இலங்கையில் சமஷ்டி அமைப்பை ஏற்படுத்த சிபிஐ (எம்) வலியுறுத்தல்

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா “புதிதாக இயற்றப்படும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடமில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகள் பால் அணுகுமுறை மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பற்றிய பிரச்சனைகளில் முந்தைய இலங்கை அரசுகளுக்கும், சிறிசேனா அரசுக்கும் அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிய முடிகிறது.

இலங்கையில் சிங்களவர்களைப் போலவே தமிழர்களும் அந்நாட்டின் பூர்வகுடி மக்களாவர். இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்துள்ளன. தமிழ் மொழிக்கு தர வேண்டிய சம அந்தஸ்தும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சிங்களம் தமிழ் உட்பட பல மொழிகள் பேசப்படும் இலங்கையில் தொடர்ந்து ஒற்றை ஆட்சி முறையே அமலில் உள்ளது. தங்களது உரிமைகளுக்காக தமிழர்கள் போராடிய போதெல்லாம் அவர்கள் மீது இலங்கை அரசால் கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டுள்ளன.

2009ம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் மீது மனித உரிமைகளை மீறியும், காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் உட்பட பல்லாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஏராளமானவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இத்தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையில் உள்ள ஜனநாயக சக்திகள் மட்டுமல்ல இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளும், ஜனநாயக இயக்கங்களும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அதன் பிறகும் இக்குற்றங்கள் குறித்து குறைந்தபட்சம் சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் இலங்கை அரசு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தை திரும்பப் பெறுவது, தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைப்பது போன்ற அம்சங்களும் நிறைவேற்றப்படவில்லை.

மேற்கண்ட கடுமையான விளைவுகளையும், அனுபவங்களையும் சந்தித்த பிறகும் சிறிசேனா அரசு ‘சமஷ்டி அரசை’ ஏற்க முடியாது என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரித்து சமத்துவம் வழங்கப்படுவதன் மூலமே அங்கு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த முடியும். தமிழர்கள் உட்பட அனைத்து மொழியினர் மற்றும் பிரிவினருக்கு சமநீதி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த முடியும். மேலும் இலங்கையில் உள்ள மாநில அரசுகளுக்கு காவல்துறை, நில நிர்வாகம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இதுவரை உருவாக்கப்பட்ட இரண்டு அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் இவை உத்தரவாதப்படுத்தப்படாத நிலையில் 3வது அரசியல் சட்ட அமைப்பு உருவாக்கப்படும் இத்தருணத்திலாவது இவற்றை உத்தரவாதப்படுத்துவது இன்றைய சூழலில் முக்கியமான தேவையாகும். இலங்கையில் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிறிசேனாவின் தற்போதைய நிலைபாட்டை இலங்கை மற்றும் உலக அளவிலான ஜனநாயக சக்திகள் ஏற்காது.

எனவே இலங்கை சிறிசேனா அரசு 3வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு உத்தரவாதம் தர வேண்டுமென்றும் இதற்கு இலங்கையில் உள்ள ஜனநாயக சக்திகளும், சர்வதேச அளவிலான மனித உரிமை மற்றும் ஜனநாயக அமைப்புகளும், நாடுகளும் உரிய நிர்ப்பந்தத்தை தர வேண்டும் என்றும், குறிப்பாக இப்பிரச்சனையில் இந்திய அரசு தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து இலங்கை அரசை உரிய முறையில் நிர்ப்பந்திக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...