு, லெனின் மறைவுக்குப் பின்னர் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை வழிநடத்திச் செல்வதிலும் சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதிலும் ஸ்டாலின் வகித்த பங்கு, டிட்டோவின் யூகோஸ்லேவியா மற்றும் டிட்டோயிசம் பற்றிய பார்வை, சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்க கட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதற்குப் பதிலாக அனைத்து மக்களின் கட்சி, மக்களின் அரசு என்ற கோட்பாடு, சோவியத் யூனியனில் ஊக்கத் தொகை கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், பல்வேறு தத்துவார்த்த – அரசியல் பிரச்சினைகளில் நேர் எதிரான கருத்துக்கள் கொண்ட சோசலிச நாட்டின், கட்சியின் தலைவர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல் ஒற்றுமை என்ற கோட்பாடு சரியா அல்லது தவறா என்பன போன்ற பிரச்சினைகளே அவை. இந்தப் பிரச்சினைகளின் கூடவே உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவுகள், அரசு அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசு அதிகாரத்தில் இல்லாத கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் போன்ற பல ஸ்தாபன மற்றும் நடைமுறை கோட்பாடுகள் பற்றியும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. இவைபோன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்சினைகள் மீதுதான் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து வேறுபாடுகளும் கருத்து மோதல்களும் உருவாகி உள்ளன. ஒரு மார்க்சிய – லெனினிய கட்சி என்ற முறையில் இந்தப் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிப்பதும் ஒரு தெளிவான நிலை எடுப்பதும் நமது கடமையாகும்.

முதலில், மத்தியக் கமிட்டி தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின், உலக சோசலிச முகாமின் பத்தாண்டுகளுக்கு மேலான நிகழ்ச்சிப் போக்குகளை இதே காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிடைத்த நேரடி அனுபவத்தின் வெளிச்சத்தில் மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு சில தனிப்பட்ட கட்சிகளிலும், சில தனி நபர்கள் முன் வைத்த கோட்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் நடைமுறை சாத்தியமற்ற வரட்டு தத்துவவாத போக்குகள் வெளிப்பட்டாலும் கூட உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் அபாயமாக இருந்து வந்திருப்பதும், இன்றும் இருப்பதும் நவீன திருத்தல்வாதம் தான் என மத்தியக் கமிட்டி நம்புகிறது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், சோசலிச முகாமையும் பரிசீலிக்கும் எவரும் அது இன்று பிளவுபட்டு நிற்பதையும், ஒற்றுமை சீர்குலைந்து கிடப்பதையும் ஒரு அபாயகரமான நெருக்கடியில் சிக்கியிருப்பதையும் உணர முடியும். ஏகாதிபத்தியவாதிகளின் குறிப்பாக அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுப்பதற்கான உலக கம்யூனிஸ்ட் சக்திகளின் முன்முயற்சியை இந்த நெருக்கடி முடமாக்கி உள்ளது. இந்த துக்ககரமான நிலைமையின் மூலகாரணத்தை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை முன் வைத்து நடைமுறைப்படுத்திய நவீன திருத்தல்வாத கொள்கையில் காணலாம். இத்தகைய திருத்தல்வாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிராக கொள்கை வழிப்பட்ட உறுதியான போராட்டத்தை நடத்தாமல், மார்க்சிய – லெனினியத்தையும், கொள்கை வழிப்பட்ட உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமையையும் பாதுகாக்க தொடர்ந்து போராடாமல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலப்படுத்துவதும் மேலும் முன்னேற்றிச் செல்வதும் இயலாது.

புதிய சகாப்தம்

அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்திற்கு முன்னால் முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ச்சி அடைவது பற்றி ஆய்வு செய்யும் போது பாட்டாளி வர்க்க சமூகப் புரட்சிக்கு முந்திய இறுதிக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று லெனின் குறிப்பிட்டார். அதன் பிறகு மிகப்பெரிய மாறுதல்கள் நடைபெற்றுள்ளன. வர்க்க சக்திகளின் பலாபலன் முழுதும் மாறிய நிலையில் உள்ளது. இரண்டு உலகப் போர்கள், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள நாடுகளில் சோசலிசப் புரட்சி நடந்து சக்திமிக்க ஒரு சோசலிச முகாம் உருவாகியுள்ள நிலைமை, பழைய காலனி ஆதிக்கம் தகர்ந்து பெருவாரியான காலனி நாடுகள் அரசியல் விடுதலை பெற்றுள்ள சூழ்நிலை, பல்வேறு நாடுகளில் பலம் மிக்க கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் வளர்ச்சி போன்ற பல மாறுதல்கள் நடந்துள்ளன. “சோசலிசப் புரட்சி சகாப்தம் துவங்கி இருக்கிறது என்ற லெனினிய கோட்பாட்டிற்குப் பின்னரே இவை அனைத்தும் நடந்துள்ளன. நடைபெற்றுள்ள இந்த பிரம்மாண்டமான மாறுதல்களின் வெளிச்சத்திலும், மார்க்சிய – லெனினிய வரையறைகளுக்கு உட்பட்டும் இந்த சகாப்தத்தை மறு மதிப்பீடு செய்து மறு நிர்ணயிப்பு செய்வது அவசியம்.

நமது சகாப்தம் ஒரு புதிய சகாப்தம்; முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தற்கு மாறிச் செல்லும் சகாப்தம்; உலக சோசலிச அமைப்பு உலக வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிக் கொண்டிருக்கும் சகாப்தம்; தேசிய விடுதலை மற்றும் சோசலிஸ்ட் புரட்சி சகாப்தம், விரைவாகக் காலனி ஆதிக்கம் தகர்ந்து அழிந்து கொண்டிருக்கும் சகாப்தம்; சாகும் தருவாயில் உள்ள முதலாளித்துவத்திற்கும் சோசலிசம் மற்றும் தேசிய விடுதலைப் புரட்சிக்கும் இடையில் பிரம்மாண்டமான வர்க்க மோதல்கள் நடைபெறும் சகாப்தம். – ஏகாதிபத்திய வீழ்ச்சியும் உலக அளவில் சோசலிசம், கம்யூனிசம் இறுதி வெற்றியும் பெறும் சகாப்தம்.

புதிய சகாப்தம் பற்றிய இந்த வரையறைகளுக்கு விசுவாசமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் நவீன திருத்தல்வாதம் இந்த சகாப்தத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களைக் குறைத்துக் காட்டவும் வேறு சிலவற்றிற்கு பொருத்தமற்ற முக்கியத்துவம் கொடுக்கவும் செய்கிறது. காலனி ஆதிக்கம் கிட்டத்தட்ட இறந்துவிட்டது போலவும், ஏகாதிபத்தியம் ஏறத்தாழ எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டது போலவும் சமாதான பூர்வமாக சோசலிசத்திற்கு மாறிச் செல்லத் துவங்கிவிட்டது போலவும் ஒரு சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. ஏகாதிபத்தியம் உலக அளவில் மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட போதிலும், கணக்கில் கொள்ளும் அளவு பலமான சக்தியாக இருக்கிறது என்ற உண்மையையும், முதலாளித்துவ பாரம்பரியத்தில் வளர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில், ஏகபோக மூலதனத்தின் ஆட்சி தொடர்ந்து இருக்கிறது என்பதையும் அங்கு முன் எப்போதும் கேள்விப்படாத அளவில் சமூக வாழ்வு ராணுவயமாக்கப்படுகிறது என்பதையும் ஏகாதிபத்தியம் தனக்கு விதிக்கப்பட்ட அழிவிலிருந்து மீள கடைசிக் கட்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் வேண்டுமென்றே குறைத்துக் காட்டுகிறது. இந்த தவறான பார்வை காரணமாகத்தான் நவீன திருத்தல்வாதத்தின் தந்தையான குருசேவ் போன்ற சிலர் ஏகாதிபத்தியம் “கோட்டில் தைக்கப்பட்டிருக்கும் பித்தான்’’ என்றும் அதை “எளிதில் முறியடிக்கக்கூடிய தீங்குவிளைவிக்காத ஓநாய் ஆக மாற்ற முடியும்’’ என்றும் சித்தரிக்கும் அளவிற்கு சென்றுள்ளனர். மீண்டும் இந்த பார்வை காரணமாகவே நவீன திருத்தல் வாதிகள் ஏகாதிபத்தியமும் போரும் என்ற லெனினியக் கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கவும் வேறு சிலர் லெனினியக் கோட்பாடுகளை சிதைக்கவும் செய்கின்றனர். இவை அனைத்தையும் புதிய சகாப்தத்தின் பெயராலும் மார்க்சிய – லெனினியத்தை ஆக்க பூர்வமாக பிரயோகிப்பது என்ற பெயராலும் செய்கின்றனர்.

சகாப்தம் பற்றிய சரியான மார்க்சிய – லெனினிய வரையறை என்பது அந்த சகாப்தத்தின் ஒட்டு மொத்தமாக இருக்கும் ஸ்தூலமான வர்க்க உறவுகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பாட்டாளிவர்க்கப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அந்த வரையறை இருக்க வேண்டும். ஆனால் அது தவறான கற்பனாவாத பார்வை அளிப்பதாகவும் தன்னுணர்வின் அடிப்படையில் மிகவும் சாதாரணமாக்கப்பட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருக்கக்கூடாது. புதிய சகாப்தம் பற்றிய தவறான நிர்ணயிப்பு அல்லது சிதைக்கப்பட்ட வியாக்கியானம் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் உதவி செய்வதைவிட அதிகம் கெடுதல் செய்கிறது.

ஏகாதிபத்தியம் உலக அளவில் பெரிதும் பலவீனப்பட்டுள்ளது என்பதை எந்த மார்க்சியவாதியும் மறுக்கமாட்டான். ஏற்கனவே சோசலிச அமைப்பின் கீழ்வந்துள்ள நாடுகளின் புரட்சிகர சக்திகள், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம், புதிதாக விடுதலை அடைந்துள்ள மற்றும் காலனி நாடுகளில் உள்ள சக்திகள், போருக்கு எதிராகவும் சமாதானத்திற்கு ஆதரவாகவும் உருவாகியுள்ள விரிவான மக்கள் இயக்கம் ஆகிய அனைத்தும் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியத்திற்கு அதன் கூட்டாளிகளுக்கும் தோல்வி மேல் தோல்வியை கொடுக்கும் அளவிற்கு வல்லமைமிக்கதாக இன்று இருக்கின்றன.

என்றாலும் இந்த புரட்சிகர சக்திகள் அனைத்தையும் திரட்டி ஒன்றுபடுத்தும் பணி அவ்வளவு எளிது அல்ல. மிகவும் பிற்போக்கான ஏகாதிபத்திய குழுக்களை தனிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்ட சோஷலிச ராஜதந்திரத்தையும் விடுதலைப் போராட்டங்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து சமாதானத்தை நேசிக்கும் நாடுகளை ஆக்கிரமிப்பு செய்யும் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக சோஷலிச முகாமின் ஆயுத பலத்தை பிரயோகித்தல் ஆகிய இரண்டையும் புரட்சிகரமாக இணைப்பது இதில் அடங்கியுள்ளது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்முக ஒற்றுமை இதற்கு அவசியம். ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் தலையீட்டிற்கு எதிராக பின்தங்கிய நாடுகளின் தேசிய விடுதலை இயக்கத்திற்கும், முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்திற்கும் நேரடி ராணுவத் தலையீடு உள்ளிட்ட சகல உதவிகளையும் அளிக்கும் அந்த ஒற்றுமை தேவை. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒற்றுமைக்கான இந்த போராட்டம் நவீன திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் உள்ள புதிய சகாப்தத்தில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புக்களை தீவிரமாக பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக நிரந்தரமான சமாதானத்திற்கும், விடுதலைக்கும் எதிராக நிற்கும் ஒழிக்கப்பட வேண்டிய அரக்கனாக ஏகாதிபத்தியம் இல்லை என்று ஒரு புதிய கனவு உலகத்தை உருவாக்க நவீன திருத்தல்வாதம் முயற்சிக்கிறது. அது தேச விடுதலை இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க புரட்சி இயக்கத்தையும் குறைத்து மதிப்பிட்டு சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமையையும் உலக சோசலிச முகாமின் ஒற்றுமையையும் சீர்குலைக்கிறது.

முரண்பாடுகள் பற்றிய பிரச்சினைகள்

விஞ்ஞான சோசலிசம் மற்றும் மார்க்சிஸ – லெனினிய கோட்பாடுகளால் வழிகாட்டப்படும் அனைத்து கம்யூனிஸ்ட்களும் இன்றைய சகாப்தத்தில் நான்கு அடிப்படை சமூக முரண்பாடுகள் இருப்பதை ஏற்றுக் கொள்வார்கள். அவை (1) முதலாளித்துவ முகாமிற்கும் சோசலிச முகாமிற்கும் இடையிலான முரண்பாடு (2) முதலாளித்துவ நாடுகளின் பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடு (3) ஏகாதிபத்திய அரசுகளுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு (4) ஏகாதிபத்திய அரசுகளுக்கு மத்தியிலும் ஏகபோக மூலதன குழுக்களுக்கு மத்தியிலும் உள்ள முரண்பாடுகள்.

நவீன திருத்தல்வாதிகளும் இதைச் சரியென ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியானால் மார்க்சிய – லெனினியவாதிகளுக்கும் திருத்தல்வாதிகளுக்கும் இடையில் முரண்பாடு பற்றிய பிரச்சினையில் உள்ள தத்துவார்த்தச் சர்ச்சை என்ன? உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உள்ள இந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்ட முழு சர்ச்சையையும் கவனமாக ஆய்வு செய்தால் அது முக்கியமாக இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். முதலாவதாக மற்ற அடிப்படை முரண்பாடுகளை முக்கியத்துவம் அற்றவை அல்லது குறைந்த முக்கியத்துவம் கொண்டவை என்று நிராகரித்துவிட்டு அல்லது குறைத்து மதிப்பீடு செய்துவிட்டு ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிச முகாமிற்கும் இடையில் உள்ள முரண்பாடு ஒன்றுதான் உலக நிகழ்ச்சிப் போக்குகளை தீர்மானிக்கிறது என்று கருதும் மார்க்சியத்திற்குப் புறம்பான சந்தர்ப்பவாத போக்கு. இரண்டாவதாக வெவ்வேறு முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு சமாதானமான பொருளாதாரப் போட்டியின் மூலம் சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் போக்குதல். அமைதியான மாற்றம் மூலம் பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டை தீர்த்தல் போன்ற தங்களுக்கு வசதியான பிரியமான உத்திகளை பரிந்துரைப்பது.

முதலாளித்துவம் ஏகபோகமாக, ஏகாதிபத்தியமாக வளர்வதை ஆய்வு செய்த லெனின் ‘உலக சோசலிசப் புரட்சிக்கு முந்தைய கட்டமே ஏகாதிபத்தியம்’ என்ற முடிவுக்கு வந்தார். ஏகாதிபத்திய சகாப்தத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்யும் போது இதன் அர்த்தம் என்ன? உலக முதலாளித்துவத்திற்கும் உலக பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடே மையமாகவும், வலிமையாகவும் விளங்குகிறது என்பதை முதன்மையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் அது தெளிவுபடுத்துகிறது. அந்தச் சூழ்நிலையில் உள்ள மற்ற முரண்பாடுகளை அது நிராகரிக்கவோ புறக்கணிக்கவோ செய்கிறதா? சிறிதளவும் இல்லை! ஏகாதிபத்தியத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு ஏகாதிபத்திய நாடுகளுக்கும், காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு இருப்பதையும் வளர்வதையும் கூட லெனின் தெளிவுபடுத்தினார். இந்த முரண்பாடுகள் அனைத்தையும் இயக்க இயல் அடிப்படையில் லெனின் ஆய்வு செய்ததால் இரண்டு விஷயங்களை முன்கூட்டியே அவரால் காண முடிந்தது. முதலாவது ஏகாதிபத்திய உள் முரண்பாடு தீவிரமடைந்து உலகை தங்களுக்குள் மறுபங்கீடு செய்து கொள்ளும் ஒரு ஏகாதிபத்தியப் போர். இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தம் முதலாளித்துவ நாடுகளில் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையில் முரண்பாட்டைத் தீவிரமாக்கி, ஏகாதிபத்தியத்திற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டைத் தீவிரமாக்கி சோசலிசப் புரட்சி மற்றும் தேச விடுதலைப் புரட்சிக்கு வழிவகுக்கும். உலக முரண்பாடுகள் பற்றிய லெனினின் ஆய்வு முற்றிலும் சரியானது என்பதை வாழ்க்கை நிரூபித்தது. மேலும் அந்த சகாப்தத்தின் மையமாக உலக பாட்டாளி வர்க்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடு இருந்தாலும் மற்றொரு முரண்பாடான ‘ஏகாதிபத்திய உள் முரண்பாடு வளர்ந்து ஏகாதிபத்திய யுத்தம் என்ற நிலைக்கு வந்ததும் தெளிவானது. எனவே ஒரு சகாப்தத்தின் மைய முரண்பாடு மட்டுமே எல்லா நேரங்களிம் தீவிரமடைந்து முற்றுகிறது. மற்ற முரண்பாடுகள் நிலையாகவோ அல்லது தீவிரமடையாமலோ உள்ளன என்று கருதுவது தவறு என்பதே இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் முக்கிய போதனை.

இதனை மேலும் விளங்கச் செய்ய அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய காலத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் தான் சோஷலிச சோவியத் யூனியனுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு மைய முரண்பாடாகவும் மேலாதிக்கம் செலுத்தும் முரண்பாடாகவும் வளர்ந்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக 1918_-20 ஆண்டுகளில் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டு யுத்தமும் சோசலிசப் புரட்சியை பாதுகாக்க சோவியத் யூனியன் நடத்திய தற்காப்பு யுத்தமும் இந்த மைய முரண்பாட்டின் வெளிப்பாடாக அமைந்தது. ஆனால் ஏகாதிபத்திய உள்முரண்பாடு, காலனி ஆதிக்க நாடுகளுக்கும் காலனி நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு போன்ற மற்ற முரண்பாடுகள் தீவிரமடைவதையோ, அதன் காரணமாக சிறிது காலம் சோவியத் யூனியனுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான பகைமை தளர்வதையும் அது தடுக்க முடிந்ததா? மற்ற இந்த முரண்பாடுகள் தீவிரமாகியதால் சோவியத்திற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் கூட்டணி சேர்வது சிறிது காலம் இயலாமல் போனது என்பது மட்டுமல்ல. 1939-1941 காலங்களில் ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் ஒரு பக்கமும், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், ஏகபோக முதலாளித்துவம் மறுபக்கமாக நின்று இரண்டாவது ஏகாதிபத்திய யுத்தம் வெடிக்கவும் செய்தது என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்துக் காட்டியது.

பிறகு பாசிச எதிர்ப்பு யுத்தத்தின் வெற்றியை அடுத்து வலிமையான சோசலிச முகாம் உருவான பின்னரும் நான்கு அடிப்படை முரண்பாடுகளில் சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் மையமான ஒன்றாக இருக்கிறது. இந்த உண்மை இப்படி இருந்தபோதிலும் ஏகாதிபத்தியத்திற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு முற்றி தீவிரமாக ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேசிய விடுதலைப் புரட்சியாக வெடிப்பதையும், இந்த முரண்பாடு தீவிரம் அடைந்து மற்ற முரண்பாடுகளின் வளர்ச்சியில் ஊக்கமளிப்பதையும் நாம் காணவில்லையா? உலக சரித்திரத்தின் இன்றைய கட்டத்தில் காலனி ஆதிக்க நாடுகளுக்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு நமது காலத்தின் அனைத்து முரண்பாடுகளின் குவி மையமாக மாறியுள்ளது என்று உலக மார்க்சிய – லெனினியவாதிகள் கூறுவதும் இந்த அர்த்தத்தில் தான்.

நமது காலத்திய தேசிய விடுதலைப் புரட்சிகள் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு உறுப்பாக மாறியுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமீபத்தில் எழுந்துள்ள தேச விடுதலைப் போராட்டங்கள் இந்தப் பகுதியில் உள்ள ஏகாதிபத்திய அடித்தளத்தை அசைத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களின் வெற்றிகரமான முன்னேற்றம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொழிலாளி வர்க்க போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியை அளித்து உலக சோசலிசப் புரட்சியின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துகிறது.

எனவே ஒரு அர்த்தத்தில் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தின் முழு நோக்கம் இந்த பகுதி மக்களின் புரட்சிகர போராட்ட முடிவைப் பற்றி நிற்கிறது.

இந்த தேச விடுதலைப் போராட்டங்களுக்குப் பிராந்திய அளவில் மட்டும் முக்கியத்துவம் உள்ளதாகப் பார்ப்பது தவறு. உலக சமாதானத்திற்கும், உலக புரட்சி நோக்கத்திற்கும் இவை பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் நவீன திருத்தல்வாதிகள் இந்தத் தன்மையை ஏற்க மறுக்கிறார்கள். தங்கள் வேலைகளைத் தவிர்க்க முடியாத புதிய நிலைகளுக்கேற்ப மாற்றி அமைக்கத் தவறுகின்றனர். இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் என்றும் மற்ற முரண்பாடுகளின் தீர்வு என்பது இந்த பிரதான முரண்பாட்டின் தீர்வை அடிப்படையாக வைத்துத்தான் அமையும் என்றும் இந்தத் தீர்விற்கான வழிமுறை சமாதான பொருளாதாரப் போட்டி போன்றவைதான் என்றும் கூறி வருகிறார்கள்.

முரண்பாடுகள் பற்றிய இந்த முற்றிலும் தவறான இயக்க இயலுக்கு புறம்பான ஆய்வும் மதிப்பீடும் திருத்தல்வாதிகளை கீழ்க்கண்ட கைவிடப்படவேண்டிய சந்தர்ப்பவாதத் தவறுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது:

  1. சோசலிச முகாமிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டை மட்டும் ஒரே முரண்பாடாக ஏற்று மற்றவைகளை நிராகரித்தும் குறைத்து மதிப்பிடலும்.
  2. காலனி ஆதிக்க நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு ஆகியவற்றைத் தீர்க்க சமாதானபூர்வ மாறுதலை வறட்டுத்தனமாக பரிந்துரை செய்தல்.
  3. புதிய சகாப்தத்தில் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகளை ஏகபோக வாதிகளுக்கிடையேயான சர்வதேச உடன்பாடுகள் மூலம் மட்டுப்படுத்தவோ, அகற்றவோ இயலும் என்ற இணக்கமான கோட்பாடு.
  4. சோசலிச முகாமிற்கும் ஏகாதிபத்திய முகாமிற்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க சமாதானபூர்வமான பொருளாதாரப் போட்டியை ஒரே தீர்வாக முன்வைத்தல்.

போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகளும்

லெனின் வகுத்த ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடும்

போர், ஏகபோக மூலதனம், ஏகாதிபத்தயம் ஆகியவற்றின் நிரந்தரத் துணைவன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் ஏகபோக மூலதனம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் வரலாற்றைப் பரிசீலனை செய்தால் வரலாற்றில் இதுவரை அறியாத அளவு வன்முறை, போர், ரத்தம் சிந்தல் நிறைந்திருப்பதைக் காணலாம். 25 ஆண்டுகளுக்குள் உலக முதலாளித்துவவாதிகள் மனித குலத்தை இரண்டு போர்களில் சிக்க வைத்துள்ளனர். 4 கோடி பேரை படுகொலை செய்துள்ளனர். 8 கோடி பேரை அங்ககீனப் படுத்தியுள்ளனர். இது தவிர பல்லாண்டு காலம் கோடிக்கணக்கான மனிதர்கள் தங்கள் உழைப்பாலும் வியர்வையாலும் உருவாக்கிய செல்வங்களை அழித்துள்ளனர். இந்தப் பட்டியலோடு ஏகாதிபத்தியவாதிகள் பல சிறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பு நடத்தி லட்சக்கணக்கானவர்களைக் கொன்று தங்கள் காலனி, அரைக்காலனி, நவீன காலனி ஆதிக்கத்தை நிறுவியதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்று மீண்டும் நாசகரமான அழிவினை ஏற்படுத்தவல்ல காட்டுமிரண்டித்தனமான அணு ஆயுத யுத்தத்தை உலக மக்கள் மீது திணிப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வெறித்தனமான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறை, போர் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட முதலாளித்துவம், மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ள மார்க்சிய – லெனினியத்தால் வழி நடத்தப்படும் தொழிலாளி வர்க்கத்திற்கும் மேலான வேறு எந்த வர்க்கமும் இந்த நவீன சமுதாயத்தில் இல்லை என்பதை மீண்டும் இங்கே வலியுறுத்த வேண்டும். மாபெரும் அக்டோபர் புரட்சி பற்றி லெனின் சரியாகக் குறிப்பிட்டது போல ‘என்ன விலை கொடுத்தும் உடனடி சமாதானம் பெறுவோம்’ என்ற கோஷம் புரட்சியின் போது எழுப்பப்பட்டது. மேலும் அவர் குறிப்பிட்டதுபோல “மூலதனத்தின் அடிமைகளாக உள்ள உழைக்கும் மக்களின் செலவில் போரையும் சமாதானத்தையும் உருவாக்கும் பல்வேறு நாடுகளின் பூர்ஷ்வாக்களுக்கு எதிராக அனைத்து நாட்டு தொழிலாளர்களைமயும் இணைத்து போரை ஒழித்த முதல் வெற்றியாகும் அது’’-.  மேலும் “முதல் போல்ஷ்விக் புரட்சி இந்த உலகின் ஜனத்தொகையில் முதல் நூறு மில்லியன் மக்களை ஏகாதிபத்திய போர் மற்றும் ஏகாதிபத்திய உலகின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. இனிவரும் புரட்சிகள் மீதமுள்ள மக்களையும் இத்தகைய ஏகாதிபத்தியப் போரிலிருந்தும் இத்தகைய உலகிலிருந்தும் காப்பாற்றும்’’ (அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு விழாவில் லெனின் பேச்சு)

இதுதான் போர் சமாதானம் பற்றிய மார்க்சிய – லெனினிய பார்வை. போருக்கு எதிராக உலக சமாதானத்தை பாதுகாக்கும் காவலனாக உள்ள முதல் சோஷலிச அரசான சோவியத் யூனியன் வழி நடத்தப்பட்டதும் இந்தப் பார்வையில்தான். பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் முன்னணியில் நின்று பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து உலகத்தை விடுவித்ததும், சக்திமிக்க சோசலிச முகாம் உருவாக வழி அமைத்துக் கொடுத்ததும் சோவியத் யூனியன்தான். பாசிச எதிர்ப்பு யுத்தத்தின்போது பல நாடுகளில் தேச விடுதலை மற்றும் சோசலிசப் புரட்சி நடைபெற்றதும் குறிப்பாகச் சீனப்புரட்சியின் வெற்றியும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் யுத்தத்திற்கு எதிராகவும் சமாதானம், ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் சர்வதேச வர்க்க சக்திகளின் பலாபலத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. ஒரு புதிய உலக யுத்தத்தைத் தவிர்ப்பதற்கும் அணு யுத்தத்தை தடை செய்யவும் புதிய வாய்ப்புகள் நிச்சயம் உருவாகியுள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சோசலிச அரசுகளும் ஏகாதிபத்தியம் வளர்த்துள்ள பிரமைகளுக்கும், சமூக ஜனநாயகவாதிகளின் வர்க்க சமரச கற்பனாவாதத்திற்கும் இரையாகாமல் மார்க்சிய லெனினிய அடிப்படையில் சமாதானத்தை காக்கும் புரட்சிகர போராட்டத்தை நடத்த வேண்டும்; சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைத்து சக்திகளையும் இணைத்து பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் புதிய வாய்ப்புகளை நடைமுறைப்படுத்த இயலாது என்ற உண்மையை யாரும் புறக்கணித்துவிட முடியாது. ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய சாகசம் மற்றும் தந்திரம் மூலம் பல்வேறு நாடுகளின் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்களை ஏமாற்றி நம்ப வைப்பதில் வெற்றி பெற்றால் யுத்தத்திற்கு எதிராக சமாதானத்திற்கு ஆதரவாக என்ன தான் ஆர்ப்பரிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் இருந்தாலும் யுத்த அபாயம் நெருங்கி விட்டது என்றே கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் தான் ஏகாதிபத்தியமும் யுத்தமும் என்ற லெனினிய கோட்பாடு பற்றிய தத்துவார்த்த சர்ச்சைகளை ஆராய வேண்டும்.

முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய தனது தலைசிறந்த ஆய்வில் “முதலாளித்துவத்தின் ஏகபோக மூலதனக் கட்டமே ஏகாதிபத்தியம்’’ என லெனின் வர்ணித்து “ஏகாதிபத்தியம் பொதுவில் வன்முறை, பிற்போக்குத்தனம் மூலமே தன்னை தக்க வைத்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏகாதிபத்தியத்தின் குறிப்பிடத்தக்க குணம் என்னவென்றால் விவசாயப் பகுதிகளை மட்டுமல்ல. மிகவும் அதிகம் தொழில் வளர்ந்த பகுதிகளையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள முயலும். ஏனென்றால் ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்டு விட்டதால் உலகம் எல்லாவிதப் பகுதிகளிலும் ஒருமறு பங்கீடு நடத்த வேண்டியதாக உள்ளது. மேலாதிக்கத்தை அடைய முயலும் சக்திகளுக்கு இடையில் உள்ள பகைமையே ஏகாதிபத்தியத்தின் முக்கிய அம்சமாகும். எனவே எதிரியின் மேலாதிக்கத்தைக் குறைக்கவும் பல எல்லைகளை வெல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. லெனின் இவை அனைத்தையும் தொகுத்துத் தரும் போது “உற்பத்தி சக்திகளின் மேல் தனி உடமை இருக்கும் வரை இத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பில் ஏகாதிபத்திய யுத்தம் முழுதும் தவிர்க்கக் கூடியது அல்ல’’ என்றும் “முதலாவதாக புரட்சிகர தேசிய எழுச்சியும் இரண்டாவதாக பூர்ஷ்வாக்களுக்கு எதிரான பாட்டாளி வர்க்க யுத்தமும் மூன்றாவதாக மேற்கண்ட இருவித புரட்சிகர யுத்தங்களும் இணைவதும் சாத்தியமானதும் தவிர்க்க இயலாததும் ஆகும்’’ என்றும் குறிப்பிட்டார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் லெனின் உருவாக்கிய இந்தக் கோட்பாடு முழுதும் சரி என்பதையும் சர்வதேசப் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு எவ்வாறு உதவிகரமாக இருந்து வந்துள்ளது என்பதையும் அதன் ஒவ்வொரு வார்த்தையும் சரி என்பதையும் வாழ்க்கை நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.

புதிய சகாப்தத்தில் நிலவும் புதிய சூழ்நிலைக்கேற்ப மார்க்சிய லெனினியத்தை அமுல்படுத்துவது என்ற பெயரால்  நவீன திருத்தல்வாதிகள் தங்களை ஆக்கபூர்வ மார்க்சிய வாதிகள் என்று கூறிக்கொண்டு லெனின் உருவாக்கிய ‘ஏகாதிபத்தியமும் யுத்தமும்‘ என்ற கோட்பாட்டிற்கு சவால் விடுத்துள்ளனர். ‘ஏகாதிபத்தியம் உள்ள வரை யுத்தம் தவிர்க்க இயலாது’ என்ற மார்க்சீய – லெனினிஸ பார்வை காலாவதியாகி விட்டது, செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர். உலகம் தழுவிய சக்தியாக ஏகாதிபத்தியம் தற்போது இல்லை என்றும் போரைக் கைவிடுமாறு ஏகாதிபத்தியத்தை நிர்ப்பந்திக்க வல்ல சமூக அரசியல் சக்திகள் வளர்ச்சி பெற்றுள்ளன எனவும் வாதிடுகின்றனர். அவர்கள் புதிதாக “யுத்தம் அபாயகரமாக தவிர்க்க முடியாதது அல்ல’’ என்ற புதிய கோட்பாட்டை முன் வைத்துள்ளனர். இந்தக் கோட்பாடு சோசலிச அரசுக்கும் ஏகாதிபத்திய அரசுக்கும் இடைப்பட்ட யுத்தம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தம், தேசிய விடுதலை யுத்தம், உள்நாட்டு யுத்தம் போன்ற அனைத்து வகை யுத்தங்களையும் இணைத்து ஏகாதிபத்தியமும் யுத்தமும் என்ற லெனினிய கோட்பாட்டை கைவிட முயலுகிறது போர்த்தளவாடங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, இரண்டு முக்கிய அணிகளாக பிரிந்து நிற்கும் சோசலிசம், ஏகாதிபத்தியம் ஆகிய இரு அணிகளும் நாசகார அணு ஆயுதம் வைத்திருப்பதும் தான் லெனினியக் கோட்பாட்டை மாற்றுவதற்கான அடிப்படை என்று புதிய கோட்பாட்டை உருவாக்கியவர்களும், கடைப்பிடிப்பவர்களும் வாதிடுகின்றனர். யுத்த தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அடிப்படை சமூக வர்க்க விதிகள், வர்க்க முரண்பாடு, வர்க்கப் போராட்டம், வர்க்க யுத்தம் போன்றவற்றை மாற்ற முடியும் என்பதை மார்க்சிஸ – லெனினியவாதிகள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். லெனின் கூறியது போல் “ராணுவ தொழில்நுட்பம் ராணுவ தந்திரங்களை நிச்சயிக்கிறது’’. ஆனால் ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் விதியையும் சமூக விதிகளையும், சமூக வளர்ச்சியையும் நிச்சயிக்க முடியும் என்று கூறுவது மார்க்சியத்திலிருந்து ஆழமாக வேறுபட்டுச் செல்வதாகும்.

உலகின் நான்கில் மூன்று பங்கு பிரதேசத்தில் மனிதகுலத்தின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட பகுதியில் முதலாளித்துவ ஏகாதிபத்திய சமூக அமைப்பே உள்ளது; அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, மேற்கு ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி முதலிய அனைத்து நாடுகளும் ஏகபோக மூலதன பிடிப்பிலேயே உள்ளன. சோசலிச அரசை முதலாளித்துவ அரசுகள் சுற்றி வளைத்துள்ள நிலைமை மாறி முதலாளித்துவ அரசுகளை சோசலிச அரசுகள் சுற்றி வளைக்கும் நிலையாக மாறிவிடவில்லை. எனவே ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாடு இன்னும் செல்லத்தக்கதே. அது காலத்திற்கு ஒவ்வாதது என கூறுவது மார்க்சிய – லெனினியத்திலிருந்து அடிப்படையில் வேறுபடுவது ஆகும்.

இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் உலக அளவில் வர்க்க சக்திகளின் பலாபலனில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு குறிப்பிட்ட யுத்தத்தை ஒத்தி வைக்கவும், தடுக்கவும் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை அழிவு யுத்தத்தை தடுத்து அந்த அளவு சமாதானத்தை பாதுகாக்கவும் புதிய வாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கி உள்ளது. ஆனால் யுத்தமே இல்லா நிரந்தர சமாதானம் என்பது ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். ஏகாதிபத்தியம் இருக்கும் வரை ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான விளை நிலம் இருந்து கொண்டே இருக்கும்.

இறுதியாக, லெனின் குறிப்பிட்டது போல் “ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மதிப்பீடு செய்யும் போது ஒரு மார்க்சிஸ்ட் எதுவெல்லாம் சாத்தியம் என்பதிலிருந்து அல்ல. எது உண்மையில் இருக்கிறது என்பதிலிருந்து துவங்க வேண்டும்’’ பொருளாதார அரசியல், ராணுவ துறைகளில் பலம் பொருந்திய ஏகாதிபத்தியம் இருக்கிறது என்ற யதார்த்தத்திலிருந்து துவங்காமல் யுத்தத்தை தவிர்க்க முடியும். சமாதானத்தை நிலைநிறுத்த முடியும் என்ற சாத்தியப்பாடுகளின் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கி தந்திரோபாயங்களை வகுத்தால் அது துன்பத்தில்தான் முடியும்.

ஆயுதக் குறைப்பும் அணு ஆயுதத் தடையும்

வெறிபிடித்த ஆயுதப் போட்டி, அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்து, உற்பத்தி செய்து பெரும் அளவில் குவித்து வைத்திருப்பது உலக முழுவதும் ஆயிரக்கணக்கான ராணுவ தளங்களை அமைத்திருப்பது, ராணுவ கூட்டுக்களை உருவாக்குதல், பொருளாதாரத்தை தீவிர ராணுவ மயமாக்கல் ஆகிய இவை அனைத்தும் ஏகபோக முதலாளித்துவம் வரவிருக்கும் அழிவில் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்கான முயற்சியின் விளைவுகளே.

ஏகாதிபத்தியவாதிகளின் இந்த ஆயுதப் போட்டிக்கு முன்னால் சோசலிச அரசுகள் ஏகாதிபத்தியத் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உலக சோசலிச புரட்சியையும் சமாதானத்தையும் பாதுகாக்கவும், தங்கள் ராணுவ வலிமையைப் பெருக்குவது சோசலிச அரசுகளின் கடமையாகும். ஏகாதிபத்தியவாதிகளின் ஆயுதப் பெருக்கத்திற்கு எதிராக போராடுவதும் பொதுவான ஆயுதக் குறைப்பு கோரிக்கையை வைப்பதும் கூட சோசலிச மற்றும் சமாதான சக்திகளின் கடமையாகும். மொத்தமான ஆயுத குறைப்பு இறுதியில் ஏகாதிபத்தியம் தன்னையே அழித்துக் கொள்வதில் முடியும் என்பதால் அத்தகைய ஆயுத குறைப்புக்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள் என்ற உண்மையை மறந்து விடாமல் உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் சோசலிச முகாமும் தொடர்ந்து இந்த ஆபத்துக்கெதிராக உலகமக்கள் கருத்தைத் திரட்டவும், ஏகாதிபத்தியவாதிகளை அம்பலப்படுத்தவும் ஆயுதக் குறைப்புக்கான பிரச்சாரத்தை செய்ய வேண்டும். இந்த பிரச்சாரம் ஏகாதிபத்தியவாதிகள் ஓரளவு ஆயுதப் போட்டியை நிறுத்தவும் சில பகுதி உடன்பாட்டிற்கு வரவும் அவர்களை நிர்ப்பந்திக்கும்.

ஆனால் பொதுவான ஆயுதக் குறைப்பிற்கான சோசலிச சக்திகள் நடத்தும் பிரச்சாரம் அவர்களிடத்தில் இந்த விஷயத்தில் பிரமைகளை உருவாக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் விருப்பத்துடன் ஆயுத குறைப்புக்கு ஒப்புக் கொண்டு ஆயுத தயாரிப்பையும் விட்டுவிடும் அளவிற்கு பலவீனப்பட்டு விட்டார்கள் என்ற பிரமைகளுக்கு ஆட்பட்டு விடக் கூடாது. இந்தச் சரியான நிலைக்கு மாறாக நவீன திருத்தல்வாதிகள் ஏகாதிபத்தியம் பற்றி மோசமான பிரமைகளை வளர்க்கும் விதத்தில் ஆயுதக் குறைப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த ஆயுதக் குறைப்பு உடனடி நடைமுறை சாத்தியம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வியட்நாமிற்கு எதிராக அமெரிக்க யுத்த விஸ்தரிப்பு. ஆயுதக் குறைப்பிற்கான பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்காது என்று அபத்தமாக அறிக்கை வெளியிடக்கூட அவர்கள் தயங்கவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் ஆயுதப் போட்டியை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக ஏகாதிபத்தியவாதிகளின் யுத்த முயற்சிக்கு எதிரான உஷார்த்தனத்தை மழுங்கடித்து தத்துவார்த்த அரசியல் ரீதியில் மக்களின் விழிப்புணர்ச்சியை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் சோவியத்தலைவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதிலிருந்து ஆயுதக் குறைப்பு பற்றிய அவர்களின் சாத்வீகவாத, வர்க்க சார்பற்ற திருத்தல்வாதப் பார்வை எவ்வளவு கேலிக்கூத்தான அளவுக்குச் சென்றுள்ளது என்பதை அறியலாம். அணு ஆயுதத் தடைக்கான சாத்தியப்பாடுகள் இருப்பது என்பதும் அதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதும் உண்மையே. சோசலிச உலகம் போதுமான அளவு அணு ஆயுத அறிவை வளர்த்துக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதத்தில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்ட பிறகுதான் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான அத்தகைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும்; அணு யுத்தத்தைத் தவிர்த்து அணு ஆயுதத் தடையை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் நிறைவேறும். இல்லாவிட்டால் பலவீனமான அரசுகளையும் சோசலிச முகாமையும் அச்சுறுத்திப் பணியவைக்கும் சாதகமான நிலையை விட்டுக் கொடுத்து ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்த அடிப்படையில் தான் சோவியத் யூனியன் அணு ஆயுதங்களையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சோவியத் யூனியனின் இந்த அணு ஆயுதத் தற்காப்பு மற்றும் தாக்கும் வலிமைதான் ஏகாதிபத்தியவாதிகளை 1945_ல் ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தியதுபோல் தற்போது பயன்படுத்த முடியாமல் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது.

ஆனால் சோவியத் தலைவர்கள் ஆயுதக் குறைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு போராட்டங்கள் என்ற பெயரில் மக்கள் சீனத்துடன் ஏற்பட்ட அணு ஆயுத தொழில்நுட்ப ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து மக்கள் சீனத்தை அணு ஆயுதங்கள் தயாரிப்பதிலிருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒரு சகோதர சோசலிச அரசுக்கு எதிரான இந்த துரோகத்தனமான நடவடிக்கைக்கு ஆதரவாக விசித்திரமான வாதங்களை முன் வைக்கின்றனர். இப்படித் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது அமெரிக்கா, மேற்கு ஜெர்மன் ராணுவ வெறியர்களையும் மற்ற ஏகாதிபத்தியவாதிகளையும் அணு ஆயுதம் தரிக்கச் செய்வதற்கு அமெரிக்க ஏகபோகவாதிகளுக்கு வசதியளிக்கும்; அணு ஆயுதப் போட்டிக்கு ஊக்கமளிக்கும். சீன மக்கள் மீது தாங்க இயலாத சுமையை திணிக்கும். தன்னை மட்டுமின்றி அமெரிக்க அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகும் எந்த நாட்டையும் பாதுகாக்கும் அளவிற்கு அதிகமாகவே சோவியத் யூனியன் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதால் மற்ற சோஷலிச நாடுகள் அணு ஆயுதம் வைத்துக் கொள்வது தேவையற்றது என்றெல்லாம் வாதிடுகிறார்கள்.

மக்கள் சீனத்தின் வெளிப்படையான மோதலுக்கும், எதிர்ப்புக்கும் மத்தியில் சோவியத் தலைவர்கள் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் அணு சோதனை தடை ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து அரசுகளின் ஒப்புதலையும் பெற அனைத்து முயற்சிகளையும் செய்தார்கள். 1963_ல் கையெழுத்தான அணு சோதனை தடை ஒப்பந்ததத்தை அணு ஆயுத பரவல் தடை மற்றும் அணு ஆயுதத் தடைக்கான போராட்டத்தில் பெரிய வெற்றியாகப் பறைசாற்றினார்கள். இந்தப் பிரச்சினையில் சோசலிச முகாமில் கருத்து வேறுபாடும், பிளவும் ஏற்படும் அபாயம் இருப்பினும் இதைச் செய்கிறார்கள்.

இந்தப் போக்கும், பாதையும் ஆயுதக் குறைப்புப் பற்றிய வலது சந்தர்ப்பவாத, வர்க்கமற்ற மதிப்பீட்டிலிருந்துதான் எழுகிறது. ஏகாதிபத்தியவாதிகள் பற்றியும் சமாதானத்தைப் பாதுகாப்பது பற்றியும் உள்ள அனுமதிக்க முடியாத பிரமைகளிலிருந்து தோன்றுகிறது. மற்ற சோசலிச அரசுகளின்பால் உள்ள சகோதர உணர்வின் அடிப்படையில் அல்லாமல் போஷகர் என்ற உணர்விலிருந்து எழுகிறது.

இவை எல்லாவற்றின் மொத்த விளைவு என்ன? அணு ஆயுத தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் குவிப்பு இனிமேலும் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியவற்றின் ஏகபோகமாக இருக்கப் போவதும் இல்லை; அணு ஆயுத பரவல் தடை செய்யப்படப் போவதும் இல்லை. அணு ஆயுத அமெரிக்கா அல்லது சோவியத் யூனியன் தன்னை பாதுகாக்கும் என்ற கருத்தை பொருளாதார ரீதியாக சுயவலுவுள்ள எந்தத் தன்மானமுள்ள சுதந்திரநாடும் ஏற்கப் போவதுமில்லை.

சோசலிச முகாமின் ஒற்றுமையையும் பொருளாதார அரசியல் ராணுவ வலிமையையும் எல்லாத் துறைகளிலும் அதன் வளர்ச்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவற்றின் எல்லா முனைகளிலுமான போராட்டத்தையும் விட ஆங்கிலோ_அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளிடம் சோவியத் கொண்டுள்ள சமரசமே உலக சமாதானத்தைக் காக்கவல்லது என்று உருவாக்கப்பட்டுள்ள தேவையற்ற வரம்பு தான் சோவியத் தலைவர்களின் போக்குகளுக்கு அடிப்படையாக உள்ளது. இதை படுமோசமான வலது சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

வெவ்வேறு சமூக அமைப்புகள் கொண்ட அரசுகளின் சமாதான சக வாழ்வு

ரஷ்யாவில் முதல் சோசலிசப் புரட்சி வெற்றி அடைந்த பின்னர்தான் சமாதான சகவாழ்வு என்ற கோட்பாடு எழுந்தது; உலக சோசலிசப் புரட்சி. அனைத்து நாடுகளிலும் ஏக காலத்தில் நடைபெறாது என்பதையும், ஒன்று அல்லது பல நாடுகளில் சோசலிசப் புரட்சி நடைபெறுவதும் மற்ற நாடுகளில் பூர்ஷ்வா வர்க்கம் அல்லது வேறு ஏதாவது உடமை வர்க்கம் ஆட்சி புரிவதும் சாத்தியம் என்பதை லெனின் 1916_ம் ஆண்டிலேயே உணர்ந்தார் என்பது உண்மையே. கடந்த 50 ஆண்டு கால சரித்திரமும் வாழ்க்கையும் இந்த நிர்ணயிப்பைச் சரி என நிரூபித்து உள்ளது.

முதல் சோசலிச அரசு உருவானதும் அது மற்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து இருப்பதும் பொருளாதாரம், அரசியல், தத்துவம், மற்றும் ராணுவம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் சாத்தியமானது என்பது கண்கூடு. சோவியத் அரசு தனது ஆயுத பலத்தின் மூலம் ஏகாதிபத்திய நாடுகளுடனும் சமாதானமாக வாழ போராட வேண்டியிருந்தது. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் மீண்டும் மீண்டும் பலப்பரீட்சை நடந்து அதன் மூலம் சமாதான சகவாழ்வு உரிமையை சோவியத் யூனியன் நிலைநாட்ட முடிந்தது.

லெனின் இதைத் தெளிவுபடுத்தினார். “சர்வதேச ஏகாதிபத்தியம் எந்தச் சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் யதார்த்த நிலை காரணமாகவும், தனது முதலாளித்துவ வர்க்கப் பொருளாதார நலன் காரணமாகவும் சோவியத் குடியரசுடன் அருகருகே வாழச் சம்மதிக்காது.’’ “இதில் மோதல் தவிர்க்க முடியாது. இங்கு தான் ரஷ்யப் புரட்சியின் மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது. அதன் மிகப் பெரிய சரித்திர முக்கியத்துவமான பிரச்சினையான சர்வதேச பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய அவசியம், உலகப் புரட்சிக்கு அறைகூவல் விடவேண்டிய அவசியம். முற்றிலும் நமது தேசியப் புரட்சியை உலகப் புரட்சியாக மாற்றம் செய்தல் ஆகிய மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது’’

லெனின் மேலும் கூறினார்: “நீண்டகாலம் சோவியத் குடியரசு ஏகாதிபத்திய அரசுகளுக்கு அருகருகே நீண்டகாலத்துக்கு நீடிப்பது நினைத்துப் பார்க்க முடியாது. ஒன்று அல்லது மற்றொன்று இறுதி வெற்றிபெற வேண்டும். அந்த முடிவிற்கு முன்னதாக சோவியத் குடியரசிற்கும் பூர்ஷ்வா அரசுகளுக்கும் இடையில் பல பயங்கர மோதல்கள் தவிர்க்க முடியாதன’’.

ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பூர்ஷ்வாக்களுக்கு எதிராக ஒரு புரட்சிகர யுத்தம் வேண்டும் என்போருக்கு பதில் அளித்து அவர் கூறுகிறார்: “என்றாலும் உடனே இந்த நோக்கத்தை இப்போதைய சூழ்நிலையில் நாம் நிறைவேற்ற இயலாது. தன் நாட்டில் பூர்ஷ்வாக்களை தூக்கி எறிந்த ரஷியப் புரட்சியானது உலகப் புரட்சிக்கு உதவ வேண்டும் என அப்புரட்சியின் நலன்கள் கோருகின்றன. சோவியத் யூனியன் உலக சோசலிசப் படைப்பின் ஒரு பகுதி என்றாலும், அது தன் பலத்திற்கு ஏற்பவே உதவி செய்வதற்கான வடிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.’’

லெனின் தெளிவுபடுத்தினார். “முதலாளித்துவமும் சோசலிசமும் இருக்கும் வரை அவை சமாதானமாக வாழ முடியாது. காலப்போக்கில் ஒன்று மற்றொன்றை வெல்லும். சோவியத் யூனியன் மீதோ உலக முதலாளித்துவம் மீதோ இறுதியில் ஒப்பாரி பாடப்படும்.

எனவே லெனின் வகுத்த சமாதான சக-வாழ்வுக் கொள்கை புரட்சிகரமானது, போராட்ட குணம் மிக்கது. ஏகாதிபத்தியம் பற்றி சாத்வீக, கற்பனாவாத பிரமைகளை வளர்ப்பதை அனுமதிக்காதது. ஏகாதிபத்தியமும் சோசலிசமும் அருகருகே அமைதியாக அடுத்தடுத்து வாழ்தல் என்ற தற்போதைய நிலை மாறாது என்ற கோட்பாட்டிற்கு சம்பந்தமில்லாதது. இது யுத்தத்திற்கு மத்தியில் கிடைக்கும் சிறு ஓய்வு. சோசலிச அரசை பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் பலப்படுத்தி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வெற்றிகரமாக முறியடித்து, ஏகாதிபத்திய உலகத்தை அழிப்பதற்கு இந்த ஓய்வைப் பயன்படுத்த வேண்டும்.

சோவியத் யூனியனின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கிய அங்கமாக இந்தச் சரியான கொள்கையை சேர்த்து லெனின் அமுல்படுத்தினார். அவருக்கு பிறகு ஸ்டாலின் விசுவாசமாக அதை தொடர்ந்து அமுல்படுத்தினார்.

ஆனால் நவீன திருத்தல்வாதிகள், லெனினினுடைய, ஏகாதிபத்தியம், சமாதானம் ஆகியவை பற்றிய கோட்பாடுகளையும் மற்றும்  இதர கோட்பாடுகளையும் அவை பல பத்தாண்டுகளுக்கு முன்னால் ஏகாதிபத்தியம் சர்வ வல்லமையோடு இருந்த  காலத்தில் உருவாக்கப்பட்டவை என்று கூறி மாற்றி அமைத்ததைப் போல சமாதான சக வாழ்வுக் கொள்கையையும் விசுவாசிப்பதாக உரக்கக் கூவினாலும், அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை இழக்கும் விதத்தில் அதையும் சீர்குலைத்துவிட்டனர். சமாதான சகவாழ்வுக் கொள்கையின் சில பகுதிகளுக்கு பிரத்தியேக அழுத்தம் கொடுத்தும் அதைவிட முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அதற்குச் சமதையான மற்ற பகுதிகளை மறைக்கவும் அல்லது புறக்கணிக்கவும் செய்துள்ளனர்.

அனைத்து தொழிலாளி வர்க்க அரசின் வெளிநாட்டுக் கொள்கை முழுமைக்கும் இந்தச் சமாதான சகவாழ்வுக் கோட்பாடு தான் அச்சாணியாக உள்ளது என்றும், இந்தக் கோட்பாடுதான் வர்க்கப் போராட்டத்தின் உயர்ந்தபட்ச வடிவம் என்றும் மிகைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் சென்றுவிட்டனர்.

ஆக்கிரமிப்பு குணாம்சத்தை தன்னகத்தே கொண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அதற்குப் பலியான நாடுகளுக்குமிடையிலான உறவில் வெட்கமற்ற முறையில் சமாதான சகவாழ்வு கோட்பாட்டை பொருத்துவதன் மூலம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளனையும் அமைதியாக சகித்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தர்ப்பவாத அர்த்தம் கொண்டதாக இந்த கோட்பாட்டைத் தாழ்த்திவிட்டனர். ஏகாதிபத்தியவாதிகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் காலனியாதிக்க, நவீன காலனி ஆதிக்க மேலாதிக்கம் பெற முயற்சிப்பதன்மூலம் சமாதான சகவாழ்வை உலகில் சாத்தியமற்றதாக மாற்றிவிட்டனர் என்று தைரியமாக அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக திருத்தல்வாதிகள் சமாதானத்தையும் சமாதான சகவாழ்வையும் ஏகாதிபத்தியவாதிகள் ஏற்றுக் கொண்டது போல் அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை “சர்வதேச சுரண்டல்காரன்’’, “உலக பிற்போக்கு கும்பலின் தலைவன்’’, “சர்வதேச போலீஸ்காரன் உலக மக்களின் பிரதான எதிரி’’ என்றெல்லாம் எழுத்தில் எழுதினாலும் நடைமுறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு சாத்தியம் என்றும் சமாதானத்திற்கான போராட்டத்திலும், நாடுகளுக்கு இடையில் சுமூக உறவை உருவாக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர். லெனின் வகுத்த பிரசித்தி பெற்ற புரட்சிகரமான கோட்பாடு எந்த அளவு கீழ்மட்டத்திற்கு தாழ்த்தப்பட்டது என்பதை இதில் பார்க்கலாம்.

இரண்டு சமூக அமைப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் போராட்டம் பொருளாதாரம், அரசியல், தத்துவம், ராணுவம் என்ற அனைத்து தன்மைகளையும் கொண்டதாக இருக்கும் என்ற உண்மையை மறைத்து, இரண்டு அமைப்புகளுக்கும் மத்தியில் நடத்தப்பட வேண்டிய தலையாய போராட்டம் அமைதிப்பூர்வமான பொருளாதார போராட்டம்தான் என்று திருத்தல்வாதிகள் வியாக்கியானம் செய்து வருகின்றனர்.

சமாதான சகவாழ்வுக் கொள்கையை இந்தச் சந்தர்ப்பவாத முறையில் வியாக்கியானம் செய்வதையும் நடைமுறைப்படுத்துவதையும் எந்த மார்க்சிய – லெனினியவாதியும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு யுத்தங்களை மறைத்து ஆக்கிரமிப்பாளனை தாஜா செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சமரசமற்ற பொருளாதார அரசியல், தத்துவ மற்றும் ராணுவ போராட்டத்தில் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்குகிறது.

வன்முறைக்கு தூபம் போடுவது, ஆக்கிரமிப்பு நடத்துவது, மற்றவர்களை அடிமைப்படுத்துவது ஆகியவை ஏகபோக மூலதனத்தின் உள்ளார்ந்த குணம் என்பதால் சோசலிச நாடுகள் மட்டுமே தங்கள் கடமையாக ஏற்று சீராக அமுல்படுத்தும் சமாதான சகவாழ்வு கொள்கை ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்புடையதாக எப்போதும் இருந்ததில்லை. மாறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட அரசுகளுக்கு இடையிலான உறவில் வலியுறுத்தப்படும் இந்தக் கோட்பாடு கடுமையான நேரடி மோதல் நடத்துவதன் மூலம் பூர்ஷ்வா அரசுகள் மீது திணிக்கப்பட்டது. இந்தக் கொள்கையை அமல்படுத்துவது என்பது முதலாளித்துவத்தை எதிர்த்து வேறு வடிவங்களில் யுத்தத்தை நீடிப்பது என்பதேயாகும். இந்தக் கோட்பாட்டின் மீது ஒரு வர்க்கமற்ற அர்த்தத்தைப் புகுத்துவது ஏகாதிபத்தியவாதிகள் மனமுவந்து இதை ஏற்றுக் கொள்ளும்படி செய்வது என்பதற்காகவும் புரட்சியை விட்டுக் கொடுத்தாகிலும் சமாதானத்தை வாங்குவது என்ற சந்தர்ப்பவாத கருத்துக்கும் ஏற்ப இந்த கோட்பாட்டை சிதைப்பதாகும். முடிவாகப் பார்த்தால் இது அமைதியையும் சமாதான – சக வாழ்வையும் பாதுகாப்பதற்கு பதில் இவையிரண்டிற்கும், உலக புரட்சிக்கும் அழிவையே தேடும்.

எல்லா சோசலிச நாடுகளும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய லெனினிய அயல்நாட்டுக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமே இந்த சமாதான- சகவாழ்வு. உலக முழுமையிலும் சமாதானத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளையும் திரட்டி போர் வெறியர்களை தனிமைப்படுத்த இது உதவும். சமாதானத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கும் அனைத்துச் சக்திகளையும் அணி திரட்டுவதற்கான மைய கோஷமாக இது மாறுகிறது.

நவீன திருத்தல்வாதிகள் விரும்புவது போல ஏகாதிபத்தியவாதிகள் சமாதான சகவாழ்வு கொள்கையை முழங்குவதாலேயே உலகில் ஒரு புதிய சமாதான யுகம் பிறந்துவிட்டது என நம்புவது சரியல்ல. ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால் நிர்ப்பந்தம் காரணமாக வார்த்தை அளவில் ஏற்றுக் கொண்ட சமாதான சகவாழ்வுக் கோஷத்திற்குப் பின்னால் ஏகாதிபத்தியவாதிகள் மக்களுக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்புத் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். நவீன காலனி ஆதிக்கம் புதிய வடிவங்களில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் மக்கள் விழிப்புற்று ஒன்றுபட்டு பலமுடன் விளங்குகிறார்களோ அங்கு அவர்களது புரட்சிகர இயக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க முனைகிறார்கள்.

எனவே தான் ஒவ்வொரு உண்மையான புரட்சியாளனும் மார்க்சிய -லெனினியவாதியும் மாறுபட்ட சமூக அமைப்பைக் கொண்ட அரசுகளுக்கு இடையில் சமாதான சகவாழ்வு கொள்கையை விசுவாசமாக பின்பற்றுதலுடன் கீழ்க்கண்ட இரண்டையும் இணைக்க வேண்டும்.

  1. எத்தகைய ஏகாதிபத்திய தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும்படியான உஷார்த்தனமிக்க சோசலிச முகாமின் ஒன்றுபட்ட ராணுவபலம்.
  2. தேசியப் புரட்சி இயக்கங்களுக்குத் தேவையான பொருளாதார அரசியல் மற்றும் பிற உதவிகள்.

சோசலிசத்திற்கு மாறிச் செல்லும்  வழிமுறைகள்:

அரசின் தோற்றம், அதன் வளர்ச்சி சோசலிசப் புரட்சியுகத்தில் இன்றும் எதிர்காலத்திலும் அதன் பாத்திரம் பற்றிய விஞ்ஞான பூர்வ ஆய்வின் அடிப்படையிலேயே மார்க்சிசம் லெனினிசம் சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் வழி முறைகள் பற்றி பரிசீலிக்கிறது.

மார்க்சிய – லெனினிசத்தின்படி அரசு என்றால் என்ன? சுருங்கச் சொல்வதானால், “அரசு ஒரு பிரத்தியேகமான வன்முறை ஸ்தாபனம். சில வர்க்கங்களை அடக்குவதற்கான வன்முறை ஸ்தாபனம். பூர்ஷ்வா அரசுகள் வடிவங்களில் மாறலாம். குணாம்சத்தில் ஒன்றுதான். அதாவது முடிவாகப் பார்த்தால் அவை பூர்ஷ்வாக்களின் சர்வாதிகாரம். அதே போல பாட்டாளி வர்க்க அரசும் வடிவங்களில் மாறலாம். குணாம்சத்தில் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே’’.

மறுக்க முடியாத, ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விஞ்ஞான உண்மையின் படி நவீன உழைக்கும் வர்க்கம் சமூக விடுதலைக்கும் அரசியல் அதிகாரத்திற்குமான போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான அடக்குமுறைக்கருவியான பூர்ஷ்வா அரசோடு மோதுவது தவிர்க்க முடியாதது. எனவே மனித உறவுகளில் உள்ள எல்லாவிதமான வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் எப்படி பூர்ஷ்வா வன்முறையை எதிர்கொள்வது என்ற பிரச்சினை சோசலிசப் புரட்சியின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மார்க்சிய -_ லெனினிய லட்சியங்களுக்கு வன்முறை அந்நியமானது என்பதுதான் உண்மை. சமாதான மாற்றமே பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமானது என்பதால் சோசலிசப் புரட்சியில் முதலாளி வர்க்க வன்முறையைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முடிந்தால் தவிர்க்கவும் ஆன வழிமுறைகளை கண்டறிய மார்க்சிஸ _ லெனினிஸ தத்துவ ஸ்தாபகர்களும், தலைவர்களும், முன்னணி சிந்தனையாளர்களும் ஆர்வமாயிருந்தனர். நமது இந்தக் கூற்றை பலப்படுத்த தொழிலாளி வர்க்க சரித்திரத்திலிருந்து பல உதாரணங்களைக் கூறலாம்.

“எல்லாச் சூழ்நிலைகளிலும் எப்போதும் ஆயுதப் போராட்டமே கட்டாயத் தேவை’’ என்ற கோட்பாட்டை மார்க்சிச – லெனினிச, விஞ்ஞானத்திற்கு அந்நியமானது என்று நிராகரித்து அமைதி வழியில் மாற்றம் காண சரித்திரம் கொடுக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சர்வதேச பூர்ஷ்வாக்கள் எவ்வாறு மேலும் மேலும் படுபாதக வன்முறையில் இறங்குகிறார்கள் என்பதையும், அமைதியான மாற்றத்திற்கான வழியை அடைக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என லெனின் கூறினார். இது குறித்து 1916 அக்டோபரிலேயே லெனின் குறிப்பிடுகிறார்:  “தனியாக பிரத்யேகமாக விதிவிலக்காக அருகில் உள்ள பெரிய நாட்டில் புரட்சி நடந்து முடிந்த பின்னர் ஒரு சிறிய நாட்டில் எதிர்த்துப் பலன் இல்லை; தன்னைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற சூழ்நிலையில் பூர்ஷ்வா வர்க்கம் அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைத்தல் சாத்தியம் என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் அதைவிட வாய்ப்புள்ளது சிறிய நாடுகளில் கூட உள்நாட்டு யுத்தம் இல்லாமல் சோசலிசத்தை அடைய முடியாது என்பதுதான். அதன் காரணமாகவே வன்முறை நமது லட்சியங்களுக்கு அந்நியமானதாக இருந்தாலும் சர்வதேச சமூக ஜனநாயகத்தின் ஒரே திட்டமாக உள்நாட்டு யுத்தத்தை அங்கீகரிக்க வேண்டும். இது  தகுந்த மாற்றங்களுடன் நாடுகளுக்குப் பொருந்தும்.’’

மார்க்சிய – லெனினிசத்தின் இந்தப் போதனைகளுக்கு ஏற்பவும், லெனின் மேற்கண்டவாறு கூறியதற்குப் பின்னர், 50 ஆண்டு காலத்தில் உலகத்தில் வர்க்கச் சேர்க்கையின் பலாபலனில் ஏற்பட்டுள்ள புரட்சிகர மாறுதல்களை கணக்கில் எடுத்துக் கொண்டும் குறிப்பாக பாசிசத்திற்கு எதிரான போக்கில் சோசலிசம் வெற்றி கண்ட பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளை கணக்கில் எடுத்துக் கொண்டும் நமது கட்சி தன் திட்டத்தில் கூறுகிறது:

‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதையும், சோசலிசத்திற்கு மாறிச் செல்வதையும் அமைதியான முறையில் நிறைவேற்ற முயலும். சக்திமிக்க புரட்சிகரமான மக்கள் இயக்கத்தை வளர்ப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலுமான போராட்டங்களை இணைப்பதன் மூலமும் தொழிலாளி வர்க்கமும், அதன் நேச சக்திகளும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடித்து அமைதியான முறையில் இந்த மாற்றங்களை நிகழ்த்த இயன்றதனைத்தையும் செய்யும்.அதே நேரத்தில் ஆளும் வர்க்கங்கள் தானாகவே தங்கள் அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதையும் மக்களின் விருப்பங்களை மீறுவதற்கும் அவைகளை சட்டத்திற்குப் புறம்பாகவும் வன்முறை மூலமும் மாற்ற முயலுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கும் அதன் லட்சியமான சோசலிசத்திற்கும் ஆதாரவாக ஒவ்வொரு நாட்டிலும், சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலனில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும், பெருந்திரளான மக்கள் மத்தியில் சோசலிச கருத்துக்கள் மீது வளர்ந்து வரும் பிடிப்பு காரணமாகவும், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரால் வழி மொழிந்து வளர்க்கப்பட்டதும் பாட்டாளி வர்க்கத்தின் மீது பூர்ஷ்வாக்களால் திணிக்கப்பட்டதும் அனைத்து மார்க்சிச லெனினிசவாதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான வன்முறைப் புரட்சி என்ற பொதுவிதி காலாவதி ஆகி விட்டது. எனவே கைவிடப்பட வேண்டும் என நவீன திருத்தல்வாதிகள் கூறுகின்றனர். நாடாளுமன்றப் பாதையும், அமைதி மாற்ற விதியும் அதற்கு மாற்றாக கொள்ளப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். பாட்டாளி வர்க்கமும் பூர்ஷ்வாக்களும் கூட்டுத் தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகப் புரட்சியையும், தேசிய ஜனநாயக அரசையும் கொண்ட தேசிய ஜனநாயகத்தில் அரசால் அமைதியான சோசலிச மாற்றம் கொண்டு வர முடியும் என்ற கோட்பாட்டையும் கூட அவர்கள் முன் வைத்துள்ளனர். இப்படி அரசும் புரட்சியும், இன்றைய சகாப்தத்தில் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தலைமை ஆகியவை போன்ற மார்க்சிய லெனினிச கோட்பாடுகளையும், பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய சில அடிப்படை பிரச்சினைகளிலும் மார்க்சிச – லெனினிசத்தை திருத்த முயலுகின்றனர்.

அரசு அதிகாரம் தான் ஒவ்வொரு புரட்சியிலும் அடிப்படைப் பிரச்சினை என்ற நிர்ணயிப்பிலிருந்து துவங்குவதுதான் மார்க்சிச _- லெனினிச போதனைகள்.

அரசும் புரட்சியும் என்ற கோட்பாட்டை சந்தர்ப்பவாதமாகச் சிதைவு செய்வது பற்றி லெனின் கூறுகிறார்: “இங்கிலாந்து மூலதனம், ஜெர்மன் மூலதனம் இவற்றில் எது உலகை ஆள வேண்டும் என்ற பிரச்சினையில் கோடிக்கணக்கான மக்களை நாசமாக்கிக் கொண்டிருக்கும் அரக்கனாக, ஏகாதிபத்திய பகைமை காரணமாக விரிவாக்கப்பட்ட ராணுவக் கருவியாக அரசு உருவாகியுள்ள இந்த நேரத்தில் அரசுக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்சினைகளில் சிதைவு ஏற்படுத்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’’.

இந்தக் கருத்துக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கூறப்பட்டவை. இந்த இடைக்காலத்தில், “ஏகாதிபத்திய போட்டியின் காரணமாக’’ மட்டுமல்ல, சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஜீவமரண மோதல் காரணமாகவும் முதலாளித்துவ அரசுகள் ஆயிரம் மடங்கு அரக்கனாகவும் ராணுவக் கருவிகளாகவும் விரிவடைந்துள்ளன. சாராம்சத்தில் மக்களையும் பாட்டாளி வர்க்கத்தையும் அடக்குவதற்கான பிரத்தியேகமான வன்முறைக் கருவியாக உள்ள பூர்ஷ்வா அரசு பாட்டாளி வர்க்கத்தின் மிகச் சிறிய ஜனநாயக, வர்க்கப் போராட்டங்களைக் கூட ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு அடக்குமுறைக் கருவியாக வளர்ந்து விட்டது. புரட்சிகர கட்சிகளும் ஸ்தாபனங்களும் ஒவ்வொரு கட்டத்திலும் அரசுக் கருவியின் ராணுவத்தாலும் போலீசாலும் பயங்கர அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆளாகித் தான் தங்கள் செயல்பாடுகளை நடத்த வேண்டியுள்ளது. இது ஒரு விதிவிலக்கு என்பதல்ல. இதுவே தினசரி விதிமுறை ஆகிவிட்டது. இரண்டாவது உலகப் போருக்கு பிந்திய காலம் முழுவதும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகள் இதை உறுதிப்படுத்துகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் எந்தப் புரட்சியும் அமைதி வழியில் செல்ல பூர்ஷ்வாக்கள் அனுமதிக்கவில்லை. பல நாடுகளில் லட்சக்கணக்கான விடுதலை வீரர்களும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களும் பூர்ஷ்வா ராணுவத்தாலும் போலீசாராலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த உண்மைகளுக்கு முன்னால் எழும் முதல் கேள்வி, தேசிய விடுதலைப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் மாறிச் செல்லும் வழிமுறைகள் பற்றிய பிரச்சினைகளை ஏகபோக முதலாளித்துவ அரசுகளிடமிருந்து பிரித்துப் பார்க்க எந்த மார்க்சிச – லெனினிச வாதியும் அனுமதிக்கப்படலாமா என்பதுதான்.

நமது பதில் தெளிவானது, திட்டவட்டமானது. அதாவது அரசிலிருந்து பிரித்து புரட்சி பற்றி விவாதிப்பது மார்க்சியத்திற்கு புறம்பானது என்கிறோம். முதலாளித்துவ வர்க்கம் வன்முறையை ஏவிவிட்டு அதை எதிர்த்து வன்முறையை உபயோகிக்கும்படி தொழிலாளி வர்க்கத்தை, நிர்ப்பந்தம் செய்கிறது என்று மார்க்சிசம் _- லெனினிசம் முடிவுக்கு வந்துள்ளது. பொதுவாக அரசு பற்றியும் குறிப்பாக பூர்ஷ்வா அரசு பற்றியும் ஆழமாகவும், முழுமையாகவும் பரிசீலித்த பின்னர் இந்த முடிவுக்கு வருகிறது.

1870 இல் இந்தப் பொது விதியிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் மார்க்சும், ஏங்கெல்சும் விதிவிலக்கு அளித்தனர். அப்போது இந்த இரு நாடுகளிலும் ராணுவமயம் அதிக அளவில் நடக்கவில்லை. நிரந்தர ராணுவம் கட்டப்படவில்லை. தொழிலாளர்கள் தங்கள் சோசலிச லட்சியத்தை அமைதி வழியில் அடைய வாய்ப்பு இருந்தது. இந்த நிலைமைகளை ஸ்தூலமாக பரிசீலித்த பின்னரே அவர்கள் அந்த முடிவுக்கு வந்தனர்.

முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வளர்ந்ததை பரிசீலித்த பிறகு 1870_இல் மார்க்சும், ஏங்கெல்சும் அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் அளித்த விதிவிலக்கு இனிமேல் செல்லாது என லெனின் முடிவு செய்தார். இந்த முடிவும் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பெரும் விதத்தில் ராணுவ மயம் வளர்ந்து விட்ட ஸ்தூல நிலையை பரிசீலித்த அடிப்படையில்தான்.

அதே போல, 1917 ஏப்ரலுக்கும், ஜூலைக்கும் இடைக்காலத்தில் ஒரு விதி விலக்காக ரஷ்யாவில் அமைதி வழியில் புரட்சி நடக்கலாம் என லெனின் எதிர்பார்த்தார். அதுவும் அந்தக் கட்டத்தில் இருந்த அரசு _ புரட்சி பற்றிய ஸ்தூலமான பரிசீலனைக்குப் பிறகுதான். அப்போது மக்களிடம் ஆயுதங்கள் இருந்தன. பாட்டாளி வர்க்கம் மீது ராணுவ பலத்தை உபயோகிக்க முடியாத நிலையில் அரசு இருந்தது. ஆயுதமேந்திய தொழிலாளிகள், விவசாயிகள் சோவியத்துக்கள் முதலாளித்துவ இடைக்கால அரசு என புரட்சியின் வளர்ச்சிப் போக்கில் ‘இரட்டை அதிகாரம்’ பெற்றிருந்தது.

நவீன திருத்தல்வாதிகள் முன்வைத்துள்ள அமைதி மாற்றம் பற்றிய கோட்பாடு மார்க்சிச – லெனினிய தத்துவத்துடனோ அல்லது அரசையும் அதன் ராணுவ, போலீஸ் கருவியையும் ஸ்தூலமாக பரிசீலிக்கும் முறைகளுடனோ எந்த விதத்திலும் ஒத்துப் போகவில்லை. இந்த முற்றிலும் திருத்தல்வாத கோட்பாட்டை முன் வைத்திருப்பது பூர்ஷ்வாக்களுக்கும் அவர்களது ஜனநாயகத்திற்கும் சமாதானத்தை நேசிக்கும் குணங்களுக்கும் புகழுரை அளிப்பது தான். இது புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை தத்துவார்த்த ரீதியில் நிராயுதபாணியாக்கி நிலை குலையச் செய்வது தவிர வேறல்ல. இது அரசும் புரட்சியும் பற்றிய மார்க்சிச – லெனினிச போதனைகளுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம்.

முடிவாகக் கூறுவதானால், பாட்டாளி வர்க்கம், புரட்சி நடத்தி அதிகாரத்தை அடைய அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும் என்ற உண்மையை மறுக்கவில்லை. பாட்டாளி வர்க்க முன்னோடித் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின். எங்கெல்லாம் எப்போதெல்லாம் அமைதி வழியில் சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருந்தனவோ அங்கெல்லாம் அவற்றை தவறாது பயன்படுத்த முயன்றுள்ளார்கள்.

அவர்களுடைய போதனைகளாலும் நடைமுறைகளாலும் வழி நடத்தப்படும் நமது கட்சி. சரியாகவே நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது: “அமைதி வழியில் மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்கும் சோசலிச மாற்றத்திற்கும் முயலும்’’ அதே நேரத்தில் ஆளும் வர்க்கம். வன்முறை மூலம் ஒவ்வொரு கட்டத்திலும் இதை தடுக்க முயலும் என்பதை எந்த ஒருகணமும் மறவாமலும் அத்தகைய நிலையை சந்திக்க உஷார்த்தனத்துடனும் தயாரிப்புடனும் இருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகமும் முதலாளித்துவமற்ற பாதையும் என்ற கோட்பாடு

சோசலிசப் புரட்சிக்கு புதிய வடிவமாக நவீன திருத்தல்வாதிகளால் முன் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தேசிய ஜனநாயகம் _ முதலாளித்துவமற்ற பாதை போன்ற கோட்பாடு திருத்தல்வாதமும், தீர்மானமான வலது சந்தர்ப்பவாதமும் ஆகும்.  இது, சோஷலிச மாற்றம் நிகழ்த்த பாட்டாளி வர்க்கத் தலைமை வேண்டும் என்பதை மறுத்து பூர்ஷ்வாக்களுடன் இணைந்த கூட்டுத் தலைமையை முன் வைக்கிறது. பின்தங்கிய நாடுகள் முதலாளித்துவ உறவுக் கட்டத்தைத் தாவி சோசலிசத்திற்குச் செல்லும் வாய்ப்புக்கள் என்ற லெனினிய கோட்பாட்டை சிதைக்கிறது.

1920 மத்தியில் நடந்த மூன்றாவது அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் இந்தப் பிரச்சினை, முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் அக்டோபர் புரட்சிக்குப் பின்னரும் விடுதலை அடையும் பின் தங்கிய நாடுகள் சோசலிசத்தை அடைய முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டம் தவிர்க்க முடியாததா என்ற பிரச்சினை கவனமாக விவாதிக்கப்பட்டது. லெனின் இந்தக் கேள்விக்கு விடை அளித்தார். அதை மாநாடும் ஏற்றுக் கொண்டது. “முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் பின்தங்கிய நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு உதவ முடியும். உதவ வேண்டும். சோவியத் தொழிலாளி வர்க்கம் தங்களின் இன்றைய நிலையிலிருந்து வளர்ந்து முன்னேற முடியும்’’. “வெற்றி பெற்ற தொழிலாளி வர்க்கம் அவர்கள் மத்தியில் திட்டமிட்ட பிரச்சாரம் செய்ய வேண்டும். சோவியத் யூனியன் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும் போது சோசலிசத்தை அடைவதற்கு முன்பு முதலாளித்துவத்தை தவிர்ப்பது சாத்தியமாகும்’’ என்று கூறினார். அவர், தன் கோட்பாட்டைத் தொகுத்து கூறியதாவது: “பின்தங்கிய நாடுகள் முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியுடன் முதலாளித்துவக் கட்டத்தின் வழியே செல்லாமல் சோவியத் ஆட்சிமுறைக்கும் திட்டவட்டமான வளர்ச்சிக் கட்டங்கள் மூலம் கம்யூனிஸத்தையும் அடைய முடியும் இதை கம்யூனிஸ்ட் அகிலம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டி முன்னேறிச் செல்ல வேண்டும்’’. (தேசிய மற்றும் காலனி பிரச்சினை மீதான கமிஷன் அறிக்கை _- லெனின்).

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இந்தக் கோட்பாட்டை நவீன திருத்தல்வாதிகள் சிதைத்து கொச்சைப்படுத்தி ஏறத்தாழ அனைத்து புதிதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கும் இந்த முதலாளித்துவ மற்ற பாதை திறந்து விடப்பட்டிருப்பதாக வியாக்கியானம் செய்கின்றனர். “இந்த நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக’’ இந்த நாடுகளில் முதலாளித்துவத்தை வளர்க்க முதலாளித்துவவாதிகளுக்கு கொடுக்கப்படும் உதவியை முதலாளித்துவமற்ற பாதைக்கான சோவியத் உதவி என சித்தரிக்கின்றனர். பாட்டாளி வர்க்கத் தலைமையின் தேவையை வலியுறுத்துவதற்குப் பதிலாக அந்தக் கொள்கையில் சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவவாதிகளும், தொழிலாளர்களும் இணைந்த கூட்டுத் தலைமை என்ற சந்தர்ப்பவாத கொள்கையை முன் வைக்கின்றனர். சில சமயம் முதலாளித்துவத் தலைமை என்பதையும் கூட முன் வைக்கின்றனர். சுருக்கமாகச் சொல்வதானால் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்ல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை என்பதைக் கைவிட முயலுகின்றனர்.

நமது கட்சி, கட்சித் திட்டத்தில் விரிவாக்கப்பட்டிருப்பது போல் இந்தக் கோட்பாடு நமது நாட்டில் அமுலாவதை மிகச் சரியாகவே நிராகரித்தது. இந்த அபகீர்த்தியான கோட்பாடு உருவாக்கப்பட்ட இந்த பத்தாண்டுக் காலத்தில் உலகம் முழுவதும் கிடைத்துள்ள அனுபவங்களின் வெளிச்சத்தில் எவ்வித தயக்கமும் இன்றி இந்தக் கோட்பாடு முழுவதையும் அப்பட்டமான வலது சந்தர்ப்பவாதம், வர்க்க சமரசம் என நிராகரித்தது.

வர்க்க சமரசப் பாதைக்கு வழி வகுப்பவை மூன்று கருத்துக்கள்

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20_வது காங்கிரசில் குருஷ்சேவால் முன்மொழியப்பட்டு நவீன திருத்தல்வாதிகளால் விளக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமாதான – சகவாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதான மாற்றம் ஆகிய மூன்றும் தான் உலக அளவில் வர்க்க சமரசப் பாதையை முழுவதுமாக உருவாக்கிக் கொடுத்தது. இந்த திருத்தல்வாத கோட்பாடுகள் பொருளாதார அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் வளர்ந்து அசைக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாக வளர்ந்துள்ள முதல் சோசலி அரசிற்கு தலைமை தாங்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையால் முன் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்கும் நடத்தப்படும் உலக அளவிலான போராட்டங்களுக்கு இதன் விளைவுகள் பெரும் நாசம் ஏற்படுத்துகின்றன.

சோசலிசம், ஏகாதிபத்தியம் என்ற எதிர் எதிரான இரு சமூக அமைப்புகளுக்கும் இடையிலான போராட்டமே இந்தச் சகாப்தத்தின் முக்கிய உள்ளடக்கம் என்றும் இந்தக் கட்டத்தில் உலக பிற்போக்குவாதிகளின் தலைவனாக, பிரதான ஆக்கிரமிப்பாளனாக, சுரண்டல்காரனாக உலக மக்களின் பிரதான எதிரியாக அமெரிக்கா விளங்குகிறது என்றும் ஏற்றுக் கொள்கிற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டு அமெரிக்காவுடன் நல்லிணக்கத்தையும், அமைதியையும் எதிர்பார்க்கிறார்கள். உலக சமாதானத்தைப் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகள் சபையை நடத்தவும் அதை உண்மையில் மக்களின் நீதிமன்றமாக மாற்றவும், அணு ஆயுதங்களை ஒழிக்கும் போராட்டத்திலும் ஆயுதக் குறைப்பிற்கும், விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களிலும், பிரதேச யுத்தங்களைக் களையவும் பின் தங்கிய நாடுகளின் வறுமையையும் துன்பத்தை போக்குவதிலும் இப்படி பல்வேறு நடவடிக்கைகளில் அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் கூட்டையும் எதிர்பார்க்கிறார்கள். இரண்டு அமைப்பிற்கும் இடையிலான போராட்டத்தில் சமரசமற்ற பொருளாதார, அரசியல், தத்துவார்த்த, ராணுவப் போராட்டத்தை பிரதான வடிவமாகவும் உள்ளடக்கமாகவும் கொள்வதற்குப் பதிலாக திருத்தல்வாத சோவியத் தலைமை அமெரிக்காவுடன் விரிவான ஒத்துழைப்பிற்கான அம்சங்களை தேடிக் கொண்டிருக்கிறது. அடிப்படை அம்சங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒத்துழைப்பு, கூட்டு என்ற அம்சங்கள் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மார்க்சிச லெனினிசவாதிகளால் மட்டுமல்ல உலக அரசியலில் எந்த மாணவனும் இதைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு சோவியத் தலைமையின் இந்த திவாலாகிப் போன திருத்தல்வாதப் பாதை சென்றுள்ளது. இருபெரும் அரசுகளான சோவியத் யூனியன், அமெரிக்கா, ஆகிய இரண்டிற்கும் இடையில் மேலும் மேலும் ஒத்துழைப்பு சமரசம் என்ற பாதையாக உள்ளது. இந்தப் பாதை இன்றைய சர்வதேச நிலையை அப்படியே பாதுகாத்து மாறாத நிலையில் வைக்கவும் புரட்சிகர சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கைவிடவும் செய்கிறது. உலக சமாதானம், அணு யுத்தத்தை தடுத்தல் என்று என்னதான் சொல் அலங்காரம் செய்தாலும் இந்த லட்சியங்களுக்காகவே சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதான மாற்றம் என்று கூறினாலும் இது ஏகாதிபத்தியத்தை தாஜா செய்வதுதான் என்பதையும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதுதான் என்ற அசிங்கமான உண்மையை மறைக்க முடியாது.

என்றாலும்  சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையும் சோவியத் அரசும் கடைப்பிடிக்கும் இந்த சமரசவாதக் கொள்கைகளை நாம் விமர்சிப்பதால் சோவியத் யூனியன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேச சக்தியாக மாறி விட்டது என்றோ, உலக மேலாதிக்கம் பெறுவதற்காகவும், உலக செல்வாக்கை பங்கிட்டுக் கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வேலை செய்வதாகவோ ஒரு முற்றிலும் தவறான கருத்துக்கு இடம் தரக் கூடாது. அப்படிக் கருதுவது சோவியத் யூனியனை சோசலிச முகாமிற்கு வெளியில் வைப்பது என்பதைத் தவிர வேறில்லை.

சோவியத் தலைவர்கள் கடைப்பிடிக்கும் வலது சந்தர்ப்பவாதப் பாதையின் மொத்த விளைவு என்னவென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு, விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன. சமாதான சகவாழ்வு, உலக சமாதானம் ஆகியவற்றிற்கு எதிரான எகாதிபத்திய அச்சுறுத்தல் தினமும் வளர்ந்து வருகிறது. சமாதானம், ஜனநாயகம், விடுதலை மற்றும் சோசலிசத்திற்கான மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகர போராட்டம் சீர்குலைக்கப்பட்டு சிதறுகிறது என்பதாகும்.

வர்க்கப் போராட்டத்திற்கு மாற்றாக வர்க்க சமரசத்தை முன் வைக்கும் இந்தத் திருத்தல்வாதக் கொள்கையை நாசகரமானது என முற்றாக நிராகரிப்பது மார்க்சிச – லெனினிசம் மற்றும் சோசலிசத்தையும், நிரந்தர உலக அமைதியையும் பாதுகாக்கும் உலகப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தேவையாகும்.

மார்க்சிச – லெனினிசத்தை பாதுகாப்பதிலும் நவீன திருத்தல்வாதத்தை எதிர்ப்பதிலுமான இந்தப் போராட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு மாபெரும் சேவை செய்துள்ளதை குறிப்பிட்டாக வேண்டும். குருஷ்சேவினால் வழி நடத்தப்பட்டு தற்போதைய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையினால் பின்பற்றப்படும் நவீன திருத்தல்வாதம் உலக தொழிலாளி வர்க்கத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெரும் தீங்கு புரிந்துள்ளது.

இவையெல்லாம் இருந்த போதிலும் மார்க்சிச – லெனினிச சக்திகள் வெல்லும். நவீன திருத்தல்வாதிகளால் சரித்திர நிகழ்ச்சிப் போக்குகளை மாற்ற இயலாது. புதிய சகாப்தத்தின் பாதிப்பும் சக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றமும் தேசிய விடுதலைக்கும், மக்கள் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்கான போராட்டமும் மேலும் வளர்ந்து ஒன்றிணைந்து முன்னேறி உலக பாட்டாளி வர்க்கப் புரட்சியை படிப்படியாக வெற்றிக்கு எடுத்து செல்லும்.

சோவியத் யூனியனில் அனைத்து மக்களின் கட்சி அனைத்து மக்களின் அரசு என்பன குறித்து

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது காங்கிரஸ் சோவியத் யூனியனில் சோசலிசம் முழுமையாகவும், இறுதியாகவும் வென்றுவிட்டது என்ற கருத்தின் அடிப்படையில் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்பட்ட சூழ்நிலை சோவியத் யூனியனில் மறைந்து விட்டது, அதன் உள்நாட்டுத் தேவை முழுவதும் நிறைவேறி விட்டது என்ற முடிவுக்கு வந்தது. எனவே சோவியத் யூனியனின் தொழிலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்க சர்வாதிகார அரசை அனைத்து மக்களின் அரசாக மாற்றி விட்டது என்று அறிவிக்கத் தொடங்கியது.

இந்த முடிவு சம்பந்தமான முழுப்பார்வை, இந்தக் கோட்பாட்டை விவரிக்க உபயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள், இந்தக் கோட்பாட்டின் உள்ளடக்கமாக அமைந்துள்ள சர்வதேசப் பின்னணியில் சோவியத் சமூகம் பற்றிய வர்க்கமற்ற, மார்க்சிசத்திற்கு புறம்பான பரிசீலனை ஆகிய அனைத்தும் மார்க்சிச – லெனினிசத்துடன் எந்த விதத்திலும் பொருந்தாது என்பதை முதலிலேயே தெளிவாக்கிவிட வேண்டும்.

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இந்தக் கோட்பாடு முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் சரித்திர காலம் முழுவதற்குமாக உருவாக்கப்பட்டது. ஏனென்றால் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பூர்ஷ்வா வர்க்கத்தை முற்றிலும் அழிப்பது வரையிலான காலம் முழுவதும் “எப்போதும் கண்டிராத கடுமையான வடிவத்தில் இதுவரை கண்டிராத அளவு வன்முறையிலான வர்க்கப் போராட்டம் நடைபெறும் காலமாகும்’’. லெனின் கூறுவது போல், “தொழிலாளி வர்க்க சர்வாதிகார காலத்தில் வர்க்கங்கள் இருக்கின்றன. அவை தொடர்ந்து இருக்கும். வர்க்கங்கள் மறையும் போது சர்வாதிகாரம் தேவையற்றதாக மாறிவிடும்’’.

மார்க்சிச லெனினிசத்தின் எந்த ஒரு மாணவனும் இந்த விஞ்ஞான தத்துவத்தை உருவாக்கியவர்கள் “மக்கள் அரசு’’ என்ற வார்த்தையை எவ்வளவு அருவருப்புடன் நிராகரித்தனர் என்பதையும் எந்த ஒரு அரசும் வர்க்க அரசுதான், வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட அரசு இல்லை. இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியதை அறிவார். இருந்தாலும் சோவியத் தலைவர்கள் மக்கள் அரசு என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதே போன்று தொழிலாளி வர்க்க அரசை “அனைத்து மக்களின் அரசாக’’ மாற்றி உள்ளதாகவும் சோவியத் தலைவர்கள் கூறுகின்றனர். தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் கட்டும் வளர்ச்சிப் போக்கில் பாட்டாளி வர்க்க அரசு “மறைந்து விடும்’’ என்றுதான் மார்க்சிசம் – லெனினியம் பேசுகிறதே தவிர அது பல்வேறு கட்டங்களாக ‘மாறுதல்’ அடையும் கட்சி என்றுக் காங்கிரஸ் மேடைகளில் அறிவிப்பு செய்வது பற்றிக் கூறவில்லை.

பாட்டாளி வர்க்க அரசு எப்போது மறையத் தொடங்குகிறது? எல்லோரும் சமூக உற்பத்தியை நிர்வகிக்க கற்றுக் கொண்டு அதை சுயேச்சையாகச் செய்யும் போது தாமாகவே கணக்கு வைத்து கொள்ளும் போது முதலாளித்துவப் பாரம்பரியத்தின் பாதுகாவலர்களான ஏமாற்றுக்காரர்கள், சோம்பேறிகள் ஆகியோரை கண்காணித்து கட்டுப்படுத்தும் போது, இந்தச் சமூகக் கண்காணிப்பிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபடுவது நம்ப முடியாத அளவுக்கு இக்கட்டானதாக மாறும்.  அப்போது, அப்படி விதிவிலக்காக நடந்தாலும் உடனடியாகக் கடும் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இதனால், மனித உறவின் சாதாரண மற்றும் அடிப்படை விதிகளை பின்பற்றும் தேவை விரைவில் ஒரு பழக்கமாக மாறிடும். “அந்த நிலையில் கம்யூனிசத்தில் முதல் கட்டத்திலிருந்து அதன் உயர்ந்த வடிவத்திற்கு மாறிச் செல்வதற்கான கதவு அகலத் திறந்து வைக்கப்படுகிறது. அத்துடன் அரசு முற்றிலும் மறைகிறது’’.

அத்தகைய வளர்ச்சிக் கட்டத்தை சோவியத் சமூகம் அடைந்து விட்டது என்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் துணிச்சலுடன் கூற முடியுமா? எப்படிப் பார்த்தாலும் சோவியத் யூனியனில் உள்ள நிலைமை பற்றி நாம் படிக்கும் அறிக்கைகளும் அங்குள்ள நிலைமை பற்றி நாம் புரிந்து கொண்டவைகளும் அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சிக் கட்டம் ஏற்பட்டுவிட்டதாக நாம் நம்பும்படி இல்லை. அதற்கு வெகுதூரம் உள்ளது.

அவர்களே “அரசின் உதவியுடன் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய கடமைகள் இன்னும் பூர்த்தி ஆகாமல் இருப்பதால் இன்றைய ‘மக்கள் அரசு’ எனப்படும் அரசை தக்க வைத்துள்ளோம்’’ என கூறும் போது இந்தப் புதிய கோட்பாட்டினை முன் வைத்தவர்களின் வெற்றுத்தனம் வெளிப்படுகிறது. சில சமூகக் கடமைகளை நிறைவேற்ற அரசைத் தக்க வைக்க வேண்டும் என்று கோருவதும் அதே மூச்சில் அந்தக் கடமைகள் வர்க்கமற்ற கடமைகள் என்பதும் வெறும் வார்த்தை ஜாலம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உள்நாட்டுத் தேவை பூர்த்தியாகிவிட்டதால் அந்த அரசு கலைக்கப்பட்டுமுதலாளித்துவ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பு என்ற வெளிநாட்டுக் கடமையை நிறைவேற்ற அனைத்து மக்களின் அரசு கோரப்படுகிறது என்று திருத்தல்வாதிகள் கூறுகின்றனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் உள்நாட்டுக் கடமைகள் முற்றிலும் நிறைவேறி விட்டன என்று கூறவது கூட தவறு. உலகப் புரட்சியை பாதுகாத்து நிறைவேற்ற சர்வதேச பூர்ஷ்வாக்களை எதிர்த்துப் போராடும் கடமையைத் தவிர வேறு வெளிநாட்டுக் கடமை என்ன இருக்கிறது என்று நாம் கேட்க விரும்புகிறோம். பாட்டாளி வர்க்கத்தால் மட்டும் முடிந்த இந்த சர்வதேசக் கடமையை அனைத்து மக்களின் அரசு எவ்வாறு செய்ய இயலும்?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டையும் அதன் கடமைகளையும் தேசியம், சர்வதேசியம் என்று யாந்திரீகமாக பிரித்து இரண்டிற்கும் நடுவில் ஒரு சீனச் சுவரை எழுப்பி அது “உலக சோசலிசப் படையின் ஒரு பிரிவு’’ என்ற புரட்சிகர வியாக்கியானத்தை மறுத்து முற்றிலும் தேசிய வட்டத்திற்குள் குறுக்கி நிறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். அப்படிச் செய்வது மார்க்சிச லெனினிசத்திலிருந்தும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்திலிருந்தும் விலகிச் செல்வதாகும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அனைத்து மக்களின் அரசாக மாற்றுதல் பற்றிப் பேசுவது அல்லது பாட்டாளி வர்க்க அரசை ஒழிப்பது மார்க்சிச லெனினிசத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் செய்யும் துரோகமாகும். “சமுதாயம் முழுவதும் வேலைச் சமத்துவம், ஊதியச் சமத்துவம் கொண்ட ஒரே அலுவலகமாக அல்லது தொழிற்சாலையாக மாறாத வரை’’ கருத்து உழைப்பிற்கும் கரத்தாலான உழைப்பிற்கும் வேறுபாடு மறையாத வரை, ஆலை உழைப்பாளிகளுக்கும் பண்ணை விவசாயிக்கும் வேலை நிலைமையில் உள்ள வேறுபாடு மறையாத வரை, பாட்டாளி வர்க்க புரட்சியின் உலக வெற்றி உறுதி பெறாத வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடும் பிரச்சினை எழ முடியாது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை அனைத்து மக்களின் கட்சி என்று வர்ணிக்கும் கோட்பாடு அனைத்து மக்களின் அரசு என்ற வர்க்கமற்ற திருத்தல்வாத கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதுதான். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் ஸ்தாபனமான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சரித்திரக் கட்டம் முழுவதற்கும் அத்தியாவசியமான தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துவது தேவையில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்ட அனைத்து முதலாளித்துவ வர்க்க விரோதிகளுக்கு எதிரான போராட்டத்தையும் தொடர வேண்டும்.  முழு சமுதாயத்தையும் மறு நிர்மாணம் செய்ய வேண்டும். முதலாளித்துவத்தின் மிச்சசொச்சங்களைக் களைய வேண்டும். இவை அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை இல்லாமல் நிறைவேற்ற முடியாது. வர்க்கக் கட்சியை கலைத்து வர்க்கமற்ற தெளிவான உருவமற்ற “அனைத்து மக்களின் கட்சியை’’ உருவாக்கவும் அனுமதிக்கவும் முடியாது. ஆனால் சோவியத் கட்சி தலைமை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை கைவிட்டது போல இந்த மார்க்சிய லெனினிய கோட்பாட்டையும் கைவிட்டு விட்டது.

சோவியத் யூனியனில் ஊக்கத்தொகை

ஊக்கத்தொகைப் பிரச்சினையிலும் சோசலிச அரசில் அதன் அர்த்தம் பற்றியும் கடும் சர்ச்சை உள்ளது. சிலர் சிதைத்துக் கூறுவது போல் “பொருளாதார ஊக்கத்தொகைக்கும் ஆன்மீக ஊக்குவிப்புக்கும்’’ இடையிலான பிரச்சினையோ அல்லது சோசலிச மற்றும் கம்யூனிச நிர்மாணத்தில் பொருளாதார ஊக்கத்தொகைக்கு இடம் உண்டா இல்லையா என்ற பிரச்சினையோ அல்ல. ஐம்பது ஆண்டு சோசலிச நிர்மாணத்திற்குப் பிறகு கம்யூனிசத்தை நிர்மாணிக்கும் கட்டத்தில் உழைப்புக்கு, ஊக்கத் தொகைக்கு முக்கியத்துவமும், வலியுறுத்தலும் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதும் சோவியத் பிரஜைகளிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய சோசலிச _ கம்யூனிச உணர்வு மட்டத்தோடு இது பொருந்தி உள்ளதா என்பதும்தான் உண்மையான பிரச்சினை.

உண்மையான கம்யூனிச வேலையின் தன்மை பற்றி லெனின் குறிப்பிட்ட ஆழமான கருத்துக்களை நமது நினைவுக்கு கொண்டு வருவது நல்லது. அவர் கூறுகிறார்: “அனைத்து உழைக்கும் மக்களின் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் ஊதியமின்றி உழைக்கத் தயார் என்பதை முதலில் காட்ட வேண்டும்’’. “பொது நன்மைக்காக தனிநபர் உழைப்பை அதிக அளவில் ஒன்றுபடுத்துதலே கம்யூனிச உணர்வு’’ என்று வகைப்படுத்தி அவர் கூறுகிறார். தனக்கோ அல்லது தனது ‘நெருங்கிய’ உறவினருக்கோ அல்லாமல் தனது தூரத்து  உறவினர்களான சமுதாயம் முழுமைக்கும் முதலில் ஒரு சோசலிஸ்ட் அரசாகவும், பின்னர் சோவியத் குடியரசுகளின் யூனியனாகவும் ஒன்றுபட்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் சமுதாயம் முழுமைக்கும் பயன்படும் பொருள் உற்பத்தியில் கீழ்மட்டத் தொழிலாளர்கள் உற்சாகம் காட்டும் பொழுது கம்யூனிசம் தொடங்குகிறது.

ஆனால் ஊக்கத் தொகை என்ற இந்தப் பிரச்சினையில் சோவியத் தலைவர்களின் முயற்சி லெனின் கூறியிருப்பதற்குப் புறம்பாக முதலாளித்துவ அடிப்படையிலான தனிநபர் லாபம், தனிநபர் நலன் சுய நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப உழைக்கும் வர்க்க உணர்வு மட்டத்தை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லாதா என்ற நியாயமான கேள்வியை எழுப்புகிறது. சித்தாந்த அடிப்படையில் பேசினால் ஒன்று, பாட்டாளி வர்க்க கம்யூனிச சிந்தனையும் உணர்வும் மென்மேலும் வளர்ந்து அது பூர்ஷ்வா கருத்துக்களையும், பழக்கங்களையும் உணர்வுகளையும் முறியடித்து அகற்றுகிறது. இல்லாவிட்டால் பின்னால் சொல்லப்பட்டவை வளர்ந்து முன்னால் சொல்லப்பட்டவை மீது தாக்குதல் தொடுத்து அதன் வளர்ச்சியைத் தடுத்துவிடும். முடிவாகப் பார்த்தால் முதலாளித்துவ ஊக்கத் தொகையும் தனி நபர் லாபக் கருத்தும் ஒரு புதிய வகை முதலாளித்துவத்தை உருவாக்கி சோசலிச கம்யூனிச லட்சியங்களுக்கு நாசம் விளைவிக்க வழி வகுக்கிறது. முழு அளவில் கம்யூனிசத்தைக் கட்டுவதாக கூறிக்கொள்ளும் கட்டத்தில் ஒரு சோசலிச சமூகத்தில் ஊக்கத் தொகைக்குத் தேவையற்ற ஒரு முக்கியத்துவத்தை அளிப்பது மேலும் அபாயம் ஆகும்.

ஸ்டாலினும் தனிநபர் வழிபாடும்

ஸ்டாலினைப் பற்றி மதிப்பீடு செய்வதும் சோசலிச கம்யூனிச தத்துவம் மற்றும் நடைமுறைக்கு அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு, அவரது பாத்திரம், அவரது குறை, நிறை, வெற்றி, தோல்வி ஆகியவை பற்றி மதிப்பீடு செய்வது இப்போது நமது முயற்சி இல்லை. மேலும், லெனின் இறந்த பிறகு முப்பதாண்டு காலம் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராகவும் முதல் சோசலிச அரசின் தலைவராகவும் விளங்கிய அவர் தவறுகள் செய்யவில்லை என்று கூறவும்இல்லை. தனது கடந்தகால வேலைகளைச் சுய விமர்சனத்தோடு பரிசீலித்து உலகக் கம்யூனிஸ்ட் இயக்கக் கடமைகளையும் சோவியத் யூனியனில் சோசலிசத்தை கட்டும் பணியில் நேர்ந்த குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்திக் கொள்ள சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு உரிமை உண்டு. ஆனால் 20_வது கட்சிக் காங்கிரஸில் குருஷ்சேவ் முன் வைத்த ஸ்டாலின் பற்றிய ரகசிய அறிக்கையிலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் இதற்கு முற்றிலும் மாறுபட்டவைகளே நடந்தன. இந்த அறிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மிகவும் உற்சாகத்துடன் கைப்பற்றப்பட்டு பல்வேறு கம்யூனிச எதிர்ப்பு சக்திகளால் உலகம் முழுவதும் சுற்றுக்கு விடப்பட்ட உண்மையும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஒரு புறம் சம்பிரதாயமாக இந்த அறிக்கை அதிகாரபூர்வமற்றது என மறுத்துக் கொண்டே மறுபுறம் அந்த அறிக்கையின் சாராம்சத்தின் பகுதிகளை துண்டு துண்டான எழுத்துக்கள் மூலமும் பேச்சுக்கள் மூலமும் சோவியத் பத்திரிகைகளில் வெளியிட்டதும் அதன் உள்ளடக்கத்தை ஊர்ஜிதம் செய்தன. 20_வது கட்சிக் காங்கிரஸ் முடிந்து பத்தாண்டு காலம் ஆன பின்பும் அந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாததும், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல கம்யூனிஸ்ட்டுகளின் கையில் ஒரு கருவியாக பயன்படுவதற்குப் பதிலாக ஸ்டாலின் பற்றிய இந்த இரகசிய அறிக்கை மார்க்சிச லெனினிசத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து கம்யூனிசத்தின் புகழைக் குறைப்பதற்கு கம்யூனிச விரோதிகளின் கையில் ஒரு கருவியாகவே பயன்பட்டது என்ற உண்மை ஆகிய அனைத்தும் குருஷ்சேவின் அபகீர்த்தி வாய்ந்த இந்த அறிக்கைக்கு எதிராக அதிகம் பேசுகின்றன. ஸ்டாலின் பற்றிய இந்த பிரச்சினை முழுவதும் சோவியத் யூனியனுடன் மட்டுமே தொடர்புடைய சோவியத் கட்சியின் தனி விவகாரம் போலவும் ஸ்டாலின் என்ற தனி மனிதரின் குறைகள் நிறைகள் பற்றியதாக மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. லெனின் மறைவுக்குப் பின்பு பல பத்தாண்டு காலம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் அகிலம் ஆகியவற்றின் சார்பில் பேசும் பிரதிநிதியாகவும் மார்க்சிச- லெனினிசத்தை வலது _ இடது சந்தர்ப்பவாத போக்குகளிலிருந்து பாதுகாக்கவும், சோவியத் யூனியனில் சோசலிசத்தை கட்டி அதனை உலகின் வல்லமை மிக்க சக்தியாக மாற்றுவதில் தலைமை தாங்கவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாசிச எதிர்ப்புலீபீ போரை வெற்றிக்கு நடத்திச் செல்லவும், போரால் நாசம் செய்யப்பட்ட சோவியத் பொருளாதாரத்தை புனர் நிர்மாணம் செய்து தொழில் வளர்ச்சியைலீபீ பெருக்கவும், உலக சோசலிச முகாமை உருவாக்கி செயல்பட வைப்பதில் தலைமை தாங்கவும் அவர் விதிக்கப்பட்டிருந்தார் என்ற மிகப்பெரிய சரித்திர உண்மைகளை எளிதில் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாக தன்னுணர்வின் அடிப்படையில் ஒரு மதிப்பீடு செய்யப்பட்டது. கூர்மையாக சொல்வதானால் முப்பதாண்டு கால உலக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஒரு வகையில் உலக வரலாற்றைளீபீ கூறும் பக்கங்களை வேண்டுமென்றே கிழித்து எறியும் முயற்சிதான் இது. குருஷ்சேவின் ரகசிய அறிக்கையை மாற்றாக வைத்து இவ்வரலாற்றுப் பகுதியை நிறைவு செய்துவிட முடியாது. லெனினுக்குப் பிறகு 30 ஆண்டு காலம் லெனினிசத்தின் உறுதியான பாதுகாவலராக விளங்கியவரை இழிவுபடுத்திவிட்டு, ஏறத்தாழ ஒரு பதவி வெறிபிடித்த பைத்தியக்காரனாக சித்தரித்துவிட்டு ஒளிவிளக்கான லெனினிசத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் வெற்றிபெற முடியாது. குருஷ்சேவ் எடுத்துக் கொண்ட இந்த பயனற்ற வேலை சில நாசகார விளைவுகளை ஏற்படுத்தியது. தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பதன் பேரால் புரட்சி இயக்கத்தில் அதிகாரத்திலுள்ளவர்களையும் அவர்களின் பங்கையும் குறைகூறும் அராஜகப் போக்கு தாராளமாக வளர்க்கப்பட்டது.

ஸ்டாலின் பற்றிய இந்த அறிக்கை. எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றோ உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றியோ எந்த அக்கறையும் காட்டவில்லை. இது பற்றி இதர சகோதர கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முன்னதாக விவாதிக்கவும் அக்கறை செலுத்தவில்லை. ஏகாதிபத்தியவாதிகள் பிரச்சாரம் செய்ய இவர்கள் விஷயதானம் செய்தார்கள்.

நவீன திருத்தல்வாதிகள் ஸ்டாலினை முற்றிலும் மறுப்பது  என்பது ஏகாதிபத்தியம், யுத்தம் சமாதானம், தொழிலாளி வர்க்கத் தலைமை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், காலனி சார்பு நாடுகளின் புரட்சிக்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை யுத்த தந்திரம், கம்யூனிஸ்ட் கட்சியின் தன்மை, அதன் பாத்திரம் போன்ற பல்வேறு மார்க்சிச லெனினிச கோட்பாடுகள் மீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

நவீன திருத்தல்வாதிகளின் இந்த எல்லா முயற்சிகளும், இருந்த போதும் மார்க்சிச லெனினிச தத்துவத்திலிருந்து ஸ்டாலின் பெயர் பிரிக்க முடியாததாக தொடர்ந்து இருக்கும்.

யூகோஸ்லோவியா திருத்தல்வாதம்

1958ல் யூகோஸ்லோவியா திருத்தல்வாதிகள் தங்கள் முழுமையான திருத்தல்வாத திட்டத்தை முன் வைத்தபோது உலக கம்யூனிஸ்ட் இயக்கம் அவர்களின் மார்க்சிச – லெனினிச எதிர்ப்புக் கருத்துக்களுக்காக முழுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது. அவர்கள் 1957 மாஸ்கோ பிரகடனத்தை ஏற்க மறுத்துவிட்டனர். எண்பத்தி ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் கட்சிகளும் 1960_இல் மாஸ்கோவில் நடத்திய மாநாட்டில் இந்தச் சூழ்நிலை பற்றி விவாதித்து தங்கள் பிரகடனத்தில் கூறியுள்ளவற்றை மீண்டும் வலியுறுத்தியதுடன் யூகோஸ்லாவிய திருத்தல்வாதம் பற்றி கீழ்க்கண்ட வரிகளில் கண்டனம் செய்தது:

“யூகோஸ்லேவியா சர்வதேச சந்தர்ப்பவாதம் _ நவீன திருத்தல்வாத கோட்பாடுகளின் வீரியம்மிக்க ஒரு வடிவம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏகமனதாக கண்டனம் செய்கின்றன. மார்க்சிசம் – லெனினிசம் காலாவதியாகி விட்டது எனக்கூறியதன் மூலம் அதற்கு துரோகம் செய்துவிட்டு 1957 பிரகடனத்திற்கு எதிராக யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் லெனினிச எதிர்ப்பு திருத்தல்வாத திட்டத்தை முன் வைத்தனர். உலக கம்யூனிஸ்ட் இயக்கம் முழுவதற்கும் எதிராக யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுத்தினர். சோசலிச முகாமிலிருந்து துண்டித்துக் கொண்டனர்: அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் சர்ச்சையாக நிற்பதாக அறிவித்து யுகோஸ்லாவிய மக்கள் வீர மிக்க போராட்டங்கள் மூலம் பெற்ற புரட்சிகர வெற்றிகளை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். சோசலிச முகாமிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் எதிராக தங்கள் சதிவேலையைத் தொடருகின்றனர். ‘புதிய அணிக் கொள்கை’ என்ற பெயரில் சமாதானத்தை விரும்பும் அனைத்து சக்திகளின் அனைத்து நாடுகளின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யூகோஸ்லேவிய திருத்தல்வாத தலைவர்களை மேலும் அம்பலப்படுத்துவதும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் லெனினிய எதிர்ப்பு கொண்ட யுகோஸ்லேவிய திருத்தல்வாதக் கருத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்துவதும் மார்க்சிச – லெனினிச கட்சிகளின் முக்கிய கடமையாக இருக்கிறது’’.

என்றாலும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள்ளாகவே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாத தலைமை இதிலிருந்து பின்வாங்கி யுகோஸ்லேவியாவை ஒரு சோசலிச அரசு என்று அங்கீகரித்து யுகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கட்சிக்குக் -கட்சிஉறவை ஏற்படுத்தியது. இது, சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலையிலிருந்து சோவியத் தலைமை பின் வாங்கியது என்பதைத் தவிர வேறில்லை.

செயல் ஒற்றுமைக் கோஷம்

இன்று நிலவும் புறச் சூழ்நிலையில் இருந்துதான் செயல் ஒற்றுமைக் கோஷம் பிறந்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தலைமை தாங்கப்படும் ஏகாதிபத்திய வாதிகளையும் பிற்போக்காளர்களையும் எதிர்க்க சோசலிச முகாமையும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையும் மையமாகக் கொண்டு ஒரு விரிவான ஐக்கிய முன்னணியை கட்டுதல் என்ற சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுவான பாதையிலிருந்துதான் இந்தக் கோஷம் எழுந்துள்ளது. மக்களை விழிப்புறச் செய்து புரட்சிகர சக்திகளை வளர்த்து நடுநிலை சக்திகளை வென்றெடுத்து, பிற்போக்கு சக்திளை தனிமைப்படுத்தும் பாதையிலிருந்துதான் இந்தக் கோஷம் பிறந்துள்ளது.

வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கையைச் சோவியத் தலைமை மறுக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தன்னுடைய ஈடுபாடுகளிலிருந்து விடுவித்துக் கொள்வது பற்றிக் கூட பேசி வருகிறது. உலக முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட்களும் புரட்சியாளர்களும் ஒன்றுபட்ட நடவடிக்கையையும் வியட்நாம் பாதுகாப்பையும் கோருகின்றனர்.

வியட்நாம் விடுதலை இயக்கம் முன்னேறி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முற்போக்கு மனிதகுலம் அணி திரளும் மையமாக மாறியபோது திருத்தல்வாத சோவியத் தலைமையே ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையிலிருந்து தனிமைப்படும் அபாயத்தை தவிர்க்கும் சாகசமாக செயல் ஒற்றுமைக் கோஷத்தை வைக்க முன் வந்தது.

தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்வதானால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்,அரசாங்க தலைவர்களுக்கும் சோவியத் தலைவர்கள் விடுத்த அறைகூவல் ஆகும் இது. தங்களுக்கிடையில் பல தத்துவார்த்த அரசியல் பிரச்சினைகளில் கூர்மையான பிளவு இருந்தாலும் இரு பெரும் சோசலிச நாடுகளான சோவியத் யூனியனும், சீன மக்கள் குடியரசும், வியட்னாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்க்கண்ட காரணங்களுக்காக இதை நிராகரித்தது. “(அ) வியட்நாமில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு பற்றி தற்போதும், கடந்த பல வருடங்களாகவும் சோவியத் தலைவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருக்கிறது. (ஆ) வியட்நாம் மக்களின் தேசிய விடுதலைப் புரட்சிக்குத் துரோகம் செய்து அவமானகரமான ஒரு சமாதானத்தை திணிக்க சோவியத் தலைமை சதி செய்கிறது. (இ) சோவியத் யூனியன் அளித்துள்ள உதவி அடையாளப்பூர்வமாக உள்ளது. சோவியத் அரசின் சக்திக்கு ஏற்றதாக இல்லை. (ஈ) இன்றைய உலக நிலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உறவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை வைத்தே ஒரு அரசியல் சக்தி அமெரிக்க எதிர்ப்பு ஐக்கிய முன்னணியில் சேர்க்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்’’. “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர்கள் சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கான அடிப்படையை அழித்துவிட்டார்கள். எதிரிகளையும், நண்பர்களையும் இடம் மாற்றிவிட்டார்கள்; உலக ஆதிக்கத்திற்காக சோவியத் – அமெரிக்க ஒத்துழைப்புப் பாதையை வலியுறுத்துகிறார்கள்’’. எனவே “வியட்நாம் பிரச்சினையில் மார்க்சிச – லெனினிச கட்சிகள் இவர்களுடன் கூட்டு நடவடிக்கை’’ எடுப்பது முடியாது. “எதிரிகளுடனும், நண்பர்களுடனும் நமது உறவு பற்றிய பிரச்சினையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒன்றுபடுவதா அல்லது எதிர்ப்பதா என்பதில் எங்களை ஒன்றுபடுத்தும் விஷயம் ஏதும் இல்லை. வேறுபடுத்தும் விஷயங்கள் இருக்கின்றன. பொதுத்தன்மை ஏதும் இல்லை. எங்களுக்குள் பகைமை முரண்பாடுகள் உள்ளன. எங்களுக்கிடையில் உள்ள முரண்பாடு பகை முரண்பாடு. எனவே அவர்களுடன் செயலொற்றுமை நிராகரிக்கப்படுகிறது.’’

ஒன்றுபட்ட நடவடிக்கை என்ற இந்தப் பிரச்சினையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள நிலைபாடு சரியா அல்லது தவறா என்பது பற்றிய சர்ச்சை உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கடுமையாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் வியட்நாம் புரட்சி யுத்தத்தின் வளர்ச்சிப் போக்குகளைக் கவனமுடன் பரிசீலித்தால் ஓர் உண்மை தெளிவாகும். சோவியத் யூனியனின் பங்கும் அதன் அணுகுமுறையும் உண்மையில் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ஒரு வலிமைமிக்க சோசலிச நாட்டிடம் நியாயமாக எதிர்பார்க்கும் அளவுக்கு அவை இல்லை. நீண்டகாலம் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான தெளிவான கண்டனமும் இல்லை. சரியான நேரத்தில் பயனுள்ள தலையீடும் இல்லை. ஒரு கட்டத்தில் 1954 ஜெனீவா ஒப்பந்தத் தலைமைப் பொறுப்பிலிருந்து சோவியத் யூனியன் விலகுவதாகவும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து விடுபடுவதாகவும் குருஷ்சேவ் அறிவிக்கும் அளவிற்குச் சென்றது. இதன் மூலம் எவ்வித தண்டனையும் இன்றி வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை அமெரிக்கா தொடர ஊக்குவிக்கப்பட்டது. தென்வியட்நாம் தேசிய விடுதலை முன்னணியின் ஐந்து அம்ச திட்டம் ஏற்கப்பட்ட பிறகும், சோவியத் யூனியனுக்கும் வட வியட்நாம் அரசுக்கும் இடையில் அதிக உதவிக்கான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் ஒருவகையான ‘மதில் மேல் பூனை’க் கொள்கை தொடர்ந்தது. சோவியத் அரசுத் தலைவர்களின் அறிக்கைகளும், அளித்த உதவிகளும் அவர்கள் முன் நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவோ, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவோ இல்லை. வியட்நாம் ஜனநாயகக் குடியரசுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்திருக்கும் இந்த யுத்தத்தின் முழு வளர்ச்சிப் போக்குகளையும் பரிசீலித்தால் கீழ்க்கண்ட முடிவுகளுக்குக் கட்டாயம் வர வேண்டும்; சோவியத் அரசு “ஸ்தல யுத்தங்கள் உலக யுத்தமாகும் அபாயம்’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. எனவே தயக்கமான, சமரசமான முயற்சிகளை மேற்கொள்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கத்தக்க விதத்தில் ஏதாவது ஒரு சமாதானத்தைத் திணிக்க முயலுகிறது. இவை அனைத்தும் வியட்நாமில் உண்மையான அமைதியை நிலைநிறுத்துவதற்குப் பதில் அமெரிக்காவை ஊக்கப்படுத்தவே உதவியுள்ளது.

இன்றையக் காலக்கட்டத்தில் வல்லமைமிக்க சக்தியாக வளர்ந்துள்ள உலக சோசலிச முகாமின் உறுப்பினராக இருந்த போதிலும் சிறிய சோசலிச நாடான வடவியட்நாம் தென்வியட்நாமில் உள்ள தேசபக்தப் போராளிகளுடன் இணைந்து நின்று அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தனியாகப் போராடி இதுவரை கேட்டிராத தியாகம் புரிந்துள்ளது என்பதுதான் இன்றைய யதார்த்தம். அதிக அளவு உதவியையும், தார்மீக ஆதரவையும் சோசலிச முகாமிடமிருந்து பெற்றாலும் ஆக்கிரமிப்பாளனை விரட்டும் அளவு நேரடியான ஒன்றுபட்ட தலையீடு இல்லை.

மாபெரும் சோசலிச நாடுகளான சோவியத் யூனியன், மக்கள் சீனம் ஆகிய இரண்டையும் பிளவுபடுத்தும் தத்துவார்த்த அரசியல் இடைவெளியை கணக்கில் எடுத்துக் கொண்டு வடவியட்நாம் அரசும் ஆளும் தொழிலாளர் கட்சியும், ஒன்றுபட்ட நடவடிக்கை என்ற கோஷம் உடனடி நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைப் போரில் அனைத்து உதவிகளையும் சுயேச்சையாகச் செய்யுமாறு சோவியத் யூனியனையும் அனைத்து சோசலிச நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிப்பவர்களும், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களும் இது குறித்து கவலையடைந்துள்ளனர்; வியட்நாம் மக்கள் மீதான பாசிச யுத்தத் தாக்குதல் கண்டு கொதிப்படைந்துள்ளனர். சோசலிச அரசுகள் குறிப்பாக மக்கள் சீனமும் சோவியத் யூனியனும் ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் இறங்கி ஆக்கிரமிப்பாளனை விரைவாக விரட்டி வியட்நாமில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்; நமது கட்சியும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இந்த நியாயமான உணர்வைப் பகிர்ந்து கொள்கிறது. அந்த மகிழ்ச்சியளிக்கும் நிலை விரைவில் வர வேண்டும் என எதிர்பார்க்கிறது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் ஆவலுடன் விரும்பும் அதே நேரத்தில் ஓர் உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட நடவடிக்கை என்று இங்கே நாம் குறிப்பிடுவது ராணுவ நடவடிக்கைதான். அந்த ராணுவ நடவடிக்கைக்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. மேலும் அதில் ஈடுபடும் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பரம் குறைந்தபட்சம் நம்பிக்கை இருக்க வேண்டும். சர்வதேசக் கம்யூனிச இயக்கத்தையும் குறிப்பாக சோவியத் சீன உறவுகளையும் பரிசீலிக்கும் எவரும் அத்தகைய குறைந்த பட்ச பரஸ்பர நம்பிக்கை சோவியத் _ சீன தலைவர்களிடையே இருப்பதாக கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.

சீன – சோவியத் உறவில் கசப்புணர்வை உண்டாக்கிக் கடும் பிளவிற்கு நடத்திச் சென்ற நிகழ்ச்சிகளை நினைவிற்குக் கொண்டு வருவது அவசியமாகிறது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20_வது மாநாட்டில் மார்க்சிச _- லெனினிச கோட்பாடுகளை திருத்தியது; அவர்களின் அந்த நிலைபாட்டை மற்ற சகோதரக் கட்சிகள் மீது யதேச்சாதிகரமாகத் திணித்தது; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உள்ள தத்துவார்த்த வேறுபாட்டை எடுத்துக்காட்டியவுடன் 1960 புக்காரெஸ்ட் மாநாட்டில் சீனக் கட்சி மீது குருஷ்சேவ் கூறிய வெளிப்படையான கண்டனம்; உதவியை நிறுத்தியது மூலம் சகோதர சோசலிச உறவுகளை சோவியத் தலைவர்கள் மீறினார்கள்; இருதரப்பு ஒப்பந்தங்களை முறித்தார்கள்; சீனத்திலிருந்து சோவியத் தொழில் நுட்ப வல்லுநர்களை திடீரென்று திரும்ப அழைத்துக் கொண்டார்கள்; அணு ஆயுதத் தொழில் நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் சீன-சோவியத் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினார்கள்; சீனத்தை ஒதுக்கி வைத்து விட்டு அதனுடைய எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தத்தை அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் கையெழுத்திட்டார்கள். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்; அமெரிக்க அணு ஆயுத மற்றும் ராக்கெட் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதத்தில் நவீன ராணுவ தொழில் நுட்பம் பெறுவதற்குச் சீனாவிற்கு உதவ சோவியத் தலைவர்கள் மறுத்துவிட்டனர்; சீன கம்யூனிஸ்ட்களை போர் வெறியர்கள் என்றும் சோசலிசத்தின் துரோகிகள் என்றும் இழிவுபடுத்தி அவர்களை தனிமைப்படுத்தி நிர்ப்பந்தம் செய்து பணிய வைக்க சர்வதேச அளவில் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இவை அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக “நாம் ஒன்றுபட்ட நடவடிக்கையில் இறங்கலாம்’’ என்று கோஷம் வைப்பதன் மூலம் ஒரே வரியில் அழித்துவிட முடியாது.

அமெரிக்காவுக்கு எதிரான ஒன்றுபட்ட நடவடிக்கையில் உண்மையில் அக்கறை இருக்குமானால் சோவியத் தலைவர்கள் சீனத் தலைவர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தெளிவு செய்ய வேண்டும்; அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பது என்ற நாசகரமான திட்டத்தைக் கைவிட வேண்டும்; நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட மக்கள் சீனத்தை ஒதுக்கி விட்டு ஐக்கிய நாடுகள் சபையை நடத்தநினைக்கும் அமெரிக்காவின் முட்டாள்தனமான திட்டத்தை விட மக்கள் சீனம்இல்லாத சோவியத்தின் சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும், சோசலிசத்திற்குமான போராட்டம் அபத்தமானது என்பதை சோவியத் தலைவர்கள் உணர வேண்டும்.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், சோசலிச முகாமிலும் ஒற்றுமையை உருவாக்க சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட நடவடிக்கைகளுக்கான முன் தயாரிப்புகளைச் செய்யாமல் சோவியத் தலைவர்கள் கோஷத்தை மட்டும் முன் வைப்பது அந்தக் கோஷத்தின் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழக்கச் செய்கிற, மற்றவர்களை ஏமாற்றி ஆதாயம் பெறச் செய்கிற முயற்சியாக மாறிவிடும்.

இவையெல்லாம் இருந்தாலும் கூட வடவியட்நாம், சோவியத் யூனியன், சீனா ஆகிய பிரதிநிதிகளின் சந்திப்பிற்கான திட்டத்தை ஏற்று அத்தகைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் கூட்டு நடவடிக்கை, வியட்நாமிற்கு உதவி போன்ற விஷயங்களில் சோவியத் கருத்துக்களைப் பரிசோதித்து பார்க்கவும், அனைத்து நாடுகளின் மக்களும் அது பற்றி தெளிவு பெறவும் உதவியாக இருக்கும்.

என்றாலும், சோவியத் யூனியன் திருத்தல்வாத தலைவர்களால் தலைமை தாங்கப்படுகிறது என்ற காரணத்தின் அடிப்படையில் சோவியத் _ – மக்கள் சீன கூட்டு நடவடிக்கை என்ற கோஷம் கொள்கை அளவிலேயே தவறு என்ற கருத்தை நமது கட்சி ஏற்க முடியாது. ஒரு குறிப்பட்ட கட்டத்தில் பகை முரண்பாடு உள்ளிட்ட முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் பல்வேறு வர்க்கங்களுடனும் கட்சிகளுடனும் இணைந்து பாட்டாளி வர்க்கம் பொது எதிரிக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே ஐக்கிய முன்னணி, ஒன்றுபட்ட நடவடிக்கை என்ற கோட்பாடுகள் கம்யூனிஸ்ட்களால் முன் வைக்கப்படுகிறது.

ஐக்கிய முன்னணி கூட்டு நடவடிக்கை என்ற அரசியல் வழிமுறைகளைக் கம்யூனிஸ்ட்கள் பின்பற்றும்போது தலைவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் பின்னால் உள்ள மக்களுக்குத்தான் பிரதானமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். தலைவர்களையும் அவர்களைப் பின்பற்றும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல் தலைவர்களின் கருத்துக்களை அவர்களைப் பின்பற்றும் வர்க்கங்கள் மற்றும் மக்களின் கருத்தாகக் கருதுவது தவறு. எனவே திருத்தல்வாதிகளின் தலைமையில் உள்ள கட்சி என்றும் ஆட்சி என்றும் கூறி அவர்களுடன் கூட்டு நடவடிக்கைகளை நிராகரிப்பது, வெறுக்கத்தக்க பொது எதிரியைத் தனிமைப்படுத்தி சாத்தியமான சகல சக்திகளையும் ஒன்றுபடுத்தும் ஒற்றுமை முயற்சியைக் குறுக்கிவிடும்.

இந்த குறிப்பிட்ட விஷயத்தில் அதாவது நவீன திருத்தல்வாதத்தின் ஆதரவாளர்கள் என்று நாமும் கருதக்கூடிய சோவியத் தலைவர்கள் விஷயத்திலும் கூட்டு நடவடிக்கை என்ற பிரச்சினை சோவியத் அரசுடனும் சோவியத் மக்களுடனும் பின்னிப்பிணைந்து உள்ளது. இத்தகைய ஒன்றுபட்ட நடவடிக்கை திருத்தல்வாதிகளுக்கும், மார்க்சிச – லெனினிசவாதிகளுக்கும் இடையிலான ஒற்றுமையாகக் கருதப்படும் என்ற அடிப்படையில் இந்தக் கோஷத்தை அடியோடு நிராகரிப்பது திருத்தல்வாதிகளை தனிமைப்படுத்துவதற்குப் பதில் மக்களையும் அரசையும் திருத்தல்வாதிகளிடம் விட்டு வைக்கவே உதவும். சோவியத் – சீன அரசுகளுக்கு இடையில் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை உடனடியாக உருவாக்குவதில் உள்ள பல்வேறு தடைகளை நாம் அறிவோம்; சோவியத் தலைவர்கள் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை உருவாக்க தற்போது மேற்கொண்டுவரும் பாணியிலேயே முயற்சிகளை மேற்கொண்டால் அது நிறைவேறும் என்ற பிரமைகள் நமக்கு இல்லை; என்றாலும் ரத்தம் சிந்தும் வியட்நாம் மக்கள் தங்களின் தேச விடுதலைப் போரில் மற்ற சோசலிச அரசுகளுடன் இணைந்து நின்று ஏகாதிபத்திய தலையீட்டை முறியடிக்க இந்த ஒன்றுபட்ட நடவடிக்கை தேவை என்பதை ஏற்று அதற்காக நாமும் பாடுபட வேண்டும்.

சகோதர கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான உறவு

சகோதர கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான உறவு, அதை வழிநடத்தும் மார்க்சிச _- லெனினிசக் கொள்கை ஆகியவை முக்கிய பிரச்சனையாகும். எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சுயேச்சையானவை. சமமானவை. உயர்ந்த நிலையில் உள்ளவை என்றும் பணிந்து செல்லும் கட்சிகள் என்றும் எந்தவிதத் தவறான கருத்துக்களும் இருக்கக்கூடாது. மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுதல் கூடாது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடிப்படையிலும் பரஸ்பர உதவி அடிப்படையிலும் கட்சிக்குக் கட்சி உறவைக் கட்டுவது என்று கொள்கை அளவில் எல்லாம் ஏற்றுக் கொள்வது போல் தோன்றும். ஆனால் நேரடி வாழ்க்கையிலும் அனுபவத்திலும் இந்த அடிப்படைகள் அடிக்கடி மீறப்படுகின்றன. அதிலும் அரசு அதிகாரத்தில் உள்ள பெரிய கட்சிகள் மீறும் பொழுது மேலும் பாதகமாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சுயேச்சையானவை, சமமானவை என்ற கோட்பாட்டையே கடுமையாக தகர்க்கிறது.

மேலே கூறப்பட்ட முதல் பிரச்சினையோடு தொடர்புடைய இரண்டாவது முக்கிய பிரச்சினை ஒன்று அல்லது மற்ற முதலாளித்துவ அரசுகளுடன், சோசலிச நாடுகளுடன் அரசு கடைப்பிடிக்கும் அயல்துறைக் கொள்கைக்கும் அந்த நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கும் உள்நாட்டு கொள்கைக்கும் இடையிலான உறவு.

உலகில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் ஒரே பிரச்சினையில் கூட அனைத்து கட்சிகளும் ஒரே நடைமுறைத் தந்திரத்தை ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் கூட கையாள வேண்டும் என்ற அவசியமில்லை என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட மார்க்சிச -_ லெனினிசக் கருத்து. இது முற்றிலும் சரியானது என்பதனை எடுத்துக்காட்ட உலக கம்யூனிச சரித்திரத்திலிருந்து எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு முனைப்பட்ட நடவடிக்கையை முறியடிக்கும் என்றும் இரட்டை வேடம் போடுபவர்களின் தந்திரம் என்றும் குறை கூறியதை லெனின் பரிகசித்தார். அவர்களின் பகுதியில் நிலவும் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு கட்சிகள் பல்வேறு நடைமுறைத் தந்திரங்களைக் கையாண்ட போதிலும் அவை அனைத்திலும் உள்ளோட்டமாக ஒரே நோக்கம் நிலைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அரசியல் அதிகாரத்தில் உள்ள கட்சிகளும் அதிகாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைத் தந்திரத்தில் வேறுபாடு என்று வரும் போது இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகி அழுத்தம் பெறுகிறது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பாக உள்ள அனைத்து கட்சிகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பணிக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் இல்லாத கட்சிகளுக்கும் சமமாகவே இது பொருந்தும். மூன்றாவது அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் அறிக்கை இது பற்றி சரியாகவே கூறுகிறது: “நோக்கம் ஒன்றாக உள்ளது என்ற காரணத்தினால் அரசு அதிகாரத்தை சோவியத் யூனியன் கையில் வைத்துள்ள சோவியத் பாட்டாளிகளும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்திற்குப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும் எல்லா ச்சூழ்நிலைகளிலும் எல்லா நடவடிக்கைகளிலும் முற்றிலும் உடன்பட்டதாக இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல.’’

எல்லாக் கம்யூனிஸ்ட்களும் இதை மனதில் நிறுத்திக் கொண்டு வேலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் தங்கள் நாட்டின் பூர்ஷ்வா அரசிற்குப் பின்னால் அணிவகுத்தும் ஏதாவதொரு சோசலிச நாட்டிற்கு எதிராகவும் நிற்கும் விதத்தில் தொழிலாளி வர்க்க சர்வ தேசியத்தை கைவிட்டு தேசிய வெறிப் பார்வையுடன் இந்தக் கோட்பாட்டை மாற்றும் சந்தர்ப்பவாத வர்க்க சமரச போக்கிற்கு எதிராக எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இவை அனைத்தும் நடைமுறையில் அடிக்கடி மீறப்படுதலைக் காணலாம். சோசலிச நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையின் தேவைக்கேற்ப அதிகாரத்தில் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நாட்டு வர்க்கக் கொள்கையை உட்படுத்தும் இந்த போக்கு அடிக்கடி தலை தூக்குகிறது.

இந்த இரண்டு விதமான கடுமையான தவறுகளையும் களையாவிட்டால் மார்க்சிச _ லெனினிச அடிப்படையில், பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் நிரந்தரமான உண்மையான சகோதர உறவு, ஒற்றுமை சாத்தியமல்ல.

ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியானது மார்க்சிச _- லெனினிசம் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகியவற்றில் உறுதியாக நின்றால் தான் அதனுடைய புரட்சிகர பாத்திரத்தை அது நிறைவேற்ற முடியும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது போல “ஒரு கட்சி தனது மூளையைப் பயன்படுத்தித் தானே சிந்தித்து தனது நாட்டில் இருக்கும் பல்வேறு வர்க்கங்களின் போக்குகளை ஆழ்ந்து ஆராய்ந்து அது பற்றிய அறிவை வளர்த்து உலகம் முழுதுக்கும் பொருந்தும் மார்க்சிச – லெனினிசத்தைத் தனது நாட்டின் ஸ்தூலமான நிலைக்கு எப்படிப் பொருத்த வேண்டும் என்பதை அறிந்ததாக இருக்க வேண்டும்’’. அது மற்றவர்கள் சொல்வதை திருப்பிச் சொல்வதாகவும், எந்தவிதப் பரிசீலனையும் இன்றி மற்றவர்களின் அனுபவத்தை அப்படியே காப்பி அடிப்பதாகவும், வெளிநாட்டில் இருக்கும் சிலரின் தாளத்திற்கு ஏற்ப அங்கும் இங்கும் ஆடும் கட்சியாகவும், திருத்தல்வாத வறட்டுவாத மற்றும் மார்க்சிச – லெனினிசம் அல்லாத எதுவுமாக மாறக் கூடாது.

சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சில உறுப்புக் கட்சிகள் மேலே சொன்ன கடமைகளை நிறைவேற்ற இயலாத அளவு பலவீனமாக, வளர்ச்சி அடையாத கட்சிகளாக இருந்தால், தங்களின் சொந்த அனுபவத்தின் மூலமும் தவறுகளிலிருந்து படிப்பினை ஏற்பதன் மூலமும் மட்டுமே பிரதானமாக இந்தப் பலவீனத்தை களைய முடியும். மற்றொரு வெளிக்கட்சி எந்த அளவு பெரிய கட்சியாகவும், அனுபவம் வாய்ந்த கட்சியாகவும் இருந்தாலும் இதற்கு மாற்றாக இருக்க முடியாது. மற்றொரு கட்சியை வழிகாட்டவும் அதற்குக் கட்டளைகள் இடவும் முயற்சித்தால் அது பெரிதும் தீங்காகவே முடியும். ஆட்சியில் உள்ள பெரிய கட்சிகள் தலையிட்டால் இன்னும் அதிகத் தீமை பயக்கும். முதலில் இந்தக் கட்சிகள் பெய்ஜிங் அல்லது மாஸ்கோவினால் வழிநடத்தப்படுகிறார்கள் என்ற பிற்போக்கான அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும். இரண்டாவது இப்படித் திணிக்கப்படும் அரசியல் நடைமுறைத் தந்திரம் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் நிலவும் ஸ்தூலமான வர்க்க உறவுகளைப் பரிசீலித்து கவனமாக ஆய்வு செய்த அடிப்படையில் அமையாததால் இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் தீங்காகவே முடியும். ஒரு கட்சியும் அதன் அரசியல் பாதையும் முற்றிலும் தவறாகச் செல்லும்போது, சகோதர விமர்சனங்கள் நிராகரிக்கப்படும் போது வெளிப்படையாக விமர்சனம் செய்வதைத் தவிர வேறு மாற்றுவழிகள் இல்லாத போது, சில அசாதாரண சூழ்நிலையில் இப்படிப்பட்ட தலையீடு அனுமதிக்கப்படலாம். ஆனால் இது ஒரு விதிவிலக்காகவே இருக்க வேண்டும்.

மார்க்சிஸத்திற்கு தங்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு என்ற பெயரிலோ அல்லது தங்களுக்கும் உலகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து தாங்கள் மட்டுமே சிந்திக்க முடியும் என்ற தவறான பார்வையாலோ கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான உறவை வழிநடத்திச் செல்லும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய கோட்பாட்டை சில பெரிய கட்சிகள் மீறுகின்றன என்பதை நமது கட்சி மிக்க வருத்தத்துடன் குறிப்பிடுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை. அது இருபதாவது காங்கிரசிற்குப் பிறகு தன்னுடைய கோட்பாடுதான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் முழுவதற்குமான திட்டம் என்று வலியுறுத்த ஆரம்பித்துத் தனது வலிமையின் மூலம் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது திணித்து வருகிறது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த தவறான போக்கைச் சுட்டிக்காட்டி நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டத்தில் விழுப்புண் ஏற்ற மற்றொரு பெரிய கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சில சமயங்களில் இந்தக் கோட்பாட்டைப் புறக்கணிப்பதை காணலாம். நமது கட்சி, உலகில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் அதே வேளையில் இத்தகைய வெளித் தலையீடுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துத் தன்னுடைய சுயேச்சைத்தன்மையையும் சுயேச்சையான அரசியல் வழியையும் காத்துக்கொள்ளும். இந்த வலுவான கோட்பாட்டிலிருந்து விலகிச் சென்றால் நமது கட்சியின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் தீங்காகவே முடியும்.

திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடுவோம் இடது வறட்டுவாதத்திலிருந்து காத்துக் கொள்வோம்

இன்றைய நிலையில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் அபாயமாக நீடிக்கும் நவீன திருத்தல்வாதம் பற்றிய இந்த தஸ்தாவேஜை முடிப்பதற்கு முன்னால் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தோடு தொடர்புடைய சில பிரச்சினைகளில் சில கட்சிகளிடத்தில் அதிதீவிர வறட்டுவாதப் போக்குகள் இருக்கின்றன என்ற உண்மையை உணராமல் இருக்க முடியாது. நமது கட்சியையும், உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் எதிர்நோக்கி இருக்கும் பெரும் அபாயமான நவீன திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடும் போதே இடது சந்தர்ப்பவாத வறட்டுவாத தவறுகளில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருத்தல்வாதமும் வலது சந்தர்ப்பவாதமும்தான் நமது கட்சிக்கு பெரும் அபாயம் என நாம் கூறுவதன் அர்த்தம் என்ன?

நமது கட்சி திருத்தல்வாதிகளிடமிருந்து முற்றிலும் விடுவித்துக் கொண்டாலும் திருத்தல்வாதத்தின் அனைத்தையும் நாம் களைந்துவிட்டோம் என்று கூற முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கொள்கை, நடைமுறை இரண்டிலும் திருத்தல்வாதம் மேலாதிக்கம் செலுத்திய கட்சி நடவடிக்கைகள் இன்னமும் நமது கட்சியிலும் நீடிக்கிறது. ஏழாவது கட்சி காங்கிரசில் நாம் நிறைவேற்றிய கட்சித் திட்டத்தில், நமது யுத்த தந்திரம், நடைமுறைத் தந்திரம் ஆகியவற்றில் நாம் உருவாக்கிய “புதிய சூழ்நிலையும் கட்சியின் கடமைகளும்’’ விவசாய அரங்கில் “நமது கடமைகள்’’, “தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள்’’ ஆகிய அனைத்திலும் நாம் திருத்தல்வாதத்தைக் கைவிட்டுவிட்டோம் என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில், இந்த தஸ்தாவேஜுகளை அமுல்படுத்தும் போது வர்க்கப் போராட்டப் போக்கிலும் தேர்தல் பிரமைகளிலும் கட்சி ஸ்தாபன நடவடிக்கைகளில் அந்நியப் போக்குகள்,  திருத்தல்வாதப் போக்குகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இது கடுமையான விஷயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மற்ற தத்துவார்த்தப் பிரச்சினைகளில் நவீன திருத்தல் வாதத்துடன் முற்றிலும் கணக்குத் தீர்த்துக் கொள்ளும் தற்போதைய முயற்சியை பயன்படுத்திக் கொண்டு அன்றாட சிந்தனைகளையும், நடவடிக்கைகளையும் முழுமையான தொழிலாளிவர்க்கக் கண்ணோட்ட அடிப்படையில் புனரமைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவிதமான சீர்திருத்தவாத, திருத்தல்வாத வெளிப்பாடுகளையும் கண்டுபிடித்து அகற்றும் போதே கட்சிக்குள் இந்தப் போராட்டம் இன்றும் முடிவடையாமல்தான் உள்ளது. இந்தப் போராட்டத்தை நடத்தாவிட்டால் தலைதூக்கும் இடது வறட்டுவாதத்தை முறியடிப்பது இருமடங்கு கடினமான வேலையாக மாறிவிடும். சில மாநிலங்களில் கூட்டு மந்திரிசபை நடத்துவதிலும் ஐக்கிய முன்னணித் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதிலும் சீர்திருத்தவாதத் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை குறைத்து மதிப்பிடாத அதே நேரத்தில் கட்சியின் சில வட்டாரங்களில் குறுகிய, வறட்டுவாத, அதிதீவிர போக்குகள் வெளிப்படுவதை நிராகரிக்கவோ, எளிதாக எடுத்துக் கொள்ளவோ முடியாது. கட்சித் திட்டத்திற்குச் சவால் விடும் வடிவத்திலும், கட்சியின் அரசியல் தந்திரோபாய நடைமுறைகளை எதிர்ப்பதிலும் சிறுபிள்ளைத்தனமான அதிதீவிர வடிவ போராட்ட வடிவங்களை முன் வைப்பதிலும் இறுதியாக கட்சி ஒழுக்கம், கட்சியின் ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவற்றை வெளிப்படையாக மீறுவதிலும் இவை வெளிப்படுகின்றன. வறட்டுவாதத்தின் ஆதரவாளர்கள் கட்சியின் தத்துவார்த்த அரசியல் வழியை ‘நவீன திருத்தல் வாதம்’ என்றும் டாங்கேயிஸ்டுகளின் பழைய திருத்தல் வாதத்திற்கு மற்றொரு மாற்று என்றும் அவதூறு பொழிகிறார்கள். சந்தேகத்திற்குரிய வகையில் தூண்டிவிடக்கூடிய உளவாளிகளுடன் இணைந்து நின்று அவர்கள் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்தப் போக்குகளை இரக்கமற்ற முறையில் அம்பலப்படுத்துவதும், கடுமையாகப் போராடுவதும் கட்சியின் திட்டத்தையும், அரசியல் நிலை மற்றும் ஸ்தாபனத்தையும் பாதுகாப்பதும் உணர்வுமிக்க ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின், முழுக் கட்சியின் அடிப்படைக் கடமையாகும்.

வலது சந்தர்ப்பவாதத்தையும், இடது வறட்டுவாதத்தையும் எதிர்த்துப் போராடி மார்க்சிச -லெனினிசத்தைப் பாதுகாக்கும் போது ஒரு உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். திருத்தல்வாதமும் வறட்டுவாதமும் எதிர் முனைகள் அல்ல, இரட்டைப் பிறவிகள். பல சமயங்களில் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும். லெனின் கூறியது போல் “தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சந்தர்ப்பவாத பாவங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் தண்டனையே அராஜகவாதம். இரண்டு பேய்களும் ஒன்றுக்கு மற்றொன்று இடமளிப்பவையே.’’

வலதோ அல்லது இடதோ எதுவானாலும் திருத்தல்வாதத்தின் அடிப்படைத் தோற்றுவாய் பற்றி ஆராய்ந்து மார்க்சிசம் _ லெனினிசம் கூறுகிறது. திருத்தல்வாதத்தின் உள் தோற்றுவாய், பூர்ஷ்வா செல்வாக்கு: அதன் வெளித் தோற்றுவாய், ஏகாதிபத்திய நிர்ப்பந்தத்திற்கு பணிந்து போவது. இந்தப் பொதுவான வரையறையோடு திருப்திப்பட்டுவிடாமல் நமது நாட்டில் நமது கட்சியிலும் இந்தப் போக்கு பற்றிப் பரிசீலிக்க வேண்டும். நமது நாடு பெரும்பாலும் குட்டிப்பூர்ஷ்வா வர்க்கத்தை உள்ளடக்கியது. இந்த குட்டிப்பூர்ஷ்வா கருத்துக்கள், சிந்தனைகள், பிரமைகள், பெரும் அளவில் தொழிலாளி வாதத்தின் மீது தாக்கத்தையும், செல்வாக்கையும் ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் அணி திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம் போதுமான அளவு அரசியல் உணர்வுள்ளதாக இல்லை என்பதோடு தொழிலாளி வர்க்க அளவில் பெருமளவில் சேரும் புதிய பகுதி. இத்தகைய பாதகமான கருத்துக்களை தன்னோடு எடுத்து வருகின்றது. இறுதியாக நமது கட்சியின் அதிலும் குறிப்பாக பல்வேறு நிலைகளில் உள்ள தலைமையின் வர்க்க கட்டுமானம் என்பது பெரும்பாலும் குட்டிப்பூர்ஷ்வா வர்க்கத்திலிருந்து வந்தவர்களே. இவர்களின் மார்க்சிஸ _  லெனினிச பயிற்சியும் தேர்ச்சியும் வருந்தத்தக்க முறையில் போதுமானதாக இல்லை. இந்தக் காரணங்களால் வலது சீர்திருத்த வாதம் அல்லது இடது அதிதீவிரவாதத் தவறுகளுக்கு எளிதில் இழுத்துச் செல்லப்படும் அபாயத்திற்கு மத்தியில்தான் கட்சி உள்ளது. இதைக் காணத் தவறக் கூடாது. நமது சென்ற கால வரலாற்றின் அனுபவம் முழுவதும் இதை உறுதிப்படுத்துகிறது. நமது அனுபவங்கள் மட்டுமல்ல மற்ற சகோதர கட்சிகளின் அனுபவமும் வலது தவறுகளைக் களையும் போது இடது தவறுகள் வரலாம். அல்லது இடது தவறுகளைத் திருத்தும் போது வலது தவறுகள் நிகழலாம் என்பதை நிரூபித்துள்ளது. நமது கட்சி இந்த அபாயங்களுக்கு எதிரான இருமடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கலாச்சாரப் புரட்சி பற்றி மத்தியக் கமிட்டி அறிக்கை

பல தோழர்கள் சீனக் கலாச்சாரப் புரட்சி பற்றிய நமது அணுகுமுறை என்ன என்றும் இந்த தஸ்தாவேஜில் அது பற்றி ஏன் கூறப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். தோழர். எம். பசவபுன்னையா அரசியல் தலைமைக் குழுத் தோழர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் கலாச்சாரப் புரட்சி பற்றி நமது நிலையை விளக்கி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். மத்தியக்கமிட்டி பின்னர் அதை ஏற்றுக் கொண்டது. முழுப் பிரச்சினையையும் மேலும் விவாதித்து ஒரு முடிவை எடுக்கும் வரை அதுவே நமது அதிகாரப்பூர்வ நிலை. அப்படிப்பட்ட விவாதமும் முடிவும் இல்லாமல் தத்துவார்த்த பிரச்சினைகள் குறித்த இந்த தீர்மானத்தில் இந்தப் பிரச்சினையை சேர்ப்பது சரி அல்ல.


சில தத்துவார்த்த பிரச்சனைகள் பற்றிய தீர்மானம்

சென்னையில் 1992, ஜனவரி 3 முதல் -9 வரை நடைபெற்ற 14 வது காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.

1.1) கட்சியின் 13_வது காங்கிரசுக்குப் பிறகு உலகில் குழப்பம் மிகுந்த நிகழ்ச்சிப் போக்குகளும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன. சோவியத் யூனியனில் சோசலிசத்தைச் சீர்குலைத்தது; சோவியத் குடியரசு சிதறுண்டு போனது; கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசுகள் தகர்ந்தன; இந்த நாடுகளில் முதலாளித்துவ மீட்சிப் போக்கு -_ – இவை அனைத்தும் உலக சோசலிச சக்திகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த எதிர்ப்புரட்சி நிகழ்வுகள் உலக அளவில் ஆழமான அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாய மாறுதல்களுக்கு வழியமைத்து வருகின்றன.

1.2) இந்த நிகழ்ச்சிப் போக்குகள் மார்க்சிசம் _ – லெனினிசத்துக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் கண்டு குரூரமான களிப்புடன் உலக ஏகாதிபத்தியத்திய சக்திகள் மார்க்சிசத்துக்கு எதிராகவும், கம்யூனிசத்திற்கு எதிராகவும் ஒரு பெரும் பிரச்சாரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. அவர்களுக்கு சமூக ஜனநாயக சக்திகளும், கம்யூனிச இயக்கத்தின் உள்ளேயே உள்ள சரணாகதிவாதிகளும் அப்பட்டமாக உதவி வருகின்றனர். மார்க்சிசத்தையும், சோசலிசத்தையும் பழித்துக் கூறுகிற அவர்கள் மனித சமுதாயவளர்ச்சியின் இறுதிக் கட்டம் முதலாளித்துவம்தான் என்று துணிவுடன் அறிவிக்கின்றனர்.

1.3) இந்தியாவிலும் கம்யூனிசஎதிர்ப்பு சக்திகள் ஒரு தாக்குதலை நடத்துகின்றன. சோசலிசத்துக்கும் மார்க்சிசம் _- லெனினிசத்துக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, சார்பு நிலையோடு நின்றதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறி வைத்துத் தாக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் மனித நாகரிகத்தின் பொருளார்ந்த வளர்ச்சிக்கும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் சோசலிசம் வழங்கிய மகத்தான பங்களிப்புகளை இந்த சக்திகள் நிராகரிக்க முனைகின்றன.

1.4) நிலைமையின் சிக்கலான தன்மையும் எழுப்பப்படும் பிரச்சனைகளும் மனித நாகரிகத்தின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகால வரலாற்றை உள்ளடக்கியுள்ளன. இது சம்பந்தமாக விரிவான, கூடுதலான, ஆழமான ஒரு ஆய்வு அவசியமாகிறது. நிகழ்ச்சிப் போக்குகள் செல்லும் திசையையும் அவற்றின் தன்மையையும் வைத்துப் பார்க்கும் போது சில துவக்க நிலை முடிவுகளுக்கு மட்டுமே வர முடியும்.

1.5) சிபிஐ(எம்), அது தொடங்கிய நாளிலிருந்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட திரிபுகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டி வந்தது. திருத்தல்வாதத்துக்கும், வறட்டுச் சூத்திரவாதத்துக்கும் எதிரான இந்த இருபத்தேழு ஆண்டுகாலப் போராட்டத்தில் மார்க்சிய – லெனினிய ஆதாரக் கொள்கைகளின் அடிப்படையிலான தனது சொந்த மதிப்பீடுகளாலும், தனது சொந்த அனுபவங்களாலும் சிபிஐ(எம்) வழிகாட்டப்பட்டு வந்திருக்கிறது.

1.6) 1968_ ஆம் ஆண்டு மீண்டும் தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றிய பர்துவான் பிளீனத்தில், குருஷ்சேவ் தலைமையிலான சோவியத்கம்யூனிஸ்ட் கட்சியால் முன் வைக்கப்பட்ட நவீன திருத்தல் வாதத்தை எதிர்த்துஇந்த இடைவிடாப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்த திருத்தல்வாத திரிபை எதிர்த்துப் போராடும்போதே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் முன் வைக்கப்பட்ட இடது அதி தீவிரதிரிபை எதிர்த்தும் தீவிரமான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இதனால் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டங்கள்தான் மார்க்சிய – லெனினியத்தின் புரட்சிகர இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கவும், இந்திய மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் சி.பி.ஐ.(எம்)-ன் முயற்சிகளை உருவாக்கின.

1.7) இதே அணுகுமுறையுடன்தான் மார்க்சிஸ்ட் கட்சியால் அக்டோபர் புரட்சியின் 70_வது ஆண்டுவிழாவிற்குப் பிறகு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பல தத்துவார்த்த நிலைகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டி,அவற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் வெளிப்படையாகக் கூற முடிந்தது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய கமிட்டி நிறைவேற்றிய தீர்மானங்கள் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செய்த கணிப்புகளின் கட்டமைப்பை விளக்குகின்றன. இதன் ஒரு தொடர்ச்சியாகவும் இதே அணுகுமுறையுடனும்தான் இன்றைய நிகழ்ச்சிப் போக்குகளையும், அவை எதிர்கால உலக நிகழ்ச்சிப் போக்குகளிலும், உலக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் யுத்த தந்திரம் (stக்ஷீணீtமீரீஹ்) மற்றும் நடைமுறை யுத்தியிலும் (ஜிணீநீtவீநீs) ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்கிறது.

1.8) பல கம்யூனிஸ்ட் கட்சிகள் மார்க்சிச _- லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தொடர்ந்து பின்வாங்கி, உலக கம்யூனிச இயக்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் சிபிஐ(எம்) இன்றைய உலகம் பற்றி மேலும் ஆழமாக அறிந்து கொள்ள முயல்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் பற்றியும் மனிதகுல வளர்ச்சி பற்றியும் கற்க வேண்டிய அனுபவங்கள் மற்றும் பாடங்கள் பற்றியும் தனக்குள்ள ஞானத்தை மேலும் ஆழப்படுத்திக் கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதி பூண்டுள்ளது. இந்த வழியில் தான் உழைக்கும் வர்க்கமும் இந்திய மக்களும் சுரண்டலிலிருந்தும் சமுதாய, அரசியல் மற்றும் தேசிய ஒடுக்குமுறைகளிலிருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கிற ஒரு புதிய சமுதாய ஒருங்கமைப்புக்கான போராட்டத்தைத் தொடர முடியும்.

1.9) வெற்றிகள், தோல்விகள், முன்னேற்றங்கள், பின்னவுடைகள் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொண்டுதான் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மாறுதல்கள் பற்றியும் சமகாலத்து உலகில் சோசலிச சிந்தனையும் நடைமுறையும் பதித்துள்ள ஆழமான முத்திரைகள் பற்றியும் முறையாகக் கணிக்க வேண்டியுள்ளது.

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியும் புதிய சகாப்தமும்

2.1) முதலாளித்துவ வளர்ச்சி, ஏகாதிபத்திய கட்டத்துக்கு அது முதிர்ச்சியடைவது, அதன் உள்ளார்ந்த முரண்பாடுகள் கூர்மையடைவது, அதனால் மீண்டும் மீண்டும் நெருக்கடி ஏற்படுவது ஆகியவை பற்றி மார்க்சிய மதிப்பீடுகளை இருபதாம் நூற்றாண்டின் நிகழ்ச்சிப் போக்குகள் ஆணித்தரமாய் நிரூபிக்கின்றன.

2.2) 1917_ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி, ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் முதிர்ச்சியடைந்தது மற்றும் போல்ஷ்விக் கட்சி தீர்மானமாகத் தலையிட்டதின் விளைவேயாகும். வரலாற்றில் குணாம்சரீதியான ஒரு பாய்ச்சல் முன்னேற்றத்தை உள்ளடக்கிய வளர்ச்சிப் போக்குகளை அது துவக்கி வைத்தது. அதைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டங்களில் மக்களுக்குக் கிடைத்த வெற்றிகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தின.

2.3) முதல் முறையாக வர்க்கச் சுரண்டலுக்கு முடிவுகட்டிய ஒரு சமுதாயம் அமைக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களுக்கு ஒரு வலிமைமிகு ஊக்கத்தினை அளித்தது. அதுவரையில் முதலாளித்துவத்தின் கீழ் ஏற்க முடியாததாக இருந்த உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டதும், ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த பொருளாதாரம் வலிமைமிக்க பொருளாதார இராணுவ வல்லரசாக ஏகாதிபத்தியத்தோடு மோதக்கூடியளவிற்கு மாற்றமடைந்ததும் சோசலிச அமைப்பின் மேன்மையை உறுதிப்படுத்தியுள்ளன.

2.4) ஒரு சகாப்தத்தை உருவாக்கிய இந்தப் புரட்சியும், பாசிசத்தை முறியடிப்பதில் சோவியத் யூனியன் வகித்த தீர்மானகரமான பாத்திரமும், அதைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் உருவானதும் உலக நிகழ்ச்சிப் போக்குகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின.

2.5) இதைத் தொடர்ந்து சீனப்புரட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைந்தது. இது காலனி நாடுகளின் மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துதல் அளிக்கும் ஆதர்சமாய் இருந்தது.

2.6) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வியட்நாம் மக்களின் வீரமிகு போராட்டம், கொரிய மக்களின் போராட்டம், கியூபாப் புரட்சி ஆகியவை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு பிரம்மாண்டமான உத்வேகம் அளித்தன. இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றிகள் தேசிய விடுதலை மற்றும் சோசலிஸம் ஆகியவற்றிற்கான உலக சக்திகளுக்கும் மேலும் வலிமையைக் கொடுத்தன.

2.7) இந்த வரலாற்றுச் சம்பவங்களும் பாசிசம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்துவங்கிய நடைமுறையும் உலக சக்திகளின் பலாபலத்தை சமாதானத்துக்கும், தேச விடுதலைக்கும், சோசலிசத்துக்கும் சாதகமாக மாற்றின. இவ்வாறாக, இது உலக அளவில் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறும் காலக்கட்டம் என்ற கருத்து சரியானதே என்பதனை நிரூபித்தது.

2.8) இந்தப் பின்னணியில் தான் சர்வதேச கம்யூனிச இயக்கம் சமகால உலகம் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வந்தது. உலக சோசலிச சக்திகளை முன்னேற்றுதற்குப் பொருத்தமான யுத்த தந்திரத்தையும் நடைமுறை உத்தியையும் வகுத்தது. 1957 ஆம் ஆண்டிலும் 1960 ஆம் ஆண்டிலும் நடந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகள் உலக சக்திகளின் பலாபலம் சோசலிசத்துக்குச் சாதகமாக மாறிவிட்டது என்பதை அங்கீகரித்ததோடு, அதற்கு அப்பால் சென்று, உலக நிகழ்ச்சிப் போக்குகளை உருவாக்குவதில் ஒரு தீர்மானகரமான சக்தியாக சோசலிசம் உருவாகி வருகிறது என்ற கணிப்புக்கும் வந்தன.

2.9) சி.பி.ஐ.(எம்) – இன் மத்திய கமிட்டி 1990 மே மாதம் நிறைவேற்றிய தீர்மானம் சுயவிமர்சனத்தோடு இத்தகைய ஒரு மதிப்பீட்டின் அடிப்படையை மறுபரிசீலனை செய்தது. அந்த மதிப்பீடு உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த சக்தியையும், உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்துக் கொள்ளக்கூடிய அதன் ஆற்றலையும், மாறிய சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடுவதாகும் என்று அந்தத் தீர்மானம் முடிவிற்கு வந்திருந்தது.

2.10) 1950_ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்ட 81 கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்ட அறிக்கை “நமது காலகட்டத்தின் பிரதானமான தன்மை என்னவெனில், சமுதாய வளர்ச்சியில் தீர்மானகரமான அம்சமாக உலக சோசலிச அமைப்பு உருவாகி வருகிறது என்பதாகும்’’ என்று கூறுகிறது. “உலக முதலாளித்துவ அமைப்பு சீர்குலைந்து சிதைந்து போகிற ஒரு தீவிரமான கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது’’ என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. “நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை சமுதாய வளர்ச்சி நலன்களுக்காகப் பயன்படுத்துவதை முதலாளித்துவம் மேலும் மேலும் தடுக்கிறது’’ என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலக உற்பத்தியில் சோசலிசத்தின் பங்களிப்பு முதலாளித்துவத்தின் பங்கினைவிட மிகப்பெரியதாக இருக்கிற காலமும், மனித முயற்சியின் தீர்மானகரமான துறையாகிய பொருளுற்பத்தித் துறையில் முதலாளித்துவம் தோற்கடிக்கப்படுகிற காலமும் வெகுதூரத்தில் இல்லை’’ என்றும் அந்த அறிக்கை கூறியது.

“முதலாளித்துவ பொது நெருக்கடியின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம் ஆரம்பாகியுள்ளது’’ என்று தொடர்ந்து குறிப்பிடுகிற அந்த அறிக்கை முதலாளித்துவ உலகப் பொருளாதார அமைப்பு முழுமையினுடைய நிலையற்ற தன்மை அதிகரித்துவருவது பற்றியும் கூறுகிறது. இத்தகைய மதிப்பீடுகளிலிருந்து அந்த அறிக்கை “இன்று சோவியத் யூனியனில் மட்டுமல்ல, இதர சோசலிச நாடுகளிலும் முதலாளித்துவம் மீட்கப்படுவது சாத்தியமற்றதாகி விட்டது’’ என்ற முடிவிற்கு வருகிறது.

2.11) உலக கம்யூனிச இயக்கத்தின் ஓர் அங்கம் என்கிற வகையில் சிபிஐ (எம்) -இந்தக் கருத்தின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தது என்பதனை சுயவிமர்சனமாக இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய ஒரு கணிப்பிற்கு வந்ததற்கான அடிப்படை பற்றி மதிப்பிடுவதும், மறுபரிசீலனை செய்வதும் அவசியமாகிறது.

2.12) இன்றைக்குப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது, முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி பற்றி அருந்திறலற்ற முறையில் புரிந்து கொள்ளப்பட்டது என்று கூற வேண்டியுள்ளது. முதலாளித்துவம் தகர்ந்து போவது வரலாற்றில் தடுக்க முடியாது என்கிற அம்சம், அது உடனடியாக நடக்க விருப்பது போல் பார்க்கப்பட்டது. இது ஒரு மோசமான தவறாகும்; முதலாளித்துவ நாடுகளில் நடந்து வந்த மாறுதல்கள் குறித்து சோசலிசத்தினால் வரும் சவால்களைச் சந்திக்க முதலாளித்துவம் கடைப்பிடிக்கும் அணுகு முறையும் திட்டவட்டமாக, விஞ்ஞான ரீதியாகப் பார்ப்பதை அந்தத் தவறு தடுத்தது, மார்க்ஸ் _- ஏங்கெல்ஸ் இருவரும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் விடுத்திருந்த பின்வரும் தெளிவான எச்சரிக்கை அந்தக் கட்டத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை: “உற்பத்திக் கருவிகளிலும், அதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், அத்துடன் சமுதாயத்தின் மொத்த உறவுகளிலும் தொடர்ந்து பெரும் மாற்றங்களைச் செய்யாமல் முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது’’.

2.13) முதலாளித்துவம் தகர்ந்துபோவது தடுக்க முடியாதது என்பது தானாகவே நடப்பதல்ல. முதலாளித்துவம் தூக்கியெறிப்பட வேண்டும். இதைத் தவறாகப் புரிந்து கொள்வது, உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், மார்க்சிச – லெனினிசத்தில் உறுதிப்பாடு கொண்ட ஒரு கட்சியின் தலைமையில் உழைக்கும் வர்க்கம் தீர்மானகரமாகத் தலையிட வேண்டியதன் அவசியத்தையும் மழுங்கடிக்கிறது. அந்த அகக்காரணி இன்றி எந்த ஒரு புரட்சிகர மாற்றமும் சாத்தியம் அல்ல.

2.14) மார்க்ஸ் _- எங்கெல்ஸ் இருவரும் உலக சோசலிசத்தின் வெற்றி என்பது மனிதகுலப் பரிணாமத்தில் முதலாளித்துவத்துக்குப் பிந்தைய கட்டம் எனக் கூறியதைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும். முதலாளித்துவப் பாதையில் வளர்ச்சியடைந்த குறைந்தபட்சம் சில பெரிய நாடுகளிலாவது முதலில் முதலாளித்துவம் தூக்கியெறிப்படும் என்ற அடிப்படையில்தான் இந்த உலகந்தழுவிய மாற்றத்துக்கான நடைமுறை பற்றி எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்ததும், உலகின் உள்ளார்ந்த முரண்பாடுகள் கூர்மையடைந்ததும் உலகத்தைப் பிணைக்கும் ஏகாதிபத்திய சங்கிலியை அதன் பலவீனமான கண்ணியில் உடைக்க முடியும் என்ற சாத்தியப்பாட்டிற்கு வழி வகுத்தது. “திட்டவட்டமான நிலைமைகள் பற்றிய திட்டவட்டமான மதிப்பீடு’’ என்ற புறக்கணிக்க முடியாத மார்க்சிய வழிமுறையை லெனின் தலைமையில் பயன்படுத்திய ரஷ்ய உழைக்கும் வர்க்கம் இந்த சாத்தியப்பாட்டினை ஒரு சகாப்தத்தை உருவாக்கும் யதார்த்தமாக மாற்றியது.

2.15) எனினும், மார்க்ஸ் _- எங்கெல்ஸ் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக முதலாளித்துவ ரீதியாக வளர்ச்சியடையாத, ஒப்பீட்டளவில் பின்னடைந்திருந்த நாடுகளில் (செக்கோஸ்லோவேக்கியா மட்டும் விதிவிலக்கு) சோசலிசப் புரட்சிகள் வெற்றி பெற்றன. எந்தவொரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டிலும் புரட்சி ஏற்படவில்லை என்பதாலேயே இந்த நாடுகளில் சோசலிசத்தை உறுதிப்படுவத்துவதில் வரம்புகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. ஒப்பீட்டளவில் கீழ் மட்டத்தில் இருந்த உற்பத்தி சக்திகளையும், அத்துடன் இணைந்து பின்னடைந்த நிலையிலிருந்த உற்பத்தியையும் சமுதாய உறவுகளையும் கணிசமாக உயர்த்த வேண்டியிருந்தது; சோசலிசக் கட்டுமானத்தை வலுப்படுத்தக் கூடிய நிலைகளுக்கு முதலாளித்துவ கட்டத்தைத் தாண்டி மிக அதிகபட்ச வேகத்திலும் உயர்த்த வேண்டியிருந்தது. குறிப்பாக இது விவசாயம் மற்றும் விவசாயிகள் விஷயத்தில் உண்மையான நிலைமையாக இருந்தது. குறுகிய உற்பத்தி அடிப்படையில் இருந்த விவசாயத்தை சோசலிச வழிமுறைகளுக்கு மாற்றுகிற மாபெரும் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது, ஒரு பின்னடைந்த நிலையிலிருந்த விவசாய மக்களை மாற்றத்திற்கு உட்படுத்துகிற சிக்கலான நடைமுறையாகும். முதலாளித்துவத்தால் வளர்க்கப்பட்ட உயர்ந்த உற்பத்தித் தொழில் நுட்பங்கள் இல்லாத நிலையில் சோசலிசத்தின் குரல்வளையை நெரிப்பதற்காக உலக முதலாளித்துவம் தன்னால் இயன்ற சகல வழிமுறைகளிலும் முயற்சி செய்து கொண்டிருந்த விரோதமான சர்வதேச சூழலில் முழுக்க முழுக்க உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே சார்ந்து இந்த நடைமுறையினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு பிரம்மாண்டமான பணியைச் செய்து முடிக்க முடிந்தது என்பது சோசலிச அமைப்பின் மேன்மைக்குச் சான்றாகும்.

2.16) ஆகவே, உலக முதலாளித்துவச் சந்தையின் பரப்பளவையும், செயல் மட்டங்களையும் சோசலிசப் புரட்சிகள் சுருக்கிவிட்டன என்றாலும் எந்தவொரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டிலும் சோசலிசப் புரட்சி நடக்கவில்லை என்பதால் இவற்றால் முதலாளித்துவத்தால் ஏற்கனவே வளர்க்கப்பட்டிருந்த உற்பத்தி சக்திகளின் அளவுகளையோ அதன் எதிர்கால ஆற்றலையோ அடிப்படையில் பாதிக்கமுடியவில்லை. எனவே சந்தையின் எல்லை சுருங்கிவிட்டது என்ற புதிய யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்வதும், அதே சமயத்தில் உற்பத்தி சக்திகளின் அளவுகளை உயர்த்துவதும் உலக முதலாளித்துவத்துக்கு சாத்தியமாயிற்று. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய காலக் கட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியை உலக முதலாளித்துவம் முடுக்கிவிட்டதிலிருந்து இது நிரூபணமாகிறது. இது, தன் பங்கிற்கு உலக முதலாளித்துவச் சந்தையை மிகப் பெருமளவுக்கு விரிவடையச் செய்து, அதன் வளர்ச்சிக்கு மேலும் ஊட்டமளித்தது.

2.17) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியோடு சேர்ந்து வளரும் நாடுகளைச் சுரண்டுவது அதிகரித்ததன் அடிப்படையிலேயே முதலாளித்துவத்தின் வளர்ச்சி பிரதானமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது; காலனி நாடுகள் விடுதலை பெற்றதைத்தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நவீன காலனியாதிக்கத்தை மேற்கொண்டதன் மூலம் மாறியநிலைமைகளுக்கு ஏற்ற வகையில் முதலாளித்துவ நாடுகள் தம்மை மாற்றியமைத்துக் கொண்டன.

2.18) அதே நேரத்தில் உலக முதலாளித்துவம் மாறிய நிலைமைகளுக்கு ஏற்றாற்போல் வேறு ஒரு மாறுபட்ட வழியில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சோசலிச சமுதாயம் அமைக்கப்பட்டதும் அதன் செயல்முறைகளும் உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கத்தினரிடையே – பொருளாதாரம், சமுதாயம் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகிய துறைகளில் – ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. முதலாளித்துவம் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக நலத்திட்டங்களை அமுலாக்கியதன் மூலமாகவும், அதற்கு முன் உழைக்கும் மக்களுக்கு வழங்க இணங்கியே இராத உரிமைகளை வழங்கியதன் மூலமாகவும் இந்தச் சவாலை ஓரளவு சமாளித்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மூலதன ஆட்சியை உயிரோடு வைத்திருப்பதற்காக முதலாளித்துவம் தனது லாபங்களில் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்தளிக்கும் கட்டாயத்துக்கு உள்ளானது. இன்று மனித நாகரிகத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகக் கருதப்படும் ஜனநாயக உரிமைகள் சமுதாய மாற்றத்திற்கான மக்கள் போராட்டத்தின் விளைவேயன்றி முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருணையால் வந்தவை அல்ல.

2.19) இத்தகைய அணுகுமுறையானது உற்பத்தி சக்திகளை மேலும் வளர்த்துக் கொள்ள உலக முதலாளித்துவத்துக்கு உள்ள ஆற்றலை மட்டுமல்ல, சோசலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளில் செல்வாக்கு செலுத்தும் திறனும் அதற்கு உண்டு என்பதையும் குறைத்து மதிப்பிட்டன. 1917_ஆம் ஆண்டிலிருந்து சோவியத் யூனியன், மக்கள் நல்வாழ்வுக்கான பொருளாதார வளர்ச்சி திட்டங்களிலிருந்து கணிசமான அளவு நிதியாதாரங்களைத் திசை திருப்பும்படி ஏகாதிபத்தியம் நிர்ப்பந்தித்து வந்தது. ஆரம்பத்தில் இராணுவத் தலையீடுகள், முற்றுகைகள், வர்த்தகத் தடைகள் மற்றும் இரண்டாம் உலக யுத்தம், சமீபத்தில் அணு ஆயுதப் போட்டி ஆகியவற்றின் மூலம் அந்த நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும், இந்தச் சவால்களை மீறி சோவியத் யூனியன் அணு ஆயுத பலத்தில் சமநிலையை அடைந்தது; அதன் மூலம் உலகத்தின் மீது தனது விருப்பங்களைத் திணிக்க முயன்ற ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு சோவியத் யூனியன் ஒரு வலுவான தடையாகச் செயல்பட்டது. அதே நேரத்தில், தேச விடுதலைப் போராட்டங்களுக்கும், இந்தியா உள்ளிட்ட புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் அவற்றின் பொருளாதாரங்களை அடிமைப்படுத்த ஏகாதிபத்தியம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அந்நாடுகள் நடத்திய போராட்டங்களுக்கும் சோவியத் யூனியன் உறுதியான ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் அளித்தது. ஏகாதிபத்திய சவால்களைச் சந்திப்பதற்காக நிதியாதாரங்கள் இவ்வாறு பெருமளவில் திருப்பிவிடப்பட்டதும், அத்துடன் ஆரம்பத்தில் பின்னடைந்த கட்டத்தில் இருந்த பொருளாதார மற்றும் கலாச்சார நிலைகளை உயர்த்துகிற பிரம்மாண்டமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமாகச் சேர்ந்து,சோசலிசத்தைக் கட்டுகிற நடைமுறையில் பல சிக்கல்களை உருவாக்கின.

2.20) இந்த புறச்சூழல்களோடு 1957, 1960 ஆம் ஆண்டுகளின் ஆவணங்களில் சோசலிச சக்திகள் பற்றி மிகை மதிப்பீடு செய்யப்பட்ட அகத் தன்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உலக நிலைமையில் ஏற்பட்ட மாறுதல்கள் தொடர்பாகவும், உள்நாட்டு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொடர்பாகவும் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான மாறுதல்கள் குறித்து ஒரு திட்டவட்டமான மதிப்பீடு செய்வதைத் தடுத்தது. சோசலிசத்தின் கீழ் உற்பத்திக் கருவிகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய உற்பத்தி சக்திகளின் வேகமான வளர்ச்சி, பொருளாதார நிர்வாக முறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை அவசியமாக்குகிறது. உண்மையில் முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளாகிய ஸ்புட்நிக்கை வானத்தில் செலுத்தியதன் மூலம் விஞ்ஞானத்தின் எல்லைகளை விண்வெளிக்கும் கொண்டு சென்றது சோசலிசம் தான்.

ஆனால் இந்த முன்னேற்றங்களை நுகர்பொருட்களின் தரத்தையும், எண்ணிக்கையையும் அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தவும் தேவையான உற்பத்தி முறையில் புதிய முனைப்புகளை பயன்படுத்துவதில் சுணக்கங்கள் இருந்தன.

புதிய தேவைகளை ஈடுகட்டுவதற்காகக் காலத்துக்கேற்ற வகையில் மேற்கொள்ளப்படும் மாறுதல்களுக்கு அடிப்படையான ஒரு விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு என்பது சோசலிச கட்டுமானத்தின் மிக அவசியமான ஒரு உட்கூறு ஆகும். இத்தகைய மாறுதல்கள் பொருளாதார நிர்வாக முறைகளோடும், உற்பத்தி உறவுகளோடும் மட்டும் சுருங்கிப் போவது அல்ல; சமுதாய உறவுகள் மற்றும் மேல் கட்டமானத்தோடும் தொடர்புடையவை ஆகும். இத்தகைய காலத்திற்கேற்ற மாறுதல்களை மேற்கொள்ளத் தவறியது, இன்றைய பின்னடைவுகளுக்குக் காரணமான பல பிரச்சனைகளை உருவாக்கின.

2.21) எனினும், இந்தத் தவறான மதிப்பீடுகளும் இன்றைய பின்னடைவுகளும் இருந்த போதிலும் கூட, இருபதாம் நூற்றாண்டு – குறிப்பாக அக்டோபர் புரட்சியிலிருந்து ஆரம்பமான காலகட்டம் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் மக்களின் பல்வேறு அளவிலான வெற்றிகளைக் கண்டது.

2.22) இந்த நூற்றாண்டின் முதலாளித்துவம் மனித குலத்தை கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்த இரண்டு காட்டுமிராண்டித்தனமான உலக யுத்தங்களில் தள்ளி விட்டது. அது தனது மனிதாபிமானமற்ற மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் காட்டுவதற்காக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தியது. நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதப் போட்டியில் உலகத்தைத் தள்ளிவிட்டது;  சோசலிசத்தை நோக்கி மனிதகுலம் முன்னேறுவதைத் தடுப்பதற்காக எண்ணற்ற யுத்தங்களைத் தொடுத்தது. சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டது. அரசுகளைக் கைப்பற்றும் சதிகளை ஏற்பாடு செய்தது. தனது நலன்களுக்கு உகந்த முறையில் பிற்போக்குத்தனமான சர்வாதிகார ஆட்சிகளைத் திணித்தது. அதன் மிக மோசமான காட்டுமிராண்டித்தனமான வடிவம் பாசிச சர்வாதிகாரங்களில் வெளிப்பட்டது.

2.23) இன்னொரு பக்கத்தில், சோசலிசப் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரிகத்திற்கு ஒரு வளமான உள்ளடக்கத்தைச் சேர்த்தன; பல நாடுகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கையை தேசிய அடக்குமுறை இல்லாமலும், சுரண்டலிலிருந்து விடுபட்டும் நடத்துவதைச் சாத்தியமாக்கின. இந்தத் தாக்கம், தேச விடுதலையையும் சமுதாய விடுதலையையும் நோக்கிச் செல்லும் மனித வளர்ச்சியின் எதிர்காலப் பாதையைத் தொடர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்த நடைமுறை நீண்டகாலம் பிடிக்கக்கூடியதாக, சிக்கலானதாக, மாறுதல்களும் திருப்பங்களும் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால், இந்த சகாப்தத்தின் அடிப்படைத் திசைவழி முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதாகவே உள்ளது.

2.24) எனினும் இந்த மாறுதல் காலத்தை உடனடியாக முதலாளித்துவம் தகர்ந்துவிடும் என்றும், உலக அளவில் சோசலிசம் வெற்றிபெறும் என்றும் முதிர்வற்ற முறையில் புரிந்து கொள்வது திருத்தப்பட வேண்டும். வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்கமற்ற சமுதாயத்துக்கு மாறுகிற காலகட்டமாகிய சோசலிசம் அதன் இலக்கணப்படியே பார்த்தால் உலகளவில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்டகாலத்துக்கு நீடித்திருக்கும் என்பதை உள்ளடக்கியதாகும். இது, சுரண்டல் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க விரும்புகிற எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும் மனிதகுல விடுதலைக்காக நிற்கும் புரட்சிகர சக்திகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் நடக்கும் காலமாகும். இந்தத் தொடர்ச்சியான போராட்டம் உலக அளவிலும் சோசலிச நாடுகளுக்கு உள்ளேயும் நடப்பதாகும்.

2.25) இந்தப் போராட்டத்தில் உலக சோசலிச சக்திகளின் வெற்றி அல்லது தோல்வி என்பது – எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் – சோசலிசக் கட்டுமானத்தில் எட்டப்படும் வெற்றி, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் ஏற்படும் வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கை, அவற்றைப் பற்றிய சரியான மதிப்பீடு ஆகியவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் சரியான பொருத்தமான அரசியல் நடைமுறைக் கொள்கை, மனித குலத்தை சோசலிசம் நோக்கி முன்னேற்றுகிறது.

2.26) தவறான கணிப்புகளும், மதிப்பீடுகளும் வரலாறு காட்டுவது போல் திரிபுகளுக்கும் சீர்குலைவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன. இவை, முதலாளித்துவ தத்துவார்த்த தாக்குதல்கள் துணைசேர, பற்பல சமயங்களில் கம்யூனிச இயக்கத்தை வர்க்கப் பிணைப்பிலிருந்தேகூட தடம்புரளச் செய்துள்ளன.

