உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஆவர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனின் உடல் சனிக்கிழமையன்று விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மூத்த தலைவர் என்.நன்மாறன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், பி.ராதா, சொ.பாண்டியன் ஆகியோர் சுப்பிரமணியன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவர்களை இழந்து வாடும் மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்கு  இதயபூர்வமான இரங்கலை உரித்தாக்குகிறது.

இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், நெஞ்சை உலுக்குவதாகவும் உள்ளது. தீவிரவாத வன்முறை வெறியாட்டங்களை அனுமதிப்பது மனித சமூகத்துக்கே விரோதமானது. சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்துவிதமான தீவிரவாத சக்திகளையும், ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராடுவதன் மூலமாக மட்டுமே முறியடிக்க முடியும். இத்தகைய ஒன்றுப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.  இதற்கு மாறாக, மக்களை பிளவுபடுத்துவதோ, அவர்களை கூறுபோட்டு மோத விடுவதோ தீவிரவாத சக்திகளுக்கு தீனி போடுவதாய் அமைந்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசுப்பணி வழங்க வேண்டும்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...