இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் இராமேஸ்வரம் மீனவர் பலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 

6.03.2017 ல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 7 மீனவர்கள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சத் தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியினால் அவர்களை நோக்கிச் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த பி.கே.பிரிட்ஸோ  என்பவர் படுகாயமுற்று இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சரவணன் என்னும் மீனவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிராயுதபாணியான தமிழக மீனவர்களை எவ்வித காரணமும் இன்றி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த இலங்கை கடற்படையின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவு  கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைளை தடுக்க மத்திய அரசு உருப்படியான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் ஆகும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடிவரும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யக் கோரி தமிழக மீனவர்கள் போராடி வரும் நிலையில் இத்தகைய கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது இப்படுகொலையையும், தாக்குதலையும் கண்டித்து மீனவர்கள் தங்கச்சி மடம் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். படுகொலைச் செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், படுகாயமடைந்த மீனவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உரிய இழப்பீடு  வழங்கவும் அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

 

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிற போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்திட மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...