2.27) தவறான கணிப்புகளின் அடிப்படையில் ஏற்பட்ட திரிபுகளைச் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வரலாறு விளக்குகிறது. சிபிஐ(எம்) கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் பாசிசம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றம் பற்றிய தவறான கணிப்பு, எவ்வாறு சில கட்சிகள் தமது அரசியல் நடைமுறைக் கொள்கைகளையும் போராட்ட வடிவங்களையும் மாற்றிக் கொள்வதில் முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. சமாதான காலத்திய முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியானது அத்துடன் சில சோசலிச நாடுகளின் தேக்க நிலையும் சேர்ந்துகொள்ள வலதுசாரித் திருத்தல்வாதப் பிரமைகளைப் பரப்புவதிலும்  மார்க்சியத்தின் வர்க்க உள்ளடக்கத்திற்கும் புரட்சிகர சாராம்சத்திற்கும் குழிப்பறிப்பதிலும் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதையும் பல சந்தர்ப்பங்களில் சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகையதொரு பிரமையின் வெளிப்பாடுதான் யூரோ – கம்யூனிசம் (ஐரோப்பிய – கம்யூனிசம்)

2.28) இந்த வெளிச்சத்தில்தான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டையும் மாறிய சூழ்நிலைமைகளில் சக்திகளின் அணிச்சேர்க்கையை மதிப்பிடுவது என்ற பெயரில் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகப் பார்க்க வேண்டும். பாசிசத்தை வீழ்த்திய வெற்றியும் அதைத் தொடர்ந்து சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகளும் பொதுவாக உலக சோசலிசத்தின், குறிப்பாக சோவியத் யூனியனின் கவுரவத்தை உயர்த்தி செல்வாக்கை அதிகரித்தது. ஆனால், இந்த சாதகமான அம்சங்களைப் பயன்படுத்தி சோசலிசத்தை செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக, குருஷ்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை சமாதான சகவாழ்வு, சமாதானப்பூர்வமான போட்டி, சமாதானப்பூர்வமான மாற்றம் என்று முன் வைத்தது திருத்தல்வாதத்துக்கும் படுமோசமான வர்க்க ஒத்துழைப்புக்கும் வழிதிறந்துவிட்டது. அதன் விளைவாகப் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமலே போயின; சர்வதேச கம்யூனிச இயக்கத்தைப் பெரிதும் முடமாக்கின.

2.29) மாறிவரும் யதார்த்த நிலைமைகளுக்குத் தகுந்தாற்போல் முதலாளித்துவம் தன்னை மாற்றிக் கொண்டு வந்தது. புதிய சுரண்டல் முறைகளை உருவாக்கி வந்தது. சோசலிசத்திற்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தீவிரமாக்கியது. எனவே சோசலிசம் தத்துவார்த்த தாக்குதலையும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்த வேண்டியதாயிருந்தது. மாறாகத் திட்டம் தளர்ந்தது: பலவீனப்படுத்தப்பட்டது. இவ்வாறு, ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் மேலும் அரசியல் ஆதாயம் அடைய அனுமதிக்கப்பட்டது.

2.30) இத்துடன் இணைந்ததுதான் ஜோசப் ஸ்டாலினின் பங்கு பற்றிய வரலாற்றிற்குப் புறம்பான மதிப்பீடு ஆகும். சிபிஐ(எம்), தனது 1968 ஆம் ஆண்டின் பிளீனத்திலிருந்தே ஸ்டாலின் தலைமையின் ஆக்கப்பூர்வ அம்சங்கள் பற்றியும் எதிர்மறை அம்சங்கள் பற்றியும் தனது மதிப்பீட்டைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்துள்ளது. உட்கட்சி ஜனநாயக நடைமுறைகளும் சோசலிச சட்ட நடைமுறைகளும் சில நேரங்களில் மோசமாக மீறப்பட்டது பற்றி கடுமையான விமர்சித்துள்ள மத்திய குழுவின் 1990 மே மாதத் தீர்மானம் அதே நேரத்தில் பின் வருமாறு கூறியிருந்தது: “தனி நபர் வழிபாட்டைத் திருத்துவது என்ற பெயரில் சோசலிசத்தின் வரலாற்றையே மறுக்கும் அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. டிராட்ஸ்கியிசத்துக்கும் இதர தத்துவார்த்த திரிபுகளுக்கும் எதிராக லெனினிசத்தைப் பாதுகாத்ததிலும், சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டியதிலும், பாசிசத்தை முறியடித்து வெற்றிபெற்றதிலும், யுத்தத்தின் அழிவுகளிலிருந்து சோவியத் யூனியனை மீண்டும் தட்டி எழுப்பி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடப் போதுமான பலத்தை உருவாக்கியதிலும் ஜோசப் ஸ்டாலினின் மறுக்கமுடியாத பங்களிப்பு சோசலிசத்தின் வரலாற்றிலிருந்து அழிக்க முடியாததாகும்’’.

2.31) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20_வது மாநாட்டைத் தொடர்ந்து வந்த காலக்கட்டத்தில் கம்யூனிச இயக்கத்தில் அங்கம் வகித்த பல்வேறு கட்சிகளிடையேயான தத்துவார்த்த வேறுபாடுகள் விரிவடைந்தன. திருத்தல்வாத அணுகுமுறைக்கு எதிராக ஆரம்பத்தில் போராடிய சீனகம்யூனிஸ்ட் கட்சி பின்னர் தானே இடதுசாரி தன்னிச்சை வாதத் திரிபில் விழுந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த கலாச்சாரப் புரட்சியும் மூன்றுலகக் கோட்பாடும் பலவிதத் திரிபுகளுக்கு இட்டுச் சென்று உலக கம்யூனிச இயக்கத்தில் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து உலக கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட ஒற்றுமையின்மை உலகப் புரட்சிகர இயக்கத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சோசலிசத்தின் மீதும், வளரும் நாடுகளின் மீதும் ஏகாதிபத்தியம் மேலும் தாக்குதலைத் தொடுக்க மிகவும் உதவியாயிற்று.

2.32) இத்தகைய திரிபுகளுக்கு எதிரான உறுதியான போராட்டத்திற்கு மத்தியில் உதயமான சிபிஐ(எம்), மார்க்சிசம்  _- லெனினிசத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கிற போராட்டமும் வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளை சரியாகப் புரிந்து கொண்டு விளக்கமளித்து தலையிடுகிற ஆற்றலும் பிரிக்க முடியாதவை என வலியுறுத்திக் கூறுகிறது. ஒன்றில் தவறு ஏற்பட்டாலும் அது மற்றொன்றிலும் தவறு ஏற்படச் செய்துவிடும். மார்க்சிசம் எனும் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னவெனில் திட்டவட்டமான நிலைமைகள் பற்றிய திட்டவட்டமான ஆய்வுதான். எனவே மக்கள் போராட்டங்களை மேலும் முன்னேற்றுவதற்கான சரியான அரசியல் – நடைமுறைப் பார்வைகளை உருவாக்குவதற்காக உலக நிகழ்ச்சிப் போக்குகளின் இன்றைய தன்மை குறித்துப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

உலக சமுதாய முரண்பாடுகள்:

3.1) இன்றைய சகாப்தத்தின் நான்கு அடிப்படை முரண்பாடுகள் பற்றிய ஒரு முறையான ஆய்வின் மூலமாகத்தான் இன்றைய உலக நிகழ்ச்சிப் போக்குகளை புரிந்து கொள்ள முடியும் என்ற பார்வையில் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. உலக சோசலிச சக்திகளுக்கும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையேயான முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளின் மக்களுக்கும் இடையேயான முரண்பாடு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே உள்ள முரண்பாடு, முதலாளித்துவ நாடுகளில் மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு ஆகியவையே அந்த நான்கு முரண்பாடுகளாகும்.

3.2) இந்த நான்கு முரண்பாடுகளில் உலக அளவில் ஏகாதிபத்தியத்துக்கும், சோசலிசத்துக்கும் இடையேயான முரண்பாடுதான் இந்த சகாப்தத்தில் மையமான பாத்திரம் வகிக்கிறது என்ற பார்வையில் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது. மேலும் இந்த நான்கில் மற்ற எந்த ஒரு முரண்பாடும் தீவிரமடைந்து குறிப்பிட்ட ஒரு காலத்தில் மையமான முரண்பாட்டை அகற்றாமலேயே உலக நிகழ்ச்சிப் போக்குகளில் மைய இடத்தைப் பிடித்துக் கொள்ள முடியும்.

3.3) சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் இன்றைய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையிலும்கூட தற்போதைய வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளை மதிப்பீடு செய்யும்போது இந்தப் பார்வை செல்லுபடியாகக் கூடியதாகவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் இந்த அனைத்து முரண்பாடுகளும் தீவிரமடைந்திருப்பதைத்தான் காட்டுகின்றனவேயன்றி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதுபோல அவை மாறியிருப்பதாகக் காட்டவில்லை. அப்படிப் புரிந்துகொள்வதை சிபிஐ(எம்) வெளிப்படையாகவே மறுத்தது. தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் சிபிஐ(எம்)-யின் அப்போதைய மதிப்பீட்டை வலுப்படுத்தவே செய்கின்றன.

3.4) உலக சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய பின்னடைவுகளிலிருந்து அந்த மையமான முரண்பாடு தீவிரமடைந்திருப்பதே வெளிப்படுகிறது. இந்தப் பின்னடைவுகள் வரலாற்று நோக்கில் தற்காலிகமானதுதான் என்றாலும் சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலத்தை ஏகாதிபத்தியத்துக்குச் சாதகமாக மாற்றியுள்ளன. ஏகாதிபத்தியம் புதிய ஆக்கிரமிப்புகளைத் துவக்க இது அனுமதித்துள்ளது. புதிய உலக ஒழுங்கமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்தத் துடிப்பதன் மூலம்  ஏகாதிபத்தியம் அதை ஏற்கனவே செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இராக் நாட்டிற்கு எதிரான யுத்தத்தில் அதன் நடத்தை எத்தியோப்பியா மற்றும் அங்கோலா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள்; பனாமா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் அதன் வெளிப்படையான தலையீடு, சோசலிச கியூபாவுக்கு எதிரான அதன் வெளிப்படையான தலையீடு, சோசலிச கியூபாவுக்கு எதிரான அதன் புதுப்பிக்கப்பட்ட அராஜகம் இவை அனைத்தும் உலக ஆதிக்கத்தில் தனது தலைமையை வலுப்படுத்திக்கொள்ளும் ஏகாதிபத்திய குணத்தை வெளிப்படுத்துகின்றன. தனது ஏகாதிபத்திய சுரண்டலுக்குச் சந்தையைத் திறந்துவிடுமாறு மக்கள் சீன குடியரசு மீது பெரும் நிர்ப்பந்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம்.

3.5) மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடையவே செய்யும். பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாகவும் நியாயமற்ற வர்த்தக விதிகள் மூலமாகவும் இதர முறைகளிலும் தங்குதடையற்ற சுரண்டல் நீடிக்கிறது. இதன் விளைவாக வளரும் நாடுகளின் மக்களது வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது. 1980 ஆம் ஆண்டுகளில் உண்மையான சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி விகிதத்தில் சீனா தவிர்த்து இதர வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையேயான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைந்திருப்பதை சர்வதேச நிதிநிறுவனத்தின் 1990ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எழுபதாம் ஆண்டுகளின் பத்தாண்டு காலத்தில், வளர்ச்சி மட்டங்கள் அப்பட்டமாக ஏற்றத்தாழ்வாகவே இருந்தன என்றாலும் கூட வளர்ச்சி விகிதங்கள் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. இந்த விபரங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் வளர்ச்சி விகிதாச்சாரமும் அடங்கும். இதைச் சேர்க்கவில்லை என்றால் சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி விகிதத்தில் உள்ள இடைவெளி மிக அதிகமாக இருக்கும். உண்மையில் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 1990ஆம் ஆண்டின் சராசரி தனிநபர் உண்மை வருமானம் அதன் முழுமையான அர்த்தத்தில் 1981இல் இருந்ததைவிட குறைவானதாகும்.

3.6) மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் தீவிரமடைந்திருப்பது அந்த நாடுகளின் முதுகொடியும் அளவுக்கு அழுத்திக் கொண்டிருக்கும் கடன் சுமையில் பிரதிபலிக்கிறது. 1982ஆம் ஆண்டுக்கும், 1990ஆம் ஆண்டுக்கும் இடையே கடன் சுமை 429.1 பில்லியன் (42,910 கோடி) அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. இதே காலத்தில் அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்தப்பட்ட கடன் தொகையோ 1155.3 பில்லியன் (1,15,530 கோடி) டாலர்களாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வளரும் நாடுகளிலிருந்து மொத்தம் 726.2 பில்லியன் (72,620 கோடி) டாலர் அளவுக்கு நிதியாதாரங்கள் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்தக் காலகட்டத்தில் வளரும் நாடுகள் திருப்பிச் செலுத்திய மொத்தத் தொகை 1289.5 பில்லியன் (1,28,950 கோடி) டாலர்கள்; இது 1990 வாக்கில் சேர்ந்திருந்த மொத்தக் கடனாகிய 1265.2 பில்லியன் (1,26,520 கோடி) டாலர்களை விட அதிகமாகும். கடன்களின் மூலம் இந்நாடுகளின் பொருளாதாரம் உறிஞ்சப்படுவதையே இது பிரதிபலிக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரங்களை உயர்த்த வேண்டுமென்ற தனது கருணையின் விளைவுதான், தனது பெருந்தன்மையின் விளைவுதான் நிதிக் கடன்கள் என்று ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்கிறதே, அது எவ்வளவு பொய்மையானது என்பதை இந்த விபரங்கள் எடுத்துரைக்கின்றன.

3.7) ஒரு பக்கம் இவ்வாறு மூன்றாம் உலக நாடுகளின் நிதியாதாரங்கள் பச்சையாக அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அதிகரித்து வரும் வேலையின்மை, பணவீக்கம் முதலிய காரணங்களால் அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படுகின்றன. இது, பல நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடித்த பிற்போக்குத்தனமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகும். அதன் பலனாக அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மேலும் மேலும் ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமான விளைவு என்னவெனில், ஏகாதிபத்திய லாபங்கள் மற்றும் உள்நாட்டுப் பிற்போக்குக் கொள்கைகள் ஆகிய இரண்டு சுமைகளும் வளரும் நாடுகளின் உழைக்கும் மக்கள் தோள்களிலும், வேலை கிடைக்காதோர் தோள்களிலும்தான் விழுகின்றன. ஐ.எம்.எப். அறிக்கைப்படி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் பணவீக்க விகிதாச்சாரம் (நுகர்வோர் விலைகளின் வருடாந்தர மாற்ற விகிதம்) சர்வதேச ஒப்பீட்டளவில் 1990ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் ஆகும். வளரும் நாடுகளில் இந்த விகிதம் 71 சதவிகிதம் ஆகும். 1988இல் அந்த ஒப்பீட்டு விகிதங்கள் முறையே 3.3 சதவீதமாகவும் 70.5 சதவீதமாகவும் 1989-ல் 4.4 சதவீதம் 104.1 சதவீதம் என்றும் இருந்தன!

3.8) அத்துடன் வளரும் நாடுகளின் வர்த்தக நிலைமைகள் மோசமான அளவில் சீர்குலைந்து வந்துள்ளன. 1990_இல் எரிபொருள் அல்லாத அடிப்படைப் பொருட்களில் வளரும் நாடுகளுக்கான வர்த்தக நிலைமைகளில் வருடாந்தர சதவீத மாற்றம் 11.2 சதவீதம் குறைவாகும். (மைனஸ் 11.2%) இவ்வாறாக, அந்த நாடுகளின் அன்னியச் செலாவணி கையிருப்பு நிலைமை தொடர்ந்து சீரழிந்து, அந்த நாடுகளை பெரும் கடனாளிகளாக்கி வருகின்றது.

3.9) சுரண்டல்கள் தீவிரமடைந்துள்ள இந்த நிலைமைகளில் மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தமது வாழ்க்கை நிலைமைகளின் மீது மேலும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதைச் சந்திக்க வேண்டியிருக்கும். நரவேட்டையாடும் இந்தப் பெரும் கொள்ளையின் விளைவாக இந்தச் சூறையாடல்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்கவே செய்யும். அதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கும் வளரும் நாடுகளின் மக்களுக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடையும்.

3.10) “புதிய உலக ஒழுங்கமைப்பு’’ என்பதன் பெயரால் ஆக்கிரமிப்புத்தனமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதைத் தொடர்ந்து அரசியல் களத்திலும் இந்த முரண்பாடு தீவிரமடையும்.

3.11) இந்த நிலைமைகளில் புரட்சிகர இயக்கங்களில் ஒரு முக்கியமான பகுதி, முதலாளித்துவப் பாதையை ஏற்றுக் கொண்டுள்ள மூன்றாவது உலக நாடுகளில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களாகும். இந்த நாடுகளின் முதலாளித்துவ _ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், மக்களைச் சுரண்டி, ஒருபுறம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொண்டு ஒரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடித்துக் கொண்டு, மறுபுறம் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து வருகின்றன. உலக முதலாளித்துவ நெருக்கடியின் பளுக்களை மூன்றாவது உலக நாடுகளின் மீது மாற்றிவிட இத்தகைய தீவிரமான முயற்சி நடைபெறும்போது, இந்த நாடுகளிலுள்ள மக்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டம் வளரவேண்டியது நிச்சயமாகும்.

3.12) ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளும் தீவிரமடைந்து வருகின்றன. 1990_இல் அனைத்து தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதம்; அமெரிக்காவிலோ அது 1.7 சதவீதமாகவே இருந்தது. அதே ஆண்டில் அமெரிக்காவின் நடப்புக் கடன் பாக்கிக் கணக்கில் 113.3 பில்லியன் (11.330 கோடி) டாலர்கள் அளவுக்குப் பற்றாக்குறையாக இருந்தது. அதே நேரத்தில் ஜப்பானின் கணக்கில் 57.4 பில்லியன் (5,740 கோடி) டாலர்களும் ஜெர்மனியின் கணக்கில் 62.3 பில்லியன் (6,230 கோடி) டாலர்களும் உபரியாக இருந்தன. 1993_இ-ல் ஜெர்மனி மற்றும் ஒருங்கிணைந்த ஐரோப்பாவின் உற்பத்தி உலகின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதமாக இருக்கும் என்றும், ஜப்பானின் உற்பத்தியோ 15 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் கடனாளி நிலைமை அதிகரித்து வருவதன் பின்னணியில் இந்த வளர்ச்சி முறைகள் பொருளாதார களத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதல்களுக்கான உட்சூழல் இருப்பதையே காட்டுகின்றன. இன்னொரு பக்கத்தில் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவாகியிருப்பது பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற இதர ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார மோதல்களை ஏற்படுத்தவே செய்யும். உலகப் பொருளாதார ஆதாரங்களை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியில் இந்த முரண்பாடு தீவிரமடைவதுதான் வெளிப்பட உள்ளது. எனினும், பொருளாதாரப் பகைமை வளர்ந்து வருகிறபோதிலும்கூட அதனுடைய அணு ஆயுதம் மற்றும் இராணுவ மேன்மை காரணமாக ஏகாதிபத்திய முகாமில் அமெரிக்காவின் தலைமை தற்போதைக்கு நீடிக்கவே செய்கிறது.

3.13) முதலாளித்துவ நாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு கூர்மையான பொருளாதாரப் பின்னடைவை அனுபவிக்கவில்லை என்றாலும் அவை நீண்டதொரு காலமாக ஒரு மெதுவான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. பல வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் ஏற்கனவே பொருளாதாரப் பின்னடைவுகளை அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. இந்த மெதுவான வளர்ச்சி விகிதத்தோடு வேலையின்மை மற்றும் பணவீக்கத்தின் விகிதங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின் இப்பொழுதுதான் வேலையின்மை அளவுகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன. இந்த மெதுவான வளர்ச்சி விகிதம் உழைக்கும் மக்களின் சமூக நலத் திட்டங்களில் பல வெட்டுகளை நிர்ப்பந்தமாக ஏற்படுத்தி வருகிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 1970ஆம் ஆண்டில் 24 மில்லியனாக (2 கோடியே 40லட்சம்) இருந்தது என்றால் 1988_இல் அது 32 மில்லியனாக (3 கோடியே 20 லட்சம்) அதிகரித்தது. வறுமையும் வீடற்ற நிலைமையும் அதிகரித்து வருகிறது. தனி நபர் சொத்தில் சுமார் 25% வரை மக்களின் மேல் தட்டில் உள்ள 1.5சதவீதம் பேர்களது உடைமையாக உள்ளது. தேசத்தின் சொத்தில் 65 சதவீதம் வரை மேல்தட்டைச் சேர்ந்த 10% பேர்களின் உடைமையாக உள்ளது. இந்தச் சூழல்களில், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே தீவிரமடைந்து வரும் முரண்பாடுகள் மேலும் தீவிரமடையவே செய்யும். எனினும், ஏற்கனவே குறிப்பிட்டதுபோல முதலாளித்துவம் தனது பிரச்சனைகளைச் சமாளிக்கவும், சாகசம் செய்யவும் இன்னும் ஆற்றல் உள்ளதாகவே இருக்கிறது.

3.14) ஆக, இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் இன்றைய சகாப்தத்தின் அனைத்து அடிப்படை முரண்பாடுகளும் தீவிரமடையவிருக்கிற உலகமாகும். எனினும் வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகள் தொடரும்போது இந்த முரண்பாடுகளின் தீர்வுக்கான வடிவங்கள் பல்வேறு வகையாக இருக்கும். உதாரணமாக, இந்த முரண்பாடுகளை ஒரு யுத்தத்தின் மூலமாகத் தீர்ப்பதற்கு இந்த அணு ஆயுத யுகமே கடுமையான வரையறைகளை ஏற்படுத்துகிறது. எனினும் இவ்வாறு வடிவங்களில் ஏற்படும் மாறுதல்களை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தவறாக விளக்கமளித்ததுபோல, முரண்பாடுகள் மட்டுப்பட்டு வருவதாக புரிந்து கொள்ளக்கூடாது. முரண்பாடுகள் பற்றிய மேற்கண்ட ஆய்வு, ஏகாதிபத்தியம் தனது கொள்ளைச் சுரண்டல் குணத்தைக் கைவிடுவதற்கு மாறாகச் சுரண்டலைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. உண்மையில் கடந்த பத்தாண்டு காலத்தில் உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் மக்களைக் கசக்கியதின் மூலமாகத்தான் முதலாளித்துவம் வளர்ந்து வந்துள்ளது.

3.15) இந்த யதார்த்த நிலைமை முதலாளித்துவத்தின் அநியாயமான, மனிதநேயமற்ற தன்மையையே தெளிவாக வெளிப்படுத்துகிறது. வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், துயரத்திலும், நோயிலும், கல்வியின்மையிலும் தவிக்கிற பயங்கர நிலைமை இருக்கிறது என்றால் அதற்கு முதலாளித்துவத்தின் பேராசைமிக்க கொள்ளைதான் காரணம். அணு ஆயுதப் பேரழிவு அபாயங்களுக்கும், உயிரின வாழ்க்கைச் சூழல் படுமோசமாகி வருவதற்கும் முதலாளித்துவம் தான் நேரடிப் பொறுப்பாகும். முதலாளித்துவ சமுதாயங்களில் தார்மீக நியாயங்கள் மற்றும் நெறிமுறைகளின் சீரழிவு அதிகரித்து வருகிறது. போதைப் பழக்கங்கள், வன்முறைகள், இனப் பாகுபாடுகள், மாதர்களுக்கு எதிரான சிறுமைகள் போன்றவை மனிதர்களின் உன்னத குணங்களைத் தொடர்ச்சியாகத் தகர்த்து வருகின்றன. சோசலிசத்தின் பின்னடைவுகளைத் தொடர்ந்து, “முதலாளித்துவம் நிலையானது’’ என்ற நெடுங்காலத்திய பிரச்சாரம் இன்று தீவிரமாகியிருந்தாலும் கடந்த காலத்தைப் போலவே இன்றும் முதலாளித்துவத்தால் மனிதகுலத்தைத் தாக்கும் பெரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியாது என்பது நிரூபணமாகி வருகிறது.

3.16) இந்தப் பின்னணியில், உலக சோசலிச சக்திகளுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் எதிர்வரும்  காலம் தீவிரமான வர்க்கப் போராட்டக் காலம் என்பதை உணர்த்துகின்றன.

சோசலிச நாடுகளில் சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள்

4.1) பெரெஸ்த்ரோய்க்கா (மறுசீரமைப்பு), கிளாஸ்நாஸ்த் (வெளிப்படைத்தன்மை) என்ற கோஷங்களுடன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கி வைத்த சீர்திருத்தங்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அவை ஏற்படுத்திய விளைவுகளும் சோசலிச அரசு மற்றும் கட்சியின் மட்டத்தில் அதன் தத்துவார்த்த, அரசியல் அடித்தளங்களில் ஒரு உள்ளார்ந்த நெருக்கடி இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த நெருக்கடியை விஞ்ஞான ரீதியாக மதிப்பிடவும் சரியான பாடங்களைக் கற்கவும் மேலும் தகவல்களும், ஆழமான ஆய்வும் தேவைப்படுகின்றன. எனினும் கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் நடப்புகளின் அடிப்படையில் சில முடிவுகளுக்கு வருவது சாத்தியமே ஆகும்.

4.2) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் 1985_இல் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் 1986_இல் 27வது மாநாட்டில் ஒரு திட்டவட்டமான வடிவத்தை அடைந்தன. அந்த சீர்திருத்தங்கள் புரட்சிகர லட்சியம் சோசியலிசத்தை பலப்டுத்துவதுதான் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சீர்திருத்தங்கள் தேவைதான் என மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றிருந்தது.

4.3) சோசலிசப் பொருளாதாரத்தில் ஓரளவு தேக்க நிலைக்கு இட்டுச்சென்ற சில கடந்தகால தவறுகளையும், திரிபுகளையும் சரிப்படுத்துவதற்கும் சமாளித்துத் திருத்துவதற்கும் சீர்திருத்தங்களின் தேவை ஏற்பட்டது; பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டிருந்த பணியாகிய, சோசலிச உணர்வை மக்களிடையே மேம்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது; ஜனநாயக உரிமைகளையும் சமூக சுதந்திரங்களையும் மீறுவதற்கு இட்டுச்சென்ற அதிகார வர்க்கப் போக்கை அகற்றவேண்டிய தேவை இருந்தது. சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தது; மக்களின் அதிகரித்து வரும் தேவைகளை நிறைவு செய்வதற்காக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவாக முடுக்கிவிட வேண்டிய அவசியம் இருந்தது.

4.4) சிபிஐ(எம்) மத்தியக்குழு 1988 ஆகஸ்டில் பின்வருமாறு கூறியது: “மார்க்சிச _- லெனினிச அடிப்படையில் தனது நிலையை எடுக்கும் கட்சி என்ற முறையில் நாம் எந்தவொரு நாட்டிலும் சோசலிசத்தை மேம்படுத்துவது என்பது பொருளாதார நிர்வாகம், அரசு நிர்வாகம் ஆகிய இரண்டிலும் மக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்கிறோம். “ஒவ்வொரு சமையல்காரரும் அரசை நிர்வாகிக்கக் கற்றுக் கொண்டாக வேண்டும்’’ என்று லெனின் கூறியது அதிகரித்துவரும் யதார்த்தமாக இருந்தாக வேண்டும். வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் ஒரு திட்டவட்டமான வடிவத்திலான இந்த முன்முயற்சிகள் மேலும் மேலும் அதிகமான மக்களை ஈர்க்கின்றன. மக்களின் உணர்வுப் பூர்வமான பங்கேற்புக்கு உதவும் நடவடிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. அவை ஆதரிக்கப்பட வேண்டியவை. அனாவசியமான கட்டுப்பாடுகளிலிருந்து குடிமக்களை விடுவிக்கிற சோசலிச சமுதாய வரம்புகளுக்குள் ஆரோக்கியமான விவாதங்களை அனுமதிக்கிற நடவடிக்கைகள் சமுதாயத்தைப் பலப்படுத்துகின்றன.

ஆனால், மார்க்சிச -_ லெனினிசத்தின் வழிகாட்டும் பாத்திரமும் பாதுகாக்கப்பட்டு சமுதாயத்தின் தலைமைச் சக்தியாக தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கட்சியின் பாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டால்தான் இத்தகைய நடவடிக்கைகள் சமுதாயத்தைப் பலப்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளவும், கூர்மையாகக் குறித்துக் கொள்ளவும் வேண்டும்.

4.5) கிளாஸ்நாஸ்த், பெரெஸ்த்ரோய்கா மூலம் சோசலிசத்துக்கு எதிரான போக்குகள் உருவாக ஆரம்பித்தது குறித்து சிபிஐ(எம்) மீண்டும் மீண்டும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தது. சோசலிசத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக முதலாளித்துவ வழிமுறைகள் கோர்பச்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் சிறிது சிறிதாகக் கொடுக்கப்பட்டு வந்தன.

4.6) இந்த எதிர்மறைப் போக்குகள், கடந்தகால சோசலிச சாதனைகளை ஒரேயடியாக நிராகரித்ததில் கூர்மையாக வெளிப்பட்டன. 1988 ஆகஸ்ட்டில் சிபிஐ(எம்) மத்தியக் கமிட்டி பின்வருமாறு கூறியது: “கடந்த காலம் பற்றிய சரியான அணுகுமுறை, சோசலிசத்தை பலப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை அமுலாக்கும் நடைமுறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த கால சாதனைகள் மறுக்கப்படுகின்றன. அக்டோபர் புரட்சிக்குப் பின் சோசலிசத்தின் பெருமைமிகு சாதனைகள், உள்நாட்டு யுத்த சவால்களையும் ஏகாதிபத்திய முற்றுகைகளையும், தலையீடுகளையும் வெற்றி கொண்டது. சோசலிசப் பொருளாதாரம் கட்டப்பட்டது. பாசிஸ எதிர்ப்பின் மகத்தான வெற்றி, அந்தக் காலக்கட்டத்தில் கோடிக் கணக்கான சோவியத் மக்கள் செய்த தியாகங்கள், உறுதியான சமாதானக் கொள்கை மற்றும் ஒரு அணு யுத்தத்தை தவிர்ப்பதற்கான போராட்டம், அமெரிக்காவுடன் அணு ஆயுத பலத்தில் சமநிலையை எட்டிய சாதனைகள், மகத்தான தொழிலாளி வர்க்க அரசியல் சாசனம் ஆகிய இந்த அடித்தளங்களின் மேலேயே புதிய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு அர்த்தம் இருக்கும்.

4.7) கடந்த காலத்தின் சிதைவுகளையும் திரிபுகளையும் விமர்சிக்கிற அதே நேரத்தில் இந்தச் சாதனைகளைத் திட்டமிட்டே புறக்கணித்ததன் மூலம் கடந்த கால பாட்டாளி வர்க்க வரலாற்றிலிருந்து சீர்திருத்தங்களைத் துண்டிக்கிற, தொழிலாளி வர்க்கத்தின் எதிர்கால புரட்சிகர ஆற்றலுக்கு தடை விதிக்கிற ஒரு கண்ணோட்டம்தான் உருவானது. கட்சி அணிகளும், மக்களும் இவ்வாறாக சோசலிச விரோத சக்திகளின் இடைவிடாத தாக்குதலை எதிர் கொள்வதில் நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டனர்.

4.8) இது சோசலிசத்துக்குக் குழி பறிக்க எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிற ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டை அனுமதிக்கவும் செய்தது. இந்தத் தலையீடுகளின் தொடர்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய அரசுகள் ஒருசில வாரங்களிலேயே தகர்ந்ததையும் காண முடிந்தது.

4.9) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி 27வது காங்கிரசின் ஆவணங்களில் உள்ள வழிமுறைகளிலிருந்து ஆழமாக விலகிச் சென்றது. மொத்தத்தில் கோர்பச்சேவ் தலைமையில் சோசலிசத்தை தகர்க்கிற, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை உடைக்கிற ஒரு திட்டமிட்ட முயற்சியாக மாறின.

4.10) சர்வதேச நிலைமைகளைப் பற்றிக் கூறும்போது, 27வது கட்சிக் காங்கிரஸ் அடிப்படையான நான்கு முரண்பாடுகள் தீவிரமடைந்திருப்பதற்கு முக்கியத்தும் அளித்திருந்தது. வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கையானது சமாதானம், முன்னேற்றம் மற்றும் சோசலிசத்துக்கு சாதகமாக இருந்தன என்று உறுதிபடக் கூறியது. எனினும் அதற்குப் பின் விரைவிலேயே 1987_இல் “புதிய சிந்தனை’’ என்ற பெயரால் இந்தப் பார்வை கைவிடப்பட்டது. முரண்பாடுகள் மாற்றமடைந்துள்ளது என்ற கோட்பாடு முன் வைக்கப்பட்டது. சிபிஐ(எம்) இந்த மதிப்பீட்டை ஏற்கவில்லை. 1988_இல் வெளிப்படையாகவே அதை அறிவித்தது. பின்னர் சோவியத் கட்சி ஒரு நகல் கோட்பாடு அறிக்கையை வெளியிட்டது. 28-_வது காங்கிரஸ் அதனை அங்கீகரித்தது. “மனித நேய ஜனநாயக’’ சோசலிசம் என்ற கருத்தை முன்  வைத்த இந்தக் கோட்பாடு வர்க்க நலனுக்கு மாற்றாக “உலகளாவிய மனித நலன்’’ என்பதை வலியுறுத்தியது. இன்றைய ஏகாதிபத்தியம் பற்றிய பிரமைகளைப் பரப்பி ஏகாதிபத்தியத்துக்கு மனித நேயச் சான்றளித்தது. அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் கோட்பாடு அடிப்படைகளைக் கைவிடுவது என்பதை வலியுறுத்தியதன் மூலம் சோவியத் கட்சி ஏகாதிபத்தியத்துடனான எந்த ஒரு மோதலையும் நிராகரித்தது. அதனுடைய ஒத்துழைப்புடன் “ஒரு பாதுகாப்பான நாகரிக உலக ஒழுங்கமைப்பை’’ உருவாக்க முயன்றது. சிபிஐ(எம்) மத்திய கமிட்டியின் 1990 மே மாதத்திய தீர்மானம் இதைப் பற்றியும் இதர தவறான கருத்தோட்டங்கள் பற்றியும் விவரமாகப் பரிசீலித்தது. இந்த நடைமுறை 29-_வது மாநாட்டிற்காக சுற்றுக்கு விடப்பட்ட நகல் திட்டத்தில் இறுதிக் கட்டத்தை அடைந்தது. அதில் ஏகாதிபத்தியத்தைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அது மட்டுமல்ல, அதற்கு மேலும் சென்று “இன்றைய உலகில் வளர்ச்சியின் நடைமுறையில் உருவாக்கப்பட்டுவரும் ஒரு புதிய நாகரிகமானது பாரம்பரிய தொழில் சமுதாயம் பற்றிய வழக்கமான கண்ணோட்டங்களையும், எதிரெதிர் வர்க்கங்கள் என்ற அதன் கறாரான பிரிவினையையும், உழைப்புக்கும், மூலதனத்துக்கும் உள்ள தனித்தனி அணிச்சேர்க்கையையும், சமுதாய அமைப்புகளுக்கு‍ இடையேயான மோதலையும் மறுக்கிறது’’ என்றும் கூறியது. இவ்வாறாகப் பயணம் முடிவடைந்தது. சோவியத் கட்சியைப் பொறுத்த வரையில் சமுதாயத்தில் இன்று வர்க்கப் பிரிவினைகள் கிடையாது. உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையே பகைமை கிடையாது. ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையே மோதல் கிடையாது. இருந்தபோதிலும் 29-வது காங்கிரஸ் நடப்பதற்கு முன்பாகவே சோவியத் கட்சியின் நடவடிக்கைகள்,  கோர்பச்சேவாலேயே சட்ட விரோதமானவை என ஆணையிடப்பட்டது!

4.11) பொருளாதாரத் துறையில் “வளர்ந்துவரும் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான பொருத்தமின்மையை சரி செய்வது’’ என்று நோக்கத்திற்காக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதாரத்தைப் பரவலான வளர்ச்சியிலிருந்து ஆழமான வளர்ச்சிக்கு மாற்றும் நோக்கத்துடன் 27_-வது காங்கிரஸ் அறிக்கையில் அவர்களது சீர்திருத்தங்கள் குறித்துப் பின்வருமாறு சுருக்கமாக கூறப்பட்டது: “சோசலிசப் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதும், நடைமுறையில் சோசலிசத்தை உறுதிப்படுத்துவதும் தான் நிர்வாகம் மற்றும் சோசலிச உற்பத்தி உறவுகளின் மொத்த அமைப்பை முன்னேற்றுவதன் தலையாய அம்சங்களாக இருக்க வேண்டும்.’’ ஆனாலும், சோசலிசப் பொருளாதாரம் முடுக்கிவிடப்படுவதற்கு மாறாக, திட்டமிட்ட வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. 28-_வது காங்கிரசால் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாட்டு அறிக்கையானது மத்திய திட்டமிடலின் பங்கினைக் கைவிட்டு முழுமையான சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வெளிப்படையாகப் பரிந்துரைத்தது. தனியார் முன் முயற்சியை ஊக்குவிப்பது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கூட்டுறவு அமைப்புகள் அனுமதிக்கப்பட்டன; அவை லாபக்குவிப்புக்கும் கறுப்புச் சந்தைக்குமான பிரதான வழிமூலங்களாக மாறின. ஐந்தாண்டு காலத்தில் அந்தப் போட்டிப் பொருளாதாரமானது மிகப் பெரும் அளவிற்கு வளர்ந்தது. பொருள்களின் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கியது. நல்ல அறுவடையன்று நடந்திருந்த போதிலும், சோவியத் யூனியன் உணவு உதவி கேட்டு உலகத்தை வலம் வர வேண்டியிருந்தது. நடைமுறையில் இருந்த உற்பத்தி அமைப்புகள் கைவிடப்பட்டன; பரவலான வர்த்தகச் சூதாட்டமும், கறுப்புச் சந்தையும், பதுக்கலும் தழைத்திருக்க அப்பட்டமான அராஜகம் மேலோங்கியது. ஒரு சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அனைத்தும், நடைமுறையில் முதலாளித்துவத்தை மீட்டமைக்கும் செயல்முறையைத் துவக்கி வைப்பதில்தான் முடிவடைந்தன.

4.12) கட்சியின் பாத்திரம் திட்டமிட்டவகையில் சீர்குலைக்கப்பட்ட.து 27_-வது காங்கிரசில் அங்கீரிக்கப்பட்ட கட்சித் திட்டம் “தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற முறையில் அதன் வர்க்க சாராம்சத்தையும் தத்துவத்தையும் தக்க வைத்துக் கொள்கிற கம்யூனிஸ்ட் கட்சி’’ என்று கூறியது. “சோவியத் சமுதாய வாழ்வின் கட்சியின் தலைமைப் பாத்திரம் தவிர்க்கப்பட முடியாததாக வளர்கிறது’’ (அழுத்தம் மூலப்படிவத்தில் உள்ளபடி) என்று உறுதிப்படுத்தியது. ஆனால் 28-வது காங்கிரஸ் அறிக்கை “எந்தவொரு வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கும் இடமில்லை’’ என்று கூறுகிறது. நடைமுறையில் கட்சியின் தலைமைப் பாத்திரம் கைவிடப்பட்டது. நிர்வாக ஜனாதிபதி என்று பதவி உருவாக்கப்பட்டது. அவரது அதிகாரங்களில் கட்சிக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. லெனினின் போல்ஷ்விக் கட்சியை வெறும் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றுவது 29_-வது காங்கிரசிற்காகத் தயாரிக்கப்பட்ட நகல் திட்டத்தில் பூர்த்தியானது.

4.13) தத்துவார்த்தத் துறையில் மார்க்சிச _- லெனிசத்தின் புரட்சிகர _ சாராம்சம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 27_வது காங்கிரசின் கட்சித் திட்டம் “கட்சியின் பலத்திற்கும் வெல்லற்கரிய ஆற்றலுக்கும் மிக முக்கியமான ஊற்று எதுவெனில் கட்சியின் தகர்க்க முடியாத தத்துவார்த்த மற்றும் ஸ்தாபனப் பிணைப்புதான்’’ என்றும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட மார்க்சிச — லெனினிச கொள்கைகளான பாட்டாளி வர்க்க, சோசலிச சர்வதேசியவாதக் கொள்கைகளால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிலையாக வழிகாட்டப்படுகிறது’’ (அழுத்தம் மூலப் படிவத்தில் உள்ளபடி) என்றும் கூறுகிறது. ஆனால் 28வது காங்கிரஸ், சமூக ஜனநாயகத்துடனான பிணக்கைச் சரிப்படுத்துவதற்காகவும், “சோசலிச இயக்கத்தின் வரலாற்றுப் பிளவுக்கு’’ முடிவு கட்டுவதற்காகவும் வாதாடியது. தத்துவார்த்த அடித்தளத்தைக் கைவிடுவது 29–வது காங்கிரசின் நகல் திட்டத்தில் பூர்த்தியானது. அது,  “இந்த நாட்டாலும் உலகின் மீதிப்பகுதிகளாலும் உருவாக்கப்பட்ட சோசலிச ஜனநாயக கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றி வைத்துக் கொண்டு மார்க்சிச – – லெனினிசத்தை அகற்றுகிறது. பாட்டாளி வர்க்க சோசலிச சர்வதேசியவாதத்துக்கு மாறாக வர்க்கப் போராட்டம் இருப்பதையே நிராகரிக்கிற சோசலிசத்தின் வரலாற்று ரீதியான எதிர்காலம் பற்றிய ஒரு புதிய பார்வை வைக்கப்படுகிறது.

4.14) சோசலிச ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்குலீபீ பதிலாக தேசிய இனவெறி தடையின்றி வளர அனுமதிக்கப்பட்டது. தேசிய இனப் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வு காண்பது குறித்து முக்கியத்துவம் அளித்த 27-வது காங்கிரசின் கட்சித் திட்டம் பின் வருமாறு கூறியது: “நூற்றுக்கு மேற்பட்ட தேசங்களும் தேசிய இனங்களும் கூட்டாகச் செயல்படுகிற நமது சோசலிசம் பல தேசிய இன நாட்டில் தேசிய உறவுகளை முன்னேற்றுகிற புதிய கடகைமள் இயல்பாகவே தோன்றுகின்றன என்ற உண்மையை கவனத்தில் கொண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது’’ (அழுத்தம் மூலப்படிவத்தில் உள்ளபடி) அக்டோபர் புரட்சியானது பல்வேறு தேசிய இனங்களை ‘ஜார் சிறைக் கூடத்திலிருந்து’ விடுவித்தது. பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டி ஒரு ஜனநாயக தேசிய இனக் கொள்கை உருவாக்கப்பட்டது; அது இந்த இனக்குழுக்கள், இவைகளின் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. எனினும் ஒரு காலக்கட்டத்தில், எதிர்மறைப் போக்குகள் வளர்ந்தன. பிரச்சனைகள் குவிந்தன. அதிகார வர்க்கப் போக்கு நடைமுறையில் மொழிகளின் சமத்துவக் கொள்கை மீறப்படுவது, அளவுக்கு மீறிய மத்திய அதிகாரக் குவிப்பு – இவை அனைத்தும் அதிருப்தி வளர்வதற்கு இட்டுச் சென்றன. அதிருப்தி வேறொரு கோணத்திலிருந்தும் தோன்றியது. இந்த பல்வேறு தேசிய இனங்கள் குறிப்பாக பிற்பட்ட தேசிய இனங்கள், சோசலிசத்தின் கீழ் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. பல நூற்றாண்டுகளாக அறியப்படாதிருந்த இந்த முன்னேற்றங்கள் இந்த மக்களிடையே புதிய உயர்ந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின. இத்தகைய – கலாச்சார அறிவார்ந்த, பொருளாதார எதிர்பார்ப்புகளைச் சந்திக்கத் தவறியது, அதிருப்தியும், அவநம்பிக்கையும் பெருகுவதற்கு இட்டுச் சென்றது. ஆயினும், இவற்றிற்குச் சோசலிசக் கட்டமைப்புக்கு உள்ளேயே தீர்வு காண்பதற்கு மாறாக, சோசலிச விரோத சக்திகள் இனவெறியை விசிறி விடுவதற்கு இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டன. அது ரத்தக் களறியான கலவரங்களுக்கு இட்டுச் சென்றது. 27_-வது காங்கிரசின் முடிவையும், சோவியத் கட்சி 1989-இல் அங்கீகரித்த தேசிய இனங்கள் பற்றிய அணுகுமுறை அறிக்கையையும், சோசலிச சோவியத் குடியரசுகள் ஒன்றியத்தின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்குப் பெரும் ஆதரவு தெரிவித்த 1991-ஆ-ம் ஆண்டின் கருத்து வாக்கெடுப்பையும் தெளிவாக மீறி சோவியத் யூனியனின் ஒருமைப்பாடு உடைவதற்கான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் ஒரு புதிய ஒன்றிய உடன்பாட்டில் 1991- ஆகஸ்ட் 20–இல் கையெழுத்திட கோர்ப்பசேவ் தயாரானார். இவை அனைத்தினுடைய விளைவு இந்த 74 ஆண்டுகளாக உலகம் அறிந்திருந்த சோசலிச கூட்டமைப்பு இப்போது இல்லை என்பதேயாகும்.

4.15) சிபிஐ(எம்) இந்த ஆண்டுகளில் அவ்வப்போது மேற்கண்ட அம்சங்களில் பலவற்றைக் குறித்து தனது ஒப்புதலின்மையை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தது என்ற போதிலும், சோவியத் யூனியனிலும் உலகத்திலும் சோசலிச லட்சியத்திற்கு இப்படி விலகிப் போன போக்கு விளைவித்த கேடுகளின் ஆழத்தையும் பரிமாணத்தையும் அதனால் கணிக்க முடியவில்லை என்பதை சுயவிமர்சனத்தோடு குறிப்பிட்டாக வேண்டும்.

4.16) கோர்பச்சேவ் தலைமையில் நடந்த இந்த சோசலிசத்தைத் தகர்க்கும் திட்டமிட்ட நடைமுறையை ஏகாதிபத்தியத்தின் முனைப்பான உதவியுடன் எதிர்ப்புரட்சி சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் சமாதானப்பூர்வமான படிப்படியான மாற்றம் என்ற தனது திட்டத்தை ஏகாதிபத்தியத்தால் வெற்றிகரமாக, அமுலாக்க முடிந்தது. இதற்காக அது, தகவல் மற்றும் செய்தித் தொடர்பு தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

4.17) மக்கள் சீனக் குடியரசில் சோசலிசத்துக்கு உள்நாட்டிலேயே குழிபறிக்க ஏகாதிபத்தியம் 1989-இ-ல் மேற்கொண்ட இத்தகைய ஒரு முயற்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் மக்கள் விடுதலைப் படையாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

4.18) சோவியத் யூனியனிலும் கூட சோசலிசத்தைத் தகர்க்கும் நடைமுறையை எதிர்க்கவும், ஒன்றியம் உடைபடுவதைத் தவிர்க்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இது தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து தீவிரமான கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்கள் ஆரம்பமாயின.

4.19) எனினும், இந்த முயற்சிகளுடன் கூட, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் பெற்ற வெற்றிகளுக்குக் கட்சி, அரசு ஆகிய இரண்டிலிருந்துமே மக்களை அன்னியப் படுத்திய, அவர்களது அதிருப்திக்கு வழிவகுத்த கடந்தகால குறைபாடுகள், தவறுகள் மற்றும் திரிபுகளே காரணமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். இவற்றை வெற்றி கொள்வதற்குப் பதிலாக 20_-வது கட்சி காங்கிரசிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த திருத்தல்வாத கொள்கைகள் கோர்ப்பசேவ் காலத்தில் தீவிரமடைந்து இறுதியில் சோசலிசம் சிதைக்கப்படுவதற்கும், சோவியத் யூனியன் சிதறுண்டு போவதற்கும் வழிவகுத்தது.

பிரதான தவறுகள்:

5.1) இந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட சோசலிச நிர்மாணம் சம்பந்தமான பல முக்கியமான பிரச்சனைகளை இந்த நிகழ்ச்சிப் போக்குகள் முன்னுக்கு கொண்டு வந்துள்ளன. ஆகவே சரியான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது உள்ள நிலைமைக்கு இட்டுச் சென்ற முக்கியமான தவறுகள், திரிபுகள் ஆகியவற்றைக் கண்டறிவது அவசியம்.

5.2) இருப்பினும்,இவை பற்றி விவாதிப்பதற்கு முன்னதாக சோசலிச நிர்மாண நடவடிக்கை என்பது இதுவரை மனித குல வளர்ச்சியில் வரையறுத்துக் கூறப்படாத பாதையாக இருந்தது என்பதை கோடிட்டுக் காட்டுவது அவசியம். வரலாற்றுத் தொலைநோக்குப் பார்வையோடு இந்த இயக்கப் போக்கையும் சோசலிச நாடுகளின் அனுபவத்தையும் புரிந்து கொண்டு சில அடிப்படையான தவறுகளை இனங் கண்டறிவது சாத்தியமாகும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் – சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கத் தன்மை

5.3.-1) பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முன்னாள் சுரண்டும் வர்க்கங்களான சிறுபான்மையினர் மீது மிகப் பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம்; இது மிகப் பெரும்பான்மையினர் மீதான சிறுபான்மையினரின் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிரானது. இதுதான் வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்கமற்ற சமுதாயத்திற்கு மாறிச் செல்லும் காலத்தில் அரசின் தன்மையாக இருக்கும்.

5.3-.2) இருப்பினும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவங்கள் நிலையானதாகவோ அல்லது மாற்ற முடியாததாகவோ இருக்காது. சோசலிச சமுதாயம் வளர்ந்திடும்பொழுது இதன் வடிவங்கள் பல்வேறுபட்ட கட்டங்களைக் கடந்து செல்கிறது.

5.3-.3) ஒரு கட்டத்திலிருந்து, மற்றொன்றுக்கு மாறிச் செல்வதற்கான திறன் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உள்ள வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கை மற்றும் அதன் சரியான மதிப்பீடு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகள், உள்நாட்டு யுத்தம், பிறந்திருக்கும் சோசலிசத்தை அழிப்பதற்கான எல்லா முயற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில் பாட்டாளி வர்க்க அரசு எதிர்ப்புரட்சியை ஒடுக்கிச் சுரண்டல் சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டியிருந்தது. இது மையப்படுத்தப்பட்ட அரசு அமைப்பை தேவையாக்கியது. திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கட்டுவதற்கும் இது அவசியமாக இருந்தது. இருப்பினும், இந்தக் கட்டத்திற்குப் பிறகு சோசலிச அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டதும், வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கை இதற்கு சாதகமாக மாறியதும் ஜனநாயகத்தை விரிவுபடுத்தவும், புதிய முன் முயற்சிகளை திறந்துவிடுவதற்குமான வாய்ப்புகள் உருவாயின. துரதிஷ்டவசமாக யதார்த்த நிலைமையைத் தவறாக மதிப்பீடு செய்ததானது பிந்தைய காலங்களிலும் அரசு அமைப்பை முந்தைய முறையிலேயே நடத்திச் செல்வதற்கு இட்டுச் சென்றது. இது பெருந்திரளாக மக்களைப் பங்கு பெறச்செய்து சோசலிச ஜனநாயகத்தின் முழுசக்தியை விரிவுபடுத்தி, ஆழப்படுத்துவதைச் சாதிப்பதில் தோல்விக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாது அதிகார வர்க்க போக்கு வளர்வது, சோசலிச சட்டநீதிகள் மீறப்படுவது, தனிநபர் சுதந்திரம் _ உரிமைகள் ஒடுக்கப்படுவது போன்ற சீர்குலைவுகளுக்கும் வழிவகுத்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவத்தை உயர்ந்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இயக்கம் என்பது சோசலிச ஜனநாயகத்தை முற்போக்கான முறையில் செழுமைப்படுத்த வேண்டுமென உணர்த்துகிறது.

5.3-.4) இருப்பினும், திரிபுகளை திருத்துவது என்பதன் பேரால் அரசின் வர்க்கத் தன்மையை கைவிட்டுக் விடக் கூடாது. அவ்வாறு கைவிடுவது புரட்சியையே கைவிடுவதாகும்.

5.3-.5) சோசலிச கட்டமைப்பிற்குட்பட்டு கருத்து வேறுபாடு கொள்வதற்கான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் இதைச் செய்யும் போதே அரசின் வர்க்கத் தன்மையையோ அல்லது கட்சியின் முன்னணிப் பாத்திரத்தை¬யோ கைவிட்டுவிடக் கூடாது. புரட்சியை வெற்றிகரமாக முடிப்பதிலும், சோசலிச நிர்மாண நடவடிக்கைகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்ற முறையில் கட்சி தலைமைப் பாத்திரத்தை வகிக்கிறது. உண்மையில் இது அரசு என்று ஒன்று இருக்கும் வரை அதற்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறது.

5.3-.6) வடிவங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு சோசலிச நாட்டிலும் ஏற்படும் திட்டவட்டமான நிகழ்ச்சிப் போக்குகளை தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால் – இவை -பல்வேறு சோசலிச நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; இருக்கவும் முடியாது; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் குறிப்பிட்ட வடிவம் ஒரு சோசலிச நாட்டின் திட்டவட்டமான சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் இந்த நாடுகளின் வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்தே இருக்கும். லெனின் “அரசும் புரட்சியும்’’ என்ற நூலில் பின்வருமாறு தெளிவாகக் கூறுகிறார்: ‘‘முதலாளித்துவ அரசுகளின் வடிவங்கள் மிகவும் வேறுபடுகின்றன. ஆனால் இவற்றின் உள்ளடக்கம் இந்த எல்லா அரசுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இவை என்ன வடிவில் இருந்தாலும் இறுதியாக ஆராய்ந்து பார்த்தால் இவை தவிர்க்க முடியாதவாறு முதலாளித்துவ சர்வாதிகாரமாகவே உள்ளது. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்ல நிச்சயமாக ஏராளமான, மாறுபட்ட அரசியல் வடிவங்களுக்கு உட்பட வேண்டும். ஆனால் இவற்றின் சாராம்சம் தவிர்க்க முடியாத வகையில் ஒன்றாகவே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கும் (அழுத்தம் நம்முடையது)

5.3-.7) பாரீஸ் கம்யூன் தவிர வேறு வரலாற்று அனுபவம் இல்லாததால் சோவியத் யூனியனில் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் எழுந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவம் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்தல நிலைமைகள், வரலாற்று வளர்ச்சிப் போக்குகளை கணக்கில் கொள்ளாமல் அப்படியே பின்பற்றப்பட்டது.

5.3-.8) இது இந்த நாடுகளில் சோசலிச ஜனநாயகத்தை வளர்த்து ஆழப்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. ஏனென்றால், வரலாற்று வளர்ச்சியால் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே முதலாளித்துவ நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு, இவற்றோடு தொடர்புடைய உரிமை இதர மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இந்த நாடுகளில் பாட்டாளி வர்க்க அரசின் வடிவம் மக்கள் ஏற்கனவே பெற்றிருந்த பலன்களை இயல்பாகவே உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், அரசு அதிகார வர்க்கத்தனம், செயல்பாட்டில் ஏற்பட்ட குறைகள், சோசலிச சட்ட நியதிகள் அப்பட்டமாக மீறப்படுவது பரவியது ஆகியவை மக்கள், அரசு மற்றும் கட்சியிடமிருந்து அன்னியப்பட்டு செல்வதற்கு இட்டுச் சென்றன.

5.3-.9) குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான திரிபு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் ஒரு வர்க்கம் முழுவதின் அதாவது மிகப் பெரும்பாலோரின் சர்வாதிகாரம் என்பது குறித்ததாகும். நடைமுறையில், இந்த வர்க்க சர்வாதிகாரம் என்பது முன்னணிப் படையான கட்சியின் சர்வாதிகாரமாகவும், பல நேரங்களில் கட்சித் தலைமையின் சர்வாதிகாரமாகவும் ஆகி வந்திருப்பதை சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன.

5.3.-10) மக்கள் திரளுடன் இடைவிடாத நெருக்கமான தொடர்பு, அரசு மற்றும் நிர்வாக செயல்பாட்டில் அவர்களை சம்பந்தப்படுத்துவது மற்றும் சோசலிசத்தை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பது ஆகியவற்றின் மூலமே கட்சி தன்னுடைய முன்னணிப் பாத்திரத்தை வகிக்க முடியும். அரசியல் சட்ட ஆணை அடிப்படையில் கட்சி முன்னணிப் பாத்திரம் வகிப்பது உண்மையில் பாட்டாளிகள் அரசின் வர்க்கத் தன்மையிலிருந்தே தடம்புரண்டு செல்வதாகும். சோசலிச ஜனநாயகத்தை ஆழப்படுத்தி சோசலிச அரசின் செயல்பாட்டில் மேலும்மேலும் மக்களை ஈர்ப்பதற்குப் பதிலாக இந்தத் திரிபுகளின் விளைவால் அரசு மற்றும் கட்சியிடமிருந்து மக்கள் அன்னியப்பட்டுச் செல்வது அதிகரித்தது.

சோசலிச ஜனநாயகமும், ஜனநாயக மத்தியத்துவமும்

5.4-.1) சோசலிச அமைப்பினால் உருவாக்கப்படும் பொருளாதார அடிப்படையிலேயே சோசலிச ஜனநாயகம் உயிர்வாழ்ந்து பலமடைய முடியும். இது கடந்த காலத்தில் மக்கள் போராட்டங்கள் மூலம் பெற்ற ஜனநாயகத்தின் பலன்களை முன்னெடுத்துச் செல்கிறது. சுரண்டலை ஒழிப்பதும், வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அளிப்பதும் விரிவான ஜனநாயக நடைமுறைக்கான பொருளாதய அடிப்படையை அளிக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் சம்பிரதாயமானதாகவே இருக்கிறது; சில ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப் படுத்துகிறது. ஆனால் அவற்றை மக்கள் பயன்படுத்துவதற்குத் தேவையான பொருளாதய அடித்தளத்தைத் தருவதில்லை. முதலாளித்துவ நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உற்பத்தியாகக் கூடிய அனைத்தையும் வாங்குவதற்கு “ஜனநாயக உரிமை’’  இருக்கிறது. இருப்பினும், மிகப் பெரும்பாலான மக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்குத் தேவையான நிதியாதாரங்களைப் பெற்றிருக்கவில்லை. மறுபுறம் சோசலிசம் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு விரிவாகவும், ஆழமாகவும் உண்மையான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படையை அமைக்கிறது. ஆகவே மனித ஆளுமையின் அனைத்து அம்சங்கள் மற்றும் தன்மைகள் ஆக்கப்பூர்வமாக வளர்வதற்கு ஏற்ற வழி முறைகளையும், சூழ்நிலைமைகளையும் அளிக்கிறது. நாம் மேலே விவாதித்த தடம்புரளும் செயல்களும், திரிபுகளும் இத்தகைய முன்னேற்றத்திற்குத் தடங்கலை ஏற்படுத்தின. அதேநேரத்தில் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கான பொருளாதய அடிப்படையை சோசலிச அமைப்பு உருவாக்கியிருந்ததையும் கோடிட்டுக் காட்ட வேண்டும்.

5.4.-2) சோசலிசச் சட்ட நீதிகள் மனிதகுல வரலாறு இதுவரை அறிந்திராத உரிமைகளை உத்தரவாதப்படுத்துகின்றன. ஒவ்வொரு குடிமகனும் இந்த உரிமைகளை பயன்படுத்துவதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை இவை திறந்துவிட்டன. இருப்பினும், அதிகார வர்க்கப் போக்கு மற்றும் இதரப் போக்குகள், சுயாட்சி பெற்ற அரசின் ஸ்தல அமைப்புகளான சோவியத்துகள் மற்றும் கூட்டு உழைப்பு நிறுவனங்களில் மக்களைப் பங்கெடுக்கச் செய்வதன் மூலம் அரசு, நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் விரிவான அளவு மக்களை பங்கெடுக்கச் செய்வதைத் தடுத்தன. இவை சோசலிசச் சட்ட நீதிகள் மீறப்படுவதற்கே இட்டுச் செல்ல முடியும்.

5.4.-3) உணவு, இருப்பிடம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தி சோசலிச ஜனநாயகம் தொடர்ந்து ஆழமாக விரிவடைந்து மேலும்மேலும் அதிகப்படியான மக்களை அரசு மற்றும் சமூக செயல்பாடுகளில் ஈர்க்க வேண்டும். இதனைச் செய்யத் தவறுவது குறிப்பாக, மக்களுடைய தத்துவார்த்த உணர்வு கடுமையாகக் குறைந்துள்ள சூழ்நிலையில் இதனைச் செய்யத் தவறுவது சோசலிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு மேலும் தீனி போடவே செய்யும்.

5.4.-4) ஜனநாயக மத்தியத்துவம் ஒரு புரட்சிகர கட்சியை உருவாக்கும் கோட்பாடுகளின் அடிப்படைத் தூண் ஆகும். அது ஜனநாயகம், மத்தியத்துவம் ஆகிய இரண்டின் அம்சங்களையும் ஒன்றிணைக்கிறது. சோசலிசத்தை இவை இரண்டும் வெற்றிகரமாக உறுதிப்படுத்தவும், நிர்மாணிக்கவும் அவசியமாகும்.

5.4-5) அன்னிய தத்துவார்த்த போக்குகளை எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உள்கட்சி ஜனநாயகம் ஜீவனான அம்சமாகும். ஆகவே, பெரும்பான்மையின் முடிவுகளை அமுல் நடத்துவதில் கறாரான ஒழுக்கத்தை அமுல் நடத்தும் அதே நேரத்தில் உள்கட்சி ஜனநாயகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்; பலப்படுத்தப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக மத்தியத்துவத்தின் பேரால் உள்கட்சி ஜனநாயகம் பொதுவாகப் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அதிகார வர்க்கப் போக்கு வளர்வதற்கு இட்டுச் சென்றது; இது ஜனநாயகத்திற்கே நேர் எதிரானது. சோசலிசத்திற்கு அன்னியமான ஊழல் மற்றும் வேண்டியவருக்குச் சலுகை காட்டும் போக்குகள் தலைதூக்கின. இதற்கு ஒரு உதாரணம், சோவித் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளின் பெரும் பகுதியினருக்குத் தனி சலுகைகள் அதிகாரப் பூர்வமாக வழங்கப்பட்டதாகும். இந்த நடவடிக்கைகள் இந்தப் புரட்சிகரக் கோட்பாட்டின் ஜீவனை கொள்ளையிட்டன. மக்கள் திரளிலிருந்து கட்சியும், தலைமையிடமிருந்து கட்சி அணிகளும் அன்னியப்பட்டன.

5.4.-6) ஜனநாயக மத்தியத்துவத்தை அமுல்படுத்துவதில் ஏற்படும் திரிபுகளை சரிப்படுத்துவதற்குப் பதிலாக இந்தக் கொள்கையைக் கைவிடுவது புரட்சிகர கட்சி அதன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற விடாது. அதனை நிராயுதபாணியாக்கும் நோக்கத்திற்கே உதவும். உள்கட்சி ஜனநாயகம் ஆபத்திற்குள்ளாக்கப்பட்டு மத்தியத்துவம் ஆதிக்கம் வகிக்கும் இடத்தில் இந்தப் புரட்சிகரப் கோட்பாடு இழிவுபடுத்தப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை சமீபத்திய நிகழ்ச்சிகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வாறு கட்சியை, மக்கள் கூட்டாகச் சரிபார்ப்பதும்,அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இதர அன்னிய போக்குகளுக்கு எதிராக கட்சித் தலைமையை கட்சி அணிகள் கண்காணித்து சரிபார்ப்பதும் குழி பறிக்கப்பட்டது.

5.4.-7) மக்கள் திரளின் உணர்வுகள், அவர்களுடைய விசுவாசம், சோசலிசம்,தேசபக்தியை முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாடு, கூட்டான நடவடிக்கை, ஆக்கப்பூர்வமான முன்முயற்சி ஆகியவற்றிலிருந்து சோசலிஸ்ட் அரசு அளப்பரிய தார்மீக சக்தியையும் பலத்தையும் பெறுகிறது. கீழ் மட்டத்திலிருந்து வரும் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது உணர்வுப் பூர்வமான அரசியல் நடவடிக்கையாகும். இது ஒரே குறிக்கோளுடன் ஒன்றுபட்டுள்ள மக்களுக்கு சோசலிச நாட்டின் உண்மையான எஜமானர்கள் தாங்கள்தான் என்ற உண்மையான உணர்வை அளிக்கிறது.

சோசலிசப் பொருளாதார நிர்மாணம்

5.5-.1) சோசலிச பொருளாதார நிர்மாணத்தின் அடிப்படையான குணாம்சம், உற்பத்தி சாதனங்களை சமுதாய உடமையாக்குவதும் மையப்படுத்தப்பட்ட அரசு திட்டமிடலுமாகும். முதலில் சொல்லப்பட்டது மனிதனை மனிதன் சுரண்டுவதற்கான அடிப்படையை ஒழித்துக்கட்டக் கூடியது. பின்னால் கூறப்பட்டது – முதலாளித்துவத்தின் குணாம்சமான அசமத்துவ வளர்ச்சிக்கு எதிராக சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி சமநிலையில் இருப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்தக்கூடியது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் சோசலிஸ்ட் அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய சமூகப் பொருளாதார பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படையையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த வழிமுறைகள் மூலம் சோசலிசம், அதன் குடிமக்கள் அனைவருக்கும் உலகளாவிய கண்ணோட்டத்தில் அவர்கள் வாழ்வதற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படைத் தேவைகளை உத்தரவாதப்படுத்துகின்றது. சோசலிசத்தின் கீழ் திட்டமிடுதல் என்பது அப்போது இருக்கக்கூடிய உற்பத்தி சக்திகளின் அளவு நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதீதமான மையப்படுத்தும் நடவடிக்கை, கீழ்மட்டத்தில் உற்பத்தியைக் தூண்டிவிடக் கூடிய முன்முயற்சி மற்றும் கண்டுபிடிப்பை அடக்குவதாக இருக்கும். இது உற்பத்தி சக்திகள் மேலும் வளர்வதற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5.5.-2) “ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியம்’’ என்பதுதான் சோசலிசப் பொருளாதார கொள்கை. ஆகவே இந்தக் காலத்தில் பொருளாதார ஊக்குவிப்புகள் (விணீtமீக்ஷீவீணீறீ மிஸீநீமீஸீtவீஸ்மீs) அளிக்கும் பிரச்சனை இதில் உள்ளடங்கி இருக்கிறது. இந்தக் காலத்தில் பொருளாதார ஊக்குவிப்பு வழங்குவது அவசியம்தான். ஆனால் அதேநேரத்தில் அனைத்து மக்களுடைய ஒட்டுமொத்தமான கூட்டு உணர்வு மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே சோசலிசம் நிலைத்து நின்று செழிக்க முடியும் என்பதனைக் கோடிட்டு காட்ட வேண்டியுள்ளது.

5.5-.3) உற்பத்தி சாதனங்களை சமுதாயமயமாக்கி, மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் முறையை ஏற்படுத்தி விட்டால் அதன் பிறகு குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சூழ்நிலையில் அப்போது இருந்த பொருளாதார நிர்வாக முறையே அந்த மாறிய காலம் முழுவதும் தொடர்ந்து நிலைத்து இருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவது மேம்போக்கான தவறான முடிவாகும். உண்மையில், சோசலிசப் புரட்சிகள் வெற்றியடையும் பின்தங்கிய பொருளாதாரம் உள்ள நாடுகளில் உற்பத்தி சாதனங்களைச் சமுதாய மயமாக்குதல் என்பதே நீண்டகாலம் பிடிக்கக் கூடியதாகவுள்ளது.

5.5.-4) பொருளாதார நிர்வாக முறைகளை தொடர்ந்து காலத்திற்கேற்ப மாற்றம் செய்யவேண்டியதன் தேவை மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களைச் செய்யாவிட்டால் பின்னர் தீவிர பொருளாதார வளர்ச்சிக் காலத்தைத் தொடர்ந்து தேக்க நிலையோ அல்லது வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சியோ கூட ஏற்படும். இதுதான் 1970-ஆ-ம் ஆண்டுகளின் பிந்திய பாதி ஆண்டுகளிலும் 1980-ஆ-ம் ஆண்டுகளிலும் உண்மையில் சோவியத் யூனியனில் நடந்துள்ளது. மேலும் சோசலிச உறவுகளை உறுதிப்படுத்தியதற்குப் பிறகு மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அதிகப்படியான அளவிலும் உயரிய தரத்திலும் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தேவை எழுகின்றன. சோசலிச பொருளாதாரத்தின் திறனுக்கு ஏற்ற வகையில் மக்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறினால் அது அதிருப்தியைத் தான் உருவாக்கும். ஏகாதிபத்தியத்தின் சோசலிச எதிர்ப்பு பிரச்சார பீரங்கிக்குத் தான் தீனி போடும்.

சொத்துடைமை வடிவங்கள்

5.5.-5) சோசலிச நிர்மாண நடவடிக்கைகளுக்கான கால அளவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆரம்பத்தில் இருந்த வரலாற்றுப் பூர்வ நிலைகளைப் பொறுத்து உடைமைகளை சமுதாய மயமாக்கும் போக்கு நீண்டகால கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். அரசுக்கும் சொந்தமான நிறுவனங்கள், கூட்டமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், சிறு தனிநபர் சொத்துகள் என மாறுபட்ட உடைமை முறைகள் இருக்கின்றன. சொத்துக்களைச் சமுதாய மயமாக்கும் நடவடிக்கையின் வேகம் என்பது இந்த சோசலிச நாடுகளில் இருந்த பின்தங்கிய பொருளாதாரத்தின் ஆரம்பகட்ட நிலைகளைப் பொறுத்தே இருக்கும். மேலும் இது உள்நாட்டுக்குள் இருக்கும் வர்க்க சக்திகளின் திட்டவட்டமான பலாபலத்தையும் மற்றும் சர்வதேச அளவில் வர்க்க எதிரிகள் கொடுக்கும் நிர்ப்பந்தத்தையும் பொறுத்தே இருக்கும். வரலாற்றுச் சூழ்நிலை மற்றும் உற்பத்தி சக்திகள் ஏற்கனவே அடைந்துள்ள வளர்ச்சிக்கட்டத்திற்கு ஏற்றாற் போலவே இந்த நடவடிக்கையின் வேகம் இருக்க வேண்டும் என்பதே மிகச் சரியானதாகும். வர்க்க எதிரிகள் உள்நாட்டிற்குள்ளும் வெளி நாடுகளிலும் ஒன்றுபட்டு தாக்குதல் நடத்தும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் சோசலிசத்தை நீடித்திருக்கச் செய்வதற்காகத் துரிதப்படுத்தப்படலாம். இப்படி சொத்துக்களைச் சமுதாயமயமாக்குவதைத் துரிதப்படுத்துவதை திணிக்கும் இந்தப் புறக்காரணிகளே சில பொருளாதார சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த செயல்முறையில் சில திரிபுகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் வர்க்க சக்திகளின் பலாபலத்தைத் தவறாக மதிப்பீடு செய்வதும் பல்வேறு முறையில் உள்ள சொத்துரிமையாளர்களின் உரிமைகளை மக்கள் பங்கெடுப்பின் மூலமாக இல்லாமல் அரசு பலாத்காரத்தின் மூலம் செய்வது கடுமையான திரிபு வாதத்திற்கு இட்டுச் செல்லும். இதன் மூலம் மக்கள் அந்நியப்பட்டு செல்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுவது மட்டுமல்லாது எதிர் காலத்தில் பொருளாதாரத் திறனிற்கும் தடைகள் ஏற்படுத்தப்படும்.

