உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று (18.07.2019) ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காத்திருக்கும் போராட்டம் நடத்திட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாத வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து, ஆயிரக்கணக்கான போலீசாரை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளையும், விவசாய சங்கத் தலைவர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், மாநில துணைத்தலைவர்கள் ஏ.எம். முனுசாமி, எஸ்.ஆர். மதுசூதனன் உள்ளிட்டவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்று, ஆடைகளை கிழித்துள்ளனர். அத்தோடு மட்டுமில்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் உள்ளே புகுந்துள்ளனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் டி. ரவீந்திரன் தலைமையில் போராடிய விவசாயிகளையும் கைது செய்துள்ளனர். எடப்பாடி தலைமையிலான அரசின் இச்செயல்பாடு அறிவிக்கப்படாத அவசர கால நிலையாக தெரிகிறது. ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்திட முயன்றவர்களை, போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறைகளை கையாண்ட காவல்துறையினரையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...