இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (19.8.2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க  மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஆகஸ்ட் 18 அன்று புதுதில்லியில் பேட்டியளித்த போது மனிதாபிமானம் தொடர்புடைய இருநாட்டு மீனவர் விசயத்தில் இருதரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த உணர்வுக்கு மாறாக கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விசயத்தில் இலங்கை அரசாங்கம் தலையிடாது என்றும் நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது அவரே கூறுவதுபோல், மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய முறைக்கு முரண்பாடாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையின் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கையின் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்துக்காக கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடவடிக்கை மேற்கொள்வது இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மனநிலையையே வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழக, புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்பட்டு சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் வலைகளையும், மீன்களையும் பறித்துச் செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீனவர்களின் துயரங்கள் தொடர்கதையாகி வருகின்ற நிலையில் மீனவர்களைப் பாதுகாக்க உடனடியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மீன்வளம் அதிகம் உள்ள பகுதிகளில் மீன் பிடிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதார நலன்களை பாதுகாக்க வேண்டும்.

இதற்கு தமிழக-புதுவை மற்றும் இலங்கை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி, விரிவான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பேச்சு வார்த்தையில் இரு நாட்டு அரசுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரிய தீர்வுகளை எட்டிட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்!

சிபிசிஐடி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! தென்காசி, வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர்  27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி ...

Leave a Reply