இலங்கைத் தமிழர் பிரச்சனை போர்க்குற்றங்கள் மீது விசாரணை – அரசியல் தீர்வை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரின்  இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஏதுமறியாத அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக போதிய ஆதாரங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் மற்றும் அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தப் போர் குற்றங்கள் குறித்து சுயேச்சையான, நம்பகத்தன்மையுள்ள உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு உடன்பட வேண்டும்; மீள்குடியமர்த்தப் பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருளாதார ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலக்கி, இயல்பு வாழ்வுக்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும்; அரசியல் தீர்வின் பகுதியாக 13வது அரசியல் சட்டத் திருத்தம் மற்றும் அதற்கு மேலான, தேவையான மாநில சுயாட்சி விரைவாக வழங்கிட வேண்டும் என ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டுமெனக் கோரி 20.03.2013 புதன் கிழமை அன்று காலை 10.30 மணியளவில், அண்ணாசாலை தாரப்பூர் டவர் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
 
எதிர்ப்பைப் பதிவு செய்வதும், கோரிக்கைகளின் மீது வெகுஜன இயக்கங்களை நடத்துவதும் தேவையான நடவடிக்கைகளே.  ஆனால், அதே சமயம் இலங்கையிலிருந்து  தமிழகத்துக்கு நட்பு ரீதியாகவும், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகவும் வரும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்புடையதல்ல.  இலங்கை அரசின் நடவடிக்கைகளையும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply