இலங்கைத் தமிழ் மக்கள் மீதான அட்டூழியங்கள் சுயேச்சையான விசாரணை இந்தியா கோர வேண்டும்

 

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான அட்டூழியங்கள்

சுயேச்சையான விசாரணை இந்தியா கோர வேண்டும்

மாநிலங்களவையில் டி.கே.ரெங்கராஜன் கோரிக்கை
 
புதுதில்லி, பிப். 27-
 
ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு,  இலங்கையின் வட பகுதியில் யுத்தம் நடைபெற்ற சமயத்தில்  நடைபெற்ற அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறித்து ஒரு சுயேச்சையான, உயர்மட்ட, நம்பிக்கைக்குரிய விசாரணையைக் கோர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் கூறினர்.
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று இலங்கைத் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மத்திய அயல்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றினார். 
 
பின்னர் அதன்மீது விவாதத்தில் பங்கு கொண்ட டி.கே. ரெங்கராஜன் பேசியதாவது:
 
இலங்கைத் தமிழ்மக்களின் அவல நிலை குறித்து தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளும், கோபாவேசமும் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளாலும் முழுமையாக பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஓர் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் இந்த அவை ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறது. 
 
இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து கடந்த மூன்றாண்டுகளாக இங்கே உரையாற்றிக் கொண்டிருக்கிறோம். 
 
இப்போது பாலச்சந்திரனின் புகைப்படத்தை தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்த்தோம். மிகக் கொடூரமான கொலை. தொலைக்காட்சிகளில்  இதனைப் பார்த்த மக்கள் கதறி அழுதார்கள்.  பார்க்கும்போதே அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடின.  
 
இலங்கையை நம்முடைய நட்பு நாடு என்று கூறிக்கொண்டிருக்கிறோம். இதே உறவினை நாம் அவர்களுடன் தொடர வேண்டும் தான். இதுதான் நம் நிலைப்பாடும் ஆகும். இலங்கையுடனான  நம் உறவினை வெட்டிக்கொள்ள வேண்டியதில்லை. 
 
ஆனால் அதே சமயத்தில் இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை. ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அமல்படுத்த இலங்கை மறுக்கிறது. அதைத் தட்டிக் கேட்க ஐ.மு.கூ அரசு ஏன் தயங்குகிறது? இதனால் இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. 
 
இந்த அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்கிறது. ஏன் உங்களால் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியவில்லை? இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வலுவாக தலையிட்டு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை மீது ஓர் அரசியல் தீர்வுக்கு வர, தன் ராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்தி, இலங்கை அரசை வலுவாக நிர்ப்பந்தத்திட வேண்டும். 
 
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு,  இலங்கையின் வட பகுதியில் யுத்தம் நடைபெற்ற சமயத்தில் அங்கே நடைபெற்ற அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் குறித்து ஒரு சுயேச்சையான, உயர்மட்ட, நம்பிக்கைக்குரிய விசாணையைக் கோர வேண்டும். 
 
இவ்வாறு டி.கே. ரெங்கராஜன் கேட்டுக் கொண்டார்.
 
விவாதத்தில் மைத்ரேயன், திருச்சி சிவா, து.ராஜா, வெங்கையா நாயுடு முதலானவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply