உப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ! – கே.பாலகிருஷ்ணன்.

2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது.
மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வேலையின்மை அகில இந்திய சராசரியை விட அதிகமாக இருக்கும் போது அதுகுறித்து பாராமுகமான பட்ஜெட்டாகவே இது உள்ளது. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.


தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கில் சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். ஆனால் தொழில் வளத்தை பெருக்கவோ, மூடப்பட்டுள்ள சிறு-குறு தொழிற்சாலைகளை திறப்பதற்கோ ஆக்கப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நெல், கரும்பு ஆகியவற்றிற்கான கொள்முதல் விலை பற்றி வாய் கூட திறக்கவில்லை. கிராமப்புற மக்களினுடைய வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் இடம்பெறவில்லை.


பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. சென்ற பட்ஜெட் மதிப்பீட்டில் (2019-2020) வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். திருத்தப்பட்ட மதிப்பீட்டில் பற்றாக்குறையானது 25 ஆயிரத்து 72 கோடியாக உயர்ந்துள்ளது. இது 70 சதவீத அதிகரிப்பு ஆகும். ஏற்கனவே ரூ. 4 லட்சம் கோடி அளவிற்கு கடன்கள் அதிகரித்துள்ளன. பற்றாக்குறையை காரணம் காட்டி உலக வங்கியிடமிருந்து மேலும் புதிய கடன்களை வாங்குவதற்கான திட்டம் தான் இந்த பட்ஜெட்டின் உள்ளடக்கத்தில் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக வீட்டு வசதிக்காக கடன் வாங்கவிருப்பதாகவும் 450 மில்லியன் டாலர் கடன் பெறவுள்ளதாகவும், சென்னை பெருநகரத்திற்கு 1 பில்லியன் டாலர் கடன் பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


சென்ற பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரி தொகை ரூ. 33 ஆயிரத்து 972 கோடி என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை 26 ஆயிரத்து 392 கோடி மட்டுமே ஆகும். மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் 7 ஆயிரத்து 586 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது நான்கில் ஒரு பங்கு வெட்டு ஆகும்.
இந்த உரையில் மத்திய அரசு தரவேண்டிய மேலும் பல பாக்கிகளை குறித்து நிதியமைச்சர் பேசியிருக்கிறார். 2017-18 ஆம் ஆண்டுக்கான ஐ.ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 4,073 கோடி பாக்கி உள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் மாநில அரசுக்கு வரவேண்டிய ரூ. 3,201 கோடி பாக்கி ஆகும். உள்ளாட்சி அமைப்புக்கான அடிப்படை மானியங்கள் மத்திய அரசிடமிருந்து ரூ. 6,374 கோடி பாக்கி உள்ளது மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் தரவேண்டிய தொகை ரூ. 3,500 கோடி பாக்கி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய மாநில அரசுகளிடையே வரி பங்கீட்டிற்கு பிறகு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மானியங்கள் அளிக்க வேண்டுமென 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறாக ரூ. 74,340 கோடி மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை கொள்கை அளவில் மத்திய அரசாங்கம் ஏற்றாலும், மத்திய பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகளையும், உரிய வரி பங்கீட்டையும் தர மறுப்பதும், தாமதப்படுத்துவமான வஞ்சகப் போக்கையே மத்திய அரசு கடைபிடிக்கிறது. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப் பெறுவதற்கு தைரியம், திராணியற்ற அரசாக அதிமுக அரசு உள்ளது என்பதை இந்த பட்ஜெட் உரை எடுத்துக் காட்டுகிறது. இந்த அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து தனது ஆட்சியை மட்டும் தக்க வைத்துக் கொள்வதில் குறியாக இருப்பதால், தமிழக மக்களின் நலன்கள், உரிமைகள் எல்லாம் மத்திய அரசிடம் காவு கொடுக்கப்படுகின்றன.


மேலும், பற்றாக்குறை அதிகரிப்புக்கான முதல் காரணம் வருவாய் வரவினங்களில் ஏற்பட்ட சரிவு (ரூ. 5,860 கோடி) ஆகும், இரண்டாவது காரணம் செலவு அதிகரிப்பு (ரூ. 4,897 கோடி). மாநில அரசின் வருவாய் வரவுகளில் கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்காக மட்டும் சுமார் 6 இல் ஒரு பங்கு தொகை செலுத்தப்படுகிறது. மாநில அரசு வரி அல்லாத வளங்களை திரட்டுவதற்கு எந்த முன்முயற்சியையும் காட்டவில்லை. தமிழகத்தில் கிடைக்கும் இயற்கை கச்சாப்பொருட்கள் மற்றும் வளங்களை மிகக் குறைந்த வரவுக்கு கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. இயற்கை வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினால் வரி அல்லாத வரவுகளை திரட்ட முடியும். மேலும் வரி வசூல் ஏற்பாடுகளிலும் பலவீனம் தொடர்கிறது.
மாநில அரசின் வரி வருமானம் வேகமாக குறைந்து, நிதி நிர்வாகம் மோசமாகியுள்ளது. உலக வங்கியிடம் கடன் வாங்குவதால் மோசமான நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக மக்களை அடகு வைக்கும் நிலைமைக்கு அதிமுக அரசு வந்துள்ளது.


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்

வழங்கல் துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சென்ற பட்ஜெட்டில் ரூ. 18,701 கோடி ஒதுக்கப்பட்டது, இந்த ஆண்டில் ரூ. 18,500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உணவு மானியத்திற்கான தொகை சிறு அளவில் ரூ.500 கோடி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான உயர்வே ஆகும். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தரும் ஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டின் படி ரூ. 5,165 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு (2020-21) ஒதுக்கீடு ரூ. 5,307 கோடி. ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ. 6,574 கோடி, இந்தாண்டு (2020-21) பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 6,754 கோடி. பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் இது உயர்வே இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு அதிகரிக்க வேண்டும். தமிழகம் முன்னணி மாநிலமாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மிக சொற்ப அளவிலேயே அதிகரித்துள்ளன.

மொத்தத்தில் தமிழக அரசின் இந்த பட்ஜெட் தமிழக பொருளாதாரம் திவாலாக்கப்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

  • கே. பாலகிருஷ்ணன். மாநிலச் செயலாளர்.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...