5.5.-6) உடைமை வடிவங்களை நெளிவுசுளிவற்ற இறுகலான அமைப்பிற்குள் கொண்டு வர மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் தனிநபர் முன் முயற்சிகளை அழித்துவிடும். சோசலிச உணர்வுக்கு முரணாக சோம்பேறித்தனத்தையும் அந்நியமாய்ப் போகும் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பது உண்மை. அதே நேரத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சீரழிவுகளிலிருந்து மீடேறவும் ஒரே வழி தனிநபர் சொத்துரிமையை ஏற்படுத்துவது தான் என்று கருதி அதற்காக முயற்சிப்பது சோசலிச பொருளாதார அடிப்படையின் அடித்தளத்திற்குக் குழி பறிப்பதாகும்.

திட்டமிடலும் சந்தையும்

5.5.-7) அரசு தலையீடு இல்லாத அல்லது கட்டுப்பாடு கூட இல்லாத சுதந்திரச் சந்தை இருக்க வேண்டுமென்று கருதுவது வரலாற்றுக்கு விரோதமானது; விஞ்ஞான பூர்வமற்றது, பகிரங்கச்சந்தை முதலாளித்துவம் என்று அழைக்கப்படும் பொருளாதாரங்களிலும் கூட சந்தையை ஒழுங்குபடுத்தும் தீர்மானகரமான ஒழுங்குமுறைகள் அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அரசே, நிதி மற்றும் நாணயக் கொள்கைகள் பற்றி முடிவுகளை எடுக்கிறது; இவை சந்தை சக்திகளின் செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவோ அல்லது குறைக்கவோ செய்கின்றன.

5.5-.8)சோசலிசத்தின் கீழ் சந்தையே இருக்காது என்ற முடி¬வுக்குச் செல்வதும் தவறானதாகும். சரக்குகளின் உற்பத்தி நடக்கும்வரை சந்தை இருக்கும். இங்குள்ள முக்கியமான கேள்வி திட்டமிடுதலா அல்லது சந்தையா என்பதல்ல. மாறாக, எது எதன்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதுதான். சோசலிசத்தின் கீழ் சந்தை என்பது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வினியோகிக்கப்பதற்கான ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. சந்தை சக்திகளின் மற்றும் சந்தை அறிகுறிகளைப் பயன்படுத்திக் கொண்டு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது உற்பத்தி சக்திகளைத் திறம்பட வளர்த்து நல்வாழ்வுக்கான மக்கள் தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, சந்தை அறிகுறிகளை புறக்கணிப்பது பெருமளவில் குளறுபடியான முறையில் செல்வாதாரங்களை பயன்படுத்துவதற்கு இட்டு செல்லும். இது திட்டமிடும் நடவடிக்கைகளையே மோசமாகப் பாதிக்கும்.

5.5-9) இத்தகைய இணைப்பை வளர்த்தெடுத்துச் செல்வதற்குப் பதிலாக அரசு திட்டமிடலை சந்தையைக் கொண்டு மாற்றுவதும், சோசலிச நிர்மாணத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான முன்னுரிமைகளை சந்தை சக்திகளைக் கொண்டு முடிவு செய்வதும் முதலாளித்துவம் மீண்டும் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

தத்துவார்த்த உணர்வுகள்

5.6.-1) 1990-ஆ-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச அளவிலான நிகழ்ச்சிப் போக்குளை மறுபரிசீலனை செய்து மத்தியக் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானம் சுய விமர்சனத்துடன் பின்வருமாறு குறிப்பிட்டது. “திருத்தல்வாத, வறட்டுத் தத்துவாத திரிபுகளைக் குறைத்து மதிப்பிட்டதால் உருவான நடைமுறை உத்தி சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கம் மோசமாக பாதிக்கப்படுவதற்கும், பொருளாதாரவாதம் பிரதானமாக ஆதிக்கம் வகிப்பதன் மூலம் வர்க்கப் போராட்டத்தின் கூர்முனை மழுங்கடிக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது. உலக அளவிலான வர்க்கப் போராட்ட இயக்கம் மற்றும் சோசலிச நாடுகளிலே உள்ள மக்களின் கூட்டு உணர்வுகளில் இது ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய இரண்டிலுமே இது உண்மையாக உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் பாத்திரத்தைக் கைவிட்டு சமூக ஜனநாயகத்தைத் தழுவிய வேகத்திலிருந்தே இதனைப் பார்க்க முடியும். வர்க்கப் போராட்டத்தை தீவிரமாக்குவதற்கான புறக்காரணிகள் இருக்கும் அதே நேரத்தில் அகக்காரணியான ஸ்தாபன வளர்ச்சி மட்டம், உலக அளவில் தொழிலாளி வர்க்கத்தின் சோசலிச வர்க்க உணர்வு போன்றவை குறைவாகவே உள்ளது. மக்களுடைய அபிலாசைகளுடன் உயிரோட்டமான தொடர்பும், அவர்களுடைய போராட்டங்களை உருவாக்கியும் அவற்றிற்கு தலைமை தாங்கியும் மக்களுடைய கூட்டான உணர்வை வளர்க்கக்கூடிய புரட்சிகரமான மார்க்சிய -_ லெனினிய தத்துவத்தால் வழிகாட்டப்படக்கூடிய தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற அகக்காரணி இல்லாமல் எந்தவொரு புரட்சிகர முன்னேற்றமும் சாத்தியமல்ல என்பதனைத் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்’’.

5.6-.2) ஏற்கனவே கூறியது போல, சோசலிச நிர்மாணத்தின் மூலம் உருவாகும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் மக்களுடைய கூட்டான உணர்வுகளை வளர்ப்பதன் அடிப்படையில் மட்டுமே சோசலிசம் நிலைத்திருக்க முடியும், வளர முடியும். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்த நிலையை உறுதியுடன் முன் கொண்டு செல்லாமல் இத்தகைய கூட்டு உணர்வினை வளர்த்தெடுக்க முடியாது.

5.6-.3) இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிந்திய நிலைமையில் முன்பு விவாதிக்கப்பட்ட அம்சங்கள் மட்டுமல்லாது சோவியத் மக்கள் மத்தியில் இருந்த சமாதான வேட்கைக்கான புறநிலையை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்பு யுத்தத்தின்போது சோவியத் மக்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்தார்கள். 2 கோடி மக்கள் பலியானார்கள். ஆகவே, என்ன விலை கொடுத்தாகிலும் சமாதானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற இயல்பான, ஆழமான வேட்கை உருவாகியிருந்தது. மக்களுடைய இந்த ஆழமான ஆவலைச் சாதகமாக எடுத்துக் கொண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரஸ், சர்வதேச வர்க்க சக்திகளின் அணிச்சேர்க்கை பற்றி தவறாக மதிப்பீடு செய்வது தன்னுடைய சோவியத் யூனியனுக்குள் இந்தத் திருத்தல்வாதத்தின் தாக்கமானது மக்கள் மற்றும் கட்சி அணிகள் மத்தியில் வர்க்க உணர்வும், விழிப்புணர்வும் அரித்தழிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. கணிசமான அளவு மக்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே இத்தகைய உணர்வில் அரித்தழிப்பு ஏற்பட்டது. மிகக் குறைந்த எதிர்ப்பிற்கிடையில் சோசலிசத்திற்குக் குழிபறிக்கும் போக்கிற்கு உதவியது. மேலும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமலேயே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளைத் தடை செய்து கோர்பச்சேவால் ஆணை பிறப்பிக்க முடிந்தது.

5.6.-4) சோசலிசத்தின் கீழ் அரசு வர்க்க குணாம்சத்துடன் செயல்படத் தவறியதும் சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்துவதிலும், ஆழமாக்குவதிலும் தவறியதும் மற்றும் பொருளாதார நிர்வாக முறையில் காலத்தே செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய இயலாததும் புரட்சிகர ஒழுக்கமுறைத் தரங்களில் உள்ளரிப்பு ஏற்பட்டதும் தத்துவார்த்தத் துறையில் இருந்த மோசமான திரிபுகளுமாகிய ஆகிய இந்தத் தவறுகள் அனைத்தும் கட்சி மற்றும் அரசிடம் இருந்து மக்கள் அன்னியப்படுவது அதிகரிப்பதற்கான தளத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் சோசலிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கு இணைந்து செயல்பட வாய்ப்புக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் உலகளாவிய தாக்கம் கம்யூனிஸ்ட்களின் முன்னால் உள்ள கடமைகள்

6.1) மேலே குறிப்பிட்ட இந்த பின்னடைவுகளைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையிலான உலக ஏகாதிபத்தியம் தனது புதிய ஆக்கிரமிப்பு மனப் பான்மையை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் “ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பை’’ ஏற்படுத்துவதற்கு ஆணையிடும் தைரியம் பெற்றுள்ளது.

6.2) அணு ஆயுதப் பேச்சுவார்த்தை மற்றும் ஆயுதக் குறைப்புத் துறையில் அண்மையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தன்னுடைய ஆதிக்க சதி வேலைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான பிடியை வைத்துக் கொள்ள மற்ற நாடுகளைவிட தனக்குச் சாதகமான நிலையைப் பராமரிக்கவே ஏகாதிபத்தியம் விரும்புகிறது. தற்போது உள்ள நிலைமையானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகப் பெரிய அணு ஆயுத மிரட்டலைச் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

6.3) இந்நிகழ்ச்சிப் போக்குகள், இந்தப் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலுக்கான எதிர்ப்பைப் பலப்படுத்துவதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் குறிப்பாக வளர்ந்து வரும் உலகில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடுவதையும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்க நடவடிக்கைகளில் ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் அவசர அவசியமாக்கியுள்ளது.

6.4) இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் முக்கியமான ஒரு விளைவாக பல்வேறு நாடுகளில் பிற்போக்கான நவீன பாசிச சக்திகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முற்போக்கான, புரட்சிகரப் பகுதியினர் மீது குறிவைத்து இந்த சக்திகள் தங்கள் அரசியல் தாக்குதலைத் தீவிரமாக்கியுள்ளன.

6.5) ஏகாதிபத்தியவாதிகளின் சதிச் செயல்களுக்கு எதிராக நிற்கும் சோசலிச அரண் இல்லாதது, சர்வதேச அரங்கில் ஒரு சூன்யநிலை நிலவுவது ஆகியவை உலகின் வளரும் நாடுகளை ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு மேலும் இரையாகவும், அவர்களின் நிர்ப்பந்தங்களால் மேலும் பலவீனமாகவும் செய்துவிடும். இந்த நிலைமையானது முதலாளித்துவ உலக சுரண்டல் அமைப்புக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். விடுதலையடைந்த நாடுகளின் பொருளாதார, அரசியல் சுயாதிபத்திய உரிமையைக் கடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும். பல மூன்றாவது உலக நாடுகளின் அரசுகள், நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்த நாடுகளில் உள்ள பொதுமக்கள் மீது சுமைகளை அதிகரிக்கலாம். இத்துடன் கூடவே இந்த நாடுகளில் மேலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் இயல்பாகவே தொடர்ந்துவரும்.

6.6) முன்னாள் சோசலிச நாடுகளைச் சார்ந்த மக்கள் இன்று பெரிதாகக் கூறப்பட்ட “ஜனநாயகம்’’ மற்றும் “சந்தைப் பொருளாதாரம்’’ தங்களுக்கு நுகர்வுச் சமுதாயத்தின் மகிழ்ச்சியையும், பகட்டையும் கொண்டு வரவில்லை என்று கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கு மாறாக சோசலிசம் அளித்திருந்த சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்கடங்காமல் பாய்ச்சல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது இந்த நாடுகள் சிலவற்றுள் மொத்தமுள்ள உழைப்பு சக்தியில் பாதியைத் தழுவிக் கொண்டு இருக்கிறது. இந்த மக்களுடைய வருமானத்தின் உண்மை மதிப்பை பணவீக்கம் அரித்துத் தின்று கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை நவீன பாசிசப் பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இந்த சக்திகள் முன்னேறுவது ஏற்கனவே அரிக்கப்பட்டு வரும் மக்களுடைய அரசியல், ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்டிவிடும்.

6.7) கடுமையான தத்துவார்த்தத் தாக்குதலின் நிர்ப்பந்தத்தால் சரிந்துவரும் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் மார்க்சிச லெனினிசத்தின் புரட்சிகர சாரத்தைக் கைவிட்டு சமூக ஜனநாயகத்தைத் தழுவி வருகின்றன. சமூக ஜனநாயகம் என்பது முதலாளித்துவ அமைப்பிற்குள் சீர்திருத்தவாத தத்துவமாக எப்போதும் இருந்துள்ளது; தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வாறாக வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து அதன் இடத்தில் வர்க்க ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. கடந்த பல பத்தாண்டுகளில் எப்போதெல்லாம் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறதோ அப்போதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதே சமூக ஜனநாயகத்தின் நடைமுறையாக இருந்து வந்திருப்பது நிரூபணமாகியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் அரசுகளை நடத்திய இதன் அனுபவம், இதன் உண்மையான சொரூபத்தைக் காட்டியுள்ளது. அதாவது அரசில் இருக்கும்போது முதலாளிகளை ஆதரிப்பதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரிப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை இக்கட்டான தருணத்தில் காட்டி கொடுப்பதற்காகவே தொழிலாளி வர்க்க கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதும் இதன் தன்மையாகும். உலகப் பிரச்சினைகள் மற்றும் உலக சமாதானப் பிரச்சனையில் சமூக ஜனநாயகத்துடன் சேர்ந்து ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் இறங்குவதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால் இதன் பெயரால் மார்க்சிசம் _ -லெனினிசத்தைக் கைவிட்டு சமூக ஜனநாயகத்தின் வர்க்க ஒத்துழைப்பு தத்துவத்தை தழுவிக் கொள்வது ஏற்கனவே இருக்கக்கூடிய சோசலிசத்தின் பலன்களுக்குக் குழிபறிப்பதும், எதிர்கால புரட்சிகர போராட்டங்களின் கூர்முனையை மழுங்கச் செய்வதும் ஆகும். இந்த தத்துவார்த்தத் தாக்குதலை நாம் நேரடியாகச் சந்தித்தாக வேண்டும்.

6.8) கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சிசம் -_ லெனினிசம் மட்டும் அல்ல எனும் மற்றொரு தவறான கருத்தினையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. மார்க்சிசம் — லெனினிசத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் மனித குலத்தின் பல்வேறு சிந்தனை நீரோட்டங்களில் ஒன்று என்று சித்தரிப்பது இந்த ஆக்கப்பூர்வ விஞ்ஞானத்தை முற்றாக மறுதலிப்பதாகும். மார்க்ஸ் —  எங்கெல்சின் படைப்புகள் பிரெஞ்சு சோசலிசம், ஜெர்மன் தத்துவம் மற்றும் பொருள் முதல்வாதம், ஆங்கிலேயே அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் இணைப்பும் வளர்ச்சியும் ஆகும். எந்தவொரு காலகட்டத்திலும் உள்ள ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய ஆக்கப்பூர்வமான விஞ்ஞானமாக மார்க்சிசம் இருக்கிறது. இது வியாக்கியானம் செய்வதற்கு மட்டுமல்லாது, இந்தச் சுரண்டல் உலக அமைப்பை மாற்றுவதற்கான செயலுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்து புரட்சிகர குறிக்கோளை அடைவதை நோக்கி அந்தச் சிந்தனைகளை முன்னேற்றிச் செல்கிறது. வரலாற்று நிகழ்ச்சி போக்குகளுக்கு ஏற்ப இந்த ஆக்கப்பூர்வமான விஞ்ஞானத்தைத் தொடர்ந்து செழுமையாக்கிச் செல்வதில் ஏற்படும் தோல்விகளுக்கும், தவறுகளுக்கும் காரணம் இந்தத் தத்துவத்திலேயே குறைபாடு உண்டு என்பதோ அல்லது இதன் உள்ளடக்கமானது விஞ்ஞானப்பூர்வமானது அல்ல என்பதோ இல்லை. மாறாக, இந்தத் தத்துவத்தை தழுவிக் கொண்டவர்களிடம் விஞ்ஞானப்பூர்வ உறுதிப்பாடு இல்லாமலிருந்ததே அல்லது போதுமான அளவு இல்லாமலிருந்ததே காரணமாகும்.

6.9) மார்க்சிசம் – லெனினிசம் என்றாலே அதில் பொருள் முதல்வாதம், ஆக்கப்பூர்வமான தன்மை, உள்ளார்ந்த இயக்கவியல் என்பவை உள்ளடங்கியுள்ளன. ஆகவே, இது வறட்டுத் தத்துவவாதத்திற்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. விடுதலைக் கண்ணோட்டத்தைத் தழுவிய ஓர் உலகச் சிந்தனை இது; விடுதலை பெறுவதற்கான இலட்சியச் சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடியது. மாறிவரும் வரலாற்றுச் சூழ்நிலைகளை உருவாக்கும் பலதரப்பட்ட போக்குகளைப் புரிந்து கொள்ளவும், மதிப்பீடு செய்வதற்குமான கருவி இது. மாறிவரும் வரலாற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டு விடுதலைக்கான மக்கள் போராட்டத்தின் திட்டக் குறிக்கோள்களை விளக்கும் நடவடிக்கைக்கான வழிகாட்டி இது.

6.10) மார்க்சிசம் — லெனினிசம் ஆக்கப்பூர்வமான விஞ்ஞானம் என்ற முறையில் நிகழ்ச்சிப் போக்குகளை அவற்றின் திசை வழிகளைக் கண்டறிந்து கூறுகிறது. இதனைச் செய்யும் போதே இந்த நிகழ்ச்சிப் போக்குகளில் மக்கள் திரள் தலையிடுவதைச் சாத்தியமாக்கி ஒரு சுரண்டலற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்குக் கொண்டு செல்கிறது. உதாரணமாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் சோசலிசத்தால் மாற்றப்படும் என்பது வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதது; ஆனால் இது தானாக நடந்துவிடாது. இத்தகைய சமூக மாற்றத்திற்கான முக்கிய அம்சமாக தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்து உழைப்பாளி மக்களின் அதிகரித்து வரும் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கக்கூடிய சரியான தத்துவார்த்த அரசியல் மற்றும் ஸ்தாபனத் தலைமை விளங்குகிறது. இந்த வர்க்க உணர்வு செயலிழக்கச் செய்யப்பட்டாலோ அல்லது மழுங்கடிக்கப்பட்டாலோ எதிர்ப்புரட்சி சக்திகள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வர்க்க ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளும்.

6.11) இந்தச் சூழ்நிலையில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் உண்மையிலேயே ஏராளமான கடமைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் தத்துவாத்தத் தாக்குதலை நேரடியாகவும், உறுதியாகவும் சந்திக்க வேண்டிய இந்தத் தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ இயக்கம் சிதறிக் கிடக்கிறது. இதிலிருந்து மேலும் ஆதாயம் அடைய ஏகாதிபத்தியம் முயற்சித்து வருகிறது.

6.12) மார்க்சிசம் – லெனினிசத்தின் புரட்சிகரக் கொள்கை அடிப்படையில் இந்தப் பின்னடைவுகளிலிருந்து சரியான படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளுக்கு இடையே நோக்கத்திலும், செயலிலும் ஒற்றுமையைக் கட்ட வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், பலப்படுத்தவும் இது அவசியம். தற்போது ஏகாதிபத்தியம் தொடுத்துவரும் தாக்குல்களுக்கு எதிராகப் போராடும் அனைவருடனும் இது ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இந்த வழியிலேயே மனிதகுல வரலாற்றுப் போக்கைப் பின்னுக்குத் தள்ள முயலும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகளை எதிர்கொள்ள முடியும். இது தொடர்பாக சில தவறான தத்துவார்த்த கருத்துக்கள் முன் வைக்கப்படுவதை எதிர்த்து தீவிரமாகப் போராடுவது அவசியம்.

6.13) ஏற்கனவே கூறப்பட்டுள்ள விசயங்களுடன் கண்டனத்திற்கு ஆளாக்க வேண்டிய மற்றொரு கருத்து, முதலாளித்துவம் அதன் சுரண்டல் தன்மையை இழந்துவிட்டது என்பதாகும். ஆகவே, சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்தைச் சேர்த்து ஒரு புதிய “நாகரிக’’ உலக அமைப்பை உருவாக்கலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது. உண்மையில் சோசலிசத் திட்டமிடலுக்குப் பன்னாட்டுப் பகாசுர கம்பெனிகள் ஓர் உதாரணம் என்றுகூட வாதிடப்படுகிறது! முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியின் போக்கிலேயே சுரண்டல் நடக்கிறது. இது இதனுடைய இயக்கத்தில் ஓர் ஒருங்கிணைந்த பகுதி; முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது ஒரு தார்மீக பிரச்சினை மட்டுமல்ல. ஒரு சுரண்டலற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவதற்கு விஞ்ஞான ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் தவிர்க்க முடியாத வளர்ச்சி ஆகும்.

6.14) “எதிர்மறையான சக்திகளில் ஒன்று மற்றொன்றில் ஊடுருவுவது’’ என்பது ஒரு முரண்பாட்டில் இருக்கக் கூடுமென்று கோட்பாடு ரீதியாக வாதிடுவது சாத்தியமே. ஆனால் மேலே கண்டதுபோல் சமகாலத்திய வரலாற்று வளர்ச்சிப் போக்குகள் வெளிப்படுத்தியிருப்பது முதலாளித்துவச் சுரண்டல் முறை தீவிரமடைந்து இருக்கிறது என்பதையும் அதன் சுரண்டும் தன்மையை இது இழந்துவிடவில்லை என்பதையும் தான். இந்தப் பின்னணியில் சோசலிசத்தையும், முதலாளித்துவத்தையும் ஒன்றுபடுத்துவது என்பதன் அர்த்தம் – முதலாளித்துவத்தில் சோசலிசத்தைக் கரைத்துவிடுவது என்பதாகும்.

6.15) அதேபோன்று, விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சி, அளப்பரிய அளவில் உழைப்பின் உற்பத்தி விகிதம் அதிகரித்தது. ஆரம்பகால முதலாளித்துவத்திற்குப் பிறகு உடல் உழைப்புக்கு எதிராக மூளை உழைப்பின் அம்சங்கள் அதிகரித்தது ஆகியவை குறிப்பிடத்தக்கவை எனினும் அவற்றால் இந்த அமைப்பின் சுரண்டல் குணம் மாறிவிடவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்ட வேண்டும். ஆகவே மார்க்ஸ், லெனின் காலத்தில் இருந்த தொழிலாளி வர்க்கத்தின் குணம் மாறிவிட்டது, ஆகவே, மார்க்சிசம் – -லெனினிசம் காலாவதி ஆகிவிட்டது என்று வாதிடுபவர்கள் உபரி மதிப்பை உருவாக்கி அபகரித்துக் கொள்ளும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையையே மறுதலிக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சமூக மாற்றத்திற்கான தேவையை மறுதலிப்பதுடன் முதலாளித்துவ அமைப்பிற்கு வக்காலத்து வாங்குபவர்களாகச் செயல்படுகிறார்கள்.

6.16) இதுவும் இதுபோன்ற பல தவறான தத்துவார்த்த கருத்துக்களும் வரும் நாட்களில் முன் வைக்கப்படலாம்.மேற்கொண்டு சீர்திருத்தவாதமாயை பரவுவதைத் தடுக்கவும், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதைத் தடுக்கவும் இவற்றை எதிர்த்து உறுதியாகப் போராடி ஆக வேண்டும்.

சோசலிசத்திற்கான சிபிஐ(எம்) போராட்டம்

7.1) இந்தப் பின்னணியில் இந்தியாவில் சோசலிசத்திற்காக சிபிஐ(எம்) நடத்தும் போராட்டத்தை விவரிக்க வேண்டும்.கடந்த காலத்தில் சோசலிச நாடுகளில் உள்ள உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்வதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை சுயவிமர்சனத்துடன் குறிப்பிடுவது மிகவும் அவசியம். கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிபிஐ(எம்) மார்க்சிச — லெனினிசத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடிக்க சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுடன் விவாதம் நடத்தியுள்ளபோதிலும் சோசலிச நாடுகளில் உள்ள உள்நாட்டு நிலைமை சம்பந்தமாகச் சகோதரக் கட்சிகளிடமிருந்து கிடைத்த தகவல்களை அதீத நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டோம் என்பதைத் குறிப்பிட்டாக வேண்டும். பிரச்சனைகளும், தவறுகளும் திருத்தப்படும், சமாளிக்கப்படும் என்று நமக்குள் நாமே நம்பிக் கொண்டோம். இவ்வாறு சோசலிசக் கட்டுமானம் பற்றி முறையாகப் புரிந்துகொள்வதற்கும், சோசலிச நாடுகளின் அனுபவங்களை உயர்வுபடுத்தாமல் பார்ப்பதற்கும் கட்சியின் அணிகளை தயார்படுத்தும் கடமை நிறைவேற்றப்படவில்லை.

7.2) இந்த சுயவிமர்சனத்தைக் கூறும்போதே மனிதனை மனிதன் வர்க்கத்தை வர்க்கம், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதை ஒழித்துக் கட்டுவதே சோசலிசத்தின் அடிப்படை அம்சம் என்பதனை சிபிஐ(எம்) உறுதிப்படுத்துகிறது. மனிதகுலத்தின் கவுரவத்தையும், உரிமைகளையும் மிகவும் சர்வாம்சம் வாய்ந்த முறையிலும், உலகளாவிய வடிவிலும் உயர்த்திப் பிடித்துப் பாதுகாக்கும் இந்த விடுதலைத் தாக்கம்தான் நமது போராட்டத்தை முன்கொண்டு செல்ல உத்வேகம் அளிக்கிறது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மார்க்சிசம்– லெனினிசத்தைப் பாதுகாக்க சிபிஐ(எம்) நடத்திய போராட்டம், இந்திய நிலைமைகளில் திரிபுவாதங்களுக்கு எதிரான போராட்டத்தில் சிபிஐ(எம்) உருவானது, செயல்பட்டு வருவது, அந்தப் போராட்டத்தினை நடத்தி வருவது – ஆகியவற்றில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய நிலைமைகளில் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

7.3) தற்போது இந்தியாவில் உள்ள சமூகப் பொருளாதார நிலைமைகளும், நிலவக்கூடிய யதார்த்தங்களும் இந்தியப் புரட்சி ஜனநாயக கட்டத்தில் இருப்பதை விவரிக்கிறது. ஜனநாயகப் புரட்சியின் முற்றுப் பெறாத கடமைகளான – ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்பு ஆகிய கடமைகளை முடிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறது. இதற்குத் தற்போது ஏகபோக முதலாளிகளின் தலைமையில் உள்ள முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக அரசின் மூலம் மாற்ற வேண்டும்.

7.4) ஜனநாயகப் புரட்சியை முடிக்கும் கடமையை நிறைவேற்றக்கூடிய மக்கள் ஜனநாயக முன்னணியின் வர்க்கக் கூட்டணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக விவரிக்கிறது. தொழிலாளர் _ – விவசாயிகள், கூட்டணியை உறுதியான அடித்தளமாக கொண்ட இந்த முன்னணி விவசாயத் தொழிலாளி, ஏழை விவசாயிகளை தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாகக் கொண்டிருக்கும். இந்த முன்னணி நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள் ஆகியோரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதே போன்று நகர்ப்புறத்தில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தேசிய முதலாளிகளின் விரிவான பகுதியினரைக் கொண்ட அணியினர் கூட்டாளிகளாக இருப்பர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கட்சி வகிக்கும் பாத்திரத்தை பின்வருமாறு விவரிக்கிறது: “நாட்டின் அனைத்து தேசபக்த சக்திகளுடனும் – அதாவது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் துடைத்தெறிவதிலும், விவசாய மக்களின் நலன்களுக்காக விவசாயப் புரட்சியை முழுமையான முறையில் நிறைவேற்றுவதிலும், அன்னிய மூலதனத்தின் சகல சுவடுகளையும் ஒழிப்பதிலும், இந்தியாவின் பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றைத் தீவிரமான முறையில் புனரமைக்கும் பாதையில் உள்ள சகல தடைகளையும் அகற்றுவதிலும் அக்கறையுள்ள அனைத்து தேசபக்த சக்திகளுடனும் ஒன்றுபடும்’’ (பத்தி- 110).

7.5) மக்கள் ஜனநாயகத்தை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல தற்போது உள்ள வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையில் மாற்றம் செய்வது அவசியம். அனைத்துப் பகுதி இந்திய மக்களும் நடத்தக்கூடிய வல்லமை மிக்க போராட்டங்களால் மட்டுமே இதனை நிறைவேற்ற முடியும். நாடு விடுதலையடைந்ததற்குப் பிறகு முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் நமது மக்கள் தொகையில் சுமார் நான்கில் மூன்று பங்கினர் விவசாயத்தையே சார்ந்திருக்கிறார்கள். முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளின் துயரங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது மாற்றங்களுக்கான போராட்டங்களைத் தூண்டவே செய்யும். இது வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையை மாற்றுவதற்கு மக்கள் போராட்டங்களின் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும். இந்தக் கடமைகள் – கட்சி ஸ்தாபனத்தை பலப்படுத்தவும், மார்க்சிசம் — லெனினிசத்தின் மீது அதிகப்படியான பற்றுக் கொள்ளவும் மற்றும் மக்கள் மீது மேலும் மேலும் அதிகப்படியான சுமைகளை ஏற்றிவரும் தற்போதுள்ள வர்க்க ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வகுத்து தலைமை தாங்கிச் செல்லவும் சிபிஐ(எம்)யைப் பணிக்கின்றன.

7.6) வலதுசாரி பிற்போக்கு சக்திகள் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து போராட்டங்களை வலுப்படுத்துவதும், மக்களுடைய உண்மையான சமத்துவத்தையும், நமது நாட்டில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் இனக் குழுக்களுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவதற்குமான போராட்டங்களைப் பலப்படுத்துவதும் அவசியம்.

7.7) மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்புக் கடமைகளை பூர்த்தி செய்ததற்குப் பிறகே இந்திய மக்கள் சோசலிசத்தை நோக்கி முன்னேற முடியும். இந்திய நிலைமைகளில் சோசலிசத்தின் அர்த்தம் என்ன?

7.8) இதன் அர்த்தம், மக்கள் அதிகாரமே உயரியது என்பது முதலாவதாகவும், முக்கியமானதாகவும் கொள்ளப்படும்; ஜனநாயகமும், ஜனநாயக உரிமைகளும் சோசலிச நீதி, அரசியல், சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கும்.

7.9) இதன் அர்த்தம் – உற்பத்தி சாதனங்கள் சமுதாயமாக்கப்படுதல், மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் சோசலிசப் பொருளாதார நிர்மாணம் இருக்கும் என்பதாகும். சரக்கு உற்பத்தி நீடிக்கும்வரை சந்தையும் இருக்கும். இருப்பினும் முன்பு குறிப்பிட்டபடி சந்தை சக்திகள் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் – வழிகாட்டுதலின் கீழ் உள்ள ஒரு அங்கமாக இருக்கும். பல்வேறு சொத்துடைமை வடிவங்கள் சேர்ந்திருக்கும் அதே நேரத்தில் உற்பத்தி சாதனங்களில் சமுதாய உடைமை என்பது தீர்மானகரமான வடிவமாக இருக்கும்.

7.10) சோசலிசத்தின் கீழ் மாற்றுக் கருத்து உரிமை, பேச்சுரிமை, பல்வேறு கருத்துக்கள் நிலவுவது ஆகியவை சோசலிசத்தை வலுப்படுத்தும் குறிக்கோளோடு தழைத்தோங்கும். இதர அரசியல் கட்சிகள் இருக்காலாமா அல்லது பல கட்சி முறை இருக்கலாமா என்ற பிரச்சனையானது இந்தக் கட்சிகள் புரட்சியின்போதும், மாறிச் செல்லும் காலத்திலும் வகிக்கும் பங்கினைப் பொறுத்தே பிரதானமாக அமையும்.

7.11) இந்திய நிலைமைகளில் சோசலிசத்தின் அர்த்தம் தற்போது உள்ள ஜனநாயக உரிமைகளைச் செழுமைப்படுத்திப் பலப்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவது ஆகும். இதன் அர்த்தம் மனித வாழ்வின் தரத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வளர்ப்பதற்கு தேவையான பொருளாதார அடிப்படையை அளிப்பதாகும்; இதனை அடித்தளமாகக் கொண்டு சோசலிச ஜனநாயகம் செழிப்படையும்.

முடிவு

8.1) வரலாற்றின் ஏற்ற இறக்கங்கள், திடீர் திருப்பங்கள், வெற்றிகள், பின்னடைவுகள் உள்ளபோதிலும் இந்த நூற்றாண்டின் நிகழ்ச்சிப் போக்குகள் – குறிப்பாக 1917ஆம் ஆண்டிலிருந்து நடந்துவரும் நிகழ்ச்சிப் போக்குகள் – மனிதகுல பரிணாம வளர்ச்சியில் மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதைப் பிரதிபலிக்கின்றன. புரட்சிகரமான மாற்றங்கள் வரலாற்றில் ஒரு குணாம்சரீதியான பாய்ச்சல் வேகத்தைக் கொண்டு வந்துள்ளன; நவீன நாகரிகத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன. இதன் விளைவாகக் கிடைத்த பொருளாதார அரசியல், சமூக உரிமைகள் தற்போது மனிதகுல நாகரிகத்தின் பிரிக்க முடியாதவையாக கருதும் நிலை வந்துள்ளது. மக்களுடைய தேசிய, சமூக விடுதலை நடவடிக்கைகள் விட்டு விட்டு நடப்பதாலும், சிக்கலானதாக இருப்பதாலும் இவற்றை நிறைவேற்ற நீண்டகாலம் பிடிக்கும். வரலாறு காட்டுவது போன்று முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது ஒரே அடியில் நடக்கும் மாற்றமல்ல. மாறாக இதற்கு நீண்ட காலம் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அப்படி வரலாறு காட்டுவது போன்றே சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளித்துவத்தை மீண்டும் ஏற்படுத்தும் நடவடிக்கையும், நினைத்துக் கொண்டிருப்பது போன்று அவ்வளவு எளிதாகவும், சாதாரணமாகவும் நடக்கக்கூடியதல்ல. ஒரு நூற்றாண்டு காலம் போராட்டங்களை நடத்தி மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை எளிதாக அழித்துவிட முடியாது. 20-ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிப் போக்குகள் – சமகால மனிதகுல வளர்ச்சிப் போக்குகள் தேசிய மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைத் திசைவழியில் சென்று கொண்டிருப்பதை நிரூபித்தன.

8.2) உலக அளவிலும் அதேபோன்று ஒவ்வொரு நாட்டிலும் சமகால முதலாளித்துவ, மற்றும் சோசலிச சமூக பொருளாதார அமைப்புகளின் பரிணாம வளர்ச்சியை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள சிபிஐ(எம்) இவை பற்றி தொடர்ந்து ஆழமான பரிசீலனையை நடத்த உறுதி கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டபடி சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட திருத்தல்வாதமும், வறட்டுத் தத்துவவாதமும் இப்படியரு ஆய்வினைச் செய்திட இடையூறுகளை ஏற்படுத்தின. இது ஓரளவு தத்துவார்த்த தேக்கநிலை ஏற்படுவதற்கும் இட்டுச் சென்றது.

கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் குறித்த பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கான இந்த ஆய்வினை நடத்துவதற்கு மார்க்சிசம் – – லெனினிசம் அத்தியாவசியமான கருவியாக உள்ளது. கட்சி அணிகள் மத்தியில் மார்க்சிச – லெனினிச கல்வியைப் பலப்படுத்தவும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வைப் பலப்படுத்தவும், இந்திய மக்கள் மத்தியில் விஞ்ஞான சோசலிச கருத்துக்களைப் பரப்பவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. வலது திருத்தல்வாத, இடது செக்டேரியன் திரிபுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட சிபிஐ(எம்) உறுதி பூண்டுள்ளது. மக்கள் ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் என்ற இலட்சியங்களை நோக்கி தற்போதைய வர்க்க சக்திகளில் சேர்க்கையை மாற்றுவதற்கான போராட்டத்தில் இந்திய மக்களைத் திரட்டும் கடமையை அது முன்னெடுத்துச் செல்லும்.

 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply