உத்தபுரம் தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு!

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்களின் நீண்ட காலக்கோரிக்கைகள் குறித்து சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 20-10-11 அன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கும் இதர சமூகத்தினருக்கும் இடையே இத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வாழ்த்தி வரவேற்கிறது.

இந்த உடன்பாட்டின்படி தலித் மக்களுக்கு 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அரசமர வழிபாடு உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுளளது. 2008-ஆம் ஆண்டு தீண்டாமைச்சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களின் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட பொதுப்பாதையை பல ஆக்கிரமிப்புகள் மற்றும் இடையூறுகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்த முடியாமல் இருந்தது. தற்போது அப்பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தலித் மக்கள் சுதந்திரமாகவும், தடையின்றியும் பயன்படுத்திட ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பல சம்பவங்களில் இருதரப்பினர் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படவும் ஒப்பந்தம் வகை செய்கிறது. உத்தபுர அனைத்துப்பகுதி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கான நிழற்குடை அமைக்கவும் வழி காணப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், அமைதியையும், சட்டத்தின் ஆடசியையும், நிலைநாட்ட ஒத்துழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இரு சமூகத்தினரும் மனப்பூர்வமாக ஏற்று அமல்படுத்திட ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் உத்தபுரம் தலித் மக்கள் நீடித்து நடத்திய ஒன்றுபட்ட இயக்கங்களுக்கும், மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இக்காலத்தில் ஏராளமான தலையீடுகளையும், இயக்கங்களையும் உத்தபுரம் தலித் மக்களுக்காக நடத்தியுள்ளன. சிபிஎம் அகில இந்திய  பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 2007-ல் உத்தபுரம் கிராமத்திற்கு வருகை தந்தது மிக முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்தது.  உத்தபுரம் பகுதியில் சமூக நீதியையும், அதன் அடிப்படையிலான சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட உதவும் இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட இரு சமூகத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது.  காலதாமதமாகியுள்ள போதிலும், இந்த ஒப்பந்தத்தை உருவாக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேற்கொண்ட முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பெரிதும் வரவேற்கிறது.

இரு சமூகத்தினரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமல்படுத்திட தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காலதாமதமின்றி உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், அதன் மூலமே தற்போது உருவாகியுள்ள இயல்பான சூழலை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் முடியும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பேராதரவு தருமாறு அனைத்துத் தரப்பு மக்களையும், ஜனநாயக சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply