உத்தபுரம் மக்கள் வழிபாட்டு உரிமை மீட்பு / சிபிஐ (எம்) – பாராட்டு

உத்தபுரம் தலித் மக்கள் இழந்த தங்களது பல உரிமைகளைப் பெறவும் வேறு பல அடிப்படைக் கோரிக்கைகளுக்காகவும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதற்கான பல இயக்கங்களையும், முயற்சிகளையும் கடந்த காலத்தில் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் 20.10.2011 அன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ராகார்க் முன்னிலையில் உத்தபுரம் தலித் மக்களும் இதர சமூக மக்களுக்குமிடையே ஒரு நல்லிணக்க உடன்பாடு ஏற்பட்டது. அதனை மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது.

இதன் தொடர்ச்சியாக 10.11.2011 அன்று உத்தபுரம் தலித் மக்கள் முதல் முறையாக முத்தாலம்மன் கோவிலில் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். இவர்களை இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆலயத்தின் முன்பு வரவேற்றுள்ளதோடு வழிபாடு நடத்தவும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர், இச்சம்பவம் தீண்டாமை ஒழிப்பிற்கான அடையாளமாகத் திகழ்வதோடு தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதன் மூலமே சமூக நல்லிணக்கத்தை பலப்படுத்த முடியும் என்ற அனுபவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

உத்தபுரம் தலித் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ள போதிலும் தற்போது இருதரப்பு மக்களிடைய நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும், தலித் மக்களின் ஆலய வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்ததிலும் உரிய முன்முயற்சிகளை மேற்கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களையும், இதற்கான முழு ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இணக்கான சூழலை பலப்படுத்தும் வகையில் உத்தபுரம் தலித் மக்களின் இதர கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுமாறும், அக்கிராம வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துமாறும் தமிழக அரசையும், மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழநாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply