இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து‍ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து‍ சிபிஐ(எம்) கருத்து‍

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து‍ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து‍ சிபிஐ(எம்) கருத்து‍ 

இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து இன்று (27.3.2013) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை தமிழர்களின் யதார்த்த நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு இலங்கை அரசு இன்னும் தீர்வு காணவில்லை.  யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீது இழைத்த போர்க் குற்றங்களினாலும் மனித உரிமை மீறல்களாலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை தமிழர்களின் துன்ப துயரங்கள் முடிவில்லாத தொடர்கதையாக தொடர்வது வேதனையளிப்பதாக உள்ளது.
 
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009-ல் உச்சகட்டத்தை அடைந்த நேரத்தில் ஐ.நா.சபையும் இந்திய அரசும் தலையிட்டு யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்றும் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவர்த்தை மூலம் அதிகார பரவலுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும், யுத்தத்தில் அப்பாவி மக்கள் சிக்கி பலியாவதை தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போதே வலுவாக வலியுறுத்தியது.
 
இலங்கை இனப்பிரச்சனைக்கு ஆயுதமோதல் தீர்வாகாது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்களும் தமிழும் அனைத்து நிலைகளிலும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கம் முதலே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளதோடு, சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும் இந்தியாவின் அண்டை நாடு என்ற முறையிலும் ராஜீய ரீதியாக இந்தியா தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவ வேண்டுமென்றும் வற்புறுத்தி வந்துள்ளது.
 
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்றைய உடனடித் தேவை தேவை அடிப்படையான வாழ்வாதாரம். மறுவாழ்வுக்கான உத்தரவாதம். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தை விலக்கி ஜனநாயகச் சூழலை உருவாக்குவதோடு, சிங்களமயமாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சம அந்தஸ்ததோடு வாழ, அதிகார பரவல் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு என்பதேயாகும். இதற்கு மாறாக நாம் சொல்லும் எந்தத் தீர்வும் இலங்கைத் தமிழர்கள் துயர்துடைக்க உதவிகரமாக இருக்காது.
 
தமிழ் ஈழத்திற்காக (தனி நாடு) பொது வாக்கெடுப்பு நடத்தக்கோருவதோ, இலங்கை நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ உடனடியாக இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வழிவகுக்காது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்னையை மேலும் சிக்கலாக்கவே இட்டுச் செல்லும்.
 
இலங்கை ராணுவம் இழைத்திட்ட போர்க் குற்றங்கள் மீது சர்வதேச புலன் விசாரணை கோருவதற்கு மாறாக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட சுயேட்சையான நம்பத் தகுந்த விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கிட இலங்கை அரசை ஏற்க வைத்திடவும், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளித்திடுவது உள்ளிட்ட அதிகபட்ச சுயாட்சி வழங்கிட இந்திய அரசும், ஐ.நா. மன்றமும் இலங்கை அரசாங்கத்துக்கு நிர்ப்பந்தம் கொடுத்திட வலியுறுத்தி வலுவான ஒன்றுபட்ட குரலெழுப்புவதே நம்முன் உள்ள இன்றைய தேவையாக உள்ளது.
 
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக  நடைபெற்ற கொடுமைகளை கண்டித்தும், அதிகார பரவலை வலியுறுத்தியும்  கடந்த பல நாட்களாக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்ட உணர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளும் , தமிழக மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஏகோபித்து குரலெழுப்புகிற நிலையில், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கல்வியில் கவனம் செலுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள ...

Leave a Reply