உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்!

இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் கூறிய அதிகாரிகள் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, வழங்குவதாக கூறி அவரை இழுத்தடித்து உள்ளனர். உரிய இழப்பீடு கிடைக்காததால் மனமுடைந்த ராமசாமி மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். இனிமேல் தமக்கு இழப்பீடு ஏதும் வராது என்று எண்ணிய அவர், தனது தோட்டத்தில்  புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காவல்துறை துணைகொண்டு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் காரணமாகவே விவசாயிகளிடத்தில் பதற்றம் ஏற்பட்டு இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதையில் உயர்மின் கோபுரத்தை அமைக்க வேண்டும் அல்லது அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீட்டை வழங்குவது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அநியாயமாக ஒரு விவசாயி உயிரை இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்மின் அழுத்த கோபுரம் அமைத்ததில் பல விவசாயிகளுக்கு பாக்கி தொகை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் பல விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயி குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதோடு, அவரது மரணத்தை உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

விவசாயி ராமசாமி அவர்களின் மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...