உயர்கல்வித்துறை ஊழல்கள் – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக!

06.08.2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 5-6 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


தீர்மானம் – 1

உயர்கல்வித்துறை ஊழல்கள் – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு தாள் மறுமதிப்பீட்டில்  பணம் கொடுப்போருக்கு அதிக மதிப்பெண் வழங்கியுள்ள முறைகேடு வெளிவந்து மூன்று பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பல தனியார் கல்லூரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. பணம் கொடுப்போருக்கு அதிக மதிப்பெண் வழங்குவது என்பது பணம் கொடுக்க வாய்ப்புள்ளோருக்கு சலுகையளிப்பது என்பதோடு மட்டுமின்றி நேர்மையாக படித்த திறமைசாலிகளின் வாய்ப்பை தட்டி பறிப்பதுமாகும். இத்தகைய கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இது சமூகத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தில் உள்ளோர் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவது இத்தகைய தவறுகளைச் செய்வதற்கு அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் பயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது, கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதியளிப்பது, புதிய பாடப்பிரிவுகள் துவக்குவதற்கு அனுமதியளிப்பது, மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அனுமதியளிப்பது உள்ளிட்ட அனைத்திலும் லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்தாடுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் நிலவும் ஊழல் உயர்கல்வி துறையிலும் கோலோச்சுகிறது. இவற்றையும் தாண்டி பாலியல் புகார்கள், துணைவேந்தர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது, துணை வேந்தர் நியமனம் உட்பட அனைத்திலும் லஞ்சமும், ஊழலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இதேபோன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத ஊழியர்கள் நியமனத்திற்கு பணம் கொடுக்காமல் தகுதியின் அடிப்படையில் எவரும் வந்து விட முடியாது என்கிற அளவுக்கு லஞ்சம் கறாராக பின்பற்றப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மறுக்கும் கல்லூரிகளில் ஆசிரியர் பதவிகள் நீண்ட காலமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படாத நிலையும் இருக்கிறது. இதனுடைய விளைவும், உச்சமுமே பணம் பெற்றுக் கொண்டு மதிப்பெண் வழங்கும் முறைகேடு. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த சீரழிவு நாட்டின் எதிர்காலத்தை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதை கவனத்தில் கொண்டு கல்வித்துறையில் நிலவும் ஊழல், முறைகேடுகளை முழுவதுமாக கண்டறிந்து நீக்கிட கல்வியாளர்கள் மற்றும் சமூக நோக்குடையோர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து கல்வித்துறையில் நிலவும் லஞ்ச – ஊழல் முறைகேடுகளை ஒழித்துக்கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 2

தமிழகத்தில் சிலைகள் கடத்தல், சிலைகள் செய்ததில் முறைகேடுகள் குறித்த விசாரணையை சீர்குலைக்க வேண்டாம்

தமிழகக் கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் தன்னுடைய வழிகாட்டுதலின் கீழ், ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவை இப்பிரச்சனையில் சிறப்பு விசாரணை மேற்கொள்ளும்படி பணித்தது. இக்குழு விசாரணையை மேற்கொண்ட பின், வருகிற செய்திகள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. சுமார் 7000 சிலைகள் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகளை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இவற்றில் கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வருகின்றன.

பழனியாண்டவர் உற்சவர் சிலை, காஞ்சிபுரம் சோமஈஸ்கந்தர் உற்சவ சிலைகள் புதிதாக செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதி, முன்னாள் ஆணையர், இந்நாள் இணை, துணை ஆணையர்கள் என பலர் மீது வழக்கும், அதனடிப்படையில் கைதுகளும் நடந்துள்ளன. இப்பின்னணியில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சிலைகள் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப் போவதாக அறிவித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. ஏனிந்த முடிவு என நீதிமன்றத்தின் கேள்விக்கு, சிலைகள் தொடர்பான வழக்கில் கடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணைகளில் முன்னேற்றமில்லை, வழக்கு விசாரணை விபரங்களை அரசுக்கோ, காவல்துறையின் தலைமைக்கோ தெரிவிப்பதில்லை என கூறியுள்ளது.

விசாரணை விபரங்களை தொடர்புடைய மேல்நிலை அமைப்புகளுக்கும், அரசுக்கும் தெரிவிக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் துறையின் விசாரணை விபரங்களை பெறுவதில் அரசுக்கும், காவல்துறைக்கும் பல வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இதையெல்லாம் விடுத்து தமிழக அரசு மத்திய புலனாய்வுத்துறை விசாரணை என முடிவெடுத்திருப்பது சிலைகள் கடத்தல், சிலைகள் செய்ததில் முறைகேடுகளில் உயர்மட்டத்திலுள்ள பலர் சிக்குவார்கள் என்பதால் அவர்களை காப்பாற்றும் முயற்சியே என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சிலைகள் தொடர்பான பிரச்சனையை காட்டி கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து சமய அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டுமென மதவாத அமைப்புகள் கோரி வருகின்றன. கோவில்களை ஆதிக்கம் செய்தவர்கள் கோவில் சொத்துக்களை, வருமானத்தை சூறையாடினர் என்பதால் தான் இந்து சமய அறநிலையத்துறை உருவானது. இணைய தளத்தின் மூலம் சிறப்பு பூஜைகளுக்கு முன்பதிவு செய்து கட்டணம் வசூலிக்கும் உரிமைகள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்டதில் அரசுக்கு வர வேண்டிய சுமார்  500 கோடி ரூபாயை இந்நிறுவனங்கள் செலுத்தவில்லை என்ற புதிய முறைகேடு, துறை ஆணையரின் விசாரணை மூலமாக இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே, கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதிகாரிகள், கோவில் ஊழியர்களின் முறைகேடுகள் முழுவதுமாக வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், முறைகேடு பணங்கள் திரும்ப பெறப்படுவதும், துறையை நேர்மையான முறையில் செயல்படுத்துவதும், முறைகேடுகளுக்கு இடமளிக்கா வண்ணம் துறைகளின் கட்டமைப்புகளை பலப்படுத்துவது ஆகியவை தான் இப்பிரச்சனைக்கான தீர்வாக இருக்க முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...