உணவுப் பாதுகாப்பு இயக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -யின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  3-7-2012 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது வழங்கிய பத்திரிகை செய்தி :

ஜூலை 30 துவங்கி 5 நாட்கள், உணவுப் பாதுகாப்பு மசோதாவில் முக்கிய திருத்தங்கள் கோரி, இடதுசாரி கட்சிகள், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது தொடர் தர்ணா நடத்தத் தீர்மானித்துள்ளன. தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் பொது விநியோக முறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி இயக்கம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 7-12 ரேஷன் கடைகள் ஆய்வு, ஜூலை 20 ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம், ஜூலை 30 தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1500 கடைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். (கோரிக்கைகள் தனியாக இணைக்கப்பட்டுள்ளன).

கல்வி உரிமை சட்டம் குறித்த ஒரு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும், நீதிமன்றம் எழுப்பியுள்ள சில கேள்விகள் பொருத்தமானவை என்றும், அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. உதாரணமாக, நலிவடைந்த பிரிவினர் யார் என்பது வரையறுக்கப்பட வேண்டும்; ஒரு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட அருகாமைப் பள்ளிகள் இருக்கும்போது, எந்தப்பள்ளியை பெற்றோர்கள் அணுகலாம் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்;

தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியது பற்றிக் கண்காணிக்கும் ஏற்பாடு உறுதி செய்யப்பட வேண்டும். திருவண்ணாமலையைச் சேர்ந்த பொறியாளர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் 2-7-2012 அன்று வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயர்மட்ட அநீதிகளை எதிர்த்துப் பல பொது நல வழக்குகள் தொடுத்து வந்தவர் என்பதுதான் கொலைக்குக் காரணம் என சந்தேகிக்க இடமுண்டு. அவரது மனைவி கொடுத்த புகாரில், அதிமுக நகர்மன்றக் கவுன்சிலர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலரைக் குற்றம் சாட்டியுள்ளார்.

வெங்கடேசனும் அவர் உறவினர்களும்தான், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கப் போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபத்திரன் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. லோக் பால் மசோதாவுடன்,  அநீதிகளை அம்பலப்படுத்துபவர்களைப் பாதுகாக்கும் சட்டமும்(Whistle blowers Protection Act) கொண்டு வரப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தும் கோரிக்கையாகும். குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கருக்காம்பட்டி கிராமத்தில் உள்ள தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர், பெண் காவலர் கன்னீஸ்வரி. ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவர் இவரைக் காதலித்ததாகவும், ரெங்கராஜ் குடும்பம் இதை விரும்பவில்லை என்றும் தெரிய வருகிறது. இச்சூழலில், கன்னீஸ்வரி குரூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடுமையான சந்தேகம், ரெங்கராஜ் குடும்பத்தின் மீது திரும்பியிருக்கிறது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. குடும்ப கௌரவம் என்கிற பெயரில், சாதிய வெறியோடு நடந்துள்ள கௌரவக் கொலையாக இது கருதப்பட வேண்டும். கௌரவக்குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்ற மாதர் இயக்கங்களின் கோரிக்கையை மத்திய  அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  

உணவுப் பாதுகாப்பு இயக்கத்தையொட்டி மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தும் கோரிக்கைகள்:

மத்திய அரசே!

உணவு பாதுகாப்பு மசோதா என்ற பெயரில், தமிழகம் உள்ளிட்டு பல மாநிலங்களில்  பொதுவிநியோகமுறைக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளை ரத்து செய்யாதே!

மாநிலத்துக்கு வழங்க வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் கோட்டாவைக் குறைக்காமல் வழங்கிடு !

கால தாமதம் இல்லாமல், எரிவாயு சிலிண்டர் வழங்கிடுவதை உத்தரவாதப்படுத்து! மோசடியான வறுமைக் கோடு அளவீடுகளைக் கைவிடு !

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின் படி, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாய விலை அளித்திடு !

மாநில அரசே!

ஒவ்வொரு குடும்பத்துக்கும், பொது விநியோக முறையின் கீழ், 35 கிலோ அரிசி வழங்கிடு அனைத்துக் குடும்பங்களுக்கும் முறையாக ரேசன் கார்டு அளித்திடு !

குடும்பங்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவைக் குறைக்காதே !

ரேசன் அரிசி கடத்தலைத் தடுத்திடு !

கார்டுகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு , போதுமான பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்திடு !

பகுதி மக்களின் தேவைக்கேற்ப, ரேசன் கடைகளின் செயல்பாட்டை முறைப்படுத்து: கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு !

தேவையற்ற பொருட்களை வாங்குமாறு பொது மக்களை நிர்ப்பந்திக்காதே !    

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply