இறந்தவர்கள் உயிர்த்தெழுந்தார்கள், தியாகம் செய்யாதவர்களும் தியாகியானார்கள்!

1991 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் காலகட்டத்தில் உத்திர பிரதேசத்திற்கு சென்ற கர சேவகர்களில் ‘தியாகியானவர்கள்’ பட்டியலை அவர்கள் வெளியிட்டார்கள்.

59 பேர்கள். உண்மையிலேயே அதிர்ச்சிதரும்எண்ணிக்கை அது. அக்டோபர் 30 ஆம் தேதியன்று 36 பேரை போலீஸ் சுட்டுக் கொலை செய்ததாகவும், 23 பேர் வேறு இடங்களில் கொல்லப்பட்டதாக நவம்பர் 2 ஆம் தேதியும் அது தெரிவித்தது.

இதுவே குறைவான எண்ணிக்கைதான், 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வதந்தி பரவியது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் முக்கிய அங்கமான வி.ஹெச்.பி தலைவர் டால்மியா, பட்டியலை வெளியிட்டார். மேலும் இது முதல் பட்டியல் மட்டுமே என்றும் தெரிவித்தார்கள்.

அந்தப் பட்டியலில் அமைந்த பெயர்களை நேரடியாகச் சென்று சந்தித்தது பத்திரிக்கையாளர் குழு ஒன்று. அந்தப்பட்டியல் பொய்யான ஒன்றெனவும், பாஜகவின் அரசியல் நலன்களுக்காகவும், வி.ஹெச்.பி நோக்கங்களுக்காகவும் இந்த பட்டியல் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

வி.ஹெச்.பி அமைப்பு, கிராமத்தை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில் – 4 பேர் இப்போதும் உயிரோடிருந்தார்கள். 5 பேர் வேறு பல காரணங்களுக்காக, கரசேவையுடன் நேரடியாக எந்த தொடர்புமில்லாத காரணங்களுக்காக இறந்திருந்தார்கள். ஒருவரைத் தேடியபோது, அப்படியொரு நபரே இல்லை என்பது தெரியவந்தது. இரண்டு பேர் மட்டும் கர சேவைக்குச் சென்ற இடத்தில் காயமடைந்தனர். ஆனால் அவர்கள் மரணித்தது பல நாட்களுக்கு பின்னர், அவர்களின் சொந்த இடங்களிலாகும்.

உயிருடன் உள்ள 3 ‘தியாகிகள்’ மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர் தாகுர்லால் (ரால் கிராமம்), அசுதோஸ் தாஸ் (பிருந்தாவன்), பாபா ராகவ் (கடய கிராமம்). மற்றொரு ‘தியாகி’ ராம்தேவ் யாத்வ், ரேபரேலி மாவட்டத்தில் ஹாஜியன்பாத் கிராமத்தை சேர்ந்தவர்.

லால் சிங், நல்ல உயரமான கட்டுமஸ்தான மனிதர். அவரின் மறைவுக்காக ‘வீர வணக்க’ கூட்டம் நடத்தப்பட்ட அதே கோயிலில் வைத்து அவரை சந்தித்துள்ளனர் பத்திரிக்கையாளர்கள். 64 வயது அவருக்கு. அஞ்சலிக் கூட்டத்தில் பாஜகவின் அப்போதைய எம்.எல்.ஏ ரவிகாந்த் கார்க், பாஜக மாவட்ட தலைவர் ஆர்.பி.கமல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது லால் சிங் மஹாராஷ்ட்ராவுக்கும், குஜராத்துக்கும் புனிதப் பயணம் சென்றுள்ளார்.

கரசேவைக் காலத்தில் ரால் கிராமத்தில் அவர் இல்லை. திரும்பி வரவும் இல்லை. எனவே, சங் பரிவாரத்தினர் அவர் செத்துப்போனதாக கதைகட்டிவிட்டனர். அதுவும் அயோத்தியில் போலீஸ் சுட்டு அவர் கொல்லப்பட்டதாக சொல்லியுள்ளனர். லால் சிங், அயோத்தியில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன் தான் கொல்லப்பட்டதையும், தனக்கு அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்கு முடித்ததையும் பின்னர் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் சகோதரர் குடும்பத்திற்கு 200 கிலோ கோதுமை கொடுத்திருக்கிறார்கள் வி.ஹெச்.பி. நபர்கள்.

அவர் திரும்பி வந்ததை அறிந்துகொண்ட வி.ஹெச். பி நபர்கள், நீ சில நாட்கள் தலைமறைவாக இரு என்று கேட்டுள்ளனர். அதற்காக பணமும், பொருளும் கொடுப்பதாக சொல்லியுள்ளனர். ஆனால் ’உங்கள் அற்ப அரசியலுக்கு ஒத்துக்கொள்ள முடியாது’ என்று அவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டார் லால்சிங். பாஜக மாவட்டத்தலைவரிடம் இந்த உண்மைகளைச் சொல்லி கேட்டபோது, அவர் தங்கள் தவறை ஒப்புக்கொண்டார். மதுராவில் ‘தியாகிகள்’ யாரும் இல்லை என்ற ஒப்புதலையும் அவர் தெரிவித்தார்.

பிறப்பால் பெங்காலியான பாபா அசுதோஸ் தாஸ், தன் வாழ்க்கையில் ஒரு முறை கூட அயோத்திக்கு சென்றதில்லை. நாடோடியாகத் திரிந்து, மதுராவில் தங்கிவிட்டார். கடவுளின் திருவுருவங்களை வரையும் நாடோடியான அவர், பிருந்தாவனில் தங்கியிருக்கிறார்.

அசுதோஸ் நாடோடித் திரும்பிய நாளில் எல்லோரும் அவரை ‘பேய்’ என்று நினைத்துள்ளனர். அவரோ கல்கத்தாவுக்குச் சென்று தன் குடும்பத்தாரை சந்தித்துவந்துள்ளார். இந்தப் பயணத்தை அவர் கரசேவை நாளில் மேற்கொண்டதால், வி.ஹெச்.பி நபர்கள் அவர் அயோத்தியில் கொல்லப்பட்டதாகச் சொல்லிவிட்டனர். அவரிடமே அதைச் சொல்லியதுடன் நீ அசுதோசின் ஆவியா என்றும் கேட்டிருக்கின்றனர்.

ராம்தேவ் யாதவ், அயோத்திக்குச் சென்றதேயில்லை. கரசேவைக் காலத்திலும் அவர் தன் கிராமம் ஹஜியான்பாத்தில்தான் இருந்தார். என்ன தைரியத்தில் இவரைத் தியாகியாக்கினார்கள் என்பது புரியவில்லை. ”எனது பெயரை அந்தப் பட்டியலில் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அவர்கள் அமைப்பிலும் இருந்ததில்லை, பாஜகவிலும் இல்லை. அசிங்கம்பிடித்தவர்கள்” என்றார் ராம்தேவ் யாதவ்.

ராகவ் தாஸ் ஒரு சாது. நாடோடி. வி.ஹெ.பி பட்டியலில் அவர் கடயா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர். அவர் அங்கே அடிக்கடி சென்று திரும்புபவர்தான். ஆனால் அது அவரின் கிராமம் அல்ல. அவரிடம் அவர் சாகடிக்கப்பட்ட கதையைச் சொன்னபோது வாய்விட்டு சிரித்திருக்கிறார். ”ஒரு சாதுவுக்கு என்ன இருக்கிறது, சிலசமயம் இங்கே, சிலசமயம் அங்கே” என்றார்.

மங்கிலால் சத்யநாராயணன், பைசாபாத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை மரணமடைந்தவர். அவரின் மனைவியிடம் கேட்டபோது எனது மகன் கரசேவையின்போது இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். இறந்த மகனுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் கோண்டாவிலும், இன்னொருவர் பைசாபாத்திலும் இருக்கிறார். எனவே ரூ.1 லட்சம் நிவாரணத்தொகையை இரண்டு பேருக்கும் கொடுப்பதற்காக, கோண்டா பட்டியலில் மகன் பெயரையும், பைசாபாத் பட்டியலில் அப்பாவின் பெயரையும் சேர்த்துவிட்டனர்.

சாஜஹான்பூரில் மற்றொரு நபரை சந்தித்தபோது அவர் ராம ஜன்ம பூமி மீட்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், வி.ஹெச்.பி முக்கியத் தலைவருமான சின்மயானந், அவர்களின் கிராமத்தில் எந்தத் தியாகியும் இருப்பதாக அறியவில்லை என்றார். ஆனால் அவர்கள் அமைப்பின் பட்டியலில் ரகுவீர் ஷர்மா என்ற பெயர் இருந்தது. அந்த முகவரி, பாஜக அலுவலகத்தின் முகவரியாகும். ரகுவீர் பெயரில் யாரும் இருக்கிறார்களா என்பதை விளக்க அங்கே யாருமில்லை.

சோரன் கிராமத்தில் பன்னலால் கொத்தெவால் என்ற நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாக வி.ஹெச்.பி தெரிவித்திருந்தது. ஆனால் அந்த முதியவர் திருமணமாகாதவர். தடியடிக்கு ஆளாகி வீட்டுக்குத் திரும்பிய அவரை கவனித்துக்கொள்ள யாருமில்லை. அருகேயிருந்த சிலரும் அவரை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று இஸ்வர் குமார் என்ற அண்டை வீட்டார் தெரிவித்தார்.

கொத்தவாலின் தங்கையிடம் விசாரித்தபோது நவம்பர் 17 ஆம் தேதியன்றி கொத்தவால் மரணித்ததாக தெரிவித்தார். ஆனால் வி.ஹெஸ்.பி அந்த தேதியை நவம்பர் 11 என மாற்றியிருந்தது. பரபரப்புக்கு உதவியாக தேதி மாற்றம். மேலும், கொத்தவாலை கவனிக்க வராத வி.ஹெச்.பியினர் அவர் மறைவுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1 லட்சம் நிவாரணத்தையும் தரவில்லை என்று தெரிவித்தனர் இஸ்வர் குமாரும், கொத்தவாலின் தங்கையும்.

தியாகிகளைத் தேர்வு செய்வதில் வி.ஹெச்.பி கடைப்பிடித்த அணுகுமுறையைப் புரிந்துகொள்ள இது போதுமான உதாரணமாகும். அவர்களுக்குத் தேவையெல்லாம் சில மரணங்கள். உணர்ச்சியைக் கிளப்ப சில பெயர்கள் தேவை. உத்திரபிரதேசத்தில் அமைந்த இந்த கிராமங்கள் தொலைவில் அமைந்தவை. யாரும் அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்

அரசியல் தேவைகளுக்காக புரளி கிளப்புவதில் வி.ஹெச்.பி அமைப்புக்கு கவலையேதுமில்லை. எனினும் தங்கள் பொய் அம்பலப்பட்ட நிலையில், அடுத்த பட்டியலை வெளியிட்டு மீண்டும் மாட்டிக்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இல்லை.

(தகவல் உதவி: பிரண்ட்லைன்)

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...