இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி தர மறுக்கும் ராஜபக்சே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

இலங்கையின் 65-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசும்போது, அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என இலங்கை அதிபர் ராஜபக்சே ஆணவத்துடன்  கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்பும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும் இலங்கைத் தமிழருக்கு 13-வது அரசியல் சாசன திருத்தம் மட்டுமல்ல அதற்கு மேலும் அதிகாரம் வழங்கப்படும் என பலமுறை உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்போதைய பேச்சு, கொடுத்த வாக்குறுதியை அப்பட்டமாக மீறுவதாகும். இது இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் கேடு விளைவிப்பதாகும்.
 
இலங்கையில் சமூகங்களுக்கும் மதங்களுக்குமிடையே ஒற்றுமை நிலவுவது அவசியம் என ராஜபக்சே குறிப்பிட்டுள்ள போதிலும் அதனை நிலை நாட்டும் வகையில் அவரது பேச்சு அமையவில்லை. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சுயாட்சி வழங்குவதும் தமிழர்களின் இன, மொழி, கலாச்சாரத்தின் தனித்தன்மையை உத்தரவாதம் செய்வதும், சம அந்தஸ்து அளிப்பதும் தான் அங்கு இணக்கமான சூழல் உருவாக அடிப்படைத் தேவையாகும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், தனித்தன்மையையும் உத்திரவாதப்படுத்தாமல் எந்த ஒரு நாட்டிலும் அமைதியையும்,  இணக்கத்தையும் நிலைநிறுத்த முடியாது என்பது உலக அனுபவமாகும்.
 
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவது மட்டுமல்ல, இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்துவது அவர்களது அன்றாட ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகளை ராணுவத்தின் மூலம் கட்டுப்படுததுவது போன்ற தவறான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறது. இலங்கையில் செயல்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து மறுத்து வருகிறது. இலங்கையின் இறுதிக்கட்ட மோதலின்போது மனித உரிமைகளை மீறிய ராணுவ அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. ஐ.நா.வின் பரிந்துரைகளை மட்டுமல்ல, இலங்கை அரசே நியமனம் செய்த எல்எல்ஆர்சி குழுவின் பரிந்துரைகளைக் கூட இலங்கை அரசு அமல்படுத்த மறுக்கிறது.
 
இலங்கை அரசின் இத்தகைய தொடர்ச்சியான ஜனநாயக விரோத, மற்றும் தமிழர் விரோத போக்குகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்நிலையில் மேற்கொண்டும் தாமதம் செய்யாமல் இலங்கையில்  தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் பிரதேச ரீதியான சுயாட்சியை உத்தரவாதப்படுத்துவது, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுவதை தடுப்பது, தமிழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுவது, இறுதிக்கட்ட மோதலின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சையான விசாரணைக்குழு அமைத்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது, ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை சமூகப் பொருளாதார ரீதியாக உறுதி செய்வது,  இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உரிய பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற அம்சங்களை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு உரிய நிர்ப்பந்தங்களை கொடுக்குமாறு மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட வலியுறுத்துகிறது. இலங்கை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதிலும், அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது.
 

 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply