உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, ஜேஎன்யு மாணவர்களான நடாஷா நர்வால், தேவங்கானா கலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஜமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் மீரான் ஹைதர், அஷிப் தன்ஹா, சஃபூரா சாகர், குல்ஷிபா பாத்திமா மற்றும் சிஃப்ர்-உல்-ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

வெறுப்பை உமிழ்ந்து, வன்முறையைத் தூண்டிய பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படக்கூடிய அதே சமயத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாகப் போராடிய இளம் மாணவர்கள் இவ்வாறு குறி வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகமும் தில்லிக் காவல்துறையும் இணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை, முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுடன் இணைத்து இவ்வாறு மாணவர்களைக் கைது செய்திருக்கிறது. உள்துறை அமைச்சகத்தாலும் காவல்துறையாலும் மாணவர்கள் குறிவைக்கப்பட்டு, அவர்களை வன்முறைகளுடன் பிணைக்கும் விதத்தில் கட்டாயப்படுத்துவதற்காக குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்து அவர்களை தில்லிக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு மூலமாக இவ்வாறு கைது செய்வதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீதித்துறையின் இயல்பான நடைமுறைகளை முடக்கிவிட வேண்டும் என்பதற்காகவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இல்லாவிடில் கைது செய்யப்படும் மாணவர்கள் கீழமை நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராக, அவர்கள் வன்முறையைத் தூண்டியதற்கு, சாட்சியம் எதுவும் இல்லாததன் காரணமாக எளிதாக பிணையில் வெளிவந்துவிடுவார்கள். இவ்வாறு இச்சட்டத்தின்கீழ் அவர்கள் கைது செய்யப்படுவது, அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறும் ஜனநாயக உரிமை மீதான தாக்குதலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறது. அவற்றுக்கு எதிரான தன்னுடைய வலுவான எதிர்ப்பை இப்போதும் வலியுறுத்துகிறது. மத்திய அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை எதிர்கொண்டுள்ள அனைவருக்கும் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. தில்லி மதவெறி வன்முறை தொடர்பான வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறது.

சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்கீழ் தில்லிக் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள புலன்விசாரணை, வன்முறைக்கான காரணங்கள் குறித்து, ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்திருப்பதால், ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ், ஒரு சுயேச்சையான புலன்விசாரணையை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...