உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் பொதுவிநியோக முறையை வலுப்படுத்தக்கோரியும் மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஜூலை 30-ல் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை எதிர்த்தும், ஒருங்கிணைந்த பொது விநியோக முறை மூலம் உணவு உரிமையை வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. விலைவாசி உயர்வை மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உட்பட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.  இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பொதுவிநியோக முறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்யக்கூடாது, மாநிலத்துக்கு வழங்க வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் கோட்டாவை குறைக்காமல் வழங்கிட வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய விலை அளித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொதுவிநியோக முறையின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு போதுமான பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதிப்படுத்திட வேண்டும், 500 குடும்பங்களுக்கு ஒரு ரேஷன் கடை என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும்,  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஜூலை 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கட்சியின்  சார்பில் 1500-க்கு மேற்பட்ட ரேசன் கடைகளில் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் மேற்கூறிய குறைபாடுகள் நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டது. குறைபாடுகளைச் சரிசெய்யவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜூலை 30-ம் தேதி 150-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர்கள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பட்டியல் தென்சென்னையில் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,எம்.பி,  மாநில செயற்குழு உறுப்பினர்  என்.சீனிவாசன், வடசென்னையில்  மத்தியக்குழு உறுப்பினர்கள்  அ.சவுந்தரராசன்,எம்.எல்.ஏ,  பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், கே.கனகராஜ், விருதுநகரில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,   சிதம்பரத்தில் மத்தியக்குழு உறுப்பினர், கே.பாலகிருஷ்ணன்,எம்.எல்.ஏ,   திருப்பூரில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், எம்.எல்.ஏ, பெரியகுளத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர்,எம்.எல்.ஏ, உத்தமபாளையத்தில்  மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம்,  மதுரையில்  மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், நாகர்கோவிலில் மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.நூர்முகமது,  திருவள்ளூரில் மாநில செயற்குழு உறுப்பினர்  என்.குணசேகரன், திருவள்ளூரில்  க.பீம்ராவ்,எம்.எல்.ஏ,  திண்டுக்கல்லில் பாலபாரதி,எம்.எல்.ஏ,  திருக்குவளையில்  (நாகை) நாகை மாலி,எம்.எல்.ஏ, விழுப்புரத்தில் ராமமூர்த்தி,எம்.எல்.ஏ, பாப்பிரெட்டிபட்டியில் (தர்மபுரி) பி. டெல்லிபாபு,எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்கின்றனர்.    

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply