வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் புதுகை யூனியன் பிரதேசப் பகுதிகள் மழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய அதி கனமழை, ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் ஏரிகள் திறந்துவிடப்பட்டது என்று தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட பேரிடர் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள், செல்வந்தர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஏழை மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயன்றதை செய்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டுள்ளங்களும், பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். தன்னார்வத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட பரத் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல், இது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பாகும்.

முதல் கட்டமாக ரூ.1000 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி தேவை என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதுவும் கணக்கில் அனுப்பிடக் கேட்டுள்ளது. வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளையும் பேரிடர் பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும். மிகப் பரவலான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உடனடி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடக அரசு வழங்க விரும்பிய நிவாரணத்தை பெற அரசு முனைப்புக்காட்டவில்லை என்று செய்திகள் வருகின்றன. தமிழக அரசு அனைத்து தரப்பிலிருந்தும் உதவிகளை திரட்டுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இன்னும் மழை தொடர்ந்து வருகிற சூழலில், அரசாலோ அல்லது வேறு எந்தவொரு நிறுவனத்தாலோ பேரிழப்பினை அளந்து உடனடியாக மதிப்பீடு செய்திட முடியாது. தரைத் தளங்களில் நீர் புகுந்து பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் சேமித்த சொத்துக்கள் சேதமாகியுள்ளன. கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சேர்த்தே இழப்பு கணக்கிடப்பட வேண்டும்.

இந்த சூழலை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் தங்கள் உடைமையை இழந்து தவிக்கும்போது, பொருட்களின் விலையை ஏற்றுவது பகல் கொள்ளையாகும். அரசு உடனே தலையிட்டு, பொருட்கள் குறைவான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்குக

இலவச பேருந்து பயண வசதி செய்துள்ளது போல் தமிழக அரசு உடனடியாக அன்றாடம் வேலை செய்தால்தான் வாழ்க்கை என்றுள்ள குடும்பங்கள் வெள்ளத்தால் உடமைகளை இழந்து  வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானத்தையும் இழந்துள்ள நிலையில் பாதிக்கப்படட அனைத்து தரப்பு குடும்பங்களுக்கும் ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

முழுமையான இழப்பீடு வழங்குக

உணவு தவிர்த்த நிவாரணப் பொருட்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் போது பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான இழப்பீடுகள் கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். அரசு முகாம்கள் தவிர, தனியார் மண்டபங்கள், வீடுகளிலேயே சிக்கித் தவிப்போர், தனியார் பாதுகாப்பில் உள்ளோர் என அனைத்துத் தரப்பினரையும் கணக்கிட வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுக

மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைத்து பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...